Published:Updated:

'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...

'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...

'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...

- ஹலோ... இது எல்லாம் புதுசா மார்க்கெட்டுக்கு வந்திருக்கிற பைக் மாடல்ஸ் இல்லீங்க. பைக் ஓட்டற பொண்ணுங்க பேரு! சென்னை மாதிரி பெரிய சிட்டியில கேர்ள்ஸ் பைக்ல பறந்தாலே, 'ஆ!’னு பார்ப்பாங்க மக்கள். ஆனா, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடினு ஊரு காட்டு பக்கம் பைக் ஓட்டிக்கிட்டு இருக்கற இந்த சவுத் சைட் தண்டர்ஸை, ஆச்சர்யத்தோட பார்க்கப் போனோம்!

மதுரை, சேது பொறியியல் கல்லூரியில மூன்றாமாண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் படிக்கற ஷில்பா லஷ்மிக்கு, அவங்க அப்பாவோட ஹோண்டா ஷைன் பைக் அப்படி கட்டுப்படுது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''பைக் ஓட்டக் கத்துக்கிட்டதே... தம்பியாலதான். 'நல்ல இன்ஸ்பிரேஷன்’னு நினைச்சிடாதீங்க. ஒருநாள் என்னோட ஸ்கூட்டி பெப்-ஐ எடுத்துட்டு எங்கயோ போயிட்டான். பிரவுஸிங் சென்டர் கிளம்பின நான், வண்டியக் காணோம்னு அப்செட் ஆயிட்டேன். அவன் வந்தவொடன 'அப்பாவோட ஹோண்டாவ எடுத்துட்டுப் போக வேண்டியதுதானேடா’னு விட்டேன் ஒரு டோஸ். 'ஏன்... நீ வேணும்னா அப்பாவோட பைக்கை ஓட்டிப் பாரேன்’னு கிண்டல் பண்ணினான். அந்த ரோஷத்துல அப்பாகிட்ட பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன்''னு சொன்னவங்ககிட்ட, 'வண்டி ரொம்ப வெயிட்டா?’னு கேட்டா,

''லைட்டா... வெயிட்டுதான். ஆனா, ஏற்கெனவே ஸ்கூட்டி ஓட்டின அனுபவம் இருந்ததால ஈஸியா பேலன்ஸ் பண்ண முடியுது...''னு சொன்னவங்க,

''எங்க காலேஜ்ல டூ வீலர்ஸ் நாட் அலவ்டு. காலேஜ் பஸ்லதான் எல்லாரும் போகணும். அதனால, ஷாப்பிங், மார்கெட்டுக்கு எல்லா இடத்துக்கும் இப்போ நான் ஹோண்டாலதான் போறேன். 'பார்றா!’னு ரோட்டுல ஆச்சர்யமாப் பார்க்கும்போது, செம கெத்தா இருக்கும். அடுத்ததா அபாச்சி, பல்ஸர் எல்லாம் கத்துக்கணும். அப்புறம் இந்த பசங்க எல்லாம் பைக்ல வீலிங், ஸ்டன்ட்னு என்னென்னமோ பண்றாங்களே... அதெல்லாம் பண்ணி பார்க்கணும்னு ஆசை!''னு அசால்ட்டா சொன்ன ஷில்பா, ''மம்மி... பைக் கீ தாங்க. ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வர்றேன்''னு சிட்டா பறந்தாங்க ஹோண்டா ஷைன்ல!

தேனி, கம்மவார் பொறியியல் கல்லூரியில ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கற சரண்யா, ஏரியாவுல ரொம்ப பிரபலம். ''எல்லாப் புகழும் எங்கப்பா பைக்குக்குதான்!''னு கலகலனு பேசினாங்க சரண்யா.

'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...

''ஒருநாள் எங்கப்பாகூட பைக்ல போனப்போ, ஸ்லிப்பாகி ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டோம். 'போங்கப்பா... இனிமே நான் உங்ககூட பைக்ல வர மாட்டேன். நானே பைக் ஓட்டக் கத்துக்கிட்டு, உங்கள பின்னால வெச்சு கூட்டிட்டுப் போறேன்!’னு சொன்னேன். சிரிச்ச எங்கப்பா, 'சரி வா!’னு பைக் ஓட்டக் கத்துக் கொடுத்தாங்க. இப்படித்தான் ஆரம்பமாச்சு என்னோட பைக் பொது வாழ்க்கை!''னு சொன்னவங்க,

''வீட்டுல ஒரு ஸ்கூட்டி இருந்தாலும், எனக்கு இஷ்டம் அப்பாவோட 'ஹீரோ ஹோண்டா டான்’தான். ரொம்ப போர் அடிச்சா பைக் எடுத்துட்டு கம்பம் வரைக்கும் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வருவேன். ஏரியா டிராஃபிக் போலீஸுக்கு எல்லாம் நான் ரொம்ப பரிச்சயம். ஆனா, ஃப்ரெண்ட்ஸ்தான், 'ஏய்... நாங்க எல்லாம் ஸ்கூட்டியில போகும்போது நீ மட்டும் மிடுக்கா இப்படி பைக்ல வர்றது உனக்கே ஓவரா இல்லையா?’னு கலாய்ப்பாங்க. எல்லாம் பொறாமை!

என் தங்கச்சி ருத்ரா இப்போ எய்த் படிக்கிறா. அவளும் ஸ்கூட்டி கத்துக்க ஆரம்பிச்சிருக்கா. எனக்கு கிடைச்ச வாத்தியாரைவிட அவளுக்கு நல்ல வாத்தியார் கிடைச்சிருக்காங்க. அந்த நல்ல வாத்தியார்... நான்தான்! அடுத்ததா, அவளுக்கு பைக்கும் கத்துக் கொடுக்கணும்''னு சின்ஸியரா சொல்ற சரண்யாவுக்கு கார் ஓட்டவும் தெரியுமாம்!

''ஸ்ப்ளெண்டர், யூனிகார்ன், ஹோண்டா ஷைன்னு எல்லா கியர் பைக்லயும் நான் புகுந்து விளையாடுவேன்!''னு அதிரடி ஓபனிங் கொடுத்து ஆரம்பிச்சாங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துல இரண்டாமாண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கற அபிராமி.

'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...

''பொண்ணுங்க நாங்க ஸ்கூட்டி, ஆக்டிவானு ஸ்லோவா போவோம். பசங்க மட்டும் பெரிய பெரிய பைக்ஸ்ல, அவ்ளோ ஸ்பீடா, ஸ்டைலிஷா பறப்பாங்க. அதைப் பார்க்கும்போதெல்லாம், 'ஒரு நாள் நாமளும் ஏதாச்சும் ஒரு பைக்கை 100 கிலோ மீட்டர் வேகத்துல ஓட்டிப் பார்க்கணும்’னு ஆசையா இருக்கும். வீட்டுலயும் அடிக்கடி சொல்லிப் புலம்பறதைப் பார்த்துட்டு, 'பைக் கத்துக்கிட்டுதான் ஓட்டேன்...’னு பச்சைக்கொடி காட்ட, ஃபர்ஸ்ட் எங்க மாமாகிட்ட எம்.ஐ.டி. ஓட்ட கத்துக்கிட்டேன். அது ஹேண்ட் கியர் பைக்குங்கிறதால ஈஸியா இருந்துச்சு. அப்புறம் லெக் கியர் பைக் ஓட்டுறதுக்கான முறைகள மட்டும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அப்பாவோட பைக்கை நானே ஓட்டக் கத்துக்கிட்டேன். இப்போ வீட்டுக்கு வர்றவங்ககிட்டயெல்லாம், 'என் பொண்ணு எப்படி பைக் ஓட்டறா பாருங்க!’னு பெருமையா சொல்றாங்க எங்கப்பா. அம்மாதான் ச்சோ பேட். 'வண்டியில ஏறுங்கம்மா... கடைக்கு கூட்டிட்டுப் போறேன்’னு கூப்பிட்டா, 'ஐயையோ... நான் மாட்டேன்ப்பா!’னு அலர்றாங்க''னு சிரிக்கற அபிராமிக்கு, தோனியோட ஒரு கோடி ரூபாய் பைக்-ஐ ஒரு தடவையாச்சும் ஓட்டிடணுங்கறதுதான் லட்சியமாம்!  

ஓட்டிருவோம்!
- மோ.கிஷோர்குமார், ஸ்ரீ.நித்தீஷ்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்