
மு.பார்த்தசாரதி - படம்: ஆர்.எம்.முத்துராஜ்
1986-ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கிராம சுகாதாரச் செவிலியராகப் பணியைத் தொடங்கியவர் நாகவல்லி. வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டே திருமணம், அதற்கடுத்த ஆண்டு குழந்தை என்றானபோது, வீட்டையும் வேலையையும் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல். ஓர் அரசாங்க ஊழியராக, மனைவியாக, தாயாக அவர் முன்னே பல சவால்கள் காத்திருந்தன.

“பேறுகாலத்தின்போது பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்புகளில் ஆரம்பித்து... குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது, எடை பார்ப்பது, தாய்ப்பால் குறித்த விழிப்பு உணர்வைக் கொடுப்பது என எப்போதுமே குழந்தைகளுக்கான ஆரோக்கியம் சார்ந்தே இயங்கிக்கொண்டிருப்பதால்தான், இத்தனை ஆண்டுகளாக என் வேலையைச் சந்தோஷமாகவும் முழு ஈடுபாட்டோடும் தொடர முடிகிறது...”
- சொல்லிக்கொண்டே புன்னகைக்கிற நாகவல்லி, தன் வேலையையும் குடும்பத்தையும் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லும் சக்சஸ் சீக்ரெட் பகிர்கிறார் நமக்காக...
• திருமணத்துக்குப் பிறகும் பெண்களால் தொடர்ந்து வேலை பார்க்க முடியும். ஆனால், குழந்தை என்று வந்துவிட்டால்தான் கொஞ்சம் சிரமம். எனக்கு மகன் பிறந்ததும், வேலையில் சரியாக ஈடுபட முடியவில்லை. ஆறு மாதங்கள் மட்டுமே விடுமுறை எடுக்க முடிந்தது. விடுமுறை முடிவதற்கு ஒரு மாதம் முன்பாகவே என் நேரத்துக்குத் தகுந்தபடி நான் அவனை மாற்றிவிட்டேன். காலையும் மாலையும் சரியாக இத்தனை மணிக்குப் பால் குடிக்க வேண்டும், இத்தனை மணிக்குத் தூங்க வேண்டும் என அவனைப் பழக்கினேன்.
• குடும்பத்துக்காகத் தூக்கத்தை விட்டுக்கொடுக்க ஆரம்பித்தேன். குழந்தை விழித்துக் கொண்டிருக்கும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. அதனால், அவன் தூங்கும் நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துவிடுவேன்.
• ஒவ்வொரு நாளும் அலு வலகத்திலுள்ள வேலைகளை மிச்சம் வைக்காமல் அங்கேயே முடித்துவிடுவது நல்லது. அப்போதுதான் வீட்டுக்கு வந்தால் பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க முடியும்.

• ஒரே நாளில் நம்மால் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியாது. அதனால், இந்த நாளில் எந்த வேலையை முடிக்கலாம் என்று முன்பே யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
• காலைச் சாப்பாட்டுக்குத் தேவை யானவற்றை முடிந்த அளவு முதல் நாள் இரவே தயார் செய்து வைக்கலாம். குறிப்பாக, காய்கறி களை நறுக்கிஃ பிரிட்ஜில் வைத்து விட்டால், காலையில் எழுந்ததும் அப்படியே எடுத்துப் பயன்படுத்த லாம். வாரத்துக்கு ஒரு முறை மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
• ஞாயிற்றுக் கிழமையன்று வீட்டில் எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டுச் செய்வதற்குப் பதிலாக, தினமும் நமக்குக் கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த அளவு செய்துவிட்டால், ஞாயிறன்று கொஞ்ச மாவது ஓய்வு கிடைக் கும்.
• உங்கள் பிள்ளைகளால் செய்ய முடிந்த வேலைகளைச் சுயமாகச் செய்யச் சொல்லுங்கள். நீங்கள் வீட்டில் இல்லாதபோதும் தங்கள் பாதுகாப்பை அவர்களாகவே பார்த்துக் கொள்ளும்படி அவர்களுக்குப் பயிற்சி கொடுங்கள்.
• குழந்தை வளர்ப்பிலும், வீட்டு வேலைகளிலும் கணவரையும் ஈடுபடுத்துங்கள். ஒரு வேலையை இரண்டு பேரும் சேர்ந்து செய்தால் எளிதாகவும் விரைவாகவும் முடித்து விடலாம்.
• `நம்மால் முடியும்’ என்று நம்பிக்கை வையுங்கள். அப்போது தான் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தகர்த்தெறிந்துவிட்டு அலுவலகத்தையும் குடும்பத்தையும் சிறப்பாக வழிநடத்த முடியும்.
படத்தில் இருப்பவர்கள் மாடல்களே