Published:Updated:

இனி எங்களை ஏமாற்ற முடியாது!

இனி எங்களை ஏமாற்ற முடியாது!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி எங்களை ஏமாற்ற முடியாது!

ஆக்ரோஷம்பொன்.விமலா - கே.புவனேஸ்வரி

‘இன்னிக்காச்சும் குடிக்காம வீட்டுக்கு வருவியாப்பா...’

‘புள்ளைக்குப் பால் வாங்குறதுகாச்சும் காசு கொடுய்யா...’

`அய்யா... நான் உன்னப் பெத்த அம்மாய்யா... அப்படியெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதய்யா...’     

இனி எங்களை ஏமாற்ற முடியாது!


- இப்படியான கண்ணீர் மல்கும் காட்சிகள்  நிறைந்த ஊரில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மதுக்கடைகள்...

அங்கே விற்கப்படும் ஆல்கஹால் என்னும் திரவத்தில் பல கோடிப் பெண்களின் கண்ணீரும் கலந்திருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மதுக்கடைகளை  அகற்றுமாறு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாகக் கடைகளை அப்புறப்படுத்தத் தொடங்கியது தமிழக அரசு. அதன் பிறகு  நடந்தவை என்ன? அந்தக் கடைகளெல்லாம் என்ன ஆயின? 

பட்டிமன்றங்களில் நகைச்சுவையாகச் சொல்வார்கள்.

‘கண்ணகி சிலை அருகே மதுக்கடை இருந்தது.’

`எல்லோரும் எதிர்த்துப் போராடி னோம். உடனே அகற்றிவிட்டார்கள்.’

`மதுக்கடையைத்தானே?’

‘இல்லை... கண்ணகி சிலையை!’

- இந்த நகைச்சுவையைப் போலதான் இருக்கிறது தமிழக அரசின் இன்றைய நிலைமையும்.

நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்த கடைகளை ஒரேயடியாக மூடிவிடாமல் அவற்றை அப்படியே பெயர்த்துக்கொண்டுவந்து மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில்  நிறுவிக்கொண்டிருக்கிறது அரசு. நீதிக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக மதுக்கடைகளைப் பாதுகாப்பதில் மாற்று வழியை யோசித்துக் கொண்டிருக்கும் அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதே நிதர்சனம்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி எங்களை ஏமாற்ற முடியாது!

மது என்பது போதைப் பொருள் மட்டுமல்ல... அது தலைமுறை தலை முறையாக பலரது வாழ்க்கையைச் சீரழித்துச் சின்னாபின்னமாகியிருப் பதன் வெளிப்பாட்டின் காரண மாகத்தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத்தொடங்கி யிருக்கிறார்கள். குடிக்காவிட்டால் பாசம் காட்டும் தாத்தா, அப்பா, சகோதரன், கணவன், மகன் இவர்களெல்லாம் குடித்துவிட்டால் வேற்று மனிதர்களாகி, தங்கள் கொடூர முகத்தைக் காட்டுவது எதனால்? குடும்பங்களைச் சிதைப்பதில் மதுவுக்கு முக்கியப் பங்கு இருப்பதால்தான் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த  பூந்தண்டலம் ஊராட்சியின் அருகில் உள்ளது சக்தி நகர். இந்தப் பகுதியில் புதிதாக அமைக்கவிருந்த மதுக்கடையை அங்குள்ள பெண்கள் சம்மட்டி மற்றும் கடப்பாரைகளைக்கொண்டு அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

 ``நானும், என் புருஷனும் கூலி வேலைக்குத் தான் போறோம். கட்டட வேலையால உடம்பு வலிக்குதுன்னு குடிக்க ஆரம்பிச்சவர் குடிக்கு அடிமையாகி வேலைக்கும் சரியாப் போறதில்லை. என் ஒருத்தியோட வருமானத்தை வெச்சுக்கிட்டு குடும்பம் நடத்த முடியலை. என் உடம்பு மட்டும் என்ன கல்லிலா செஞ்சு வெச்சிருக்கு...’’ எனக் கதறும் ஈஸ்வரியின் வலிகளை அத்தனை சுலபத்தில் கடந்துவிட முடியாது.

 மது பழக்கத்தால் இறந்த கணவன், குடிக்கு அடிமையான தம்பி, மகன் எனத் தன்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள் எல்லோருமே குடியால் அழிவதோடு, தன்னையும் பாடாய்ப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க கடப்பாரையுடன் வீதிக்கு வந்தவர் சரசு. ``என் பையன் டாஸ்மாக் கடை  தூரத்துல இருக்கறப்பவே குடிக்கறதுக்கு ஆள் தேடுவான். இப்ப ஊருக்குள்ளயே கடை வந்துடுச்சுன்னா... நாங்கெல்லாம் இருக்குறதா, சாவுறதா? பொறுத்ததெல்லாம் போதும். இனிமே யாரும் ஏமாத்த முடியாது’’ என்கிற சரசுவின் கண்களில் கோபம் தெரிந்தது.

இனி எங்களை ஏமாற்ற முடியாது!``குன்றத்தூர்ல டாஸ்மாக் கடை இருந்தப்ப அங்கிருந்து வாங்கிட்டு வந்து முந்திரிக்காட்டுக்குள்ள குடிச்சுட்டுப் போவாங்க. அந்த வழியா பொண்ணுங்க பகல் நேரத்துலேயே  தனியா நடந்து போக முடியாது. ஒருமுறை முந்திரிக்காட்டில் குடிச்சுட்டு இருந்தவங்களுக்குள்ள கைகலப்பாகிக் கொலையும் நடந்திருக் குன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்ப ஊருக்குள்ள டாஸ்மாக்கைக் கொண்டு வந்தா, நாங்க வீட்டைவிட்டு வெளியே வரவே முடியாது’’ - மாலாவின் பயம் தமிழகத்தில் உள்ள பல பெண்களுக்கும் இருக்கலாம்.

``தேர்தல் அறிக்கையின்போது படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதியைக் கொடுத்த அரசு, இப்போது  நெடுஞ்சாலைகளில் அமைந்த மதுக்கடைகளை நீக்கச்சொன்னால் அதைச் செய்யாமல் குறுக்குவழிகளைக் கையாள்கிறது. ஒன்று நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை ஊருக்குள் திணிக்கிறார்கள். இல்லாவிட்டால்  நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதுதான் அரசு மக்கள்மீது காட்டும் அக்கறையா? நீதிமன்றங்களை மதிக்காத அரசின் போக்கு பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம். அரசை எதிர்த்து மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் மதுக்கடைகளுக்கு எதிராகப் பெண்களோடு சேர்ந்து ஆண்களும் போராடத் தொடங்கிவிட்டார்கள். குடிப்பழக்கம் உள்ளவர்கள்கூட மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களில் களம் இறங்குவது எதனால்? தனிப்பட்ட வகையில் மது அவர் களை அடிமையாக்கி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தங்களை வருத்துவதை அவர்களே உணர்கிறார்கள். அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்அவர்களது விருப்பமாக இருக்க முடியும். அப்படியிருக்க அரசாங்கம் மட்டும் கண்டும்காணாமல் கல்லா கட்டுவதையே கொள்கையாகக்கொண்டிருப்பது வேதனை யளிக்கிறது’’ என்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி.

மக்களுக்கு நல்லதைச் செய்வதுதான் அரசின் கடமையாக இருக்கமுடியுமே தவிர, அவர்களுக்குத் தேவையற்றதைத் திணித்து குடும்பங்களைச் சிதைக்கும் வேலை அரசுக்கானது அல்ல என்பதைத் தமிழக அரசு உணர்ந்து செயல்படுமா?