Published:Updated:

மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!

மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!

நம் பெண்கள் கல்வியுடன் கைத்தொழிலும் பயிலுதல் வேண்டும். பெண்களின் உலகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குதல் வேண்டும். அவர்களின் சுறுசுறுப்பு ஆண்களையும் எழுப்பும்; திருத்தும்.

- திரு.வி.க.

திய உணவு முடித்துவிட்டு ஓய்வாக இருந்த ஜெயராமனுக்கு, அவருடைய ஒன்றுவிட்ட சகோதரி பார்வதியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.  விடுமுறைக்கு ஊருக்கு வரச்சொல்லிக் கடிதம் போட்டிருந்தாள்.

மனுஷி - 16 - நம்பிக்கை செய்யும் மேஜிக்!

ஏழு வயதில் பெற்றோரை இழந்து, ஆதரிக்க யாரும் இல்லாமல் கிராமத்தில் இருந்த பார்வதியை, ஜெயராமனின் தாய்தான், தான் வளர்த்துக்கொள்வதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தாள். பார்வதி, ஜெயராமனை விட ஐந்து வயது மூத்தவள். வீட்டுக்கு வந்த புதிதில் பயந்து பயந்து வளைய வந்த பார்வதி, பாதி நேரம் ஜெயராமனை இடுப்பில் சுமந்து திரிவாள். ஜெயராமன், தங்கை, தம்பி, பார்வதி என்று எல்லோரையும் பேதம் இல்லாமல் வளர்த்ததில் ஜெயராமனுடைய அம்மாவுக்குப் பெரும் பங்கு உண்டு.

பார்வதி அடிக்கடி, ‘நம்பின வருக்கு நமசிவாயம்; நம்பின வருக்கு நாராயணன்' என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். ஜெயராமனுக்குத் திருமணம் ஆகி அபி பிறந்த பிறகு, பார்வதி இப் படிச் சொல்வதைக் கேட்டு அபி,
‘நம்பிக்கை அத்தை’ என்றே பார்வதியை அழைக்க, அந்தப் பெயரே பார்வதியின் பட்டப் பெயராகிவிட்டது.

மற்றவர்களுக்கு வசதிப்படாததால், அபி மட்டும் ஆர்வத்தோடு ஊருக்கு வந்து சேர்ந்தாள். அத்தையின்  பிள்ளைகள் இருவரும் நியூயார்க்கிலும் மும்பையிலுமாக இருக்கிறார்கள். அத்தை மட்டும் பாட்டி தவறிய பிறகு, அவளுடைய நினைவாக இந்த வீட்டை விற்காமல், ஆதரவற்றோருக்கான தங்குமிடமாக மாற்றி, உணவு, உடையுடன் நிறைய நம்பிக்கையும் தந்துகொண்டிருப்பதைப் பார்த்து அபி, அத்தையைக் குறித்துப் பெருமிதம் கொண்டாள்.

``ஆளரவமா இருக்கணும்னுதான்,  இந்த வீட்டை முதியோருக்கான இடமா மாத்தத் தோணிச்சு. சொன்னதுமே ஜெயராமன் கண்கலங்கிட்டான். எப்படித் தோணிச்சுன்னு மாஞ்சு மாஞ்சு கேட்டுட்டு, எல்லோரும் சேர்ந்து ஒரு மனசா ஆரம்பிச்சு, கடவுளின்​ஆசீர்வாதத்துல நல்லபடியாபோகுது’’ என்று அத்தை சொன்னபோது,

‘`உன்னோட உழைப்புன்னு சொல்லு. ரொம்பத்தான் அவையடக்கமா இருக் காதே’’ என்று கிண்டல் செய்தாள் அபி.

‘`அதெல்லாம் இல்லை. பாட்டியோட வளர்ப்பு அப்படி. அவங்க வளர்த்த நாமெல்லாம் நல்லது நினைச்சு நல்லதுதான் செய்வோம்’’ என்று சொன்ன பார்வதியின் மனதில், தன்னை அபியின் பாட்டி அவளுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன.

‘`உன்னோட தாத்தாவுக்கு நாலு சகோதரிகள். அவங்களையும் கரை சேர்க்கணுமே. அதுக்கு மேல என்னையும் உன் பாட்டி அழைச்சுட்டுப் போனது சொந்தங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அப்படிச் சொன்னாலும்கூட, உன் பாட்டி பின்வாங்க வில்லை. ஒரு சங்கல்பம் போல ‘கடவுள் இருக்கார். அவர் கைவிட மாட்டார்’ என்று சொல்லியே ஒவ்வொரு நாத்தனாருக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சு, தொடர்ந்து குழந்தைப்பேறுன்னு எல்லாச் சடங்குகளையும் விடாம செஞ்சதில் பாட்டி எக்ஸ்பர்ட்’’ என்றாள் பார்வதி.

‘`பாட்டியின் இந்தப் பக்குவத்தை மத்தவங்க எப்படி எடுத்துக்கிட்டாங்க?’’ என்று கேட்டாள் அபி.

‘`அதை ஏன் கேட்கிறே? சம்பந்திங்களும் சரி, மாப்பிள்ளைகளும் சரி... எல்லோருக்குமே பாட்டி சொல்வதுதான் வேத வாக்கு. பாட்டி இருக்கும்போது எனக்குமேகூட நான் தனியானவள் அப்படிங்கிற எண்ணமே வந்ததில்லே. என்னையும் அத்தையையும் காலேஜ் ஹாஸ்டலில் சேர்த்து, படிக்க வச்சப்போ, மற்றவங்க மறுப்பு தெரிவிச்சாங்க. ஆனா, ‘என் வளர்ப்பு தப்பு செய்யாது'ன்னு பாட்டி அழுத்தமா சொல்லிட்டார். இப்படிப்பட்ட நம்பிக்கையை அந்தக் காலப் பெண்களிடம் நிறையப் பார்த்திருக்கேன். பாட்டியோட அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை எல்லாம் தந்தது’’ என்றாள் பார்வதி.

‘`ஓஹோ, பாட்டிக்கிட்ட இருந்துதான் உனக்கும் நம்பிக்கை வந்ததா அத்தை?’’

‘`உண்மைதான் அபி. நம்மோட மனசு ஒரு விஷயத்தைத் தொடர்ந்து நம்பினா, அந்த நம்பிக்கை அப்படியே உண்மையா நடந்துடும். பாட்டி அடிக்கடி ஒரு கதையைச் சொல்லிட்டிருப்பாங்க...

ஜப்பான்ல ஒரு பகுதியில எல்லோருமே   120 வயசு வரை வாழ்ந்தாங்களாம். இதை  இன்டர்வியூ எடுக்கப் போனவர் ஒரு பெரியவரிடம்,  ‘எப்படி உங்களால இவ்ளோ வருஷம் வாழ முடியுது, அதுல என்ன ரகசியம் இருக்கு?’ன்னு ஆச்சர்யமா கேட்க, ‘எங்க தாத்தாவோட அப்பா, தாத்தா, அப்பானு எல்லாமே 120 வயசு வரை ஆரோக்கியமா வாழ்ந்தவங்க. அதை நாங்கள்லாம் பார்த்துப் பார்த்துதானே வளர்ந்தோம்.. அதனாலேயே இது எனக்கு  ஒரு பெரிய விஷயமா தெரியலை'ன்னு சொன்னாராம். நல்லதை நம்பினா நல்லதே நடக்கும். பாட்டி இருந்தா இந்த வீட்டை எப்படிப் பார்த்துப்பாங்களோ அப்படித்தான் நானும் பார்த்துக்க நினைக்கி றேன்’’ என்றாள் பார்வதி.

‘`ஆனா, இப்ப நிலைமை வேற மாதிரி இருக்கு அத்தை. பள்ளிக்குப் போனா வீடு வர்ற வரை பயம், விளையாட விட பயம், காலேஜ்ல நம்ம பிள்ளைங்க காதலிச்சுடக்கூடாதுன்னு பயம், வேலையில் ஜெயிக்கணுமேன்னு பயம்னு இவ்வளவு பயம் இருக்கு அத்தை.’’

‘`இப்ப இருக்கிற பெற்றோர்களுக்குப் பயம் இருக்கறதை நான் தப்புன்னு சொல்லலை. ஆனா, அளவுக்கதிகமா பயப் படாம, ஸ்ட்ராங்கா நம்பிக்கை வெச்சா நல்லதுன்னுதான் சொல்றேன். இதுதான் ஒருத்தரை மத்தவங்களிடம் ஈர்க்கும் வழி.

தாத்தாவுக்குக் குறைச்ச சம்பளம் இருந்த காலத்துலயே பாட்டி இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கினாங்களே. ‘எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்'ங்கற நம்பிக்கை தந்த சக்திதான் அது. எல்லோரையும் நல்லபடியா ஆளாக்கணும்கிறதை ஒரு சங்கல்பமா எடுத்துட்டிருப்பாங்க. அந்தத் தலைமுறையில ஒவ்வொரு குடும்பத்துலயும் அந்தக் குடும்பத்தைச் சேராத யாராவது ஒருத்தர் கூடுதலா இருப்பாங்க. அந்தக் குடும்பத்துல நம்ம பாட்டி மாதிரி இருக்கிற ஒருத்தரோட நம்பிக்கைதான், எல்லோரையும் நல்லபடியா வளர்க்கணும்னு அவங்க செய்துக்கற சங்கல்பம்தான், கூடுதலா இருக்கிற, அந்த குடும்பத்தைச் சேராத நபருக்கும் ஓர் அழகான குடும்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்கறதுதான் உண்மை’’ என்றாள்.

அத்தை சொல்லச் சொல்ல, அபிக்குப் பாட்டியின் மீது இருந்த அன்பும் மதிப்பும் பல மடங்கு அதிகரித்ததுடன், நம்பிக்கையின் வலிமையை யும் அவளுக்கு உணர்த்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரட்டைக் குழந்தைகள்

ம்பிக்கையும் சங்கல்பமும் இரட்டைக் குழந்தைகள். நம்பிக்கை மெய்ப்படச் சங்கல்பம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சங்கல்பம் செய்துகொள்ளும்போது நம்பிக்கை உறுதிப்படுவதுடன், சிறப்பான முறையில் செயல் வடிவமும் பெறுகிறது. சங்கல்பம் என்பது நம் மனதுக்கு நாம் கட்டளை இடுவதுதான். `ரேண்டா பைர்ன்' எழுதிய சீக்ரெட் புத்தகத்தின் சாரமே, `நாம் அடைய விரும்பும் விஷயத்தை உறுதியாக அடைவோம், என்று நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்துகொண்டால், அதன் அளவற்ற ஆற்றலின் ஈர்ப்பு விசையின் காரணமாக, நாம் அடைய விரும்பியதை இந்தப் பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதுதான்!