Published:Updated:

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

அன்பும் நெகிழ்ச்சியும் நிவேதிதா லூயிஸ்

முப்பத்து ஐந்து வயது பெண்ணின் உடலும், ஐந்து வயதுக் குழந்தையின் மனதும்கொண்ட பெண் `ஐஸி' என்கிற ஐஸ்வர்யா... ஏ.எஸ்.டி எனப்படும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனால், ஆயிரம் துண்டுகள்கொண்ட `ஜிக்சா' புதிர்களை அநாயாசமாக அடுக்குகிறார். அவரது டைரிக்குறிப்பான `அவளுக்கென்று ஒரு மனம்’ புத்தகம் வெற்றிகரமாக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. அவர் வரைந்த போட்டோஷாப் ஓவியங்கள் காலண்டராக வெளிவந்து பாராட்டுகளை அள்ளுகின்றன. `ஆட்டிஸம் ஜெயிக்க முடியாத குறைபாடு அல்ல... அதை வென்று அழகாக வாழலாம்’ என்பதை நிரூபித்திருக்கும் ஐஸியின் சாதனைக்குப் பின்னால் இருப்பது அவரின் அன்புத் தந்தை ஸ்ரீராமின் அயராத உழைப்பு. அந்த அன்பு அப்பாவுடன்  ஓர் உரையாடல்...    

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!
அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் மகளை இந்த உலகம் எப்படிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

``ஐஸியைப் பார்ப்பவர்கள் எல்லோரும் அவளை அன்போடும் மரியாதையோடும் அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மகள் ஒரு வழிகாட்டியாக, ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.’’

ஐஸியின் குழந்தைப் பருவத்தில், நீங்கள் சந்தித்த சவால்கள்...

``80-களில் ஆட்டிஸம் என்ற குறைபாடு மருத்துவர்கள் பலருக்கே புரியாத புதிராக இருந்தது. மூன்று வயதில்தான் ஐஸியிடம் வித்தியாசத்தை உணர்ந்தோம். எந்தச் சேட்டை யும் இல்லாமல், அமைதியான குழந்தையாக இருந்தாள். அழைத்தால் திரும்பமாட்டாள்.   

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

ஐஸியின் பேச்சு, நடை போன்றவற்றில் வித்தியாசத்தைப் பார்த்தவர்களின் கேலியும் கிண்டலும் ஏளனமும் எங்களைப் பாதித்தன. தேவையற்ற கேள்விகள், அநாவசியமான ஆலோசனைகள் என்று பலரும் குழப்பினார்கள். ஆட்டிஸத்தை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது என்பதை மருத்துவர் ஒருவர் புரியவைத்தார். அடுத்து `பெட்டிட் மால்’, `கிராண்ட் மால்’  ஆகிய வலிப்பு நோய்களின் தாக்கம் இருந்தது. அதற்கும் சிகிச்சை எடுத்தோம். தொடர் அதிர்ச்சிகளிலிருந்து மீள சில வருடங்களாகின.

மனநல மருத்துவர் பி.ஜெயச்சந்திரன் நடத்திய `விஜய் ஹியூமன் சர்வீசஸ்’ சிறப்புப் பள்ளியில் ஐஸியைச் சேர்த்தோம். `தாய்மொழி மட்டுமே இதுபோன்ற குழந்தைகள் மனதைத் திறக்கும் சாவி' என்பதை அவர் திடமாக நம்பினார். மூன்றாம் வகுப்பு வரை அடிப்படை படிப்பறிவு, அதற்குப்பிறகு ஏதேனும் தொழிற்கல்விதான் இந்தக் குழந்தைகளுக்கு உகந்தது என்று உணர்த்தினார். தேவையற்ற அழுத்தத்தைத் தர வேண்டாம் என்றும் புரியவைத்தார். சிறிது கணக்கு, தமிழில் எழுதுவது, தற்சார்புடன் சிறிய வேலைகள் செய்தல் என்று ஐஸியும் தேர்ந்துவிட்டாள் என்ற குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் விசுவநாதனிடம்தான் இன்னமும் இவளைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறோம். ஆயுர்வேத மருந்துகளும் தருகிறோம். சீரான உணவு முறை, உடற்பயிற்சி என்று ஐஸியின் உடல்நிலையைப் பராமரிக்கிறோம்.’’  

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

ஐஸியின் சிறப்புத் திறமைகளை எப்படி இனம் கண்டுகொண்டீர்கள்?

``சிறப்புப் பள்ளியில் ஒருநாள், தற்செயலாகக் கீழே விழுந்த ஜிக்சா புதிர் துண்டுகளைச் சரியாக அடுக்கியிருக்கிறாள் ஐஸி. தன்னாலேயே சேர்க்க முடியாத புதிரை ஐஸி சேர்த்ததுகண்டு ஆச்சர்யப்பட்ட ஆசிரியை, என்னிடம் அதைச் சொன்னார். பத்து, இருபது துண்டுகள்கொண்ட புதிர்களை வாங்கி ஐஸியை முதலில் சேர்க்க சொன்னோம். நிமிடங்களிலேயே முடித்துவிட்டாள். அவளது ஆர்வத்தை அப்படித்தான் கண்டுகொண்டோம். இப்போதும் நடிகை ரேவதியின் அலுவலகத்தில், ஐஸி சேர்த்துத் தந்த ஒரே நிறமும், வித்தியாசமான அளவுகளும் உடைய 654 துண்டுகள் கொண்ட `கிரிப்ட் பசில்' காட்சி தருகிறது. மென்பொருள் நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கண்காட்சியில் ஐஸியின் புதிர்களைக் காட்சிக்கு வைப்போம். நல்ல மனநிலையில் இருந்தால், இவளே அதை நேரில் செய்தும் காண்பிப்பாள்.  

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

`அவளுக்கென்று ஒரு மனம்’ புத்தகத்தில் உள்ள படங்கள் எல்லாமே, இவளே வரைந்தவைதாம். போட்டோஷாப்பில் படங்கள் வரையக் கற்றுக்கொண்டாள். காரில் அழைத்துச் செல்லும்போது மற்ற வாகனங்களின் பின்னால் உள்ள படங்களைப் பார்த்துக் கடவுள் படங்கள் வரைந்தாள். `அமேஸ் அமைப்பு' மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்காக நடத்திய லோகோ போட்டியில் `நீலப்பட்டம்' என்ற படத்தை வரைந்து முதலிடம் பிடித்தாள்.''

ஐஸியின் டைரிக்குறிப்புகளைப் புத்தகமாகத் தொகுத்தது எப்படி?

``2010-ல் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இவள் கையில் பென்சிலும் ஒரு டைரியும் தந்து அந்த நாள் எப்படி இருந்தது என்று எழுதச் சொன்னேன். முதலில் அதை மட்டும் எழுதியவள், பின் தன் மனதில் ஓடும் எண்ணங்களையும், தன்னைச் சுற்றி நடப்பதையும் ஒரு தெரபி போல எழுதத் தொடங்கினாள். ஒரு தந்தி பாஷை போல இருந்தது இவளது எழுத்து. ஐந்து வருடங்கள் அவள் எழுதியதைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டோம். அந்த நிகழ்ச்சியில் ஜஸ்டிஸ் பிரபா ஸ்ரீதேவன், சிறப்புக் கல்வியாளர் மைதிலி சாரி, தமிழறிஞர் டாக்டர் வ.வே.சுப்பிரமணியன், இயக்குநர் மணிரத்னம் உள்பட பலர் கலந்துகொண்டனர். புத்தகத்தைப் பாராட்டி எழுத்தாளர் சிவசங்கரி கடிதம் அனுப்பியிருக்கிறார். இசை ஆசிரியை லட்சுமி மோகன், இவளது நகைச்சுவை உணர்வை வைத்து `வாசி, நேசி, வாய்விட்டு சிரி’ என்ற புத்தகமும், இவளையே நாயகியாக வரித்து, `பீச் பீட்டர்ஸ் லாலிபாப்’ என்ற டிடெக்டிவ் நாவல் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.’’

ஆட்டிஸக் குழந்தைகளின் பெற்றோர், அவர்களை எப்படி அணுக வேண்டும்?

``இந்தக் குழந்தைகளைத் தன் வேலைகளைத் தானே செய்யப் பழக்குவது அவசியம். எங்கள் வீட்டில் சமையலுக்குக் காய் நறுக்கித் தருவதும், `அவனி’ல் பொரியல் செய்வதும், துணிகள் உலர்த்துவதும் ஐஸிதான்.  

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

இவளைச் சுற்றியே எங்கள் உலகம். எங்கள் வேலை நேரத்தை அதற்கேற்ப மாற்றிக்கொண்டோம். இவளுக்கு உகந்த சிறுதானிய உணவுகளுக்கு நாங்களும் மாறிவிட்டோம். உடற்பயிற்சியும் இவளோடு சேர்ந்து செய்கிறோம். இந்தக் குறைபாட்டுக்கு `மிராக்கிள்’ என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் உண்மை’’  

அவளுக்கென்று ஓர் அன்புத் தந்தை - ஆட்டிஸத்தை வென்ற `ஐஸி’யின் கதை!

ஆட்டிஸம் குறித்து பொதுச் சிந்தனை மாறியிருக்கிறதா?

``முன்பைவிட அதிக விழிப்பு உணர்வு... சினிமா, ஊடகம் மற்றும் வலைதளம் வாயிலாக வந்திருக்கிறது. மத்திய அரசு வருமான வரிவிலக்கு அளிக்கிறது. எழும்பூர் அரசு மருத்துவமனையில்கூட ஆட்டிஸத்துக்குத் தனிப்பிரிவு ஆரம்பித்து, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ வசதி செய்துள்ளார்கள். இந்தக் குழந்தைகளின் உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனை செல்ல, 108 இலவச ஆம்புலன்ஸ் வசதியும் உண்டு.’’

ஆனந்த யாழை மீட்டி, தந்தையின் நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பூசும் குழந்தைப் பெண்ணும், அவள் அன்புத் தந்தையும் என்றும் அன்பில் திளைத்திருக்க வாழ்த்துவோம்.