Published:Updated:

புதிய நம்பிக்கை - “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்!”

புதிய நம்பிக்கை -  “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய நம்பிக்கை - “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்!”

ஏகாதக்ஷா என்றொரு பள்ளி!பிரேமா நாராயணன் - படங்கள்: சு.குமரேசன்

`ஏகாதக்ஷா' என்கிற பெயரே அழகாக, இனிமையாக இருக்கிறது. இதன் பின்னால் ஓர் அழகிய நட்பின் கதையும், இவர்கள் செய்யும் நல்ல விஷயமும் அடங்கியிருக்கின்றன. கனகா ஷ்யாம்சுந்தர், பாரதி பாலராஜன், பிந்து ஹரிதாஸ், அர்ச்சனா ஜோஷி ஆகிய நால்வரும் சேர்ந்து தொடங்கிய சிறப்புப் பள்ளி... ‘ஏகாதக்ஷா லேர்னிங் சென்டர்’.     

புதிய நம்பிக்கை -  “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்!”

நான்கு பெண்களும் பட்டதாரிகள். திருமணமாகி செட்டிலானவர்கள். இவர்களில் பாரதி, பிந்து, அர்ச்சனா மூவரும் ‘ஸ்பெஷல் எஜுகேஷன்’ டிப்ளோமா படிப்பதற்காகப் பிரபல சிறப்புக் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர... அங்கே ஏற்கெனவே வாலன்டியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த கனகா அறிமுகமாக... நால்வருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட... நெருங்கிய தோழிகள் ஆகியிருக்கிறார்கள்.

``என் பையன் சின்ன வயதில் கொஞ்சம் ‘ஹைப்பர் ஆக்டிவ்’வாக இருப்பான். பிந்துவுக்கு ஒரே மகன். அவனுக்கும் சில குறைபாடுகள் இருந்துச்சு. நாங்க ரெண்டு பேருமே எங்க குழந்தைகளுக்காகத்தான் ஸ்பெஷல் எஜுகேஷன் கற்க விரும்பினோம். கனகாவும் அர்ச்சனாவும் இந்தத் துறையின் மீதிருந்த அளவு கடந்த ஈடுபாட்டின் காரணமா படிக்க வந்தாங்க. நாங்க நாலு பேரும் அங்கே படிக்கும்போதே நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். ஒரு வருஷம் படிப்பு முடிஞ்சதும், மூணு வருஷம் அங்கேயே ஸ்பெஷல் எஜுகேட்டராக வேலை பார்த்தோம். இன்னும் மேலே படிக்கலாமான்னு யோசிச்சுட்டிருந்தப்போதான், ‘நாமே ஒரு லேர்னிங் சென்டர் ஆரம்பிக்கலாமே’ன்னு தோணுச்சு. எங்க நாலு பேருக்குமே ஒரே குறிக்கோள் என்பதால, அதை நிறைவேத்தறதும் சுலபமா இருந்துச்சு’’ - இயல்பாகப் பேசினார் பாரதி.

‘`எங்க சென்டர் ஆரம்பிக்கிற துக்கு முன்னால, கற்றல் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) உள்ள குழந்தைகளுக்கான மூணு மாச கோர்ஸ் படிச்சோம். சொல்லப்போனா எங்களைவிட எங்க குடும்பங்கள்தாம் எங்களோட பலம்’’  தன்னம்பிக்கை தளராமல் பேசும் கனகாதான் இவர்களில் சீனியர்.

`` ‘ஏகம்’ என்றால் தனித்துவமானது. ‘தக்ஷா’ என்றால் ஆற்றல். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவமான ஆற்றல், திறமை அல்லது செயலாற்றும் வல்லமை இருக்கும். இதற்கு சிறப்புக் குழந்தைகளும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளும் விதிவிலக்கல்ல. அவங்களை அவங்களாகவே பார்க்கணும்; நடத்தணும். அவங்களால என்ன முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்ய வைக்கணும்!’’ என்று ஏகாதக்ஷாவின் பெயர்க்காரணத்தை அழகாகச் சொல்கிறார் பிந்து.

வடநாட்டில் பிறந்து இங்கே செட்டில் ஆகிவிட்ட அர்ச்சனா, குழந்தைகளுக்கு ஆர்ட் தெரபி வழங்குவதுடன், அலுவலக நிர்வாகம், தகவல்தொடர்பு என அனைத்தையும் கவனிக்கிறார். ‘`நாலு வருஷத்துக்கு முன்னால, நாலஞ்சு குழந்தைகளுடன் இதே வீட்டில், சின்னதா இந்த சென்டரைத் தொடங்கினோம். முதலில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தை களுக்கான ‘ரெமடியல்’ வகுப்புகள் மட்டும்தான் எடுத்தோம். ‘டெடிகேட்டடா பண்றீங்க... குழந்தைகள்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு... இதையே நீங்க ஒரு ஸ்பெஷல் ஸ்கூலா நடத்தலாமே’னு நிறைய பெற்றோர் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான், காலையில் சிறப்புப் பள்ளி, மாலையில் பயிற்சி வகுப்புகள்னு மாத்தினோம்.       

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புதிய நம்பிக்கை -  “நட்பால் இணைந்தோம்... நல்லது பண்றோம்!”

டிஸ்லெக்ஸியா மட்டுமல்லாமல், ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ்னு குறைபாடுகள் எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கான சிறந்த பள்ளியாக இது இருக்கணுங்கிற இலக்குடன் தொடங்கினோம். முழு அர்ப்பணிப்புடனான முறையான பயிற்சிகளால், குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் இருக்கிறதா பெற்றோர் சொல்லும்போது, பள்ளி ஆசிரியராகத் திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கிறதோட, ஒரு பெற்றோரா மனநிறைவும் கிடைக்குது’’ என்று பெரிய புன்னகையுடன் அர்ச்சனா கூற... அதை ஆமோதித்தபடி தொடர்கிறார் பாரதி.

‘`ஒரு மாணவருக்கு ஓர் ஆசிரியர் என்கிற முறையில் இங்கே சொல்லித்தர்றோம். ‘எக்ஸ்ப்ளோர்’ பிரிவு சிறிய குழந்தைகளுக்கானது. அவங்களுக்குக் கண்களைப் பார்த்துப் பேசறது, ஓர் இடத்தில் உட்கார வைக்கிறது, சாப்பிடறது, டாய்லட் போகப் பழக்கப்படுத்துறது போன்ற பயிற்சிகளைக் கொடுப்போம். ‘எக்ஸ்பிரஸ்’ பிரிவில் அதற்கடுத்த நிலைக்கான பயிற்சிகள். ‘எக்ஸ்பீரியன்ஸ்’ பிரிவில் உள்ளவங்க, 12 - 18 வயசுக்குள் இருப்பாங்க. அவங்களுக்குத் தொழிற் பயிற்சிக்கான ஆரம்பநிலைப் பயிற்சிகளைக் கொடுப்போம். இந்தக் குழந்தைகளுக்குத் தகவல்தொடர்பு (கம்யூனிகேஷன்) ரொம்ப முக்கியம். பெற்றோர், பள்ளி, குடும்பத்தினர், வெளியில் உள்ளவர்கள்னு எல்லார்கிட்டயும் இவங்களால கம்யூனிகேட் பண்ண முடியணும்.  அவற்றோடு, இவங்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஃபங்ஷனல் அகடமிக்ஸ், மணி கான்செப்ட், டைம் கான்செப்ட் எல்லாம் சொல்லிக் கொடுப்போம். நிறைய விழிப்பு உணர்வும், யாரையும் சாராம சுதந்திரமா இருக்கிறதுக்குத் தேவையான விஷயங்களும் இவங்களுக்குக் கற்பிக்கப்படும்’’ எனத் தெளிவாக விளக்குகிறார் பாரதி.

``வீட்டு வேலை, தோட்ட வேலை,  கம்ப்யூட்டர், ஓவியம்,  அலுவலக வேலைன்னு இவங்க திறமையைக் கண்டுபிடிச்சு, அதை ஊக்குவிச்சு, நல்ல பயிற்சி கொடுத்து தனி மனுஷனா உருவாக்கணும் என்பதுதான் ஏகாதக்ஷா வின் கொள்கையே. எங்க மாணவர்களுக்கு ஜுவல்லரி மேக்கிங்குக்கான ஆரம்பப் பயிற்சிகள் கொடுக்கிறோம். இவங்களுக்குத் தெரிந்தவரை வண்ண மணிகளைக் கோத்துப் பழகுவாங்க. அப்புறம் ஜுவல்லரி செய்யக் கத்துக்கொடுப்போம். அப்படி இவங்க செய்த ஜுவல்லரிகளை வெச்சு ஒரு கண்காட்சிகூட நடத்தினோம். இங்கே டென்னிஸ், கிராஃப்ட், கம்ப்யூட்டர்னு எல்லா பயிற்சிகளுமே உள்ளன’’ - உற்சாகமாகக் கூறுகிறார் கனகா.

குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் அதிக முனைப்பு காட்டும் இவர்கள், நிபுணர் களைக் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் ஃபிட்னெஸ் வகுப்புகளும், வர்மா தெரபி வகுப்புகளும் நடத்துகிறார்கள். அடிக்கடி ஈவன்ட்ஸ் நடத்துவதும், குழந்தைகளைச் சென்னைக்குள் பல இடங்களுக்கும் சிற்றுலா அழைத்துச்செல்வதும் பெற்றோரைக் கவரும் அம்சங்கள்.

‘`இந்தக் குழந்தைங்ககிட்ட மிகச்சிறிய மாற்றத்தைக்கொண்டு வருவதுகூட மிகப் பெரிய பிரம்மபிரயத்தனம்தான். ஆனா, நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் நிச்சயம் முடியும்!” - நம்பிக்கை தருகிறது நால்வர் அணி!

‘`அப்பாவும் வரணும்!”

``நார்மல் குழந்தைகளின் பெற்றோரைப்போல அதிக மடங்கு கவனமும் பொறுப்பும், சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இருக்கு. நானும் அப்படி ஒரு தாயாக இருக்கிறதால அதை உணர்ந்து சொல்றேன். எல்லா ஸ்பெஷல் ஸ்கூல்லயும் பாருங்க... அம்மாக்கள் மட்டும்தான் வருவாங்க... என்னமோ, அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி. இங்கே, நாங்க பெற்றோர் ரெண்டு பேரையுமே வரச்சொல்லி வலியுறுத்துறோம். இந்தக் குழந்தைகளைப் பொறுத்தவரை, பள்ளிப்பயிற்சி மட்டுமே போதாது. வீட்டிலும் அதே அளவு பயிற்சி இருக்கணும். அப்போதான் முழுப் பலன் கிடைக்கும்!’’ - அழுத்தமாகக் கூறுகிறார் பிந்து.

‘புல் அவுட்’ புரோகிராம்!

ந்த ஆண்டு `ஏகாதக்ஷா'வில் ‘புல் அவுட்’ என்றொரு புரோகிராம் தொடங்கப்பட்டுள்ளது. சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் கவனமின்மை, ஹைப்பர் ஆக்டிவ் போன்ற சிறு குறைபாடுகள் காணப்பட்டால், அவர்களுக்கு `ஏகாதக்ஷா'வில் பள்ளி சிலபஸ் அடிப்படையிலேயே  பயிற்சி் கொடுத்து, அவர்களின் குறைகளைச் சரி செய்து மீண்டும் பள்ளிக்கே அனுப்புவதுதான் ‘புல் அவுட்’. அதேபோல, சின்னச் சின்னப் பிரச்னைகள் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயார் செய்யும், ‘ஸ்கூல் ரெடினெஸ்’ என்ற புரோகிராமையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

பெற்றோர் எழுதும் டைரி!

`ஏகாதக்ஷா'வில் ஒரு டைரி முறை பின்பற்றப்படுகிறது. தினமும் பள்ளியில் என்ன நடந்தது, மாணவன் என்னவெல்லாம் செய்தான் என்று அந்த டைரியில் எழுதி அனுப்புகிறார்கள். அதேபோல, வீட்டில் என்ன நடந்தது, வெளியில் எங்காவது போனார்களா, விருந்தினர் வந்தார்களா, என்ன சாப்பிட்டான் என்பது போன்ற அன்றாட விஷயங்களைப் பெற்றோரும் கண்டிப்பாக எழுதி அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களின் குடும்பச் சூழலைப் புரிந்துகொண்டு பேசவும், விஷயங்களைச் சொல்லித்தரவும் செய்கிறார்கள்.