Published:Updated:

ஆனந்த யாழை மீட்டுகிறாள்!

ஆனந்த யாழை மீட்டுகிறாள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த யாழை மீட்டுகிறாள்!

விக்னேஸ்வரி சுரேஷ் பக்குவம்

ஆனந்த யாழை மீட்டுகிறாள்!

விக்னேஸ்வரி சுரேஷ் பக்குவம்

Published:Updated:
ஆனந்த யாழை மீட்டுகிறாள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த யாழை மீட்டுகிறாள்!

என் மகளுக்குத் தற்போது பன்னிரண்டு வயது. அவளுக்கு ஐந்து வயதாகும்போது, ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்ட புதிதில் ஒருநாள்  “Amma, I hate idly. But my hunger took it away” என்றாள். அவள் புத்திசாலித்தனத்தை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.  ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தருணங்கள் அதோடு நிற்கவில்லை. மகளுடன், இதுவரையிலான பள்ளிக்கூட அனுபவங்களில் மூன்று மிக முக்கியமானவை.

முதலாவதாக, பள்ளி ஆண்டு விழாக்களில் நடனமாட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள். ஆயினும், அவள் நிறம் காரணமாக வருடா வருடம் கடைசி வரிசையில் ஆட வைக்கப்பட்டாள். மாநிறத்துக்கும் கீழாக இருப்பவர்கள் முதல் வரிசையில் ஆடினால் நடனம் சோபிக்காது என்று வெயில் பிரதேசமான நாட்டில் இன்னமும் பல ஆசிரியர்கள் நம்புவது நம் துரதிர்ஷ்டம். அடுத்ததாக, அவள் உடல்வாகு காரணமாக எல்லா விளையாட்டுகளிலும் சீக்கிரமே வெளியேற்றப்பட்டு விடுவாள். மூன்றாவதாக, அவள் வகுப்பில் உள்ள  வட இந்திய மாணவிகளின் உருவம் சார்ந்த கேலி. வகுப்பில் எப்போதும் முதல் மாணவியாக இருந்தாலும், மேலே சொன்ன மூன்றும், அவளுக்கு  அந்தந்த வயதுக்கு அதிகப்படியான நெருக்கடியாகவே இருந்தன.

ஆனந்த யாழை மீட்டுகிறாள்!

நான் கவனித்த வரையில், எல்லா பள்ளி ஆண்டு விழாக்களிலும் கறுப்பாக அல்லது மாநிறமாக இருக்கும் குழந்தைகள், குழு நடனத்தில் கடைசிக்குத் தள்ளப்படுவார்கள். எவ்வளவு சுமாராக ஆடினாலும் சிவந்த நிறமுடைய குழந்தைகள்தான் முன்னின்று ஆடத் தகுதியானவர்கள். இது குழந்தையாக இருக்கும்போது புரியாவிட்டாலும், வளரவளர அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. பல ஆசிரியர்கள் தங்களையும் அறியாமல், குழந்தைகள் மனதில் உருவம் சார்ந்த தாழ்வுமனப்பான்மையை விதைத்து விடுகிறார்கள். என் மகளும் இதிலிருந்து தப்பவில்லை. ஆனால், அவள் வேறொரு யுக்தியைக் கையாண்டாள். கீ-போர்டு வாசிக்கக் கற்றுக்கொண்டாள். எந்தப் பாட்டு கேட்டாலும், அதைப் பயிற்சி செய்வதுடன் தானாகவே புதிய மெட்டுகளையும் வாசிப்பாள். பள்ளியின் இசை ஆசிரியர் அவள் ஆர்வத்தைக் கவனித்து, விழாக்களில், போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு தந்தார். தற்போது இறைவணக்கம் முதலே தனியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டவளுக்கு குழு நடனம் ஆடுவதில் ஆர்வம் போய்விட்டது.

விளையாட்டைப் பொறுத்தவரை அவள் கையாளும் முறைதான் மிகவும் சுவாரஸ்யமானது. ஆர்வமிருந்தாலும் உடல் ஒத்துழைக்காததால், மகளால் எந்த விளையாட்டிலும் சோபிக்க முடியவில்லை. ஆட்டத்திலிருந்து சீக்கிரமே வெளியேற்றப்பட்டு பெரும்பாலான நேரங்களில் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால், தற்போது வாலிபால், கூடைப்பந்து, கோ-கோ, இறகுப்பந்து... இப்படி எல்லா போட்டிகளுக்கும் இவள்தான் வர்ணனையாளர். இவள் வர்ணனை செய்ததைப் பார்த்து, விளையாட்டு ஆசிரியர் அதில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்.

பதின்ம வயது வந்ததும், பெண் குழந்தை களுக்குத் தங்கள் உடல் குறித்த கர்வமோ, தாழ்வுமனப்பான்மையோ தானாகவே வந்துவிடுகிறது. அப்போது பெற்றோரின், குறிப்பாக அம்மாவின் வழிகாட்டுதல் இன்றியமையாததாகிறது. பார்பி பொம்மை போலிருந்த வட இந்திய மாணவிகள் சிலர், மகளை நிறம் சார்ந்து உருவத்தை கேலி செய்தது மட்டுமில்லாமல் பட்டப்பெயர் வைத்தும் அழைத்திருக்கிறார்கள். மகள், பள்ளியை மாற்றச்சொல்லி வீட்டில் தினமும் அழ ஆரம்பித்தாள். எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. நெருக்கடிக்குப் பயந்து ஓர் இடத்தை விட்டு விலகுவது ஒரு தவறான பாடமாகிவிடும் என்று நம்பினோம். மெள்ள மெள்ள அவளோடு பேசி, தோலின் வெள்ளை நிறத்தை மட்டுமே தங்களின் ஒரே சொத்தாகக் கருதுபவர்கள்தாம், அடுத்தவர்களையும் அதை வைத்தே எடைபோடுகிறார்கள் என்று புரிய வைத்தோம். சக மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளை, அவர்களின் தனித்திறனை கவனிக்க இயலாமல் போவதும் அதனால்தான் என்பதைப் போகப் போகப் புரிந்துகொண்டு  தெளிவடைந்தாள்.  

எப்போதும் விமர்சனங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கும். வெகு சிலரே விமர் சனங்கள் எழ முடியாத  இடத்துக்குத்  தங்களை மேன்மேலும் உயர்த்திக்கொள்கிறார்கள். நம் மகள்கள் அப்படிக் குறிஞ்சி மலராக வளர உறுதுணையாக இருப்போம். அதுவே அவர்கள் வாழ்க்கை முழுவதற்கும் நாம் தரும் சீர் செனத்தியாக இருக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!