Published:Updated:

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

ஆர்.வைதேகி

பெ(ஸ்)ட் போட்டோகிராபி

மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு....

கூகுளில் கௌரவமான வேலை...

யுஎக்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் என்கிற சிறப்புத் தகுதிகள்...

டெல்லியைச் சேர்ந்த ஆகாங்க்ஷா டவாகின் பெருமையைப் பேச இப்படிப் பல விஷயங்கள்...

ஆனால், ‘பெட் போட்டோகிராபர்’ என்கிற எளிமையான அடையாளம் சொல்கிறது ஆகாங்க்ஷாவின்  விசிட்டிங் கார்டு.    

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘பெட் போட்டோகிராபர்’ என்கிற நிறுவன அதிபரான ஆகாங்க்ஷாவுக்கு வளர்ப்புப் பிராணிகளுடனான வாழ்க் கையே விருப்பத்துக்குரியதாக இருக்கிறது. 
  
``ஹைதராபாத், மும்பை, சென்னை, பெங்களூருனு இந்தியாவுல எல்லா ஸ்டேட்லயும் பெட் போட்டோ ஷூட் பண்றேன்.

எனக்குப் பூர்வீகம் பெங்களூரு. என் அம்மா, அப்பா, சகோதரி மூணு பேரும் எங்களோட செல்ல நாய் பெப்பர்கூட அங்கதான் இருக்காங்க. நான், என் கணவர், பூனைக்குட்டி பிக்செல் மூணு பேரும் டெல்லியில இருக்கோம்...’’ என்கிறவருக்குச் செல்லங்களுடனான பந்தம், சிறுவயதிலிருந்தே தொடர்கிறதாம்.   

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

``உயிரியல் பூங்காவா மாத்திடலாம்னு சொல்ற மாதிரியான வீட்டுச்சூழல்லதான் வளர்ந்திருக்கேன்.  தெருவுல ஆதரவில்லாமல் திரியற எந்தப் பிராணியையும் வீட்டுக்குத் தூக்கிட்டு வந்து வளர்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். கம்பளிப்பூச்சி, சிட்டுக்குருவி, வாத்து, ஆமை, நத்தை, எலி, அணில், பூனை, நாய்னு எதையும் நான் விட்டு வெச்சதில்லை.

வாயில்லா ஜீவன்கள் மீதான என் அன்பு நாளுக்கு நாள் அதிகமானது. என்னால தனியா ஒரு நாய்க்குட்டியை வளர்க்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்தபோது அம்மாவும் அப்பாவும் எனக்கு ‘பெப்பர்’ வாங்கிக் கொடுத்தாங்க.  என் வாழ்க்கையின் முக்கியமான ஜீவன் அவன். ‘எனக்கு நாய்னாலே பயம்’னு அலறின எத்தனையோ நண்பர்களை, நாய்களை நேசிக்க வைக்கிற அளவுக்கு மாத்தினவன் அவன். உள்ளங்கை அளவுக்கு ரெண்டு மாசக் குட்டியா என்கிட்ட வந்தவனுக்கு இப்போ       17 வயசு. என்னுடைய ‘பெட் போட்டோகிராபர்’ கம்பெனி லோகோவுல இருக்கிறவனும் பெப்பர்தான். பூனைக்குட்டி பிக்செலுக்கு இப்போ ரெண்டு வயசு. அவ ஒரு மாசக் குட்டியா இருந்தபோது எங்ககிட்ட வந்தாள்.  பெப்பரும் பிக்செலும் ஒரே வீட்டுல சேர்ந்து இருந்திருக்காங்க. சின்னதாகூட சண்டை போட்டுக்கிட்டதில்லை...’’ - பெருமையாகச் சொல்பவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக  வைல்ட் லைஃப் போட்டோகிராபராக இருந்தவர்.     

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

‘`இது நானா வளர்த்துக்கிட்ட கலை. என் கணவர் பேர்ட் போட்டோகிராபர். எங்க ரெண்டு பேருக்கும் இயற்கையின் அழகைப் படம் பிடிக்கிறதுல ஒரே மாதிரியான ஆர்வம். ஒருமுறை வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்குப் போனபோது நாங்க தங்கியிருந்த இடங்களில் எல்லாம் தென்பட்ட நாய், பூனைகளை போட்டோ எடுத்துட்டு வந்தோம். அந்தப் படங்களைப் பார்த்தப்ப எங்க வீட்டுச் செல்லங்களையும் போட்டோ எடுக்கிற எண்ணம் வந்தது. 2013-ல் என் ஃப்ரெண்ட் ஆரத்தியோட நாய்க்குட்டி டாகோவை முதன்முதலா புரொஃபஷனலா எடுத்தேன். டாகோ, கோல்டன் ரெட் ரீவர் இனத்தைச் சேர்ந்தவன். அந்த போட்டோ ஷூட்டை அவன் அப்படி என்ஜாய் பண்ணினான். அத்தனை படங்கள்லயும் அவனோட சிரிப்பையும் சந்தோஷத்தையும் ஃபீல் பண்ண முடியும்...’’ - படத்தைக் காட்டியபடி நம்மையும் அதை உணரச் செய்கிறார்.   

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

`‘பெட் போட்டோகிராபர்னு சொன்னா பலரும் என்னைப் பாவமா பார்க்கிறாங்க. ஆனா, உண்மை என்ன தெரியுமா? மனுஷங்களை விடவும் சூப்பரா கோஆபரேட் பண்ணக்கூடியவை செல்லப் பிராணிகள். ஒரே ஒரு வித்தியாசம்... அதுங்க நமக்காக போஸ் கொடுக்காது. அதுங்களா செய்யும்போது நாம போட்டோஸ் எடுக்கணும். நீங்க சொல்ற இடத்துல நிற்கவைக்கவோ, உட்காரவைக்கவோ முடியாது. அதுங்க பின்னாடி ஓடி ஓடித்தான் உங்களுக்கான படங்களை நீங்க எடுக்கணும். இது நிஜமாகவே வேறோர் அனுபவமாகத்தான் இருக்கும். செல்லப் பிராணிகளோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டா மட்டும்தான் இந்த போட்டோகிராபி செய்ய முடியும். மனுஷங்களைப் போலவே மிருகங்களிலும் கூச்ச சுபாவமுள்ளவை, ஹைப்பர் ஆக்டிவ்னு எல்லாம் உண்டு. அதைப் புரிஞ்சுக்கிட்டு அதுங்க போக்குலயே விட்டு எடுக்கிறது மிகப் பெரிய சவால். ஒரு போட்டோஷூட்ல அப்படித்தான்... அந்த நாய் கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவ். போட்டோ எடுக்க ஆரம்பிச்சதும் எங்களை நோக்கி ஓடி வந்தான். கேமரா லென்ஸுக்குள்ள மூக்கை விட்டுத் துழாவி, ஆராய்ச்சிகளை எல்லாம் பண்ணி ஒரே ரகளை. அவன் ஈரமாக்கின லென்ஸைத் துடைச்சு, நார்மலாக்கி மறுபடியும் போட்டோஷூட்டை கன்டின்யூ பண்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு...’’ - `ஆஹா அனுபவம்' சொல்பவர், அனிமல் பிஹேவியர், டாக் காக்னிஷன் அண்ட் எமோஷனில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருக்கிறார்.  

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

பெட் போட்டோகிராபி என்பது இந்தியாவில் இன்னும் பிரபலம் ஆகாததிலும், அதற்காக மக்கள் செலவு செய்யத் தயாராக இல்லை என்பதிலும் ஆகாங்க்ஷாவுக்குக் கொஞ்சம் வருத்தம்தான். இவற்றைத் தாண்டிய சவால்களையும் எதிர்கொண்டே இந்தத் துறையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.   

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

``பெட் போட்டோகிராபி பண்றது சாதாரண விஷயமில்லை. செல்லங்களோட சொந்தக்காரங்களை முன்கூட்டியே சந்திச்சு லொகேஷன்லேருந்து, செல்லங்களோட மனநிலை வரைக்கும் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். போட்டோ எடுக்கவேண்டிய பெட் கூட ஓர் அறிமுகத்தை ஏற்படுத்திப்பேன். அவுட்டோர் ஷூட் பண்ணும்போது அந்த பெட்டுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ, அதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொல்வேன். அது பொம்மையிலேருந்து தின்பண்டம் வரை எதுவாகவும் இருக்கலாம். இத்தனைக்குப் பிறகும் திடீர்னு ஒரு மழை வந்து மொத்த பிளானையும் காலியாக்கிடும்...’’ - பலமுறை அத்தகைய அனுபவங்களைச் சந்தித்தவராகச் சொல்கிறார்.  

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் முயல், மீன், ஆமை, பல்லி, பூச்சி, பாம்பு என விசித்திரமான வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போருக்கும் போட்டோ ஷூட் செய்வதுதான் ஆகாங்க்ஷாவின் ஸ்பெஷாலிட்டி.  

பெப்பர்... ஸ்மைல் ப்ளீஸ்!

``பெற்றோர், கணவர்னு என் உலகத்துல எல்லாருக்கும் மிருகங்கள்மீது அன்பு உண்டு.  அதனாலதான் என்னால இந்தத் துறையில நம்பர் ஒன்னா இருக்க முடியுது. சீக்கிரமே பெட் போட்டோகிராபிக்காக ஒரு ஸ்டூடியோ கட்டணும். இந்தியா முழுக்க இந்த கான்செப்டைப் பிரபலப்படுத்தணும்...’’ ஆகாங்க்ஷாவின் கேமரா கண்களில் ஆயிரம் கனவுகள்!