Published:Updated:

விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுவார்கள்! - குஜராத்திலிருந்து ஓர் குரல்

விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுவார்கள்! - குஜராத்திலிருந்து ஓர் குரல்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுவார்கள்! - குஜராத்திலிருந்து ஓர் குரல்

முகங்கள்இரா.கலைச்செல்வன்

டுமையான வெயில் காலத்தின் ஒருநாள்... இருபுறமும் வறண்டு வெடித்த வயல்வெளிகள்... அடிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல், குடங்களைத் தூக்கிக்கொண்டு வெறும் கால்களில் நடக்கும் பெண்கள்... இதுபோன்ற காட்சியை நாமும் வாழ்வின் ஏதோ ஒருகட்டத்தில் பார்த்திருக்கிறோம். இதை வெறும் காட்சியாக மட்டுமே பெரும்பாலும் கடந்திருக்கிறோம். சிலருக்கு இதுகுறித்த சிறு கவலை எழலாம். மிகச்சிலருக்கே அது பெரும்வலியைக் கொடுக்கும். அந்தச் சிலர்தான், அவர்களின் வலிகளைப் போக்கக் களம் காண்பார்கள். த்ருப்தி ஜெயின், அப்படிக் களம் கண்டவர்களில் ஒருவர்.         

விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுவார்கள்! - குஜராத்திலிருந்து ஓர் குரல்

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் த்ருப்தி. மதிப்பெண் இருந்தும் பணம் இல்லாததால், அவரின் மருத்துவர் கனவு மண்ணில் புதைந்தது. இருந்தும், தன் கனவைப் புதைத்த மண்ணை மேம்படுத்துவதையே தனக்கான கனவாக வகுத்துக்கொண்டு, பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். `புங்க்ரூ’ எனப்படும் ஒருவிதத் தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக் கருவியை ஏழை எளிய பெண் விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில், சமூக மாற்றத்துக்குப் போராடும் பெண்களுக்காக வழங்கப்படும் `கார்டியர்’ விருதை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, குஜராத்தின் குக்கிராமம் ஒன்றில் விவசாய நிலமொன்றில் தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

த்ருப்தி ஜெயின்... உங்களைப் பேட்டி காண வேண்டும்.

“சில நிமிடங்கள் பொறுங்கள். இங்கு கடுமையான வெயில். ஏதேனும் ஒரு மரத்தடியில் ஒதுங்கிவிட்டு உங்களை அழைக்கிறேன்.”

சரியாக 12 நிமிடங்கள் கழித்து நமக்கு அழைப்பு வந்தது.

அது என்ன `புங்க்ரூ’?

“அதற்கு, எங்கள் குஜராத்தி மொழியில் ‘புல்’ அல்லது ‘உருளை வடிவக்குழாய்’ என்று அர்த்தம். புங்க்ரூ - எளிய விவசாயிகளுக்கான நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது. அதாவது - மழைக்காலங்களிலும், வெள்ளத்தின்போதும் வரும் தண்ணீரைச் சுத்திகரித்து, அதை நிலத்துக்கு அடியில் செலுத்திச் சேமித்து வைப்போம். வறட்சிக்காலங்களில் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு தனித்துவமான  ‘அடிகுழாய்’ (Hand Pump) மூலம் இதை விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துவோம்.  பருவநிலை மாற்றங்கள் காரணமாகக் கடும் வெயில், கொட்டித்தீர்க்கும் மழை, நிலத்தின் உப்புத்தன்மை அதிகரிப்பு உட்பட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இயற்கையை நம்மால் எதிர்க்க முடியாது. ஆனால், எளிய வழிகளில் அதோடு இயைந்து செயல்பட முடியுமே!''

இதை எளிய விவசாயிகளுக்கு எடுத்துச் செல்வதன்மூலம் அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை வழங்குவதாகச் சொல்கிறீர்களே... எப்படி?


“ஆமாம். நாங்கள் மகாத்மா சொல்லிய ‘அந்தியோதயா’ என்ற தத்துவத்தில் இயங்குகிறோம். அதாவது, நம் உதவிக்கரங்கள்  பரம ஏழைகளிலிருந்து சேவையைத் தொடங்க வேண்டும். நிலமற்ற பெண் விவசாயக் கூலிகள், துளியளவு நிலம்கொண்டு அதில் விவசாயம் செய்யப் பணமில்லாத பெண்கள் போன்றவர்களுக்குத்தான் எங்கள் சேவையைக் கொடுத்து வருகிறோம். தினக்கூலிகளாக அல்லல்படும் விவசாயிகளுக்கு, இது ஒரு பொருளாதாரச் சுதந்திரத்தை அளிக்கும். உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகள் வயிறு காய்ந்துக் கிடக்கிறார்கள். அவர்களின் வாழ்வை மேம்படுத்த முயற்சிப்பதன் மூலம், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் தற்சார்பு வாழ்க்கைக்கான வழிகளையும் ஏற்படுத்துகிறோம்.”

ஒரு ‘புங்க்ரூ’ அமைக்க எவ்வளவு செலவாகும்? அது ஏழை விவசாயிகளுக்குச் சாத்தியமாகுமா?

“புங்க்ரூ அமைக்க ஆறு லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஒரு புங்க்ரூவால் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பளவுக்கு நீரைச் சேமிக்க முடியும். அதன்மூலம் 22 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய முடியும். சொட்டுநீர்ப் பாசன முறையை மேற்கொண்டால் 22 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். இதுவரை எட்டு மாநிலங்களில் 232 புங்க்ரூக்களை அமைத்துள்ளோம். இதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுவார்கள்! - குஜராத்திலிருந்து ஓர் குரல்

இதை நிறுவ, விவசாயிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதில்லை. சில இடங்களில் அரசாங்கத்திடம் நிதியுதவி கேட்போம். சில இடங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் தருவார்கள். ஆனால், பணம் படைத்த பெரிய நிலக்கிழார்களின் நிலங்களில் பணம் வாங்கிக்கொண்டுதான் இதை நிறுவுகிறோம். அதில் வரும் லாபத்தை மீண்டும் ஏழை விவசாயிகளின் புங்க்ரூவுக்குச் செலவழிப்போம்.”

இதைக் குறிப்பாகப் பெண் விவசாயிகளுக்காகத்தான் செய்கிறீர்களாமே... நீங்கள் பெண் என்பதாலா?


“இருக்கலாம். ஆனால், கிராமப்புறப் பெண்களில் 86% பேர் விவசாயத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்யும் பெண்களுக்கான அங்கீகாரம் இந்தச் சமூகத்தில் துளியளவும் கிடையாது. அவர்கள் குரலற்றவர்களாக ஒடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள். மற்ற தொழில்களில் உள்ள பெண்களுக்காவது ஏதாவது ஒருவகையில் அங்கீகாரமோ, அடை யாளமோ, பொருளாதார ஏற்றமோ கிடைக்கிறது. இங்கு பெண்களுக்கு நில உரிமைகளும் மறுக்கப் படுகிறது. நில உரிமையற்ற பெண்களுக்கு நாங்கள் புங்க்ரூ உரிமையை அளிக்கிறோம். விவசாயத்தில் மட்டும் தான் பெண்கள் முழுச் சுதந்திரத்தோடும், சுய மரியாதையோடும்  தற்சார்பு வாழ்வை வாழ்ந்திட முடியும். ஆமாம்... அடையாளம் மறைக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப் பட்டு, அடக்குமுறையில் சிக்கித்தவிக்கும் பெண் களுக்கான சுதந்திரத்தை இதன்மூலம் பெற்றுத் தருவதே எங்கள் நோக்கம்.”

உங்களின் செயல் பாடுகளுக்குக் குடும்பம் எப்படி ஒத்துழைக்கிறது?


“புங்க்ரூவை உருவாக்கியது நானல்ல. 90-களின் இறுதியில் பி.இ. முடித்ததும் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால், நான் தொண்டு நிறுவனங்களில் இணைந்து பெண்களின் முன்னேற்றத்துக் காகவும் அவர்களின் நில உரிமைகளுக் காகவும் போராடிக் கொண்டிருந்தேன். எட்டு வருடக்காலமாகப் போராடியும் எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த போதுதான், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிப்லாப் பால் இந்தக் கண்டுபிடிப்பை என்னிடம் காட்டினார். அவரும் நானும்  இணைந்துதான் இந்த முன்னெடுப்புகளை எடுத்தோம். இன்றும் அவரோடுதான் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்... களத்திலும், வாழ்க்கையிலும். பிப்லாப் என் கணவர். எங்களுக்கு 16 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். உங்களின் கேள்விக்குச் சரியான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்!”

புங்க்ரூவைத் தமிழகத்துக்குக் கொண்டுவரும் திட்டம் இருக்கிறதா?


“கண்டிப்பாக. விரைவிலேயே தமிழ கத்திலும் எளிய விவசாயிகளுக்காக புங்க்ரூவை  நிறுவுவோம். உலகில் விவசாயம் செய்யும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் கனவு!''

தமிழக விவசாயிகள் டெல்லியில் மேற்கொண்ட போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?


“விவசாயிகள் உலகுக்கே உணவளிப் பவர்கள், உணவின்றி சாவது எத்தனை கொடுமை? இந்தப் பரிதாப நிலை மாற வேண்டும். அரசாங்கம் இதை உணர வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள்... இன்று விவசாயிகள் ஆட்சியாளர்களைப் பார்த்து, தங்கள் குறைகளைச் சொல்ல ஆடைகளைத் துறந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னும் பத்தாண்டுகளில் நிலைமை மாறும். ஆட்சியாளர்கள், விவசாயிகளின் கால்களில் விழுந்து கெஞ்சுவார்கள்... கதறுவார்கள்... ‘ஐயா, தயவுசெய்து விவசாயத்தைத் தொடருங்கள். உங்களுக்கு என்ன வசதிகள் வேண்டுமோ நாங்கள் செய்து தருகிறோம். விவசாயத்தைக் கைவிட்டுவிடாதீர்கள்’ என்று கெஞ்சும் நிலை வரத்தான் போகிறது...”

- ஆவேசமாகப் பேசி முடிக்கிறார். அவர் பேசிய வார்த்தைகள் அத்தனையும் நீர் சுரக்கும் வார்த்தைகளே!