Published:Updated:

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!
பிரீமியம் ஸ்டோரி
கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

வித்தியாசம்நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

வித்தியாசம்நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா

Published:Updated:
கைகோத்தால் கனவு மெய்ப்படும்!
பிரீமியம் ஸ்டோரி
கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

ரு குழந்தை பிறக்கும் தருணம் தாயும் பிறக்கிறாள்- ஓஷோ.

“அதோ தெரிகிறது பாருங்கள்... முதல் கொல்லை - அது இராஜராஜன் கொல்லை. அதன் தெற்கே தெரிவது... வந்தியத்தேவன், குந்தவை கொல்லைகள். அடுத்தது மன்றோ, மாமல்லன், பல்லவராயன், எதிரிலிப்பெருமாள், கிருஷ்ணதேவராயர், விசுவநாத நாயக்கரின் கொல்லைகள்…” சொல்லியபடியே விறுவிறுவென நடக்கிறார் பவித்ரா. காய்கறித் தோட்டத்தில் கத்திரி, வெண்டை, முள்ளங்கி, தக்காளி, மிளகாய் என சொட்டுநீர்ப் பாசனத்துடன் வரிசையாகச் செடிகள். அதனூடே பறவைத் தாங்கிகள். பக்கத்தில் அவரது காமதேனு, நந்தினி என்ற பசுக்களும், சிவா என்ற கன்றும். 

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

பவித்ரா ஸ்ரீனிவாசன் - எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்று ஆர்வலர் மற்றும் பதிப்பாசிரியர். இவை தவிர, சிறு ஓவியங்கள் வரைதல், டூடுல்கள் வரைதல், வாழ்த்து அட்டைகள் வடிவமைத்தல் என பல திறமைகள் கொண்ட கில்லாடி. இவரின் தாய் வேதம் ஸ்ரீனிவாசன் - கணித வல்லுநர், கைவினைஞர், விவசாயி. க்ரோஷா, ஸ்வெட்டர் பின்னுதல், மணிகளில் நகைகள் செய்தல் என பல திறமைகளை உள்ளடக்கியவர். வந்தவாசி அருகே  மழையூர் என்னும் ஓர் அழகிய சிறு கிராமத்தில் வசிக்கும் தாய் - மகள் இணையருடன் ஓர் இனிய உரையாடல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

``அப்பா ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட். வளைகுடா நாடொன்றில் வேலை செய்து வந்தார். அம்மா இல்லத்தரசி. என் குழந்தைப் பருவத்தில், அப்பாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட, அத்தனையையும் வாரிச்சுருட்டிக் கொண்டு இந்தியா திரும்பி விட்டோம். அம்மா தனியாகப் போராடி, இருந்தவற்றை விற்று அறுவை சிகிச்சை செய்து அப்பாவைக் காப்பாற்றி விட்டார். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை வேளச்சேரியில் தான். அப்பா உடல் தேறியதும் ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பித்தார். அம்மா கவர்னர் கையால் பரிசு வாங்கியவர். கணிதப் புலி. அவரும் வேலைக்குச் சென்று, இருவருமாக ஒரு வழியாக ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையைத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டார்கள்.

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

வணிகவியல் பட்டம் பெற்ற நான், சி.ஏ. படிக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அதற்கேற்ப மேற்படிப்பைத் தொடங்கினேன்''.

எழுத்துக்கும் உங்களுக்குமான பந்தம் பற்றி...


``அம்மாவின் மூலமாக ஏற்பட்ட வாசிப்புப் பழக்கத்தால், எனக்கு நானே பேசிக்கொண்டு, செல்ல முடியாத ஊர்களுக்குக் கற்பனையில், கனவுகளில் பயணப்பட்டேன். என் கற்பனை உலகம் அம்மாவின் ஊக்கத்தால், சிறகு விரித்தது. அம்மா எந்த விதத்திலும், யாராலும் நான் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். நான் முதன்முதலில் எழுதிய சிறுகதை `மை மதர் இஸ் மை ஹீரோ!' பள்ளியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டேன்.

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

விளையாட்டாக நானும் என் தோழியும் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டோம். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் இருவரில் யாருடைய படைப்பு பத்திரிகையில் வெளியாகிறதோ, அவர் பந்தயத்தில் ஜெயித்ததாகவும், தோற்றவர் அவருக்கு ட்ரீட் தருவதாகவும் பேசிக் கொண்டோம். இந்தச் சூழலில் ஒருநாள் தன்யா பார்த்தசாரதி என்பவர், `பொன்னியின் செல்வன் இளைய தலைமுறையினரை ஏன் கவர்ந்தது?' என ஒரு நாளிதழில் கட்டுரை எழுத கருத்துக் கேட்டது எனக்குத் தெரியவந்தது. பொன்னியின் செல்வன் மீதான அலாதிப் பிரியத்தின் காரணமாக அவருக்கு எழுதி அனுப்ப, அது பிரசுரமாகிவிட்டது.

தன்யாவின் ஊக்கத்தால், எக்ஸ்பிரஸ் நாளிதழில் சிறாருக்காக ‘தி ட்ரிப்’ என்ற சிறுகதையை எழுதினேன். கல்கி, கோகுலம், அமுதசுரபி, சந்தாமாமா, ஆனந்த விகடன் எனப் பத்திரிகைகளுக்கு எழுதினேன். என் முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது. அதற்குக் கிடைத்த முந்நூறு ரூபாய் காசோலையை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

கதா பதிப்பகத்தில் பதிப்பாசிரியர் பணி கிடைத்தது. தி.ஜா-வின் ‘அம்மா வந்தாள்’, சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ எனச் சிறந்த படைப்புகளின் மொழிபெயர்ப்பைத் தொகுக்கும் பணியும், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமின் அறிமுகமும் கிடைத்தன. அதன்பிறகே மொழிபெயர்ப்பின் சூட்சுமங்கள் பிடிபட்டன. பேஜஸ் ஃப்ரம் இண்டியன் ஹிஸ்டரி, ஐ ஹர்ஷவர்தனா, ஸ்வார்ட்ஸ் அண்ட் ஷேடோஸ் என்று மூன்று தொடர்கள், பேக் டூ தி பீசீஸ், அமீஷின் ஷிவா ட்ரைலாஜி - மூன்று புத்தகங்களின் ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு, அவரது அடுத்த படைப்பான இஷ்வாகு குலத்தோன்றல், சமீபத்தில் வெளிவந்த ‘விசாரணை’ திரைப்படத்தின் மூலக்கதையான சந்திரகுமாரின் ‘தி லாக் அப்’ தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு, விரைவில் வெளிவரவிருக்கும் ‘யெஸ்டெர் டேல்ஸ்’, அமேசானின் பெஸ்ட் செல்லரான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மின்னணு புத்தகங்கள், சிவகாமியின் சபதம் முதல் பாகம் என்று நிறைய எழுதிவிட்டேன்; எழுதிக் கொண்டிருக்கிறேன்''.

சென்னையிலிருந்து மழையூருக்கு ஏன் இடம் பெயர்ந்தீர்கள்? அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...


``அம்மாவுக்கு விவசாயம் செய்ய ஆசை. கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அங்கே வேளாண்மை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். பசுமை விகடன் வாசகி. இதுவரை வெளிவந்த பசுமை விகடன் இதழ்களைத் தொகுத்து, அட்டவணை போட்டு வைத்திருக்கிறார். அவரது இந்த ஆர்வம்தான் என்னையும், அப்பாவையும் விவசாய நிலம் வாங்கத் தூண்டியது. அம்மாவின் ஐந்து ஆண்டுக் கனவு, குளுகுளுவென ஏரிக்கரையில் அமைந்த இந்த ஆறு ஏக்கர் பண்ணை.

இங்கு மாறிவந்த புதிதில், நாங்கள் படாத கஷ்டங்கள் இல்லை. வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. வந்தவர்கள் தங்கவில்லை. சுற்றி இருந்தவர்கள், `இந்த நிலத்தில் இயற்கையாக விளைவித்தால் எதுவும் வளராது;  ரசாயன உரம் போடுங்கள். பணத்தை விரயம் செய்கிறீர்கள். இடத்தை எங்களிடம் விட்டு விடுங்கள். நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?' என்று சொல்லி அவர்கள் பங்குக்கு மன உளைச்சலைக் கொடுத்தனர்.

கைகோத்தால் கனவு மெய்ப்படும்!

வேளாண்மை பற்றிக் கையில் புத்தகங்கள் மட்டுமே. அனுபவ அறிவு எதுவும் இல்லை. அம்மா தினமும் காலையில் பண்ணைக்குச் சென்றுவிடுவார். வெயிலுக்கு ஒதுங்கக் கூட இடம் இல்லாமல், முக்காடு இட்டபடி ஏதோ ஒரு பனை மரத்தடியில் உட்கார்ந்திருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அம்மா எல்லாம் கற்றுக் கொண்டார். சொட்டுநீர்ப் பாசன மானியம், சோலார் விளக்கு மானியம், விதை நெல் மானியம், வேலி அமைக்க உதவி என்று மெதுவாகப் பிடிபடத் தொடங்கியது. கிணறு வெட்டினோம். சிறிய பண்ணை வீடு கட்டினோம். ஒரு மீன் குளம் அமைத்தோம். இதோ மூன்றரை ஆண்டுகள் ஓடி விட்டன. பசுமையாக நிமிர்ந்து நிற்கிறது எங்கள் பூமி. வேளாண்மை குறித்து அம்மாவிடமே கேளுங்களேன்''…

வேதம் அம்மா தொடர்கிறார்...

அங்கக வேளாண்மையில் என்னென்ன உத்திகளைக் கையாண்டீர்கள்?

``மீன் கழிவுகளை வாங்கி சரிவிகிதமாக வெல்லம் கலந்து மூடிவைத்து, 21 நாள்கள் கழித்து வடிகட்டி, நீரில் கலந்து வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தினேன். வெல்லத்தின் வாசனைக்குப் பூமிக்குக் கீழே பதினைந்து அடியில் இருக்கும் மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் வெளிவந்து மண் வளம் பெறும். அழியாதப் பூச்சிகளுக்கு இருக்கவே இருக்கிறது பிரியாணி மசாலா. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரை கிலோ வீதம் அரைத்து வடிகட்டி, கரைசலை நீரில் கலந்து தெளித்தால் அத்தனை பூச்சியும் காலி!''

உங்கள் கணவர் பற்றிச் சொல்லுங்கள்... உங்களுக்கு எப்படி ஊக்கம் தந்தார்?


``பண்ணை ஆரம்பித்து ஒரு வருடம் நான் மட்டுமே போராடிப் பார்த்தேன். அறுபது வயதைத் தாண்டிய என் உடல் ஒத்துழைக்கவில்லை. கணவர்தான் கைகொடுத்தார். வேலி அமைக்கும்போது வந்த பிரச்னைகளைச் சமாளித்தார். திண்டிவனத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விவசாயத் தொழில்நுட்ப வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். எங்கள் வயலில் விளையும் தானியங்களுக்கும், நாங்கள் தயாரிக்கும் ‘பவித்ரா’ எண்ணெய், அரிசி போன்றவற்றுக்கும், தமிழ்நாடு அரசு ஆர்கானிக் துறையின் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்''.

கைவினைப் பொருள்கள் செய்யும் ஆர்வம் எப்படி வந்தது?


``பிறந்தநாள், திருமண நாள் பரிசுகளாக மகள் வாங்கித் தந்த கம்பளி, நூல் போன்ற பொருள்கள் வீணாகக்கூடாதே என்று தான் கைவினைப்பொருள்கள் செய்யக் கற்றுக் கொண்டேன்''.

கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்காக மகள் தொடங்கிய வாசிப்பும், அதில் தொடரும் அவரது எழுத்துப் பயணமும், அம்மாவின் ஆசைக்காக நகரம் விட்டு கிராமத்துக்கு புலம்பெயர்ந்த மகளின் பாசமும் என இந்த தாய்-மகள் இருவரின் அன்பும் மெய்சிலிர்க்க செய்கிறது. மகளை உச்சி முகரும்போது, நம் கனவும் இவள் கனவும் மெய்ப்பட வேண்டுமே என்று தோன்றும் அந்த ஒரு நொடி, வேதம் அம்மாவும், பவித்ராவும் நிச்சயம் என் மனக்கண்முன் வந்து போவார்கள். அம்மா எனும் அன்பு, மகள் எனும் பேரன்பு!