Published:Updated:

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

பாசம்ஆர்.வைதேகி

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

பாசம்ஆர்.வைதேகி

Published:Updated:
நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி
பிரீமியம் ஸ்டோரி
நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

பிரபலங்களின் வாழ்க்கையைப் பிரச்னைகளே இல்லாத ஒன்றாகக் கற்பனை செய்துகொள்வது சாமானிய மக்களின் மனநிலை. உணர்வுப் போராட்டங்களையும் உறவுச் சிக்கல்களையும் பிரபலங்களும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனிமை வாழ்க்கை, ஒற்றைப் பெற்றோராகக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிற சிரமம் என எதையும் அவர்களும் எளிதில் கடந்துவிடுவதில்லை. காதல் கணவர் ரகுவரனின் திடீர் இழப்புக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட்டாகத் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ரோகிணி.

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

``ரிஷியும் அவங்க அப்பா ரகுவும் ரொம்ப நெருக்கமா இருந்தவங்க. ரகுவுக்கு ரிஷியை அவ்வளவு பிடிக்கும். ரகுவோட திடீர் இழப்புலேருந்து ரிஷியால அத்தனை சுலபத்துல மீண்டு வர முடியலை...'' - வருடங்கள் கடந்தும் வலி மறக்காமல் பேசுகிறார்.

``அவர் தவறினதுலேர்ந்து ரிஷி டி.வி-  க்குப் பயங்கரமா அடிக்ட் ஆகியிருந்தான். அளவுக்கதிமாக வீடியோ கேம்ஸ் விளையாடிக் கிட்டிருந்தான். அதைப் பத்தி நான் அவன்கிட்ட பேசியபோது, `இப்படி டி.வி பார்த்துக்கிட்டிருந்தாதான், அப்பா இல்லைங்கிறதைக் கொஞ்சமாவது மறக்க முடியுது'னு சொன்னான். குழந்தை வெறித்தனமா டி.வி பார்க்கிறது தப்புங்கிற கவலை ஒருபக்கம் இருந்தது. ஆனாலும், அப்பாவோட பிரிவுத் துயரத்துலேருந்து மீள அவனுக்கு எது உதவுதோ, அதை அவன் பண்ணட்டும்னு புரிஞ்சுக்கிட்டு விட்டுட்டேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

`வேலைக்குப் போகாதே... வீட்டுலயே இரு'னு சொல்வான். பத்து நாள்களுக்குத் தொடர்ந்து ஷூட்டிங் இருந்தா, ஸ்கூல் போகலைன்னாலும் பரவாயில்லைனு ரெண்டு நாள்களாச்சும் ஷூட்டிங்்குக்குக் கூட்டிட்டுப் போயிடுவேன். சனி, ஞாயிறு சேர்ந்து வர்ற மாதிரி பார்த்துக் கூட்டிட்டுப் போயிடுவேன். ரிஷிக்குத் தூக்கம் குறைஞ்சது. அந்த நேரத்துல கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டிருந்தான். அதுக்காகவே அவனை ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ்ல கொண்டு போகணும்னு முயற்சி செய்தேன். ஃபுட்பால், டென்னிஸ்னு நான் கூட்டிட்டுப் போன எதுலயும் அவனுக்கு ஆர்வம் இல்லை. அதேசமயம், படிப்புல ரொம்ப ஆர்வமா இருந்தான். விவாதங்கள்ல கலந்துக்கிட்டுப் பரிசுகளோடு வருவான்.

ஏதாவது ஒருவகையில ஃபிசிக்கல் ஆக்டிவிட்டி இருக்கணும்னு சொல்லிட்டே இருப்பேன். ஆனா, அவனை அப்படி எதையும் பண்ணவைக்க முடியலை.  இந்த எல்லா விஷயங்களுமே ஒரு கட்டத்துல மாறுச்சு. என்கூட ஷூட்டிங் வந்துட்டிருந்தவன், திடீர்னு ஒருநாள், `ஸ்கூல்ல பாடங்களை மிஸ் பண்றேன்... என்னை இப்படிக் கூட்டிட்டு வர வேண்டாம். நீ எனக்காகத்தான் வேலை பார்க்கறேனு புரியுது. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். நீ வேலைக்குப் போயிட்டு வந்த பிறகு, நாம மீட் பண்ணிக்கலாம்'னு சொன்னான். தானாகவே ஜாகிங் போறது, டயட்டை சரிபண்றதுனு மாத்திக்கிட்டான். டீன் ஏஜுக்கு வந்ததும் அவனுக்கே தன் தோற்றத்தைப் பத்தின அக்கறை வந்துருச்சு. முன்னல்லாம் கொழுப்பு  அதிகமுள்ளதைச் சாப்பிடாதேனு அட்வைஸ் பண்ணுவேன். இப்ப அநியாயத்துக்கு ஒல்லியாயிட்டான். `சாப்பிடு சாப்பிடு'னு கட்டாயப்படுத்த வேண்டியதா இருக்கு...'' - அயர்ச்சியைத் தாண்டிய மலர்ச்சி அம்மாவின் பேச்சில்.

``அம்மாவா மட்டுமில்லாம அப்பாவாகவும் பொறுப்புகளைச் சுமக்கிறது எனக்கு நிறையவே ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுத்திருக்கு. ஆனா, குழந்தைதான் உலகம்னு நினைக்கும்போது   சுமையா எதுவும் தெரியலை. நேரம் கிடைக்கிறபோது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பார்ப்போம். அவனுக்குப் பிடிச்ச படங்களை நானும் சேர்ந்து பார்ப்பேன். `குழந்தைங்க பகல் நேரத்துல ஏதாவது குறும்புத்தனம் பண்ணுவாங்க. அதுக்காக நாம கோபப்பட்டுத் திட்டியிருப்போம். ஆனா, ராத்திரி தூங்கப் போகும்போது மட்டும் குழந்தைங்களைச் சிரிக்க வெச்சுடுங்க'னு ஒரு ஃப்ரெண்ட் சொன்னாங்க. அதை இன்னிக்கு வரைக்கும் நாங்க பண்றோம். என்னதான் சண்டை போட்டாலும், தூங்கறதுக்கு முன்னாடி எதையாவது பேசி, சிரிச்சுடுவோம். கவலையோடு அவனைத் தூங்க வெச்சதே இல்லை. `நீ பண்ணின குறும்புதான் என் கோபத்துக்குக் காரணமே தவிர, உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை... ஐ லவ் யூ'னு அவன்கிட்ட உணர்த்திக்கிட்டே இருப்பேன்.

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

`அப்பா இருந்திருந்தா இப்படித் திட்டியிருப்பாரா...கோபப்பட்டிருப்பாரா...'னு ரிஷி ஒருநாளும் என்கிட்ட சொன்னதில்லை. ஒருவேளை ரகு இருந்திருந்தா ஒருத்தர் திட்டும்போது இன்னொருத்தர் சமாதானப்படுத்தியிருக்கலாமோனு நானாக நினைச்சிருக்கேன்.  அறிவுரை, அரவணைப்புனு ரெண்டையும் நான் மட்டுமே செய்ய வேண்டியிருக்கு...'' - சொல்லி முடித்துவிட்டு சில நொடிகள் மௌனத்துக்குள் போகிறார் ரோகிணி.

``என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரிஷியை நல்லா வளர்த்திருக் கேங்கிற திருப்தி இருக்கு. ஆனாலும் பல நேரங்களில் நானும் ரிஷியும் ரகுவை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். ரகு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவா இருந்ததில்லை. நான் எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டிருப்பேனோ, அதையெல்லாம் செய்ய அவனை அனுமதிப்பார். சீஸ் சாப்பிடக்கூடாதுன்னு நான் சொன்னா, அவர் பையனுக்காக சீஸ் வாங்கி வைப்பார். அவர் இருந்திருந்தா ரிஷிக்கு இன்னும் அன்பு கிடைச்சிருக்குமேனு நினைப்பேன். டென்த்துல  ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தான். அது ரகுவுக்கு சந்தோஷம் தந்திருக்கும். `நீ என்ன பண்ணினாலும் அதுல பெஸ்ட்டா இருக்கணும்'னு சொல்லிட்டே இருப்பார். `நடிகராகணும்னா அமிதாப் பச்சனா வரணும்'னு சொல்வார். ரிஷிக்கு இப்போ 19 வயசு. வெளிநாட்டுல படிக்கிறான். மெடிசின் படிக்கணும்னு ரொம்பவே மெனக்கெடறான்.

அதையெல்லாம் ரகு இருந்து பார்த்திருந்தார்னா சந்தோஷப்பட்டிருப்பார். அது அவருக்கு வாய்க்காம போனதுல எனக்கு ரொம்பவே வருத்தம். அம்மாவோட அன்பை எப்படி வேற யாராலயும் ஈடு செய்ய முடியாதோ, அதே மாதிரிதான் அப்பாவோட அன்பையும் யாராலயும் கொடுக்க முடியாது.

அம்மாவுக்கும் குழந்தைங்களுக்குமான உறவுல ஒவ்வொரு நொடியுமே ஸ்பெஷல்தான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிற தருணங்கள் எல்லாமே எனக்குச் சந்தோஷமானவை. அவன் வெளிநாட்டுக்குப் போனதிலேர்ந்து அவனை ரொம்ப மிஸ் பண்றேன். படிப்புல அவனுக்குப் பெரிய கனவுகள் இருக்கு; அதை நனவாக்கற பெரிய பொறுப்பு எனக்கு இருக்கு. அவன் என் பக்கத்துல இல்லையேங்கிறதைவிடவும் அவனுடைய கனவுகள் நிறைவேற நான் துணையா இருக்கணும்ங்கிறதுதான் முக்கியமா இருக்கு...''

- அரிதாரமற்ற வார்த்தைகளில் அக்கறையாக முடிக்கிறார் ரோகிணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism