Published:Updated:

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

பயண அனுபவம்!

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

பயண அனுபவம்!

Published:Updated:
அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!
பிரீமியம் ஸ்டோரி
அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!
அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

ண்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பது பல நாடுகளின் விருப்பம்.  ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து பல்துறை நிபுணர்கள் குழு அண்டார்டிகா சென்று தங்கியிருந்து ஆராய்ச்சி செய்து திரும்பி வருகிறது. இந்த வருட (2001)  அணியின் சிறப்பம்சம் - இதில் டாக்டர் கன்வல் வில்கு என்ற பெண் மருத்துவரும் இடம்பெற்று சாதனை படைத்து திரும்பியிருப்பதுதான்!

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

கிட்டத்தட்ட 143 வருடங்களுக்குப் பின்னர் இந்தியா இந்தச் சாதனையை செய்தது. உலகின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகாவை முதன்முதலில் 1983-ல் தொட்டது இந்தியா. இந்த உருண்ட உலகில் இரண்டு துருவங்களும் கடுமையான குளிர் பிரதேசமாக இருப்பவை. மைனஸ் 70 டிகிரி வரை குளிர். தென் துருவத்துக்கு (South Pole) செல்வது என்பது சாதாரணமானது அல்ல. அண்டார்டிகா கடல் பகுதியான இந்த தென் துருவத்துக்கு முதன்முதலில் மனிதன் சென்றதே 1840-ல்தான்.
டெல்லியில் அசோக் விஹார் மத்திய சுகாதார மையத்தில் மருத்துவராக இருக்கும் கன்வலுடன் நாமும் பயணிக்கலாம்.

``எங்கள் டீமில் மொத்தம் 45 பேர் சென்றோம். என்னோடு பெரு நாட்டு பெண்ணும் வந்தார். நான் இரண்டு காரணங்களுக்காக அண்டார்டிகாவுக்கு  அனுப்பப்பட்டேன். ஒன்று, இந்தக் கடினமான பயணத்தில் வரும் உறுப்பினர் களின் உடல்நலத்தை டாக்டர் என்ற முறையில் பாதுகாக்க... மற்றொன்று, ஆராய்ச்சிப் பணிக்கு. அதாவது அண்டார்டிகாவில் வசிக்கும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய..!

நான் இதுபோன்ற சவாலான பணிகளை ஏற்கெனவே செய்திருக்கிறேன். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைக்கு டாக்டராகவும், மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளின் மருத்துவ ஆலோசகராகவும் இருந்திருக்கிறேன். அப்போது அஸ்ஸாம், அருணாசலப் பிரதேஷ், ஜம்மு - காஷ்மீர் போன்ற இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளேன். அங்கு உயரமான மலைப்பகுதிகளிலும், கடுமையான குளிரிலும் வீரர்களுக்குச் சிகிச்சை செய்திருக்கிறேன். பல நேரங்களில் எனக்கும் என் கணவருக்கும் வெவ்வேறு இடங்களில் பணியிடம் அமைந்து விடும். அப்போதெல்லாம் நான் தனியாகவே தங்கியிருந்துதான் சூழ்நிலையைச் சமாளித்தாக வேண்டும். இதுபோன்ற பல அனுபவங்கள்தான் அண்டார்டிகா பயணத்துக்கு என்னைத் தேர்வு செய்ய முக்கியக் காரணம்.  

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

மும்பையிலிருந்து சவுத் ஆப்பிரிக் காவிலுள்ள கேப் டவுன் நகருக்குச் சென்று, அங்கிருந்து பத்து நாள் கடற்பயணத்தில் அண்டார்டிகாவை அடைந்தோம். 45 பேருக்கான உணவு, உடைகள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் கப்பலில்  எடுத்துச் சென்றோம்.

இந்திய பெருங்கடலைக் கடந்து செல்லும் வரை எங்களுக்கு ஒன்றும் பிரச்னையில்லை. தீர்க்க ரேகையின் (longitude) 40 டிகிரியிலிருந்து 60 டிகிரிக்கு இடைப்பட்ட பகுதிகளில் நாங்கள் சந்தித்த அனுபவம் இருக்கிறதே. பயங்கரம்! நாங்கள் உயிர் பிழைப்போமா என்பதே சந்தேகமாகிவிட்டது. அதாவது இந்த இடத்தில்தான் இந்தியப் பெருங்கடலின் வெப்ப நீரும் அண்டார்டிகா கடலின் உறைய வைக்கும் குளிர் நீரும் சங்கமமாகிறது. இதனால் இங்கு புதியதொரு சீதோஷ்ண நிலை உருவாகி, கடல் பயங்கரமாகக் கொந்தளித்தது. அலைகள் மிக உயரமாக வந்தன. காற்றும் படுவேகமாக வீசியது. எங்கள் கப்பல் 35 டிகிரி வரை இரு பக்கமும் சாய்ந்தது. எங்களுக்கோ தலைசுற்றி வாந்தி, மயக்கம் வந்தது. 

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

நான்காயிரம் கிலோமீட்டர் கடற் பயணத்துக்குப் பின்னர், டிசம்பர் 23 அன்று அண்டார்டிகாவில் உள்ள இந்தியத் தளத்தை அடைந்தோம். இந்தத் தளத்துக்கு மைத்ரி என்று பெயர். இந்தியில் நட்பு என்று அர்த்தம், நாங்கள் சென்றது அங்கே கோடைக் காலம். மைனஸ் பத்து டிகிரி டெம்பரேச்சர் சூரிய வெளிச்சம் இருக்கும் சமயத்தை இங்கே கோடை என்கிறார்கள். வட துருவத்தில் ஆறு மாதங்கள் கும்பகர்ண இருட்டு, ஆறு மாதங்கள் பகல் என்று இருக்கும். ஆனால், தென்துருவ (அண்டார்டிகா) பகுதியில் மூன்று மாதங்கள் முழுப் பகல், மூன்று மாதங்கள் முழு இரவு. மற்ற ஆறு மாதங்கள் இரண்டுமே இருக்கும். அதாவது ஒருநாள், ஒரு மணி நேரம்தான் வெளிச்சம் வந்துவிட்டு, மற்ற இருபத்து மூன்று மணி நேரமும் இரவாகவே இருக்கும். இதுவே சில சமயம் ரிவர்ஸாகவும் இருக்கும். நாங்கள் கப்பலில் வந்திறங்கிய இடத்திலிருந்து சிறிது தூரத்தில் மைத்ரி ஸ்டேஷன் இருக்கிறது. சுமார் நானூறு மீட்டர் ஆழத்தில் பனிக்கட்டியாக உள்ள இடத்தையொட்டி கப்பல் நிற்கிறது. இங்கிருந்து ஸ்டேஷனுக்கு ஹெலிகாப்டரில்தான் போக வேண்டும். எங்களுடைய பொருள்கள் நிறைந்த கண்டெய்னர்களைக் கப்பலில் இருந்து கிரேன் மூலம் பனி வண்டியில் (Snow Vehicle) ஏற்றிக்கொண்டு வருவார்கள். இந்தச் சமயத்தில், ஓரத்தில் இருக்கும் பனிக்கட்டி உடைந்து கடலுக்குள் சரியும் ஆபத்தும் உண்டு. இதனால் பொருள்களை ஹெலிகாப்டர் மூலமாகவும் கொண்டு வருவார்கள்.

முதன்முதலில் நிறுவப்பட்ட ‘மைத்ரி' ஸ்டேஷன், 1989-ல் பனிக்கட்டிக்குள் புதைந்து விட்டது. மறுபடி உருவாக்கப்பட்டதுதான் இது. உள்ளே 20 டிகிரி அளவுக்கு உஷ்ணநிலை இருக்கும். பாத்ரூம் மட்டும் அனைவருக்கும் பொது. தண்ணீர் ஐஸாக இருக்கும். அதை உடைத்துச் சூடாக்கி குடிக்க, குளிக்க உபயோகிப்போம். உணவு வகைகள், கேரட் பீன்ஸ் ஆகிய காய்கறிகள், இறைச்சி போன்றவை. இவற்றை சமைக்க ஓராண்டுக்குத் தேவையான காஸ் சிலிண்டர்கள் ஜெனரேட்டர், குளிருக்கு உறையாத டீசல் போன்றவையும் எங்களோடு வந்தன. எல்லாவற்றையும்விட, போலார் உடை முக்கியமானது. எந்தக்குளிரையும் தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. முகத்தை மூடியிருக்கும் தலைப்பாகையுடன் கூடிய உடையும் உண்டு. இந்த உடைகள் இல்லையென்றால் இங்கு உயிர் வாழ முடியாது. இங்கு புல்வெளியோ, மரமோ கிடையாது. மிருகங்களும் கிடையாது. பறவைகளில் இரண்டே வகை உண்டு. ஒன்று - பெங்குயின். மற்றொன்று - ஸ்கூவா.

என்னோடு வந்த நாற்பத்தேழு பேரில் பெரு நாட்டு பெண் உட்பட நாங்கள் அனைவரும் மைத்ரி ஸ்டேஷனில் எங்கள் வேலைகளைப் பகிர்ந்து செய்வோம். பெண், ஆண் என்ற பாகுபாடு கிடையாது. ஸ்டேஷனைச் சுத்தப்படுத்துவது, சமையல் செய்வது, பனிக்கட்டிகளை அப்புறப்படுத்துவது என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்துகொண்டோம். இந்த டீமுக்குள் பயங்கர தகராறும் வந்தது. அது தனிக்கதை. இங்கே செயற்கைக்கோள் மூலமான தொலைபேசி வசதி பெற்றிருந்தோம். ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களோடு கம்ப்யூட்டரையும் கொண்டு போயிருந்தோம். எனவே, என் குடும்பத்தினரோடு இ-மெயில் தொடர்பு வைத்திருந்தேன். மூன்று மாதத்தில் தகவல்தொடர்பு அமைப்பில் கோளாறு ஏற்பட்டு, பின்னர் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது. சரிசெய்த பிறகு மாதத்துக்கு ஆறு நிமிடங்கள் அளவுக்குத்தான் தொடர்பு கிடைத்தது. நலமாக இருப்பதை மட்டுமே சொல்ல முடிந்தது. ஆராய்ச்சிக்கான இடங்களுக்கு நடந்தே போக வேண்டும். அது சுலபமல்ல. தினமும் பதினான்கு கிலோமீட்டர் நடப்போம். கோடையில் ஒருவித பிரச்னை என்றால், குளிர்காலத்தில் வேறுவிதமான பிரச்னை. கோடையில் தோலெல்லாம் கறுத்து உதிர்ந்து புண்ணானது. வெயிலினால் அல்ல. அண்டார்டிகா கடல் பகுதிக்கு மேலேதான் காற்று மண்டலத்தில் ஒஸோன் துளை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அல்ட்ரா வயலட் கதிர்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஒருமுறை ஸ்னோவண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது, ஒருவர் தவறி விழுந்துவிட்டார். நல்லவேளை... பாறைப் பிளவு ரொம்ப ஆழமில்லை. ஆனாலும் அவரது உடல் முழுக்க அந்தப் பிளவுக்குள் இருந்தது. இரண்டு கைகளால் இரு பக்கமும் உள்ள பனிச்சுவரைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். பிளவுள்ள சுவர் பக்கம் போக மற்றவர்கள் பயந்தனர். டீம் தலைவர்தான் பிடித்து வெளியே இழுத்தார். எங்கள் வாகனம் இந்தப் பிளவை எப்படி தாண்டிச் சென்றது எங்களுக்கே தெரியவில்லை. அவ்வளவு அதிர்ச்சியடைந்தோம்.

அவள் கிளாஸிக்ஸ் - துருவப் பகுதியில் துணிச்சல் பெண்!

எங்கள் டீமில் அதிகமான இடங்களுக்கும் மலைகளுக்கும் சென்றது நான்தான். தென் துருவ முனையைப்போய் பார்க்கிற பாக்கியமும் எனக்குத்தான் கிடைத்தது. துருவ முனையை சற்று தொலைவில் இருந்துதான் பார்த்து ரசித்தேன். நெருங்க முடியாது. நாலு கிலோ மீட்டர் ஆழத்துக்கு ஐஸ் பரப்பு மட்டுமே நிரம்பியுள்ளது. யார் எந்த வாகனத்தில் சென்று இறங்கினாலும் உயிரோடு சமாதிதான். மேலாக பறப்பதும்கூட ஆபத்தானதுதான். சீதோஷ்ண நிலை இடம் கொடுக்காது. வழியில் ஏராளமான பனிப்பாறைப் பிளவுகளையும் உறைபனி மண்டலங்களையும் பார்த்து ரசித்தோம். பார்த்து ரசித்ததையே சொல்லிக் கொண்டிருப்பது போரடிக்கிறதா..? நாங்கள் இங்கு கண்டுபிடித்த விஷயங்கள் நிறைய.

தென் துருவத்தில் மனித உடல்களில் ஏற்பட்ட பல மாற்றங்களைக் கண்டறிந்தோம். இங்கு நாங்கள் தங்கியிருந்தபோது பலரின் பற்கள் பலவீனப்பட்டு, ஓட்டை விழுந்தது. ரத்தக் கசிவும் ஏற்பட்டது. இதற்குக் காரணம் நாங்கள் சாப்பிட்ட உணவு. ஏனென்றால் இங்கு எங்கள் சாப்பாட்டில் வைட்டமின் சி சம்பந்தப்பட்ட எந்த ஐட்டமும் கிடையாது. ஃப்ரீஸர் உணவுதான். அதில் முக்கியமான சத்து எதுவுமில்லை. இதையெல்லாம்விட முக்கியம் பலரின் தலைமுடி பயங்கரமாக உதிர்ந்தது. மனநிலையும் பாதித்தது. எதையும் எதிர்மறையாகவே சிந்தித்தார்கள். சாப்பாட்டின்போது ஆளுக்கொரு ஆப்பிள் எடுத்துக் கொள்வது வழக்கம். ஒருசமயம் ஒரு நபர் இரண்டு ஆப்பிள்கள் எடுத்து விட்டார். அதற்கே குடுமிபிடி சண்டை. இப்படி சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் கூட அடிதடி ரகளையில் முடிந்தது.

இங்கிருந்த 16 மாத வாழ்க்கையில் உயிர் பிழைத்து வர பல விஞ்ஞான உத்திகளை நாங்கள் கடைப்பிடித்து தப்பிவந்தாலும் கடவுள் அருளும் முக்கியம் என்றுதான் கருதினோம். நாங்கள் அவரவரின் கடவுளை வணங்க அனுமதிக்கப்பட்டோம். குடும்பம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது எழுந்தது. இங்கு பெங்குயின் பறவைகளின் வாழ்க்கையை நேரில் கண்டு அதிசயப்பட்ட எனக்கு, என் குடும்பமும் பென்குவின் குடும்பம் போலவே தோன்றியது.

என் சாதனைக்கு உறுதுணையாக இருப்பதற்காக தன் வேலையையே ராஜினாமா செய்துவிட்டார் என் கணவர். நான் டெல்லி திரும்பியபின் நிறைய பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. அதில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொன்னது என் நினைவில் நிற்கிறது.

`நான் ஏதோ 25 வயது பெண்தான் அண்டார்டிகா போய் வந்திருப்பதாக நினைத்தேன். உங்களுக்கு 52 வயதா?' என்று ஆச்சர்யப்பட்டார் அவர்

ஆமாம். என் வயது வெறும் 52 தான்!

சந்திப்பு: சரோஜ் கண்பத்

படங்கள்: டி.குமார்

( அவள் விகடன் 2001 ஜூன் மற்றும் ஜூலை இதழ்களில் இருந்து...)