Published:Updated:

மனுஷி - அத்தனைக்கும் அர்த்தம் உண்டு!

மனுஷி - அத்தனைக்கும் அர்த்தம் உண்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - அத்தனைக்கும் அர்த்தம் உண்டு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

திருமணம் செய்துகொண்டு பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணே! நீ உன் புகுந்த வீட்டில் மாமியார் மாமனார்மீது அன்புகொண்டு அரசாட்சி செய்பவளாக இருப்பாய். உன் கணவனின் சகோதர சகோதரிகளின் மீது உனது ஆட்சி முழுமையாக அமையட்டும். 

(ரிக் 10:85:46) 

மனுஷி - அத்தனைக்கும் அர்த்தம் உண்டு!

தனக்குக் கல்யாணம் என்று கேள்விப்படும்போது ஒருபுறம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் மறுபுறம் படபடப்பும் சேர்ந்துகொள்வது பெண்களின் இயல்பு. பெற்றவர்களை விட்டு, பிறந்த வீட்டைவிட்டு, புது இடத்துக்குப் போகப் போகிறோமே என்ற எண்ணம் தரும் படபடப்பு பெண்களுக்கு ஏற்படுவது இயல்புதான். ஆனாலும், கல்யாணம் என்பது தவிர்க்கமுடியாத நிகழ்வாக உள்ளது. ‘காட்டாற்றைப் போன்ற வேகம் இருக்கும்வரை அணைபோட்டுத் தடுத்திட,  பக்குவப்படுத்திப் பண்பான வாழ்க்கை வாழச்செய்திட இந்து மதம் கண்ட அற்புத உபாயம் திருமணம்’ என்று அர்த்தமுள்ள இந்து மதத்தில் அழகாகச் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.

வீட்டில் கல்யாணப் பேச்சு வந்தவுடனே பெண்ணுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வீட்டுக்கே ஒரு கலகலப்பு வந்துவிடுகிறது.

அப்படித்தான் மணிமேகலைக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. அவளுக்குள் ஒருபக்கம் சந்தோஷம் பீறிட்டாலும், மறுபக்கம் படபடப்பும் சேர்ந்து கொண்டது. திருமணத்தில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளைப் பற்றியும், அவற்றின் பின்னணியில் பொதிந்திருக்கும் தத்துவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவும் அப்பாவும் கல்யாண வேலைகளில் பரபரப்பாக இருந்ததால் அவர்களிடம் அதுகுறித்து எதுவும் கேட்பதற்கு நேரம் இல்லை.
 
தயங்கியபடியே பாட்டியிடம் சென்றாள். அந்தக் காலத்திலேயே பாட்டி ஓரளவுக்குத் தமிழ் இலக்கியம் படித்தவள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். திருமணச் சடங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூறினாள். பேத்தி இப்படிக் கேட்டதுமே பாட்டிக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.

``அந்த காலத்துல நாங்க ஒரே கூட்டமா ஜேஜேன்னு இருப்போம். ஊர் முழுக்கப் பங்காளிகள். அதனால இந்தச் சடங்கு, மந்திரமெல்லாம் எதுக்காகச் செய்யறங்கான்னு எங்களுக்குச் சின்ன வயசுலயே அத்து
படியாயிடுத்து. ஆனா, இப்ப தெரிஞ்சுக்கிற வயசு வந்தும்கூட படிக்கற தாலயோ என்னவோ, பலரும் சடங்கு களுக்கான அர்த்தங்களைப் பத்தி தெரிஞ்சுக்காம இருந்துடறாங்க. இன்னும் கொஞ்சம்பேர் சடங்கு களையே தவறவிட்டுடறாங்க. நீ ஆசையா வந்து கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்ற பாட்டி தொடர்ந்து,

``அந்தக் காலத்துல கல்யாணத்தை வதுவை, மன்றல், மணம் என்ற பெயர்களில் குறிப்பிட்டுச் சொன்னாங்க. ஆரம்பத்தில் திருமணம் என்ற பெயரில் சடங்குகள் எதுவும் இல்லாமல், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறை இருந்திருக்கிறது. பிற்காலத்தில் ஏமாற்றுதல், நம்பிக்கையின்மை வந்த பிறகுதான், திருமணம் என்ற நடைமுறையே உருவானது.

பயண வசதி இல்லாத அந்தக் காலத்தில், தொலைவில் இருக்கற சொந்தங்கள் எல்லாம் வந்து கலந்துக்கணும்ங்கறதுக்காக, கல்யாண வைபவம் ஏழு நாளைக்கு நடக்கும். இப்ப அப்படி முடியுமா?’’  என்ற பாட்டியை வியப்புடன் பார்த்தாள் மணிமேகலை.

``அப்ப மாதிரி ஏழு நாளைக்கும் பல  சடங்குகளோட நடந்த கல்யாணம் இன்னிக்கு இல்லைன்னாலும், சில தவிர்க்கமுடியாத, மிக முக்கியமான சடங்குகளை மட்டும் விடாம செஞ்சுட்டிருக்கோம்’’ என்றார்.

``பாட்டி, என்னோட சந்தேகங்களை மட்டும் முதல்ல கேட்டுடறேன். கல்யாணம்னா ஏன் பந்தல் போடணும்? வாழையும் தென்னங்குலையும் ஏன் கட்டறாங்க? அந்த மரங்களுக்கு அப்படி என்ன சிறப்பு?’’

``பந்தல் போடறது நிழலுக்காகவும் அழகுக்காகவும் மட்டுமில்ல; திருமணச் சடங்குகள் நடக்கும்போது மேலிருந்து தூசி, அழுக்குப் பொருள்கள், பல்லி போன்றவை விழுந்துவிடாமல் இருக்கறதுக்கும்தான்.பந்தலை கமுகு, வாழை, தென்னை ஓலை போன்றவற்றால் அலங்கரிக்கறாங்க. வாழையையும் தென்னையையும் கற்பக விருட்சமா மதிக்கிறவங்க நாம். தென்னை நூறாண்டுகள் வாழக்கூடியது. வாழையும் அப்படித்தான் தனக்குப்பிறகு ஒரு கன்றை விட்டுச் செல்கிறது. அதனால்தான் வாழையடி வாழையாக வாழணும்னு ஆசி கூறுகிறோம். தம்பதிகள் நிலைத்து நின்று மற்ற அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் வாழ வேண்டும் என்ற தத்துவத்தையே இது உணர்த்துகிறது’’ என்றார் பாட்டி.

``சரி பாட்டி, அரசாணிக்கால் நடறதுன்னா என்ன?’’

``அந்தக் காலத்தில் திருமண வைபவங்களுக்கு அரசனுக்கும் அழைப்பு அனுப்புவார்கள். அரசனுக்கு எல்லா திருமணங்களுக்கும் போக முடியாத நிலை இருக்கும். அதனால், அரசர் தன்னுடைய ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல்தான் மருவி அரசாணிக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம்னு சொல்றதுபோல், அன்று ஆணைக் கோல் வந்துவிட்டால், அந்தத் திருமணம் அரசனால் அங்கீகரிக்கப்பட்டதாகிறது. அதுதான் இன்றைக்குத் திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரத்தோட கிளை ஒன்றை பட்டு சாத்தி அலங்கரித்து வைக்கிறார்கள்.’’

``அதென்ன பாட்டி கலியாண முருங்கை, வேற மரத்தோட கிளையை வைக்கக்கூடாதா?’’

``கலியாண முருங்கையோட பெயர் முள்முருங்கை என்பதுதான். கல்யாணத்தில் இடம்பெறுவதால் கலியாண முருங்கையாகிவிட்டது. இதற்கு இரண்டு விதமான காரணங்களைப் பெரியவங்க சொல்றாங்க. புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. ஆகையால், அந்த இந்திரனைக் கல்யாணத்துக்குச் சாட்சியாகக்கொள்ளும்போது, ஆயிரம் கண்களுக்குச் சமமான முள்முருங்கையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம், முள்முருங்கைங்கறது கால மாற்றங்களை அனுசரித்துச் செழித்து வளரக்கூடிய ஒருவகை மரம். அதேபோல் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்க்கையைச் செழிப்புள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்''.

``சரி பாட்டி, தாலி கட்டும்போது ஒரு பெண் பின்புறமாக, கைவிளக்கு பிடித்துக்கொண்டு நிற்பது எதற்கு?''

``விளக்கு என்பது மங்கலத்தைக் குறிப்பது. மங்கலகரமான விளக்கை ஏந்தி நிற்பவர் திருமணத்துக்குச்  சாட்சி ஆவார். பெரும்பாலும் சகோதரிகள்தான் விளக்கை ஏந்தி நிற்பார்கள். சகோதரிகள் இல்லாதபட்சத்தில் சுமங்கலிப் பெண் ஏந்துவாள். விளக்கின் ஒளியைச் சாட்சியாகக்கொண்டு நடைபெறும் திருமணம் தன் சகோதரனுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்று சகோதரி விரும்புவதன் அடையாளம்தான் அது’’ என்று பாட்டி சொல்லிக்கொண்டிருந்தபோது மணிமேகலையை அம்மா அழைக்கவே, மற்ற விஷயங்களைப் பிறகு கேட்டுக்கொள்வதாகப் பாட்டியிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழந்தமிழரிடம் ‘கல்யாணம்’ இல்லை!

ன்று பயன்பாட்டில் உள்ள கல்யாணம் என்ற சொல், பழந்தமிழரிடம் இல்லை. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களான நாலடியார், ஆசாரக்கோவை ஆகியவற்றில்தான் கல்யாணம் என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.

‘கல்யாணம் செய்து கடிப்புக்க’ என்று நாலடியாரும், ‘அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை’ என்று ஆசாரக்கோவையும் கூறுகின்றன.

அதற்கு முன்பாக, ‘நல்லோர் நல்லோர் நாடி வதுவை யயர விரும்புதி நீயே’ என்ற ஐங்குறுநூறு வரிகள், நல்லோர் பலர் கூடி, வதுவை என்னும் திருமணத்தை நடத்திவைத்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

‘தொன்றியல் மரபின் மன்ற லயர’ என்ற அகநானூற்று வரிகளில், `மன்றல்' என்ற சொல் திருமணம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.