Published:Updated:

“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

சந்தோஷ மேஜிக்ஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

டிகர் நகுலின் மனைவியாக, டிராவல் மற்றும் குக்கரி ஷோ நடத்தும் பிரபலமாகப் பலருக்கும் பரிச்சயமானவர் ஸ்ருதி. அவர் அநியாயத்துக்கு நாய்களின் பிரியை என்பதை அவரின் ஏரியாவாசிகள் மட்டுமே அறிவர். அவரின் வருகையை எதிர்நோக்கி, எப்போதும் காத்திருக்கின்றன அந்த ஏரியாவில் வசிக்கிற வாயில்லா ஜீவன்கள். காத்திருக்கிற ஜீவன்கள் ஒருநாளும் ஏமாறுவதில்லை. நன்றியைக் காட்டவும் தவறுவதில்லை.  

“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

திருமணத்துக்குப் பிறகு, பிறந்த வீட்டோடு விட்டுச்சென்றே தீரவேண்டிய விருப்பங்களில் ஒன்று வளர்ப்புப் பிராணிகளின் மீதான பிரியமும். வருகிற வாழ்க்கைத்துணைக்கு வளர்ப்புப் பிராணிகள் பிடித்தால் மட்டுமே புகுந்த வீட்டில் அந்தப் பெண்ணுக்கும் அவளது விருப்பத்துக்கும் இடமளிக்கப் படும். இல்லாவிட்டால், அரிதாக நிகழ்கிற பிறந்த வீட்டுச் சந்திப்புகளின்போதுதான் பிரியமாக வளர்த்த செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்த முடியும்.

ஸ்ருதி அதிர்ஷ்டசாலி.  அவரைப் போலவே நகுலுக்கும் வளர்ப்புப் பிராணிகளின் மீது நேசம் அதிகம். அதனால் திருமணத்துக்கு முன் முன்பிருந்ததைவிடவும் அந்த ஆர்வம் பல மடங்கு அதிகரித்திருப்பதில் ஸ்ருதி செம ஹேப்பி.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

‘`சின்ன வயசுலேருந்தே பெட்ஸ் பிடிக்கும். ஆன, அப்போதைய அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில அது சாத்தியமாகலை. புது வீட்டுக்குப் போனதும் `ஹனி'னு ஒரு லேப்ரடார் குட்டி வாங்கி வளர்த்தோம். அவ குட்டி போட்டு அதுல ஒரு குட்டியையும் நாங்க வளர்க்கறோம். அவ பேரு `பபுள்ஸ்'.   என் தம்பி ஆதரவில்லாமல் தவிச்சுட்டிருந்த ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிட்டு வந்தான். அவன் பேர் `ஓரியோ'. அப்புறம் நானும் நகுலும் இந்தியன் ப்ரீட் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம். அவன் பேர் `ஊலா'. இவங்களோடு, இன்னொரு இந்தியன் ப்ரீட் இருக்கான். அவன் பேர் `ஜெல்லோ'. அவனை யாரோ வீட்டுலேருந்து துரத்திட்டாங்க. நகுல்தான் பார்த்து, சாப்பாடு கொடுத்துட்டு வந்தார். அடுத்த நாள் மறுபடியும் தெருவுல உயிரே போகிற கண்டிஷன்ல இருந்தான். அப்புறம் அவனையும் எடுத்துட்டு வந்துட்டோம். அவனுக்கு வீட்டுக்குள்ளே இருக்கிறது பிடிக்காது. அதனால எங்க வீட்டு வாசல்லயே இருப்பான்...’’ - ஐந்து செல்லங்களுக்கும் அறிமுகம் கொடுத்துத் தொடர்கிறார் ஸ்ருதி.

‘`ஹனிக்கு இப்ப பன்னிரண்டரை வயசு. பபுள்ஸுக்கு பதினொரு வயசு. ரெண்டு பேரும்தான் ரொம்ப வருஷங்களா என்கூட இருக்கிறவங்க. நான் யார்கிட்டயாவது சண்டைபோட்டுட்டு அப்செட்டா வந்தாலோ, அழுதாலோ இவங்களுக்குப் புரியும். நான் சரியாகிற வரைக்கும் பக்கத்துலயே இருப்பாங்க.

இந்தியன் இன நாய்கள் கொஞ்சம் அதிக பொசஸ்ஸிவா இருப்பாங்க. ஹனியையும் பபுள்ஸையும் கொஞ்சம் அதிகமா கொஞ்சிட்டா ஊலாவுக்குக் கோபம் வரும். முறைப்பா. ஆனா, அவளையும் அதே அளவுக்குக் கொஞ்சினா சமாதானமாயிடுவா...’’ - தங்களைப் பற்றித்தான் பெருமை பேசுகிறார் என்பது புரிந்து, தலையசைத்து கவனிக்கிறார்கள் ஹனி, பபுள்ஸ் மற்றும் ஊலாவும்.

‘`ரெண்டு வருஷம் முன்னாடி வெள்ளம் வந்தபோது எங்க வீடு மொத்தமும் பாழாகிடுச்சு. எங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்த நேரம் அது... கல்யாண வேலை ஒரு பக்கமும்... வீட்டு வேலை இன்னொரு பக்கமுமா ரொம்ப டென்ஷன்... வீட்டை சரி பண்ற வரைக்கும் அவங்களை எங்ககூட வெச்சுக்க முடியலை. ஜெல்லோ தி.நகர்ல நகுல் வீட்ல இருந்தான். மத்தவங்களை எல்லாம் இசிஆர்ல உள்ள ‘ஹோட்டல் ஃபார் டாக்ஸ்’ல விட்டிருந்தோம். வாரம் ஒருமுறை அங்கே போய்ப் பார்ப்போம். அத்தனை வேலைகளுக்கு நடுவுலயும் அவ்வளவு தூரம் போயிட்டு வர்றது கஷ்டமா இருந்தாலும், நாங்க அதை விட்டுக்கொடுக்கவே இல்லை. வீடெல்லாம் ரிப்பேர் பண்ணின பிறகுதான் கூட்டிட்டு வந்தோம். கல்யாணத்துக்குப் பிறகு இந்த அஞ்சு பேரையும் மிஸ் பண்ணிடாதபடி மேனேஜ் பண்ணிட்டிருக்கோம். கூடியவரைக்கும் வெளியில போகும்போது எங்ககூடவே கூட்டிட்டுப் போவோம். ஹனிக்கு இப்ப வயசாகிடுச்சு. கேட்டராக்ட் இருக்கிறதால பார்வை சரியில்லை. காதும் கேட்கலை. அதனால வீட்டுக்குள்ளேயே அவளுக்குப் பழகின இடத்துக்குள்ள நடமாடறதுதான் பிடிக்கும்...    

“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

ஜெல்லோவைப் பத்திச் சொல்லவும் நிறைய இருக்கு. அவன் எங்ககிட்ட வரும்போது அடிபட்டு, எலும்பெல்லாம் தெரியற நிலையில இருந்தான். ரோட்டுல போற வர்றவங்கல்லாம் அவனை அடிச்சிருக்காங்க. அந்தப் பயத்துலயே அவன் யாரையும் தொடவிட மாட்டான். சாப்பாடு கொடுத்து ட்ரீட்மென்ட் எடுத்து அவனைச் சரியாக்க ரெண்டு மாசமாச்சு.

இந்தியன் ப்ரீட் நாய்கள் பொதுவா ரொம்ப ஆக்ரோஷமா இருக்கிறதாகவும், அதனாலதான் வெளிநாட்டு நாய்களை வளர்க்கிறதாகவும் பலரும் சொல்றாங்க. இந்தியன் இன நாய்கள் நடத்தப்படற விதம்தான் அதுங்களோட ஆக்ரோஷத்துக்குக் காரணம். தேவையில்லாம அடிக்கிறாங்க... விரட்டறாங்க... ஜெல்லோவை எங்க ஏரியாவுல எல்லாருக்கும் பிடிச்சிருந்தது, ஒருத்தரைத் தவிர. மழை டைம்ல வீட்டுக்கு வெளியில படுத்துப்பான். ஒருமுறை எங்க வீட்டுக்கு வந்தவங்க அவனைப் பார்த்துட்டு, `அழகா இருக்கானே'னு தொட வந்தபோது உறுமியிருக்கான். ஆனா, கடிக்கலை. அவங்க பயந்துபோய் தன்னைக் கடிக்க வந்ததா சொல்லி எங்களுக்கே தெரியாம கார்ப்பரேஷனுக்குப் போன் பண்ணி அவனைத்  தூக்கிட்டுப் போகச் சொல்லிட்டாங்க.  நடந்தது தெரியாம நாங்க தேடிக்கிட்டே இருந்தோம். ஃபேஸ்புக்ல ‘தி பவுண்ட்’னு ஒரு பேஜ் இருக்கு. அதுல நான் `ஜெல்லோவைக் காணோம்'னு போட்டிருந்தேன். அவங்கதான் ஜெல்லோவைக் கண்டுபிடிச்சு கார்ப்பரேஷன் நம்பர் கொடுத்தாங்க. உடனே நானும் நகுலும் அங்கே போய் ஜெல்லோவைக் குளிப்பாட்டிக் கூட்டிட்டு வந்தோம். அப்ப அவங்க கவர்ன்மென்ட் லைசென்ஸ் உள்ள டேக்கை கழுத்துல மாட்டிவிடச் சொன்னாங்க. வீட்ல வளர்க்கிற நாய் என்பதற்கான காலர் இருந்தாலும், சில நேரங்கள்ல தூக்கிட்டுப் போயிடுவாங்க. கவர்ன்மென்ட் லைசென்ஸ் இருந்தா தூக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க. வெறும் 60 ரூபாய்தான் அதுக்கான செலவு. தெரு நாய்களைப் பராமரிக்கிறவங்க எல்லாரும் அந்த நாய்களுக்கு இந்த லைசென்ஸை வாங்கி மாட்டிவிட்டாங்கன்னா பாதுகாப்பா இருப்பாங்க...’’ - நாய்ப் பிரியர்களுக்கு நல்ல தகவல் சொல்கிறார்.  

“இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க!”

``நாய்கள் நமக்குப் பாதுகாப்பு. நம்ம தெருவுக்குப் புதுசா, சந்தேகப்படற மாதிரி யாராவது ஆள் நடமாட்டம் இருந்தா அதுங்களுக்கு முதல்லயே தெரிஞ்சுடும். குரைக்கும். ஆனா, நாமதான் புரியாம, கத்திக்கிட்டே இருக்கிறதா விரட்டியடிப்போம். இன்னிக்கு எல்லாரும் ஃபாரின் நாய் வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி வீட்டுக்குள்ள வெச்சுக்கறாங்க. இந்தியன் இன நாய்கள் இன்னும் சிறப்பானவை. எந்தச் சூழ்நிலையையும் அனுசரிச்சுப் போயிடும்.

ஒவ்வொருத்தர் வாழ்க் கையிலயும் செல்லப் பிராணி கள் அவசியம். லைஃப்ல ஒருமுறையாவது ஏதோ ஒரு பெட் வளர்க்கிற அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க.அதுங்க நம்ம வாழ்க்கையில ஓர் அங்கம். மரம், செடி, கொடிகள் இல்லைன்னா நாம என்ன பண்ணுவோம்? பெட் அனிமல்ஸும் அப்படித்தான். நம்ம வாழ்க்கையோட பின்னிப் பிணைஞ்சவை. நாம என்ன மாதிரியான மனநிலையில இருந்தாலும் நம்மை சகஜமாக்கற மேஜிக் அதுங்களுக்குத் தெரியும். எனக்கும் என் அம்மாவுக்கும் ஏதோ ஒரு ஆர்கியூமென்ட் போயிட்டிருந்தது. திடீர்னு ஊலா வந்து என் மூஞ்சியை நக்கிட்டா. நான் சிரிச்சுட்டேன். நாம கோபமா இருக்கோம், கஷ்டத்துல இருக்கோம்னு அதுங்களுக்குத் தெரியும். அதைச் சரியாக்கவும் தெரியும்...’’ - செல்லங்களைத் தடவிக் கொடுக்கிறார்.

 ஸ்ருதி சந்தோஷத்தில் இருக்கிறார் என்பதை மிகச் சரியாக யூகித்து, வாலைக் குழைத்தும், முகத்தை நக்கியும் அந்தத் தருணத்துக்கு இன்னும் அன்பு சேர்க்கின்றன அவரின் செல்லங்கள்!