Published:Updated:

“யாதுமாகி நிற்பது சுகம்!”

“யாதுமாகி நிற்பது சுகம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“யாதுமாகி நிற்பது சுகம்!”

தந்தையுமானவள்! ஆர்.வைதேகி

ம்மாக்கள் குழந்தைகளுக்கு ஒருமுறை உயிர் கொடுக்கிறார்கள். நமிதா, தன் மகளுக்கு இரண்டாவது முறையாக உயிர் கொடுத்திருக்கிறார். அம்மா நமிதாவிட மிருந்து தானமாகப்பெற்ற கல்லீரல்தான் மகள் நிகிதாவைக் காப்பாற்றி நடமாட வைத்திருக்கிறது. அம்மா புன்னகை அரசி என்றால் மகள் புன்னகை இளவரசி.   

“யாதுமாகி நிற்பது சுகம்!”

வலிகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் வென்றவர் களின் வார்த்தைகளும் வலிமைமிக்கவை.

``நாங்க ரெண்டு பேருமே ரொம்ப பாசிட்டிவான ஆட்கள். தயவுசெய்து இதைச் சோகமான, தியாகமான பேட்டியா பதிவு செய்யாதீங்க... எங்களை யாரும் பரிதாபத்தோடு பார்க்க வேண்டியதில்லை...'' - வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் வைத்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிக்கிறார் துபாயில் வசிக்கிற நமிதா.

``என் மகள் நிகிதாவுக்கு மூணு வயசாயிருக்கும்போதே நானும் என் கணவரும் கருத்துவேறுபாடு காரணமா பிரிஞ்சுட்டோம். என் அம்மாவும் அப்பாவும் கம்யூனிசக் கொள்கைகள்ல பெரிய ஈடுபாடு உள்ளவங்க. சின்ன வயசுலேருந்தே அவங்களைப் பார்த்து வளர்ந்ததுல எனக்கும் அந்தத் தாக்கம் நிறையவே உண்டு. அந்த வளர்ப்புமுறைதான் வாழ்க்கையை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுபோகிற நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது.

நிகிதா ரொம்பவே சுட்டியான குழந்தை... எப்போதும் சிரிச்சுக்கிட்டும் சிரிக்க வெச்சுக்கிட்டும் இருக்கிற அவளுக்கு எட்டாவது பிறந்த நாள் முடிஞ்ச கையோட திடீர்னு உடம்புக்கு முடியாம போனது. நிறைய டாக்டர்களைப் பார்த்தோம். அவளோட ஹீமோகுளோபின் ஆபத்தான அளவுக்குக் குறைஞ்சது. ஆரம்பத்துல டாக்டர்ஸ் அவளுக்கு மஞ்சள்காமாலையா இருக்கலாம்னு சந்தேகப் பட்டாங்க. ஆனா, நிகிதாவோட உடல்நிலை நாளுக்கு நாள் ரொம்ப மோசமா மாறிட்டிருந் தது. அவளால நடமாடக்கூட முடியாத நிலையில, ஆஸ்பத்திரியில சேர்த்தேன். கடைசியா அவளோட பிரச்னையைக்  கண்டுபிடிச்சாங்க. முப்பது ஆயிரம் பேர்ல ஒருத்தரைப் பாதிக்கிற அந்த அபூர்வமான நோய்க்கு `வில்சன் டிசீஸ்'னு பேர் சொன்னாங்க. உடம்புக்குள்ள காப்பர் பாய்சனை ஏற்படுத்தற நோயாம் அது. கல்லீரலைப் பாதிக்கிற இந்த நோய்க்கு ஒரே தீர்வு, கல்லீரல் மாற்று மட்டும்தான்னும் சொன்னாங்க. அதுவரை வாழ்க்கையில அப்படியொரு விஷயத்தைப் பத்தி நான் கேள்விப்பட்டதே இல்லை...'' - அந்தக் கணத்தின் பரிதவிப்பை யும் படபடப்பையும் அப்படியே பிரதிபலிக்கின்றன நமிதாவின் வார்த்தைகள்.      

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“யாதுமாகி நிற்பது சுகம்!”

``பெற்றோர்கிட்டருந்து. அதுலயும் குறிப்பா அப்பா கிட்டருந்து கல்லீரல் தானம் வாங்கறதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் சாய்ஸ்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. என் மகளுக்காக அவங்கப்பாகிட்ட போய்க் கேட்டேன். ஆனா, அவருக்கு `ஃபேட்டி லிவர்' பிரச்னை இருந்ததால அந்தக் கல்லீரல் பொருந்தாதுன்னு சொல்லிட்டாங்க. அடுத்த சாய்ஸ் நான்தான். சின்ன வயசுலேருந்தே ஊசின்னாகூட எனக்கு அலர்ஜி. அநியாயத்துக்குப் பயப்படுவேன். என் பிளட் குரூப்பை டெஸ்ட் பண்ணணும்னு சொன்னபோதே மயங்கி விழுந்துட்டேன். `எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்... என் குழந்தை என்ன பாவம் பண்ணினா'னு எனக்குள்ள ஏகப்பட்ட கேள்விகள்... குழப்பங்கள். என் மகளுக்காக தைரியத்தை வரவழைச்சுக்கிட்டேன். எல்லா டெஸ்ட்டுகளுக்கும் தயாரானேன். நல்லவேளையா என்னுடைய கல்லீரல் அவளுக்குப் பொருத்தமா இருந்தது. நிகிதாவுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சது. இப்போ நிகிதாவுக்கு 14 வயசு. நல்ல ஆரோக்கியத்தோடும் அவளுடைய அதே பழைய சிரிப்போடும் உற்சாகத்தோடும் மாறிட்டா. சாப்பாட்டு விஷயத்துல டாக்டர்ஸ்  சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றச் சொல்லியிருக்காங்க. இந்தச் சின்ன வயசுலயே அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு ரொம்பப் பொறுப்பா நடந்துக்கிறா...'' - படபடப்பு அடங்கி, அமைதிக்குத் திரும்புகிறார் நமிதா.

``என் மகளைக் காப்பாற்றப் போராடின அந்த நாள்கள் கொடுமையானவை. அந்தப் போராட்டம்தான் எனக்குள்ள ஓர் உறுதியைக் கொடுத்தது. `எந்தக் காரணத்துக்காகவும் வாழ்க்கையில தளர்ந்து போயிடக் கூடாது'ங்கிற துணிச்சலைக் கொடுத்தது. என் மகளுடைய ஆபரேஷனுக்குப் பிறகு மனசளவுல என்கிட்ட நிறைய மாற்றங்களை ஃபீல் பண்றேன். வாழ்க்கையில இன்னும் நிறைய கனிவோடவும் அடுத்தவங்களுக்கு உதவுற குணத்தோடவும் மாறியிருக்கேன்.

`இதுவும் கடந்து போகும்'னு சொல்ற மாதிரி ஒரு நல்ல நாளில் எல்லாமே மாறினது. புது வேலைக் கிடைச்சு துபாய்க்குப் போனேன். அதுவரைக்கும் என்கிட்ட பாஸ்போர்ட்கூட கிடையாது. பெரிசா எங்கேயும் ட்ராவல் பண்ணினதில்லை. அது அதுக்கான நேரம் வரும்போதெல்லாம் தானா நடக்கும்கிறது என் விஷயத்துல சரியா இருந்தது. தனியா துபாய்க்குப் போனேன். ஆறு மாசம் கழிச்சு நிகிதாவும் என்கிட்ட வந்தாள். இப்போ துபாய்லதான் படிக்கிறாள். நிகிதாவுக்கு நடிப்புல நிறைய ஆர்வமுண்டு. சில படங்கள்ல நடிச்சிருக்கா.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாழ்க்கை இப்போ ரொம்ப அழகாயிருக்கு. என் மகளுடனான ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய ட்ராவல் பண்றோம். முன்பைவிட இப்போ இன்னும் அதிக உற்சாகத்துடன் உழைக்கிறேன். என் மகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைச்சுக் கொடுக்க வேண்டிய பொறுப்போட ஓடிக்கிட்டிருக்கேன். ஆனா, என் மகள் எனக்கே அம்மா மாதிரி பேசறா. `நீ ஏம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது?'னு கேட்கறா. சிங்கிள் பேரன்ட்டா குழந்தையை வளர்க்கற பொறுப்பு சவாலாகவும் சங்கடமாகவும் பயமுறுத்தின நாள்கள் மாறி, இன்னிக்கு என் மகளுக்கு நானே எல்லாமுமாகவும் இருக்க முடிகிற அனுபவம் சுகமான சுமையா இருக்கு...''

- நெகிழவைக்கிறார் தந்தையுமானவள்.