Published:Updated:

ஒரு ஜீவன் உருகுது!

ஒரு ஜீவன் உருகுது!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு ஜீவன் உருகுது!

இது என்ன மாயம்? இ.மாலா

கிறிஸ்ஸி - கறுப்பு நிற லாப்ரடார் வகை. என் கணவர் பாலுவுக்கு நாய்கள்மீது பிரியம் இல்லாதபோதும், எனக்குப் பிடிக்கும் என்கிற ஒரே காரணத்தால், என் பிறந்தநாளன்று கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு. நண்பர் ‘சுகா’ வீட்டின் வாரிசு. பார்வை முழுவதுமாக வராத நிலையில் கறுப்பு கிறிஸ்டலாகக் கவர்ந்த  இந்தச் செல்லத்தை நானும் பிள்ளைகளும் எப்போதும் சுமந்தபடி இருந்தோம். எங்கள் வீட்டில் இருந்த ‘கென்’ என்னும் பூனைதான் தாயாகத் தன்மேல் போட்டு கிறிஸ்ஸியைத் தூங்க வைத்தது.   

ஒரு ஜீவன் உருகுது!

சென்ற ஆண்டு கிறிஸ்ஸி நான்கு வயதில் இருந்தபோது, நான் நாற்பது நாள்கள் மருத்துவமனையில் கிடந்தேன். `காரில் சென்ற அம்மா வீட்டுக்கு வரவில்லையே... அனைவரும் பதற்றமாக இருக்கிறார்களே’ என்கிற தனிமை உணர்வில், என் கிறிஸ்ஸி சாப்பிடவே மறுத்துவிட்டதாம். நான் மயக்க நிலையில் இருந்தபோதெல்லாம் என்னை நினைவுக்குக் கொண்டுவரப் பயன்பட்ட  ஜீவனும் கிறிஸ்ஸிதான். `ஸ்கைப்’பில் கிறிஸ்ஸியைக் காட்டி, ‘சாப்பிடவில்லை... நீ அதனோடு பேசு’ எனச் சொல்வார்களாம்... அதுவும் கேமராவைப் பார்த்துக் குரைக்குமாம். வீட்டின் முன் அறையில் படுத்துக்கொண்டு, உள்ளே வரும் எல்லா கார்களையும் பார்த்துக்கொண்டு இருக்குமாம்... `எந்த காரிலிருந்தாவது அம்மா வருவாரா’ என்றெண்ணி. அதன் குறும்புகள், சேட்டைகள், உற்சாகம் எல்லாம் மெள்ள மெள்ளக் குறைந்து படுத்துக்கொண்டே இருக்க ஆரம்பித்துவிட்டதாம்.

41-வது நாள்... மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். `இவ்வளவு நாள்கள் ரொம்பக் கஷ்டப்பட்டுப் பிழைச்சிருக்கீங்க. நோய் எதிர்ப்புச்சக்தி மிகவும் குறைந்திருக்கும்.  அதனால் கிறிஸ்ஸியைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்றனர் வீட்டில் உள்ளோர். கார் கதவைத் திறந்தவுடன் நான் இறங்குவதற்குள் பாய்ந்துவந்த கிறிஸ்ஸி காரின் உள்ளே ஏறி மகிழ்ச்சியையும் சோகத்தை யும் மாற்றி மாற்றி வெளிப்படுத்தி, அழுவதும் கத்துவதும் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தது.

கிறிஸ்ஸியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அழகாக, குண்டாக இருக்கும் அது, மெலிந்து ஒல்லியாக மாறிப்போயிருந்தது. சுமார் 10 கிலோ எடை குறைந்திருந்தது. அனைவரும் `ரூமுக்குள் உடனே போய்விடு’ என்றனர். நானோ, `முடியவே முடியாது... கிறிஸ்ஸி குதிப்பதையும் குரைப்பதையும் நிறுத்திய பிறகு உள்ளே போகிறேன்’ என்றேன். வீட்டில் இருந்தவர்களுக்கும் கண்களில் நீர்... கூடவே ‘கென்’னும் தன் பாஷையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு வந்த இரண்டு மாதங்களும் என் அறைக்கு வெளியே, கதவின் அருகிலேயே படுத்திருந்தது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கிறிஸ்ஸி குட்டி போடும் தருணம்... வலி வந்தவுடன் என்னருகில் வந்து உட்கார்ந்துவிட்டது. இரவில் கண் விழித்தால் நல்லது இல்லை என்று எனக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டனர். நள்ளிரவில் வலி அதிகமாக ஆக, என் அறைக்கு வெளியே நின்று என்னைத் தேடித் தேடிக் கூப்பிட ஆரம்பித்ததாம். முதல் குட்டி பிறந்தவுடன், மீண்டும் என் அறைக்கு வெளியே வந்து நின்று என்னைப் பார்க்க ஆசைப்பட்டதாம்.

காலை ஆறு மணிக்கு அதன் முதல் குட்டியை நான் கைகளில் எடுத்ததும் உற்சாகமாகத் தன் வலி மறந்து என்னருகே வந்து வாலாட்டியது. வேப்பேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகே, மேலும் இரண்டு குட்டிகள் பிறந்தன. சில வாரங்களே கிறிஸ்ஸி மூன்று குட்டிகளோடும் படுத்திருந்தது. அதற்குப் பிறகு நான்தான் அவற்றுக்கும் அம்மாவாகிப் போனேன். பால் கரைத்து ஊட்டுவதும், வாய் துடைப்பதுமாக நேரம்போனதே தெரியாமல் சில வாரங்கள். இரண்டு குட்டிகளை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டோம். வீட்டில் பிறந்த அந்த முதல் குட்டிக்கு ‘கேசரி’ என்ற ஸ்வீட் பெயரை வைத்து, இப்போது ‘கேசி’ என்று செல்லமாக அழைக்கிறோம்.

இப்போது ‘கேசி’யின் அட்டகாசங்கள்தான் வீட்டில். கிறிஸ்ஸியைப் போலவே கேசியும்  இப்போதெல்லாம் என்னைத் தொடர்ந்து எனக்குத் தரும் தொல்லைகளை, தாய்மையின் பெருமையையும் அன்பின் நேசத்தையும் கண்களில் சுமந்தபடி பார்த்துக்கொண்டே யிருக்கிறது ‘கிறிஸ்ஸி’ - சற்றுத் தள்ளி உட்கார்ந்தபடியே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz