Published:Updated:

“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”

“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”

எங்கள் அப்பாகு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

வீட்டுக்கு வெளியே கம்பீரமாக, அதிகாரம் கொண்டவர்களாக வலம்வரும் பலர், வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்கு மலரினும் மெல்லிய அன்புள்ளம்கொண்ட அப்பாவாக இசைந்து, இழைந்திருப்பார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகளிடம் சரணடைந்து, அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே பிரவாகமெடுக்கப் பொறுப்பேற்கும் அப்பாக்கள், அகிலத்தின் அழகு. அப்படி ஓர் அப்பா - பெண்களின் கூடு... ரவி ஐ.பி.எஸ் வீடு. இவர், தமிழகக் கூடுதல் டி.ஜி.பி (தலைமையகம்).   

“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”

விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிகையில், அங்கு நடந்த மிகப்பெரிய கலவரத்தின் போது திறம்படச் செயல்பட்டு அமைதியை மீட்டவர். திருநங்கைகள் சுயமரியாதையுடன் வாழ , பல ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்தவர். இருமுறை குடியரசுத்தலைவர் விருது வென்ற நேர்மையான காவல்துறை அதிகாரியான ரவி, முனைவர் பட்டம் பெற்றவரும்கூட.

``எங்களோட சுக துக்கங்களைப் பகிர்ந்துக்க மனசு முதல்ல தேடுறது, அப்பாவைத்தான். அவரோட மிடுக்கு, ஆளுமை எல்லாம் வீட்டுக்குள் வந்ததும் தொலைந்துபோற மேஜிக் எங்களுக்குப் பழகிப்போச்சு’’ என்று சிரிக்கிறார்கள் ரவியின் மகள்கள் அனன்யாவும் இதழ்யாவும். ‘`நான்கூட பல சந்தர்ப்பங்கள்ல ‘நோ’ சொல்லியிருக்கேன். ஆனா, இவங்கப்பா இவங்க சொன்ன எந்த வேலையையும் மறுத்ததில்ல’’ என்கிறார் இவர்களின் அம்மா தெய்வம் ரவி.

“எங்க வளர்ச்சி, வெற்றினு எல்லாத்துலயும் அப்பாவோட பங்கிருக்கும். ப்ளஸ் டூ எக்ஸாம் நேரத்துல, எழுந்திரிக்கக்கூட முடியாத அளவுக்கு எனக்குப் பயங்கரக் காய்ச்சல். அப்போ மருந்து மாத்திரைகளைவிடவும் அப்பாவோட கவனிப்பும், அவர் சொன்ன நம்பிக்கை வார்த்தைகளும்தான் என்னைக் குணமாக்கிச்சு. நைட்டெல்லாம் தூங்காம முழிச்சிருந்து ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மருந்து கொடுப்பார். அந்தப் பரீட்சையில நான் 96% மார்க் வாங்கினதுக்கும், அடுத்து இன்ஜினீயரிங் படிக்கவும், இப்போ அமெரிக்காவுல எம்.எஸ் படிக்கவும் என்னோட முயற்சியைவிட அப்பாவோட அக்கறைதான் அதற்குக் காரணம்.     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”

சின்ன வயசுல தொட்டில்ல ஆட எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒருமுறை ட்ரெயின்ல போயிட்டு இருந்தப்போ தொட்டில் வேணும்னு நான் அடம்பிடிக்க, தன் கையையே அப்பா தூளியாக்கி என்னை ஆட்டினதை நான் பாட்டியானாலும் மறக்கமாட்டேன். நான் வெளிய போயிட்டுக் களைப்பா வீட்டுக்கு வந்தா தரையில உட்கார்ந்து என் கால் கையெல்லாம் பிடிச்சுவிடுவார். ‘தலை வலிக்குதுப்பா’னு சொன்னா, சூப்பரா மசாஜ் பண்ணி விடுவார்’’ என அனன்யா சொல்ல, ‘`அக்கா அந்த கொஸ்டீன் பேப்பர் மேட்டர் நான் சொல்றேன்’’ என்று தயாராகிறார் இதழ்யா.

‘`அப்பாவுக்கு டாக்டராகணும்னு ஆசை. ஆனா, தாத்தாவோட ஆசைப்படி எம்.எஸ்ஸி., அக்ரி முடிச்சுட்டு, சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி ஐ.பி.எஸ் ஆகிட்டாரு. ஆனாலும், `டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்ய முடியலையே’னு அவருக்கு ரொம்ப வருத்தம். அதனால நிறைய புத்தகங்களைப் படிச்சு மெடிக்கல் விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுப்பார். அப்பாவுக்காகவே நான் டாக்டராகணும்னு நினைச்சேன். இப்போ ராமச்சந்திரா மெடிக்கல் யுனிவர்சிட்டியில மூணாவது வருஷம் படிக்கிறேன். ஒவ்வொரு செமஸ்டர் எக்ஸாமுக்கும் அப்பா எனக்கு மாடல் கொஸ்டீன் பேப்பர் ரெடி பண்ணி தந்து படிக்கச் சொல்லுவார். அதிலிருந்து 60% கேள்விகள் பரீட்சையில கேட்பாங்கன்னா பார்த்துக்கோங்க” என்று சிரிக்கிறார் இதழ்யா.
 
``ஏம்ப்பா உங்களுக்கு இன்ஜினீயரிங் படிக்கிற ஆசை இல்லாமப் போச்சு? இல்லைன்னா எனக்கும் கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணித் தந்திருப்பீங்களே?’’ என அப்பாவிடம் செல்ல மாகக் கோபப்படும் அனன்யா...

``அப்பா ஒரு ஜிம் ஃப்ரீக். எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்து ரெகுலரா ஜிம் போறதை வழக்கமா வெச்சிருக்கார். ஒரு மணிநேரம் ஃப்ரீ டைம் கிடைச்சாகூட ஜிம்முக்குப் போயிடுவார். எங்க கண் முன்னாடி அம்மாவை அதட்டிக்கூடப் பேச மாட்டார். நாங்க எவ்வளவு குறும்பு செஞ்சாலும் எங்களைத் திட்டவோ, அடிக்கவோ மாட்டார். தப்பு செஞ்சா அதை மறுபடியும் செய்யாத அளவுக்கு மென்மையா கண்டிப்பார். வேலை, புத்தகம் படிக்கிறது, ஜிம் வொர்க்அவுட், நிறைய ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டினு எவ்வளவு பிஸியா இருந்தாலும், வாரம்தோறும் தவறாம எங்களை தியேட்டருக்கு அழைச்சுட்டுப் போவார். அம்மாவுக்கும் எங்களுக்கும் சூப்பரா சமைச்சுக்கொடுப்பார். அமெரிக்காவில் இருக்கும்போது எனக்கு, வீடியோ கால் மூலமா குக்கிங் கிளாஸ் எடுப்பார். அமெரிக்காவுக்கு எடுத்துட்டுப் போன அப்பாவோட டி-ஷர்ட்களை, அவரை மிஸ் பண்ணும்போதெல்லாம் போட்டுக்கு வேன்’’ எனும்போது அனன்யாவின் குரல் குழைகிறது.    

“ஊருக்குதான் அவர் போலீஸ்... எங்களுக்கு அவர் பெஸ்ட் ஃப்ரெண்ட்!”

‘` `நான் பஸ்ல போய்தான் ஸ்கூல், காலேஜ் படிச்சேன். நீங்களும் அப்படி எளிமையான வாழ்க்கைச் சூழல்ல இருந்து வளர்றதுதான் நல்லது’ன்னு சொல்லித்தான், அப்பா எங்களை வளர்த்தார். வீட்டுல கார் இருந்தாலும் நாங்க ஸ்கூல், காலேஜுக்கு பஸ்லதான் போயிட்டு வர்றோம். அதே மாதிரி, ‘டாக்டராகி நிச்சயமா அரசு ஆஸ்பத்திரியிலதான் வேலை செய்யணும், நிறைய ஏழைகளைத் தேடிப்போய் ஃப்ரீ ட்ரீட்மென்ட் கொடுக்கணும்’னு இப்பவே  உறுதிமொழி வாங்கிட்டாரு. எனக்கும் அதுதான் ஆசை” என்கிறார் இதழ்யா.

``என் மகள்கள்தான் என் உலகம். அவங் களோட மகிழ்ச்சியும் வளர்ச்சியும்தான் என் வாழ்க்கையோட அர்த்தமா இருக்குது’’ - நெகிழ்ந்து சொல்லும் ரவியின் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரிக்கிறார்கள் அவர் செல்ல மகள்கள்!