Published:Updated:

“எங்கப்பா ஹீரோவுக்கும் மேல!”

“எங்கப்பா ஹீரோவுக்கும் மேல!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எங்கப்பா ஹீரோவுக்கும் மேல!”

அப்பாவின் நூற்றாண்டுஆர்.வைதேகி

``ஒவ்வொருவருடைய பிறப்புக்கும் ஓர் அர்த்தம் உண்டு. புற்றுநோய் என்கிற பூதம் தாக்கிய நிமிடம் என்னுடைய அந்த நம்பிக்கை தகர்ந்தது. ஒவ்வோர் உறுப்பாகப் பரவிய நோய்... உடலை எரிக்கும் ஏராளமான கீமோதெரபி அவதிகள்... அடுக்கடுக்கான அறுவைசிகிச்சைகள் என தினசரி வாழ்க்கையே சவாலாகிப் போனது. `இத்தனைக்குப் பிறகும் வாழத்தான் வேண்டுமா?' என நினைக்கவைத்த ஒவ்வொரு வலியையும் வெல்லவைத்த விஷயங்கள் இரண்டு... என் உயிரில் கலந்த இசை; உயிரினும் மேலான என் அப்பாவின் அன்பு. அப்பாவின் இசையை அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்புதான் என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது...''     

“எங்கப்பா ஹீரோவுக்கும் மேல!”

- கரகரக்கிற குரலில், தழுதழுக்கிற வார்த்தைகளில் சன்னமாகப் பேசுகிறார் கீதா பென்னெட். இசைக்கலைஞர், எழுத்தாளர், புற்றுநோயை வென்றவர் என்கிற எந்தப் பதாகையிலும் பெருமையில்லை இவருக்கு. அப்பாவின் அன்பும் நினைவுகளுமே தன் வாழ்க்கையை இயக்கும் சூத்திரங்கள் என்கிறார் கீதா.

தன் அப்பாவும் இசையுலக ஜாம் பவானுமான டாக்டர் எஸ்.ராமநாதனின் நூற்றாண்டையொட்டி அப்பாவின் நூறு பாடல்களைப் பாடியும் வீணையில் வாசித்தும் யூடியூபில் ஏற்றும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். நூற்றாண்டில் அப்பாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறார் இந்த மகள்.

``எங்கள் வீட்டில் நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். அத்தனை பேருக்கும் எங்கள் அப்பாவே குருவாகவும் அமைந்தது மிகப்பெரிய கொடுப்பினை. அப்பாவாகவும் ஆசானாகவும் அவர் ஆகச் சிறந்த மனிதர். எந்த விஷயத்திலும் நுனிப்புல் மேய்வது என்பது அப்பாவுக்குப் பிடிக்காது. இசை மட்டுமன்றி உலக விஷயங்கள் அனைத்திலுமே அவருக்கு ஆழமான ஞானம் உண்டு. பன்மொழிப் புலமை கொண்டவர். காந்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறபோது, `இப்படிக்கூட ஒரு மனிதரால் இருந்திருக்க முடியுமா?' என யோசிக்கிறோமில்லையா... என் அப்பாவைப் பற்றி நினைக்கும்போதும் அதே உணர்வுதான் எழுகிறது.

அப்பா என்றதும் எனக்கு முதலில் நினைவில் நிற்பது அவரது ஸ்டைலும் அசாத்தியமான அழகும். `இசைக்கலைஞர்களுக்கான அடையாளமே இல்லையே' என அப்பாவைப் பார்த்துப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். அப்பாவின் அப்பா வைதீகமான புரோகிதராக இருந்தவர். என் அப்பா புரட்சிகரமான சிந்தனைகள் உள்ளவர். குடுமியும் கடுக்கணும் வேண்டாம் என முடிவெடுத்தவர்.

தினமும் இரவு சாப்பிட்ட பிறகு எங்களுடைய திருவல்லிக்கேணி வீட்டின் வராண்டாவில் அப்பா ஈஸி சேரில் சாய்ந்து கொண்டிருக்க, நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதைகள் பேசிய நாள்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஹிந்து ஹைஸ்கூலின் வேப்பமரத்துக் காற்றும் மெரினா கடற்கரையிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றும் அந்தச் சூழலுக்கு இன்னும் இனிமை சேர்த்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

விடியற்காலையில் எல்லோரையும் எழுந்திருக்கச் சொல்வார். மெரினா கடற்கரைக்கு அழைத்துச் செல்வார். கடற்கரை மணலில் உட்காரவைத்து, கம்பராமாயணம், திருப்புகழ், திருப்பாவை, தேவாரம், திவ்யப்பிரபந்தம் எல்லாம் சொல்லிக்கொடுத்து அர்த்தத்தையும் கற்றுத்தருவார். இன்று குவான்டிட்டி டைம் முக்கியமில்லை... குவாலிட்டி டைம்தான் முக்கியம் என்று நிறையப் பேசுகிறோம். அதை அந்தக் காலத்திலேயே நடைமுறைப்படுத்தியவர் அப்பா.

வெஸ்லியன் யுனிவர்சிட்டியில் இசை சொல்லித்தரச் சென்றபோது அப்பா என்னையும் அழைத்தார். அப்போது அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஆண் - பெண் உறவுகளை அப்பா ஒருநாளும் துச்சமாகப் பேசியதில்லை. அப்பா யாரையும் தவறாகப் பேச மாட்டார். யார் மீதும் குற்றம் சுமத்த மாட்டார். அத்தனை குழந்தைகளில் நான் மட்டும் வீணை வாசித்ததால், என்னை அமெரிக்கா அழைத்துச் சென்றார். அருமையான கணவர், அன்பான மகன் என என்னுடைய அழகான திருமண வாழ்க்கைக்கு அந்தப் பயணம்தான் அஸ்திவாரம் அமைத்தது.

பிறந்த நிமிடம் முதல் என்னுட னேயே இருந்த விஷயம் இசை. மிகச்சிறிய வீடு. வீடுகொள்ளாமல் மாணவர்கள் இருப்பார்கள். ராத்திரி பகலாக இசைப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். நான் பேசப் பழகுவதற்கு முன்பே எனக்குள் இசை வந்திருக்கும். அப்பாவே இசைக்குருவாக இருந்ததில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. அப்பா யாரையும் கடுஞ்சொல் பேச மாட்டார். டேப் ரெக்கார்டர் வைத்துக்கொண்டு பதிவு செய்வதெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்காது. `மனதில் பதிய வை' என்பார். இசையின் அம்சங்கள் சரியாகப் புரிபடாவிட்டாலும் அது புரிகிறவரை  பொறுமையாகச் சொல்லித் தருவார். யாருக்கும் இசை வரும் என நம்பியவர் அப்பா. வரவழைக்கவேண்டியது குருவின் கடமை என நம்பினார். ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள வயது தடையாக இருக்காது என்பார். மாணவர்களையும் சரி, தன் சொந்தக் குழந்தைகளையும் சரி... ஒரே மாதிரியான கனிவுடனும் அன்புடனும் நடத்தியவர்.

திருவல்லிக்கேணியில் ஒரு மடத்தில் அப்பா வுடன் சேர்ந்து வாசித்ததுதான் என் முதல் கச்சேரி. `வயதில் சிறியவளாயிற்றே... அனுபவமிருக்குமா' என்றெல்லாம் யோசிக்காமல் அப்பா என்னை அவருக்குப் பக்கத்திலேயே உட்காரவைத்து வாசிக்கச் சொன்னார். அதன்பிறகு எல்லா வீணைக் கச்சேரிகளையும் அப்பாவுடன்தான் வாசிப்பேன். அப்பா பாடும்போது தம்புரா வாசித்திருக்கிறேன்.  அப்பாவுடன் வீணை வாசித்ததும், அவருக்குத் தம்புரா வாசித்ததும் மிகப்பெரிய கொடுப்பினை. வாசிப்பு நன்றாக இருந்தால், அது அவருடைய கண்களில் தெரியும்.

`அவ இன்னிக்கு சபையில நல்லா வாசிச்சா...' என அம்மாவிடம் சொல்வாராம். ஒருநாளும் திட்டியதில்லை. `இருநூறு சதவிகிதம் பயிற்சி எடுத்தால்தான், சபையில் அறுபது சதவிகிதமாவது வரும்' என்பார். மேடையில் உட்கார்ந்து பாடுபவரையோ, வாசிப்பவரையோ விமர்சனம் செய்வது அப்பாவுக்குப் பிடிக்காது.

அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அவருடைய கண்களே காட்டிக் கொடுத்துவிடும். அவருக்குச் சில விஷயங்கள் பிடிக்காது. தலைவிரிகோலமாக இருந்தால் பிடிக்காது. அமெரிக்காவின் மைனஸ் 20 டிகிரி குளிரிலும் புடவைதான் உடுத்த வேண்டும் என்பார். நெற்றியில் பொட்டு இருக்க வேண்டும். கைகளில் வளையல் இருக்க வேண்டும். பெரியவர்கள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும். ஆனால், கல்யாணமான அடுத்த நாளே என் கணவர் ஃபிராங்க் பென்னெட் எனக்கு ஜீன்ஸ் பேன்ட் வாங்கித் தந்தார். தலைமுடியை வெட்டிக்கொண்டேன். அதன் பிறகு பின்னிக்கொண்டதாக நினைவே இல்லை. இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என நினைத்தவர் அப்பா.

எனக்கு ஹைட்ரோஃபோபியா, அதாவது தண்ணீர் பயம் உண்டு. சின்ன வயதில் அப்பா  எல்லோரையும் பீச்சுக்கு அழைத்துச் செல்லும்போது நான் மட்டும் தண்ணீரில் இறங்காமல், மணலிலேயே நிற்பேன். கணவர் சொன்னதற்காக நீச்சல் கற்றுக்கொண்டேன். கல்யாணத்துக்குப் பிறகு ஒருமுறை குடும்பத்துடன் மகாபலிபுரம் போனபோது தைரியமாகத் தண்ணீரில் இறங்கி நின்றேன். அப்போது, அப்பா என் கைகளைப் பற்றிக் கொண்டார். `கீது... நீ வாழ்க்கையில என்ன வேணா சாதிச்சிருக்கலாம்... இனிமேலும் நிறைய சாதிக்கலாம். தண்ணீர் பயத்தை நீ போக்கிண்டதை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப்படறேன்'னு அப்பா நெகிழ்ந்துபோய் சொன்னார். நான் கண்ணீர் வழிய நின்றிருந்தேன்.

கல்யாணத்துக்குப் பிறகு அப்பாவை ரொம்பவே மிஸ் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு மிக அருமையான, அமைதியான மண வாழ்க்கை அமைந்தது. இருபத்தி நான்கு மணி நேரமும் என்னுடன் இருந்த இசையையும் மிஸ் பண்ணினேன். `யு கான்ட் ஹேவ் யுவர் கேக் அண்ட் ஈட் இட் டூ' என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். `உனக்குச் சந்தோஷமான மண வாழ்க்கைக்கு 12 ஆயிரம் மைல் தொலைவு தள்ளிப்போகத் தயாரா?' அல்லது `அப்பாவின் அருகிலேயே இருந்தபடி வேறுமாதிரியான மணவாழ்க்கை வேண்டுமா?' எனக் கடவுள் என்னிடம் கேட்டதாகவும் நான் இதைத் தேர்ந்தெடுத்ததாகவும் நினைத்துக் கொள்வேன். அப்பா இறந்தபிறகு அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாததாகிவிட்டது.

அப்பா இருந்திருந்தால்..? - இந்தக் கற்பனையே அத்தனை இனிக்கிறது! ஒருவேளை அவர் இருந்திருந்தால், இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அவருக்கு நெருக்கத்திலேயே இருந்திருப்பேன். இன்னும் நிறைய கற்றுக்கொண்டிருப்பேன். என்னுடனேயே வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

அப்பா இருந்திருந்தால்... வாழ்க்கையில் இனிமையும் நம்பிக்கையும் கூடியிருக்கும்!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz