Published:Updated:

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி
பிரீமியம் ஸ்டோரி
என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

தாய் எனும் புத்தகம்பொன்மணி

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

தாய் எனும் புத்தகம்பொன்மணி

Published:Updated:
என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி
பிரீமியம் ஸ்டோரி
என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

`குழந்தையை வளர்ப்பதற்காக அநேகம் புத்தகங்களைத் தாய் படிப்பாள். அதன் பிறகு அவளே ஒரு புத்தகமாக மாறிப்போவாள்' என்று பல ஆண்டுகளுக்கு முன் குழந்தை வளர்ப்பு பற்றி விகடனில் எழுதியிருந்தேன். என் குடும்ப வாழ்வின் இனியதொரு பகுதியாக பிள்ளைகள் பிறந்து வளரத் தொடங்கியபோது... என் கனவுகளில் எப்போதும் அவர்கள் நிறைந்திருந்தார்கள். 

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

பெரியவன் மதன் கார்க்கிக்கும் சிறியவன் கபிலனுக்கும் இரண்டு வயது வித்தியாசம். ஒரே மாதிரியான அழகிய பல உடைகளை அவர்களுக்குப் போட்டு அழகு பார்ப்பேன். மரம், செடி, கொடி, மதில் சுவர், கடற்கரை, பூங்கா என்று நிற்கவைத்து, பேசவைத்து புகைப்படங்களை ஏராளமாக எடுத்திருக்கிறேன். மொட்டை மாடியில் ஜிலுஜிலுவென்ற காற்றில் பசும் மரங்களின் பின்னணியில் என் பிள்ளைகளோடு அமர்ந்துகொண்டு... பாரதி, பாரதிதாசன் பாடல்கள், ஔவையார், விவேக சிந்தாமணி எனும் பலவும் சொல்லி வந்திருக்கிறேன். 

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

மாலை நேரங்களில் வீட்டு வேலை முடிந்தபிறகு... ரிக்‌ஷாவில் அவர்களை உட்கார வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடியே டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானத்தில் காற்று வாங்கியபடி நிதானமாக பல சுற்றுகள் சுற்றி வருவோம். பிறந்த நாள்களில் துணிமணிகளோடு, `ஹீமேன்' பொம்மைகளை விரும்பி வாங்குவார்கள். குறும்புத்தனங்களுக்குக் குறைவிருக்காது. வீட்டைத் தலைகீழாக்கி அமர்க்களம் செய்தாலும் வெளியில் பரமசாதுக் குழந்தைகளாகப் பாராட்டு வாங்கிவிடுவார்கள்!

உலகறிந்த மேன்மையும் புகழும் கொண்ட குடும்பத்தில் இருந்தாலும், நானொரு கிராமத்துப் பெண்ணாகவும், எளிய தமிழாசிரியரின் மகளாகவும் இருந்ததனாலோ என்னவோ... ஒரு நடுத்தரக் குடும்பத்து மனோபாவத்தில்தான் என் பிள்ளைகளை வளர்த்தேன். வீட்டு வேலைகளில் எனக்கு உதவியாக, அவர்களால் முடிந்த வேலைகளைச் செய்வார்கள். நல்ல மனிதாபிமானமும், அன்பும், கருணையும், தன்னம்பிக்கையும்... நல்லதோர் லட்சியத்தை நோக்கிய கடுமையான உழைப்பும் கொண்டவர்களாக அவர்கள் உருவாக வேண்டும் என்று நான் கண்டுவந்த கனவுகள் பலித்து வருவதாகவே நினைக்கிறேன்.

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

எங்கள் கல்லூரி ஆண்டு விழாவுக்கு அவர்களை அழைத்துப் போவதுண்டு. பெரியவன் மதன் கார்க்கிக்கு அப்போது ஆறு வயதிருக்கும். ஒருமுறை ஆண்டுவிழாவின்போது, மூவாயிரம் மாணவிகளுக்கு மேல் நிறைந்திருந்த கூட்டத்தின்முன் மேடையில் `மனிதன் மனிதன்' பாடலை அமர்க்களமாகப் பாடி, மாணவிகள் `ஒன்ஸ் மோர்' கேட்க... மீண்டும் உற்சாகமாகப் பாடி ஏகத்துக்கு கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டான்.

மதன்கார்க்கி எவரிடமும் தோழமை உணர்வோடு கலகலப்பாகப் பேசுவான். ஆஸ்திரேலியாவில் பட்டப் படிப்பு, டாக்டர் பட்டத்துக் கான ஆராய்ச்சிப் படிப்பு இரண்டையும் படித்தான். ஆசிரியப் பணியில் அவனுக்கு ஈடுபாடு இருந்தது. ஏராளமான திரைப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பான். எழுதுவான். இசையமைப் பான். அற்புதமாகச் சமைப்பான். அவனை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், அதை மிகச் சரியாகச் செய்து முடிப்பான். அவனுக்கு நம்பிக்கையில்லாத விஷயமாக இருந்தாலும், அன்போடும் நியாயத்தின் அடிப்படையிலும் உதவிபுரியச் சொல்லிக் கேட்டால் முடிந்தவரை செய்துவிடுவான். அவனுக்கு வழிபாட்டளவில் நம்பிக்கை இல்லை என்றாலும், என் அன்புக் கோரிக்கையின்படி என் குரு தெய்வமான சத்ய சாயிபாபாவின் தரிசனத்துக்கு என் தந்தையோடு என்னை புட்டபர்த்திக்கு அழைத்துப் போய்வந்ததை என்னால் மறக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் சாயி சென்டர்களுக்கு அழைத்துப் போய்வந்ததோடு, பாபாவைப் பற்றிய என் கவிதைகளையும் பேட்டிகளையும் பாராட்டிச் சொல்வான். இரண்டு பிள்ளைகளுக்கும் சிறுபோதில் கொடைக்கானலிலும், திருமணமானபிறகு புட்டபர்த்தியிலும் பகவான் சத்ய சாயிபாபாவின் ஆசீர்வாதம் கிட்டியிருக்கிறது. 

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

எந்தவிதமான பரிந்துரையும் இல்லாமல் நம்பிக்கையோடும் தொடர்ந்த முயற்சியோடும், அவன் திரையுலகில் அடி எடுத்து வைத்தான். வாழ்க்கையின் நல்ல சாரங்களை இயல்பாகவும் எளிமையாகவும் நளினமாகவும் நவீனமாகவும் வசனங்களாக, பாடல்களாகப் படைத்து வருகிறான். அவனுடைய திரைக்கனவு அழகாகப் பலித்து வருகிறது. `எந்திர'னிலிருந்து `பாகுபலி' வரை தேர்ந்தெடுத்த சில பாடல்களைத் தந்து கேட்கச் சொல்வான். இந்தப் பாகுபலியின், `சிவா சிவாய போற்றியே' அவனுடைய 500-வது பாடல்; அற்புதமான பாடல். பல ஆண்டுகளாக நான் திரைப்படங்கள் பார்ப்பதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ இல்லையென்றாலும், பிள்ளைகளின் சில பாடல்களைக் கேட்டு வாழ்த்துவதும் ஆலோசனை சொல்வதும் உண்டு. பத்தாம் வகுப்புக்கு மேல்தான் மதுவின் கல்வி, கலை அறிவு எல்லாம் விசாலப்பட்டன. எத்தனை முன்னேற்றங்கள் வந்தபோதும் பணிவு அவன் இயல்பாயிருக்கிறது; மனிதாபிமானம் குணமாகி
இருக்கிறது. நவீன சாதனங்களை நான் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வ மாக இருப்பான். மருமகள் நந்தினி அவனுக்கு வாய்த்த நல்வாழ்க்கைத்துணை. மனைவியின் தனித் திறமைகளை அங்கீகரித்துப் போற்றுவான். நேரமிருக்கும்போதெல்லாம் மகன் `ஹைக்கூ'வுக்குப் பொறுமையாகப் பாடங்களைச் சொல்லித்தருவான்; முக்கியமாக தமிழ் கற்றுக்கொடுப்பான். ஆடம்பரத்தையும் படாடோபத்தையும் விரும்பியதில்லை. யாரையும் எதிர்பாராமல் தன் உழைப்பில் வாழும் வாழ்க்கையே இவனுக்குப் பிடித்தமானது. வீட்டுக்குள் நுழையும்போதே `அம்மா' என்று வாய்நிறையக் கூப்பிட்டுக்கொண்டே வருவான். அது ஓர் அழகாயிருக்கும்.

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

சிறிய பிள்ளை கபிலனைப் பொறுத்தவரையில் அளந்து பேசுவான்; இல்லையென்றால், அமைதியாக இருந்துவிடுவான். படிப்பில் கெட்டிக்காரன். லயோலா பள்ளியில் படிக்கும்போது இவனே சமூகச் சீர்த்திருத்த நாடகம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நடித்தான். மிகப்பிரமாதமாக இருந்தது. பத்து வயதுக்குள் கவிதை எழுதத் தொடங்கிவிட்டான். `விடியலை நோக்கி' என்ற அவன் முதல் கவிதை குங்குமத்தில் வெளியானபோது அவனைவிடவும் நான் மிகுந்த மகிழ்ச்சிகொண்டேன். பள்ளிப்படிப்பை முடிக்கும்போதும் கல்லூரி யில் படிக்கும்போதும் கவிதை, கதை, நாவல் புத்தகங்களை எழுதி வெளியிட்டு எங்களுக்குப் பெருமை சேர்த்தான். அவன் படைப்புகள் சமூக விழிப்பு உணர்வு கொண்டவையாக இருந்தன. பழைய படங்களையும் பாடல்களையும் விரும்பிப் பார்ப்பான். அவனுடைய முதல் புத்தகத்துக்கு நீண்டதொரு முன்னுரையை எழுதியிருக்கிறேன். அவன் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து அவனுடைய கவிதைகள், கதைகளைக் கொண்டாடி வந்திருக்கிறேன். அவனுடைய நாவல் ஒரு பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.

அவனுடைய படைப்பு, அவன் விரும்பியது போல திரைத்துறைக்கு வருவதற்கு அவன் சற்று அதிகமாகப் போராட வேண்டியிருந்தது. இப்போது அவனுடைய 'மெய்நிகரி' என்ற நாவலை களமாகக் கொண்டு பாடல், வசனம் எழுதி வெளிவந்திருக்கும் `கவண்' அவன் வெற்றியின் அடையாளம். `அனேகன்' படத்தில் அவன் எழுதிய `தெய்வங்கள் இங்கே... திரவியம் இங்கே' எனக்குப் பிடித்த பாடல். அவன் எண்ணம் போல வாழ்க்கைக்கு வண்ணம் கூடியிருக்கிறது. தன் கதை, வசனம், பாடல்களுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான வரவேற்பில் அவன் உற்சாகமடைந்திருக்கிறான். மனைவி ரம்யாவின் மருத்துவத் தொழிலை உற்சாகப்படுத்துவான். மகள் மெட்டூரியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மாலை நேரங்களில் விளையாடுவது, கதைகள் சொல்வது என்று பொறுப்பான தந்தையாக நடந்துகொள்வான். கணவனின் வளர்ச்சிக்கு கவனமாகப் பாதை அமைத்துக்கொடுக்கும் அருமையான மருத்துவ மருமகள் ரம்யா.

இரண்டு பிள்ளைகளுமே தங்கள் உழைப்பின் மூலம் அமைத்துக்கொள்ளும் வாழ்க்கையையே பெருமையாகக் கருதுகிறார்கள். அவரவர் குடும்பத்தை மருமகப் பெண்கள் அழகாகத் தாங்குகிறார்கள்.

என் பேரக்குழந்தைகள் ஹைக்கூவும் மெட்டூரியும் பாசம்பொழியும் சின்ன சித்திரங்கள்; என் அன்புக்குரிய சமாதானப் பூக்கள்.

என் பிள்ளைகளுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்...

எத்தனை உயர்ந்தாலும், எத்தனை வளர்ந்தாலும் இன்று போல் என்றும் அன்பும் பணிவுமே உங்கள் வாழ்க்கையாயிருக்கட்டும்.

ஒருவர் உயர்வுக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்ளும் இந்த ஆரோக்கியமான மேன்மை எப்போதும் தொடரட்டும்.

என் கண்மணிகள்! - கவிஞர் பொன்மணி

உடன்பிறப்பின் மேன்மை ஸ்ரீராமனால் வெகு சிறப்பாக எடுத்துச் சொல்லப்படுவதுண்டு. வெவ்வேறு வாழ்க்கை, வெவ்வேறு நிலைப்பாடு, வெவ்வேறு நோக்கம் கொண்டு நீங்கள் வாழலாம். மனம் என்றும் ஒன்றாக இருக்கட்டும்; அன்பெனும் பாலம் உங்களுக்குள் எப்போதும் இருக்கட்டும்.

எந்த ஓர் ஒற்றுமைக்கும் அம்பெறியும் விலங்கு மனங்கள் உங்களைச் சுற்றி பேதங்களை உருவாக்கி மறைவில் குதூகலிப்பார்கள். அப்படிப்பட்ட எதிர்மறையாளர்களுக்குக் காதுகொடுக்காதீர்கள். எப்பேர்ப்பட்டவர் களாக இருந்தாலும் அவர்களை உங்கள் எல்லைக்குள்ளேயே வரவிடாதீர்கள்.

என் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்திருக்கிறீர்கள். உங்களிடம் வேறு எதிர்பார்ப்புகள் எனக்கில்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் நல்லபடியாக வாழ்ந்து வருவதே போதும்.

உங்கள் புதிய முயற்சிகளை என்னிடம் பகிர்ந்துகொள்ளும்போது மகிழ்கிறேன். உங்களைப்பற்றி மற்றவர் புகழும்போது ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தாயாக இன்னும் மகிழ்கிறேன்.

பகவான் சத்ய சாயிபாபாவிடம் உங்களுக் கான என் நித்யபிரார்த்தனை எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இறைவனின் கருணையே உங்கள் வாழ்க்கை.

தெய்வம் தந்த வரங்களால் எனக்கு வாய்த்த கண்மணிகள் நீங்கள். `நல்ல பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம்; அவர்கள் நல்லபடி வாழ்கிறார்கள்' என்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் பிறவியில் என் தாய்மைக்குக் கௌரவம் தந்த உங்களுக்கு என்றும் நான் நன்றி சொல்வேன்.