Published:Updated:

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

மன அழுத்தத்துக்கு மருந்துகு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

``நாய், பூனை, மாடப்புறா என்று வளர்த்துக் கொஞ்சி யிருப்பீர்கள். `மொலுக்கன் காக்கட்டூ’ தலையைத் தடவிக் கொடுத்திருக்கிறீர்களா? ஃபெர்ரெட் உங்கள் மடிமீது ஏறி விளையாடுமா? பியர்டட் டிராகன் சோபாவுக்கு அடியில் ஒளிந்துகொண்டு உங்களைத் தேடவிடுமா? இந்த வரங்கள் எல்லாம் வாய்க்கப்பெற்ற தம்பதி விஜய் - ராதிகா.   

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

“நாங்க ரெண்டு பேரும் பறவைகள்மேல வெச்சிருந்த அதீத அன்புதான், எங்களை வாழ்க்கையில் ஒண்ணு சேர்த்திருக்கு. ஐ.டி வேலையை விட்டுட்டு,  நாங்க பெட் ஷாப் பிசினஸில் இறங்க, இவங்க எல்லோரும்தான் காரணம். எங்க ரெண்டு குழந்தைகள் மேல காட்டுற பாசத்தைக் குறைவில்லாம இவங்க மேலயும் காட்டுறோம்’’ என உள்ளம் உருகுகிறார்கள்.

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த இவர்களின் வீடு முழுக்க அரிய வகைப் பறவைகள் பறக்கின்றன;  செல்லப் பிராணிகள் ஊர்கின்றன, நடக்கின்றன; இவர்கள் மீது ஏறி விளையாடுகின்றன. `உங்க சாய்ஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கே’ என்றதும், இருவரும் சிரிக்கிறார்கள்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

“தனித்துவமா இருக்கணும், அழிவில் இருக்கும் பிராணிகளைக் காக்கணும்கிற எங்க ரெண்டு பேருடைய எண்ணமுமே ஒரே மாதிரி இருந்ததுதான் எல்லாவற்றுக்கும் காரணம். சென்னையில பிறந்து வளர்ந்தவ நான். ஸ்கூல் படிக்கிறப்போ, ரெட் கிராஸ்ல மெம்பரா இருந்ததால பறவைகள் வளர்ப்பில் ஆர்வமா இருந்தேன். ஆனா, அப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காதுங்கிறதால அனுமதி கிடைக்கலை. ஆனாலும், சாலையோரத்துல தவிச்சுக்கிட்டு இருக்கிற பெட்ஸைப் பார்த்தா, உடனே அவற்றை மீட்டு புளூ கிராஸ்ல ஒப்படைச்சுடுவேன். இப்படி தொடங்கினதுதான் என்னோட ஆர்வம்.

என் கணவர் விஜய், பெட்ஸ் வளர்ப்பில் எனக்கு சீனியர். பன்னிரண்டு வயசுல இருந்தே வெரைட்டியான பறவைகள், பூனைகள், மீன்கள்னு வளர்க்க ஆரம்பிச்சிருக்கார். ஒருகட்டத்துல அதோட குட்டிகள் பெருக, அவற்றை விற்று கிடைக்கிற லாபத்துல புது பெட்ஸ் வாங்கி வளர்த்திருக்கார்.  என் காலேஜ் சீனியரான இவரைப் பத்தித் தெரிய வந்தப்போ, ரெண்டு பேருக்குமான ஒரே மாதிரியான அலைவரிசைகளால நண்பர்கள் ஆகி, காதலர்களானோம்’’ என்று ராதிகா வெட்கப்புன்னகைப் பூக்க, ``என் இன்ட்ரோவையும் நீங்களே கொடுக்கிறீங்க... இப்பவாச்சும் நான் பேசலாமா?!’’ என்று மனைவியிடம் குறும்பாகக் கேட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார் விஜய்...

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

“நாங்க ரெண்டு பேரும் எம்.பி.ஏ (ஹெச்.ஆர்) பட்டதாரிகள். கல்லூரிக் காலத்துல காதலிச்சப்போகூட, பெட்ஸைப் பத்திதான் பேசிட்டு இருப்போம். பெட் ஷாப்பையே பிசினஸா பண்ணலாம்னு முடிவெடுத்தோம். அதுக்கான ரிசர்ச் வேலைகள் செய்தோம். லவ்வர்ஸ்னா பீச், பார்க்குன்னு சுத்துவாங்க. நாங்களோ ஜூ, பெட் ஷாப்ஸ்னு சுத்திட்டு இருப்போம்.

படிப்பை முடிச்சதும் ரெண்டு பேருமே ஐ.டி நிறுவன ஹெச்.ஆர் வேலைக்குப் போனோம். நல்ல வேலை, சம்பளத்தோடு இருந்தபோது, ரெண்டு வீட்டுலயும் எங்க காதலைச் சொல்லி, சம்மதம் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ஆசை இருந்தும் தன்னோட வீட்டுல பெட்ஸ் வளர்க்க முடியாத வருத்தத்துல இருந்த ராதிகா, எங்க வீட்டுல குழந்தை மாதிரி பெட்ஸ்கூடப் பேசி, சிரிச்சு, விளையாடிக்கிட்டு இருந்தா. இப்போ வரைக்கும் அப்படித்தான் இருக்கா” என்கிறார் விஜய், அந்த நொடி தன் மனைவியிடம் பூத்த புன்னகையை ரசித்தபடி.    

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

“எங்க வீட்டுல பெட்ஸ் எண்ணிக்கை பெருகப் பெருக, கஸ்டமர்களும் அதிகமாகிட்டாங்க. அதனால நான் வேலையை விட்டுட்டு, வீட்டுல இருந்தபடியே ஆன்லைன் வாயிலாக பிசினஸைக் கவனிச்சுட்டு இருந்தேன். அடுத்தகட்டமா, ஒரு கடையை வாடகைக்குப் பிடிச்சு `டேம்டு பெட்ஸ்' (Tamed Pets) என்ற பெயரில் பெட்ஸ் ஷாப் ஆரம்பிச்சோம். சரியா கடைத் திறப்பு விழா அன்னிக்கு என் முதல் பையன் ஆகாஷ் பிறந்தான்... ரெட்டைச் சந்தோஷம். அடுத்த ஒரே வருஷத்துல விஜய்யும் வேலையை விட்டுட்டு பெட்ஸ் பிசினஸைக் கவனிச்சுக்கிற அளவுக்குத் தொழிலில் வளர்ச்சி. நிறைய செலிப்ரிட்டி கஸ்டமர்கள் கிடைச்சாங்க. சினிமா ஷூட்களுக்கும் பெட்ஸை வாடகைக்குக் கொடுக்
கிறோம்’’ என்ற ராதிகா, ``எல்லாத் தையும்விட எங்களுக்குச் சந்தோஷ மான விஷயம்... எங்க  பையன் ஆகாஷ், பொண்ணு லயா ரெண்டு பேரும் எங்களை மாதிரியே பெட் லவ்வர்ஸ்” என்கிறார் குழந்தைகளை அணைத்தபடி.

``நாம வளர்க்கிற பெட்ஸ் நம்மைப் பார்த்ததும் குழந்தை மாதிரி ஓடி, பறந்து வரணும். கூண்டில் வெச்சு வளர்த்தா அது சாத்தியமில்லை. அதனால எங்க வீட்டுல திறந்தவெளியிலதான் வளர்க்குறோம். பறவைகள் இனப்பெருக்கத்துக்கு வீட்டுலயே தனியா ஒரு ரூமை அதுக்குத் தகுந்த வெப்பநிலையில் பராமரிக்கிறோம்’’ என்று சொல்லியபடி தன் கையில் இருக்கும் பறவையை முத்தமிடுகிறார் ராதிகா.

“நிறையப் பேரு, ‘நீங்க வளர்க்கிற நிறைய பெட்ஸ் காட்டுல வளர்றதாச்சே.., வீட்டுல வளர்க்கிறது தப்பில்லையா?’னு கேட்பாங்க. அரசு விதிப்படி நம்ம நாட்டைப் பிறப்பிட ஆதாரமாகக் கொண்டு வனப்பகுதியில் வசிக்கிற மிருகம், பறவைகளையும் வீட்டுல வளர்க்கக் கூடாது. அது தெரியாம பலரும் பச்சைக்கிளி, மைனா, நம்ம நாட்டு வகை சிட்டுக்குருவிகளை வீட்டில் வளர்க்கிறாங்க. ஆனா, நாங்க வளர்க்கிற எல்லா பறவை, பிராணிகளுமே வெளிநாட்டு வகையைச் சேர்ந்தவை. அவை ஆங்கிலேயர் காலத்துல நம்ம நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இப்போ படிப்படியா அழிஞ்சுட்டு இருப்பவை. அதனால இந்த மாதிரியான பிராணிகளை நாங்க ரொம்பவே கவனமா பராமரிச்சுட்டும், அந்த இனங்கள் அழியாமலும் பார்த்துக்கிறோம்.     

செல்லம் கொஞ்சுதே எங்கள் செல்லங்கள்!

இகுவானாவைப் பார்க்க உடும்பு மாதிரியே இருக்கும். ஆனா, பல்லி இனத்தைச் சேர்ந்த அது,  நான்கைந்து அடி உயரம் வரை வளரும். க்ரீன் விங் மக்காவ் (Green wing macaw) பறவை அதிகபட்சமா நான்கைந்து அடி வரையும்,  மொலுக்கன் காக்கட்டூ (Moluccan cockatoo) பறவை இரண்டரை அடி உயரம் வரையும் வளரும். இவை எல்லாமே எண்பது - நூறு வயசு வரை வாழும்.

எங்களை மாதிரியே வித்தியாசமா யோசிக்கிற பலரும் இவற்றை வளர்க்க விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. தங்களோட பெட்ஸுக்கு வளைகாப்பு விழா, புதுசா பிறக்கும் குட்டிக்குப் பெயர் சூட்டும் விழா, கல்யாண விழா, விரல்ல மோதிரம் போடுற விழான்னு செய்கிற வித்தியாசமான கஸ்டமர்களும் எங்களுக்கு இருக்காங்க’’ என்று சிரிக்கிறார் விஜய்.

“ஒரு விஷயம் வலியுறுத்திச் சொல்லணும். இன்றைய பரபர வாழ்க்கை முறையில பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகறாங்க. இதுக்கு எந்த டாக்டர்கிட்டயும் போக வேண்டியதில்லை. கவலையை மறந்தாலே, மன அழுத்தம் தானா மறையும். அதுக்கு பெட் அனிமல்ஸ் ரொம்ப உதவியா இருக்கும். குழந்தைகள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற மாதிரியான பறவைகள், பிராணிகளை வளர்க்கலாம்; மகிழ்ச்சியா இருக்கலாம்!”

- அருமையான வழியை அழகாகச் சொல்கிறார்கள் ராதிகாவும் விஜய்யும்.