Published:Updated:

ஈர இதயங்களின் சங்கமம் - இது மிருக நேயம்!

ஈர இதயங்களின் சங்கமம் -  இது மிருக நேயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஈர இதயங்களின் சங்கமம் - இது மிருக நேயம்!

ஆர்.வைதேகி - படங்கள்: அ.சரண்குமார்

``உங்களுக்கு நாய் வாசனை பிடிக்குமா... நாயோட ரோமம் உங்க மேல ஒட்டிக்கிட்டா அருவருக்க மாட்டீங்களா... அப்படின்னா யூ ஆர் வெல்கம்...  

ஈர இதயங்களின் சங்கமம் -  இது மிருக நேயம்!

இதெல்லாம் உங்களுக்கு அலர்ஜியா? நன்றி, குட்பை...

எங்க வீட்டுக்குள்ள வரணும்னா இதுதான் ரூல்!''

- வித்தியாசமான கண்டிஷனோடு வரவேற் கிறார் கமல் பங்கர். செல்லப் பிராணிகளின் மீது அன்பும் அக்கறையும்கொண்ட கமல், தன் தோழிகளுடன் இணைந்து `ஹார்ட்டி பாஸ்' (Hearty Paws) என்கிற அமைப்பை நடத்துகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ஹார்ட்டி பாஸ்' என்பது ஆதரவற்ற  வாயில்லா ஜீவன்களைக் காப்பாற்றுவதற்கானது. தவிர, தனிப்பட்ட முறையில் `வேகிங் டெயில்ஸ்' (Wagging Tails) என்றொரு நிறுவனத்தையும் நடத்துகிறார் கமல். அது, செல்லப் பிராணி களுக்கான அவசர சிகிச்சை வாகனச் சேவை அமைப்பு.

``பூர்வீகம் டெல்லி. இந்தியன் ஏர்லைன்ஸ்ல ஏர்ஹோஸ்டஸா வேலை பார்த்திட்டிருந்தேன். 1999-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் எனக்கு இடம், மொழி, மக்கள்னு எல்லாமே புதுசு. ஃப்ளைட்ல பறந்துட்டு வர்ற நேரம் போக, மீதி நேரம் சும்மாவே இருந்தேன். அப்பதான் ப்ளூ கிராஸ் அமைப்பினர் பூனைக்குட்டிகளைத் தத்தெடுத்துக்கலாம்னு அறிவிப்பு வெளியிட்டிருந்தாங்க. அதைப் பார்த்துட்டு நானும் என் ஃப்ரெண்டும் அந்த இடத்துக்குப் போய் பூனைக்குட்டிகளைத் தூக்கிட்டு வந்தோம். அதுதான் ஆரம்பம். அதுக்குப் பிறகு ஆதரவில்லாம, தெருவுல தவிச்சுட்டிருக்கிற பூனைக்குட்டிகளையும் நாய்க்குட்டிகளையும் தூக்கிட்டு வர ஆரம்பிச்சோம். ப்ளூ கிராஸ்ல வாலன்டியரா சேர்ந்தேன். 2012-ல்  நான், சந்தனா கணேஷ், லிபிகா, ரேகா ரேஷ்மி, பீனா, டாக்டர் சித்ரானு ஆறு பேர் சேர்ந்து `ஹார்ட்டி பாஸ்'னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சோம். நாங்க ஆறு பேருமே வேற வேற பின்னணியிலேருந்து வந்தவங்க. எல்லாருமே விலங்குகள் நல அமைப்புகள்ல தீவிரமா இருந்தோம். பெட்ஸ் மேல எங்க எல்லாருக்கும் இருந்த பொதுவான பிரியம்தான் எங்களை ஒண்ணு சேர்த்திருக்கு...'' - அறிமுகம் தருகிற கமல், ``இது, தானா சேர்ந்த கூட்டம்'' என்று பஞ்ச் டயலாக் அடித்து விட்டுத் தொடர்கிறார்...   

ஈர இதயங்களின் சங்கமம் -  இது மிருக நேயம்!

``எதேச்சையா, இந்த அமைப்புல இணைஞ்ச வங்க எல்லாருமே பெண்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்கிறதோட, எங்களோட நோக்கமும் ஒரே அலைவரிசையில இருக்கிற காரணத்தால் பெண்கள் அமைப்பாகவே தொடரணும்னு முடிவு பண்ணிட்டோம்'' என்பவர், தங்கள் செயல்பாடு பற்றி விவரிக்கிறார்...

``ஆதரவில்லாம தவிக்கிற பிராணிகளைக் காப்பாத்தறதுதான் எங்களோட முக்கியமான நோக்கம். அப்படிக் காப்பாத்தினதும் எங்கே கொண்டுபோய் விடலாம்னு யோசிக்க மாட்டோம். மூணு மாசமோ, ஆறு மாசமோ எங்ககூடவே வெச்சுப்போம். யாராவது அடாப்ஷனுக்குக் கேட்டா அவங்களுக்குக் கொடுத்துடுவோம். ஆனா, வயசான நாய்களையும், பக்கவாதம் வந்த நாய்களையும், பார்வையில்லாத  நாய்களையும் யாரும் எடுத்துக் கிட்டுப் போக மாட்டாங்க. அதுங்களை நாங்களே எங்ககூடவே வெச்சுப்போம்.

என்கிட்ட 14 நாய்களும் 23 பூனைகளும் இருக்கு. இப்படி எங்க எல்லார் வீடுகள்லயுமே பதினஞ்சு, இருபது நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் பார்க்கலாம். எல்லாருமே அவங்கவங்க கையில உள்ள பணத்தைப் போட்டுதான் பார்த்துக்கறோம். எங்களால சமாளிக்க முடியாத நிலை வரும்போதுதான் யார்கிட்டயாவது நன்கொடைகள் கேட்கறோம்.

இத்தனை நாய்கள், பூனைகளையும் வெச்சு சமாளிக்க இடம் பத்தலை. அதனால இப்போதைக்கு அவங்கவங்க வீடுகள்தான் இவங்களுக்கான புகலிடம். வயசான காரணத்தினால வீட்டை விட்டு விரட்டப்பட்ட நாய்களையும் விபத்துக்குள்ளாகி தெருவுல உயிருக்குப் போராடற நாய்களையும் பத்தி எங்களுக்குப் பல பகுதிகள்லேருந்தும் தகவல் வரும். இந்தக் காலத்துல வயசான பெற்றோரையே வீட்டுல வெச்சுப் பார்த்துக்க பிள்ளைங்க பலரும் தயாராக இல்லாதபோது, வாயில்லா ஜீவன்களையா வெச்சுக் காப்பாத்தப் போறாங்க..? 

சாலைகள்ல வண்டி ஓட்டறப்போ குறுக்கே வரும் நாயையோ, பூனையையோ கண்டுக்காம அதுங்க மேல வண்டியை ஏத்திட்டுப் போறவங்க நிறைய பேர். கை கால் உடைஞ்சு உயிருக்குப் போராடற நிலைமையில எத்தனையோ ஜீவன்களைப் பார்க்கறோம். அந்த உயிர்களையும் தூக்கிட்டு வந்து ட்ரீட்மென்ட் கொடுத்துப் பராமரிக்கிறோம். தவிர, தெருவுல சுத்தற நாய்களுக்குக் குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடறோம். எங்களுக்கு இந்த விஷயத்துல ஆர்வமுள்ளதால, வீட்டுல உள்ள எல்லாரும் சகிச்சுக்கணும்னு அவசியமில்லை. அவங்களை எல்லாம் சமாளிச்சும், சம்மதிக்க வெச்சும்தான் எல்லாம் பண்ண வேண்டியிருக்கு...'' - தோழிகள் சார்பாகவும் தானே பேசுகிறார் கமல்.

சமீபத்தில் கமல் தொடங்கியிருக்கும் செல்லப் பிராணிகளுக்கான `கேப் சர்வீஸின்' பின்னணியிலும் இருக்கிறது மிருகநேய அனுபவம்.    

ஈர இதயங்களின் சங்கமம் -  இது மிருக நேயம்!

``என் தோழியின் நாய்க்குத் திடீர்னு உடம்புக்கு முடியலை. ராத்திரி நேரம்... அவங்க இருந்த செம்மஞ்சேரி பகுதிக்கு வெட்ரினரி டாக்டரை வீட்டுக்கு வரவழைக்க முடியலை. அந்த நேரத்துல நாய்க்குட்டியை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போக வண்டி கிடைக்கலை. எதேச்சையா எனக்கு போன் பண்ணித் தகவல் சொன்னாங்க. நான் அந்த நேரம் திருவான்மியூர்ல இருந்தேன். உடனே என் காரை எடுத்துட்டுப் போய் அவங்களோட நாய்க்குட்டியை வேப்பேரி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போய் ட்ரீட்மென்ட் கொடுத்துக் கூட்டிட்டு வந்தோம். பெட்ஸ் வளர்க்கிற எத்தனை பேர் அவசரத்துக்கு இப்படி வண்டி கிடைக்காமல் கஷ்டப்படுவாங்கனு தோணினது. அப்படியே கிடைச்சாலும் எல்லா டிரைவர்களும் மிருகங்களை வண்டியில ஏத்த அனுமதிக்கிறதில்லை. எப்பவாவது வெளியில போறதைத் தவிர, மற்ற நேரமெல்லாம் சும்மாவே இருந்த என் காரை பெட்ஸுக்கான வண்டியா உபயோகிக்கிற ஐடியா அப்படித்தான் வந்தது. `வேகிங் டெயில்ஸ்' (Wagging Tails) என்ற பெயரில் கேப் சர்வீஸ் ஆரம்பிச்சேன். இன்னிக்கு நிறைய வண்டிகள் இருக்கு. தமிழ்நாட்டைத் தாண்டியும் எங்க வாகனங்கள் போயிட்டிருக்கு. தனியார் மருத்துவமனைகள்ல பெட்ஸுக்கான வாகன வசதிகள் இருந்தாலும் தேவைப்படறபோது கிடைக்கிறதில்லை. காஸ்ட்லியாகவும் இருக்கு. எங்களோட கேப் சர்வீஸ்ல ஏ.சி வண்டிக்கே கிலோமீட்டருக்கு 12 ரூபாய்தான் வாங்கறோம்...'' என்கிற கமலின் உடனடித் திட்டம் செல்லங்களுக்கான புகலிடம் தொடங்குவதாம்.

``அப்படி நாங்க ஆரம்பிக்கிற இடம், செல்லப் பிராணிகளை வளர்க்க முடியாதவங்க கொண்டுவந்து தள்ளறதுக்கான இடமா இருக்காது. தெருவுல துரத்தியடிக்கப்பட்டும் விபத்துக்குள்ளாகியும் ஆதரவில்லாமல் கஷ்டப்படற வாயில்லா ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற இடமா இருக்கும். வாழவே முடியாத நிலையிலுள்ள உயிர்களுக்கு மட்டும்தான் இடம். தாயோட சந்தோஷமா இருக்கிற குட்டிகளைப் பிரிச்சுத் தூக்கிட்டு வர்றதும்... பிறகு, வளர்க்க முடியலைன்னு துரத்திவிடறதும் தப்புன்னு மக்கள் உணரணும். ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழற உரிமை மனுஷங்களுக்கு மட்டுமில்லை, எல்லா ஜீவன்களுக்கும் உண்டு...''

- வாஞ்சையுடன் சொல்கிறார் வாயில்லா ஜீவன்களின் பிரதிநிதி கமல் பங்கர்.