Published:Updated:

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!

பாசமலர்ஆர்.வைதேகி - படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

‘நாய்க்காரம்மா’ - இதுதான் கோவையைச் சேர்ந்த கீதாராணியின் அடையாளம். இவரது `சினேகாலயா' அமைப்பு நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், கழுதைகள், குதிரைக்குட்டிகள், பறவைகள், பூச்சிகள் எனக் கிட்டத்தட்ட உயிரியல் பூங்காவாகவே காட்சியளிக்கிறது. 450 உயிரினங்கள் வசிப்பதற்கான எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதி சூழ்ந்திருக்கிறது அந்த இடம்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!

‘`எல்லா குழந்தைங்களும் தூங்கறாங்க. இப்படியோர் அமைதியை நீங்க மனுஷங்க நிறைஞ்சிருக்கிற இடத்துலகூடப் பார்க்க முடியாது...’’ என்கிறார் கீதாராணி. பேச்சின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ‘குழந்தைகள்’ என்ற வார்த்தையால் மட்டுமே தன் வளர்ப்பு களை விளிக்கிறார்.

வாயில்லா ஜீவன்களின் மீதான அன்பின் காரணமாக ரத்தபந்தங்களையே இழந்த கீதாராணியின் கதை, உயிர்களிடத்தில் அன்பு கொள்ளச் சொல்கிறது.

‘`என் அம்மாவும் அப்பாவும் அந்தக் காலத்துல காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. ரெண்டு பேருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அவங்களோட காதலை ரெண்டு குடும்பங்களும் ஏத்துக்கலை. அவங்க மேல இருந்த கோபத்துல என்னை ரெண்டு பக்கத்துச் சொந்தக்காரங்களும் வெறுத்தாங்க. தாத்தா பாட்டி உள்பட யாரும் என்னை ஏத்துக்கலை. நாலு வயசுக் குழந்தையா இருந்தப்பவே அதை நான் அனுபவிச்சிருக்கேன். அந்த வயசுல அதுக்கான காரணம்கூட எனக்குப் புரியலை.

சொந்தக்காரங்க என்னைக் கவனிக் கிறாங்களா, இல்லையாங்கிறதைப் பத்தி யெல்லாம் கவலைப்படாம, என்னை அம்மாவும் அப்பாவும் வருஷா வருஷம் கேரளாவுல உள்ள தாத்தா வீட்ல கொண்டுபோய் விட்டுடுவாங்க. தாத்தா வீட்ல பதினஞ்சுக்கும் மேலான நாய்கள் வளர்த்தாங்க. அதுங்களைக் கவனிக்கவே நாலு பேர் வேலைக்கு இருப்பாங்க. மாளிகை மாதிரியான வீட்டுக்கு அதுங்கதான் காவல்.  அந்த நாய்களைப் பார்த்தா எல்லாருக்கும் பயம். ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும். ஆனா, எல்லாமே என்கிட்ட அன்பா இருக்கும். என்கூட விளையாடும். மனித அன்பு கிடைக்காத சூழல்ல எனக்கு அந்த அன்பு பெரிய ஆறுதலா இருந்துச்சு. சொந்தக்காரங்க எல்லாரும் நான் பக்கத்துல போனாலே விரட்டுவாங்க. அங்கிருந்து ஓடி, காபி எஸ்டேட்டுக்குள் போய் விளையாடுவேன். அங்கேயும் குரங்குக்குட்டி, நரி, முயல்னு மிருகங்கள்தாம் எனக்கு நண்பர்கள். லீவு முடிஞ்சு கோயம்புத்தூர்ல எங்க வீட்டுக்கு வருவேன். மனித அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கின எனக்கு மனசுல அது நிரந்தரமா தங்கிடுச்சு. அந்த ஏக்கத்துலேர்ந்து என்னை விடுவிச்சுக்க தெருவுல உள்ள பூனைக்குட்டி, நாய்க்குட்டிகளை எல்லாம் வீட்டுக்குள் தூக்கிட்டு வந்து ஒளிச்சு வெச்சு வளர்த்திருக்கேன்... அன்றுமுதல் இன்றுவரை வாயில்லா ஜீவன்களே எனக்கு நண்பர்கள், உறவுகள் எல்லாம்...’’ என்கிறவரின் வார்த்தைகளில் வலி மறைந்திருக்கிறது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!

‘`கல்யாணத்துக்கு முன்பான வாழ்க்கையிலதான் அன்பு கிடைக்கலைன்னா, கல்யாணத்துக்குப் பிறகும் அது எனக்கு வாய்க்கலை. என்னைப் புரிஞ்சுக்காத கணவர்... மகனும் மகளுமா ரெண்டு பிள்ளைங்க பிறந்தாங்க. அப்பாவாகவும் இருந்து அவங்களை நானே வளர்த்து ஆளாக்கினேன். பேங்க்ல வேலை பார்த்திட்டிருந்தேன். அப்போ ஒரு தீ விபத்து ஏற்பட்டதால, வேலையைத் தொடர முடியலை. வேற வேற வேலைகள் பார்த்து, குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் என்னோட வளர்ப்புப் பிராணிகளை நான் என்கூடவேதான் வெச்சுப் பார்த்துக்கிட்டிருந்தேன்.

திடீர்னு ஒருநாள் என் மகன், ‘இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படியே பண்ணிட்டிருப்பீங்க... நாங்க வேணுமா... இதுங்க வேணுமானு முடிவு பண்ணிக்கோங்க’னு சொன்னான்.

‘எல்லாருக்காகவும் நான் வாழ்ந்துட்டேன். என் கடமைகளை எல்லாம் முடிச்சுட்டேன். எனக்காகவும் கொஞ்சம் வாழ ஆசைப்படறேன்... எனக்குச் சந்தோஷத்தையும் நிறைவை யும் கொடுக்கிறதைச் செய்யவே ஆசைப்படறேன்’னு சொன்னேன். ‘அப்படின்னா எங்களோட நீங்க வாழ முடியாது’ன்னாங்க. ‘நான் விலகிக்கிறேன்’னு சொல்லிட்டு, முப்பது குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளியேறினேன். கோயம்புத்தூர்ல மத்தம்பாளையம் என்ற இடத்துல அடர்ந்த மலையடிவாரத்துல ஒரு தோட்டத்துக்குள் இருந்த சின்ன காட்டேஜ்ல தங்க, ஒரு நல்ல மனிதர் அனுமதி தந்தார். ஆனா, சில மாதங்கள்லேயே அந்தப் பகுதியை சைட் பிரிச்சு விற்கிற வேலை நடந்தது. அதைப் பார்க்க வர்றவங்க நாய்கள்னா பயப்படுவாங்கன்னு என்னை அங்கிருந்து காலி பண்ணச் சொன்னாங்க.

அத்தனை குழந்தைங்களையும் கூட்டிக்கிட்டு எங்கே போறது? எங்கப்பாவுக்கு மட்டுமே 65 ஏக்கர் இடம் இருந்தது. அதையெல்லாம் கேரள அரசு எடுத்துக்கிட்டது. அப்படியிருந்த நமக்கு இன்னிக்குத் தங்க ஓர் இடமில்லையேன்னு என் குழந்தைங்ககிட்ட பேசுவேன். நான் சொல்றது அதுங்களுக்கு நல்லாவே புரியும். கடவுள் நமக்கொரு வழி காட்டுவாருங்கிற மாதிரி என்னைப் பார்க்கும். அதே மாதிரி பக்கத்துல பாழடைஞ்ச இடத்துல கூரையில்லாத ஓர் இடம் இருந்தது. அதோட சொந்தக் காரரும் பிராணிகளை நேசிக்கிறவர். அவர் பரந்த மனசோட அந்த இடத்தை எனக்குக் கொடுத்தார். நான் என் குழந்தைங்களோடு  அங்கேயே இருந்தேன். என்னைப் பத்தித் தெரிஞ்சவங்க வளர்க்க முடியாத நாய், பூனைகளைக் கொண்டுவந்து அங்கே விட்டாங்க. என் சொந்தக் காசையும் மிருகங்கள்மேல அன்புகொண்ட சிலரோட நன்கொடையையும் வெச்சு, அந்தக் குழந்தைங்களுக்குச் சாப்பாடு செய்து கொடுத்துப் பார்த்துக்கிட்டேன். விஜயானந்த்னு ஒருத்தரும் அவரோட நண்பர்களும் `ஞமலி' என்கிற பெயரில் குறும்படம் எடுக்கறதுக்காக எங்க இடத்துக்கு வந்தாங்க. `ஞமலி' என்ற வார்த்தைக்கு நாய் என்று அர்த்தம். அந்தப் படம் அவங்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கிக் கொடுத்தது.

என்னுடைய சேமிப்பு, நண்பர்களுடைய உதவித் தொகை எல்லாம் சேர்த்து `சினேகாலயா' ஆரம்பிச்சேன். எங்கே வாயில்லா ஜீவன்கள் ஆபத்துல இருக்கிறது தெரிஞ்சாலும், உடனே போய்  தூக்கிட்டு வந்து சிகிச்சை கொடுத்துப் புகலிடமும் கொடுக்கறோம். யாராவது விரும்பிக் கேட்டாங்கன்னா வளர்க்கக் கொடுக்கறோம். தமிழ்நாடு முழுக்க எந்த ஏரியாவுலேருந்து அழைப்பு வந்தாலும் போய் காப்பாத்தறேன்’’ - தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்குத் தொந்தரவாகிவிடாதபடி சன்னமான குரலில் தொடர்கிறார் கீதா.

‘`வாயில்லாத இந்த ஜீவன்கள் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லை. மூணு வயசுக் குழந்தையை மனுஷன்தான் பாலியல் வன்கொடுமை செய்யறான். பெண்கள்கிட்ட சங்கிலியைப் பறிக்கிறது, கொலை, கொள்ளை, குண்டு வைக்கிறதுன்னு மனிதர்கள் செய்யற  அயோக்கியத்தனம் எதையும் இவங்க செய்யறதில்லை. அழிக்க வேண்டிய அந்த விஷயங்களை எல்லாம் விட்டுட்டு, எந்தப் பாவமும் செய்யாத இந்த அப்பாவி உயிர்களை ஏன் அழிக்க நினைக்கிறாங்க?

`நாய் மனிதருக்குத் தோழன்'னு பாரதியார் பாடியிருக்கார். நீங்க பத்து நாளைக்கு ஒருத்தருக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, பதினோராவது நாள் கொடுக்கலைன்னா, உங்களைத் திட்டுவாங்க.  அதுவே, ஒருவேளை சாப்பாடு கொடுத்துட்டு அப்புறம் கண்டுக்காம இருந்தீங்கன்னாலும் வாலைக் குழைச்சுக்கிட்டு நன்றியோடு உங்களைச் சுத்திச்சுத்தி வரும் நாய்.

நாய்களுக்குத் திருட்டுத்தனம் பிடிக்காது. நமக்குத் தெரியாத திருடர்களையும் அதுங்களால அடையாளம் காண முடியும். தன்னை வெறுக்கிறவங்களை அதுங்களுக்குத் தெரியும். கல்லால அடிக்கிறவங்களைத் தெரியும். குடிகாரர்களைப் பிடிக்காது. வண்டியைத் துரத்தறதா நாய்களைப் பத்திப் புகார் பண்றாங்க. எல்லா வண்டிகளையும் நாய்கள் துரத்தாது. அந்த வண்டி ஏதோ ஒரு நாயையோ, பூனையையோ அடிச்சுட்டுப் போயிருக்கும்.  

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித அன்பு அல்ல!

எத்தனையோ பேர் வளர்க்க முடியலைன்னு என்கிட்ட நாயைக் கொண்டுவந்து விட வருவாங்க. ‘குரைச்சுக்கிட்டே இருக்கு... தொந்தரவா இருக்கு'னு அக்கம்பக்கத்துல சொல்றாங்க. அதனாலதான்’னு காரணமும் வெச்சிருப்பாங்க.  நாயோட இயல்பு குரைக்கிறது. அதுவும் காரணமில்லாம குரைக்காது. குடிச்சுட்டுத் தெருவுல கெட்டவார்த்தை பேசிட்டுப் போற மனுஷனை நம்மால ஒண்ணும் பண்ண முடியறதில்லையே...  உங்க குழந்தை விடிய விடிய அழுதா  குழந்தையைக் கொண்டு போய் எங்கேயாவது விட்டுடுவீங்களானு கேட்பேன். அன்பே இல்லாத மனுஷங்ககிட்ட வாழறதைவிட, அதுங்க என்கிட்டயே சந்தோஷமா இருக்கட்டும்னு நானே வெச்சுப்பேன். அப்படி நான் சேர்த்துக்கிட்ட குழந்தைங்களோட எண்ணிக்கை 450-ஐத் தாண்டிப் போயிட்டிருக்கு...’’ - ஆனந்தமாகவே சொல்கிறார் இந்த அதிசயத் தாய்.

‘`கேரளாவுல நாய்களைக் கொல்றது ரொம்பச் சாதாரணமா நடக்கிற விஷயம். அதிக நாய்களைக் கொல்றவங்களுக்கு அங்கே பரிசும் கொடுக்கறாங்க. அதை எதிர்த்து எத்தனையோ போராட்டங்கள், தர்ணா பண்ணியிருக்கேன். சம்பந்தப்பட்டவங்க மேல வழக்கு தொடர்ந்திருக்கேன். தினம் தினம் எனக்கு மிரட்டல்கள் வருது. ‘அதுங்களை எல்லாம் சொர்க்கத்துக்கு அனுப்பறோம்’னு பதில் சொன்னாங்க. நாய்களை அடிச்சுக் கொன்னு சொர்க்கத்துக்கு அனுப்பிடலாம். ஆனா, அப்படிக் கொன்னவங்க நரகத்துக்குப் போகப் போறதுலேருந்து தப்பிக்க முடியாது. எனக்குப் பயமில்லை. சொந்தபந்தங்களை, சொத்துசுகங்களை எல்லாம் இழந்துட்டேன். இப்படியொரு விஷயத்தைச் செய்யறது மூலமா எனக்குப் பெயரோ, புகழோ சம்பாதிக்கிற எண்ணமும் இல்லை. நான் இருக்கிறவரைக்கும் இவங்களை எல்லாம் பார்த்துப் பேன். எனக்குப் பிறகு..? அடிக்கடி இப்படித் தோணும். ஆனா, கடவுள் அதுக்கும் ஒரு கணக்கு வெச்சிருப்பான்...’’ - கண்ணீருடன் கவலையையும் சேர்த்துத் துடைத்துக்கொள்கிறார் பாசக்காரம்மா.