Published:Updated:

மனுஷி - சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்?

மனுஷி -  சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்?
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்?

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

பெண்ணே... குழந்தைகளின் பாது காவலரும், தெளிந்த அறிவு பெற்றவளும், ஆயிரக் கணக்கான பிரார்த்தனைகளுக்குச் சமமானவளும், அனைவரையும் தன் சொல்லாலும் செயலாலும் கவர்பவளுமான நீயே செழிப்பினை ஏற்பவளாகவும் இருக்கிறாய். தகுதியான கணவனுக்கு மனைவியான நீ, செல்வத்தை அதிகரிக்கச்செய்யும் அறிவினை உன் கணவனுக்கு வழங்குவாயாக.

அதர்வண வேதம்: 7.46.3

அன்று காலை தினசரியில் வெளிவந்த மனவளக்கலை பற்றிய விளம்பரத்தைப் பார்த்த ப்ரியா, ‘இப்போது எங்கே பார்த் தாலும் Body, Mind, Soul (உடல், மனம், ஆன்மா) பற்றிப் பேச்சு அடிபடுகிறதே. அதற்காக பிரத்யேகமாக வகுப்புகள் வேறு நடைபெறுகிறதே. இதுபற்றியெல்லாம் நம் முன்னோர் அறிந்திருக்கவில்லையா என்ன?’ என்கிற சிந்தனையில் லயித்திருந்தாள்.     

மனுஷி -  சீதை, திரெளபதி கதை கேட்பதால் என்ன பயன்?

‘`என்ன யோசனை ப்ரியா? நான் அவ்வளவு நேரமா கூப்பிடறேன். காதுல விழலையா?’’ என்று கேட்டபடி, ப்ரியாவின் தோள்களைத் தொட்டு உலுக்கினாள் ராதிகா.

அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த ப்ரியா, தன்னுடைய யோசனைக்கான காரணத்தைக் கூறினாள். ப்ரியா சொன்னதைக் கேட்ட ராதிகா, ‘`அடி அசடு, இதுதான் யோசனையா? பெண்களைப் பொறுத்தவரை உடல், மனம், ஆன்மா மட்டுமல்ல, ஆடிட்யூட் விஷயத்திலும் நம்முடைய பழக்கவழக்கங்களே உளவியல் ரீதியாக நல்ல திடமான தொடர்பைத் தருகின்றன.

குழந்தையை அழகுபடுத்துதல் தொடங்கி, சிகை நீக்குதல், காதணி அணிவித்தல், ஆயுஷ் ஹோமம், வித்யாரம்பம், பூப்புனித நீராட்டு என்று அந்தந்த வயதில், ‘உனக்காகவே செய்கிறேன்’ என்கிற உணர்வுடன், ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து அக் கறையுடன் செய்கிறார்கள். அழகியல், இறை சிந்தனை, பாரம்பர்யம் ஆகியவற்றின் அடிப்படையில் அப்படிச் செய்வதால், குடும்பம், உற்றார் உறவினர், வழிவழியாக வந்த பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுடன் நமக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஒரு குடும்பம் தழைத்துச் செழிப்பதில் பெண்களின் பங்களிப்பு அலாதியானது. ஓர் ஆண் இல்லாத குடும்பத்தை ஒரு பெண்ணால் எளிதாக வழிநடத்த முடியும். ஆனால் ஒரு பெண் இல்லாத குடும்பத்தை நிர்
வகிப்பது ஆணுக்கு மிகவும் சிரமமானது. அதனால்தான், குடும்பத்திலும், குடும்பம் சார்ந்த கடமைகளிலும், பண்டிகைகள், சடங்குகள் என அனைத்திலும் முழு ஆதிக்கத்தைப் பெண்களுக்கு வழங்கி இருக்கிறது நம் சமூகம். மற்ற தேசத்துப் பெண்களுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டுப் பெண்கள் மனதளவில் மிகவும் உறுதியானவர்கள். மேலும், மற்ற நாட்டுப் பெண்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் மனப்பிறழ்வு போன்ற உளவியல் ரீதியான பிரச்னைகள் நம்மவர்களுக்கு அவ்வளவாக ஏற்படுவதில்லை’’ என்றாள் ராதிகா.

அவளே தொடர்ந்து, ‘`நம்முடைய பாரம்பர்யம் போற்றவேண்டிய இடத்தில் போற்றியும், குறையிருந்தால் எளிமையாக, சம்பந்தப்பட்டவருக்கு வலிக்காமல், எளிய பழமொழிகள் மூலமாகக்கூட சுட்டிக்காட்டியும் புரிய வைக்கிறது. செய்யும் ஒவ்வொரு செயலிலும் அர்ப்பணிப்பு உணர்வு, பெரியவர்களை மதிக்கும் மனப்பான்மை போன்றவற்றையும் ஏற்படுத்தச் செய்கிறது. இதனால்தான் நம் பெண்கள் ஆச்சர்யப்படும்வகையில் மேன்மையானவர்களாக இருக்கிறார்கள்’’ என்றாள்.

‘`அப்படி என்றால் ஆண்களைவிட பெண் களுக்குத்தான் இந்தச் சமூகத்தில் மதிப்பு அதிகம் என்று சொல்ல வருகிறீர்களா?’’ என்று கேட்டாள்.

‘`உண்மைதான்... மனைவி செய்யும் பூஜைகளின் முழுப் பலன் அவளுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், கணவன் மனைவியுடன் சேர்ந்து செய்யும்போதுதான் பலன் கிடைக்கும். மனைவியைத் தவிர்த்து கணவன் செய்யும் பூஜையின் பாதிப் பலன் மனைவிக்கு வந்துவிடும் என்று சொல்கிறது சாஸ்திரம்’’ என்றாள் ராதிகா.

‘`சீதை, திரௌபதி... இவங்களோட கதைகளெல்லாம் கேட்பதால், நம்மோட மனதுக்கு என்ன பலன் கிடைக்கப்போகுது?’’ என்று ப்ரியா கேட்டதற்கு,

‘`நம்மோட மனதைப் பண்படுத்தத்தான் அவங்களோட கதைகளையெல்லாம் நமக்குச் சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். ஒரு பெண் எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும், உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவங்களுக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் வரத்தான் செய்யும். அதையெல்லாம் `ஓவர்கம்' செய்து மீண்டுவர வேண்டும் என்னும் எண்ணத்தைப் பெண்களின் மனதுக்குள் விதைப்பதற்குத்தான் சீதை, திரௌபதி போன்றவங்களோட கதைகளெல்லாம் சொன்னார்கள். சுகமோ, துக்கமோ எதுவும் நிரந்தரம் இல்லை என்னும் மெசேஜைப் பெண்களின் மனதில் பதிய வைக்கத்தான் இத்தனை பிரயத்தனமும்’’ என்றாள் ராதிகா.

‘`சரி, இதனாலெல்லாம் மனதுக்கும் ஆன்மாவுக்கும் தெளிவும் நிறைவும் கிடைக்கும். ஆனால், உடலுக்கு என்ன இருக்கிறது?’’

``நீ கேட்டது நியாயம்தான். ஆனால், ஒன்றை நீ கவனிக்க வேண்டும். பெண்களுக்கான உணவு முறையில் நம்முடைய வீட்டுப் பெரியவர்கள் நிறையவே அக்கறை எடுத்துக்கொண்டார்கள். பொதுவா, ஒவ்வொரு சடங்கிலும் எள்ளும் வெல்லமும் கலந்த இனிப்பே பிரதானமாக இருப்பதை நீ பார்த்திருக்கலாம். அதேபோல, தாளிப்பது தொடங்கி வடை செய்வது வரை உளுந்து பயன்படுத்தப்படுகிறது. இவை யெல்லாமே புரோட்டின் ரிச் உணவுகள்தான். பொதுவாகவே நம்முடைய உணவு முறையே சரிவிகித உணவு முறைதான்’’ என்றாள் ராதிகா.

‘`எப்போதாவது மனதில் சலனமோ குழப்பமோ ஏற்படும்போது, அதற்கு ஏதேனும் வழியை நம்ம வீட்டுப் பெரியவங்க சொல்லி இருக்கிறார்களா?'' என்று ப்ரியா கேட்டதற்கு,

‘`ஏன் இல்லாமல்? மனம் குழப்பமாக இருக்கும்போது அரிசியையும் வெள்ளை உளுந்தையும் கலந்துவைத்து, தனித்தனியாகப் பிரித்து எடுப்பார்களாம் நம் பாட்டி’’ என்று ராதிகா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிட்ட ப்ரியா, ‘`இதெல்லாம் வேலையத்த வேலை’’ என்றாள்.

‘`இதையேதான் நானும் பாட்டியிடம் கேட்டேன். அதற்குத் தாத்தா, ‘இது ஒரு சிறந்த மனப்பயிற்சி. மூளைக்கு வேலை இல்லையென்றால் சாத்தான் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்' (Empty Mind Devil’s workshop) என்று சொன்னார். அதனால்தான் வேலையில்லாமல் இருக்கும்போது, மனதில் தேவையில்லாத எண்ணங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் இப்படி ஒரு வழியைக் கடைப்பிடித்தார்கள்...''

‘`இதெல்லாம் கேட்பதற்கு ஒரு மாதிரி இருந் தாலும்கூட, நம்மவர்கள் எதையும் விட்டு வைக்காமல் இருந்தது ஆச்சர்யமா இருக்கிறது’’ என்ற ப்ரியாவே தொடர்ந்து, ``ஆமாம்... சாமி, பக்தி என்று வந்துவிட்டால், எல்லாவற்றையும் நிறைவாகச் செய்வார்கள் என்பதற்காக, சுகர் கோட்டட் டாப்லெட் மாதிரி பக்தி கோட்டடா கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது’’ என்றாள்.

‘`அதேதான்’’ என்று பை பை சொல்லிச் சிரித்தபடி கிளம்பினாள் ராதிகா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கருவிலேயே தொடங்கும் பிணைப்பு

தாய்க்கும் குழந்தைக்கும் உண்டாகும் பிணைப்பு கருவிலேயே தொடங்கிவிடுகிறது. உடல், மனம், ஆன்மா என்பதுடன் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமாகவும் தொடர்பு ஏற்பட்டுவிடும். கரு வளர்ந்த நிலையில், வயிற்றிலிருக்கும் குழந்தையிடம் ஏற்படும் நுண்ணிய உணர்வுகளைக்கூடத் தாயால் புரிந்துகொள்ள முடியும். எல்லாமே எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அனிச்சையாகவே நடைபெறுவது ஒரு மேஜிக்தான். அதுவும் அமைதியான, நேர்மறையான சூழலில் இந்தப் புரிதல் கூடுதலாகவே இருக்கும்.