Published:Updated:

மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’

மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’
பிரீமியம் ஸ்டோரி
News
மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’

இணையம்... கவனம் பொன்.விமலா

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எப்போதுமே இருமுனைக் கத்திதான். பெரும்பாலும் அது ஆபரேஷனுக்காக அல்லாமல் ஆளைத் தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப் படுகிறது. இணையங்களில் நிரம்பி இருக்கும் அடுத்தவரின் அந்தரங்கச் செய்திகளே இதற்கான உதாரணம்.  

மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’

இணையத்தின் வழியே நமக்கு அறிமுகமான, அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் ஆபாசம் மற்றும் அந்தரங்கக் காட்சிகளை நாம் என்ன செய்கிறோம்? அந்தக் காட்சிகள் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும்வகையில் அவற்றை அழிப்பதுதானே சரியாக இருக்கும்? ஆனால், பலர் அப்படிச் செய்வதில்லை. அறிந்த, அறியாத நபர்கள் அத்தனை பேருக்கும் அடுத்தவர் களின் அந்தரங்கத்தை  அதிவேகத்தில் பரப்பிவிடுகிறார்கள். இதனால் மன உளைச்சலோடு உயிரையும் பறிகொடுக்க வேண்டிய சூழலைச் சந்திக்கிறார்கள் சிலர். குறிப்பாக இத்தகைய சைபர் க்ரைம் குற்றங்களால் பெண்கள்படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. ஆபாசமான புகைப் படம் வெளியானதால் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம்; படிக் கிறோம். ஆனால், அப்படியான புகைப்படங்களோ, வீடியோக்களோ நம் ஆன்லைன் திரைக்குள் வந்துவிழுந்தால் எத்தனை பேர் அவற்றைப் பார்க்காமல் தவிர்த்துவிடுகிறோம்? இப்படி உஷ்ணமான, உண்மையான பல கேள்விகளை நம்முன் வைக்கிறது ‘லென்ஸ்’ திரைப்படம்.

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் இத்திரைப்படம், அடுத்தவர் அந்தரங்கத்தை அனுமதி இல்லாமல் எட்டிப்பார்ப்போரின் விழிகளோடு மனசாட்சியையும் கீறிப்பார்க்கிறது. ஒருவரின் அனுமதியில்லாமல் அவருடைய குளியலறையையோ, படுக்கையறையோ எட்டிப்பார்ப்பது எப்படித் தவறாகுமோ, அதற்கு இணையான தவறுதான் இணையவெளியில், யாரோ ஒருவருக்குத் தெரியாமல் பரவியிருக்கும் ஆபாசமான வீடியோக்களைப் பார்ப்பதும். இந்த  மெசேஜைப் பாதிக்கப்பட்டவரின் பக்கத்தில் இருந்து பேசியிருக்கிறார் இயக்குநர்.

தன் மனைவியிடம் தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ளும் அரவிந்த் (ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்) ஆன்லைனுக்குள் வந்ததும் ஒரு பெண்ணுடன் ஆபாசமான உரையாடலில் ஈடுபடுவதுடன், கணினித் திரையின் லென்ஸுக்கு முன்பாக ஆடை களை அவிழ்த்து, எதிர்முனையில் பேசும் பெண்ணையும் ஆடைகளை அவிழ்க்க வைத்து ரசிக்கிறார். முகத்தை மட்டும் இரு வருமே முகமூடி அணிந்து  மறைத்துக் கொள் கிறார்கள். அப்படிச் செய்வதால் தனக்குத் தனிப்பட்ட வகையில் எந்த அவமானமும் இல்லை என்று நம்பிக்கொண்டிருக்கும் அரவிந்தின் ஆன்லைன் உலகில் திடீரென நுழைகிறார் யோகன் (ஆனந்த் சாமி).

யோகனும் அவர் மனைவி ஏஞ்சலும் புதுமணத் தம்பதி. இவர்களின் முதலிரவுக் காட்சிகள் அவர்களுக்கே தெரியாமல் இணையம் முழுக்கப் பரவி அவர்களை அவமானத்துக்குள்ளாக்குகிறது. இதனால் யோகனின் மனைவி தற்கொலை செய்து கொள்ள, வாழ்க்கையை இழந்த சோகத்தில் விரக்தியின் உச்சிக்கே செல்கிறார் யோகன். இந்த யோகனுக்கும் அரவிந்துக்கும் என்ன தொடர்பு,  கடைசியில் யோகனுக்கு என்ன ஆனது, அரவிந்த் என்ன ஆனார் என்பதைப் பல திருப்பங்களுடன் கூடிய காட்சிகளுடன் விவரிக்கிறது ‘லென்ஸ்’.

இத்தகைய அந்தரங்கக் காட்சிகள் இணையத்தில் பரவுவதால் ஆண், பெண் என இருவருமே பாதிக்கப்பட்டாலும், அதிக அளவு அவமானத்துக்குள்ளாகுபவராகப் பெண்ணே இருக்கிறார் என்பதை முகத்தில் அறைந்துசொல்கிறது ‘ஏஞ்சல்’ கதாபாத்திரம்.

இனி ஆபாசப்படங்களைக் காண  நேர்ந்தால் அவற்றைப் பத்திரமாக வைத்திருந்து ரசிக்கவோ, பகிரவோ செய்யாமல் உடனடியாக அழிக்க வேண்டும் என்பதை அழுத்த மாகச் சொன்ன இயக்குநருக்கு சபாஷ். நாம் குளிக்கும் முன் கதவுகள் சாத்தியிருக் கின்றனவா என்பதைக் கவனிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கிய மானது, அடுத்தவர் குளிப்பதைக் கதவுகளின் ஓட்டைவழியே எட்டிப்பார்க்காமல் இருப்பதும். இது வீட்டின் நிஜக் கதவுகளுக்கு மட்டுமல்ல...  ஆன்லைன் கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் பொருந்தும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மனதின் அழுக்கைக் கழுவுங்கள்!  

மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’

``அமாண்டா டாட் (Amanda Todd) என்ற பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை யூடியூப்பில் பார்த்தேன். எவ்வளவோ போராடியும் வாழ்வதற்கான வழியில்லாமல் தன் மரணத்துக்குச் சாட்சியாக ஒரு வீடியோவைப் பதிவு செய்துவிட்டுப் போன அந்தப் பெண்ணின் வலி என்னை ஏதோ செய்தது. இதுதான் இந்தத் திரைக்கதை உருவாகக் காரணம். தினம் தினம் வந்துவிழும் ஆபாசக் காட்சிகளால் பெர்சனலாக எத்தனையோ பேர் பாதிக்கப்படுகிறார்கள்.  

மனசாட்சியைப் படம்பிடிக்கும் ‘லென்ஸ்’

சட்டப்படி இயங்கும் ஆபாசதளங்கள் நிறைய இருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் தொழில்ரீதியாக நடிப்பதால், அத்தகைய வீடியோக்களைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. ஆனால், எந்தவிதத்திலும் சம்பந்தமேயில்லாமல் குளிக்கும் அறையில், டிரெஸ்ஸிங் ரூமில், பெட் ரூமில் மறைமுகமாக கேமரா வைத்துப் படம்பிடித்து அதைப் பொதுவெளியில் பரப்புவது எந்த வகையில் நியாயம்? `திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோக்களைப் பார்ப்பதில்லை' என்கிற உறுதி தனிநபரிடத்தில் உருவாகாதவரை எதுவும் மாறப் போவதில்லை.

இப்படியான ஆபாச வீடியோக்களில் தங்களையும் அறியாமல் சிக்கிக்கொண்டால் அதற்குத் தற்கொலை தீர்வு அல்ல. நம் ஒவ்வொருவரும் பார்ப்பதால் ஏற்படும் மன உளைச்சலால் யாரோ ஒருவர் பலியாகிக் கொண்டிருக்கிறார் என்கிற மனசாட்சியின் உறுத்தல் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் உருவாக வேண்டும் என்பதுதான் ‘லென்ஸ்' படத்தின் நோக்கம்’’ - மனதின் அழுக்கைக் கழுவச் சொல்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.