Published:Updated:

அப்பா பொண்ணு காம்பினேஷனில் இது கொஞ்சம் புதுசு!

அப்பா பொண்ணு காம்பினேஷனில் இது கொஞ்சம் புதுசு!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பா பொண்ணு காம்பினேஷனில் இது கொஞ்சம் புதுசு!

இசைப் பாசம்!சாஹா- படம்: சொ.பாலசுப்ரமணியன்

ப்பா பாபு சங்கர், விளம்பரப்பட உலகின் பிரபலமான இசையமைப்பாளர்.  

அப்பா பொண்ணு காம்பினேஷனில் இது கொஞ்சம் புதுசு!

மகள் மதுமிதா, விளம்பர உலகின் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர்.

கீர்த்தி சுரேஷ் நடித்த சென்னை சில்க்ஸ், ஜோதிகா நடித்த சக்தி மசாலா, தம்பி ராமையா நடித்த விவேக்ஸ் எனச் சின்னத்திரையில் ஒலிக்கிற அநேக விளம்பரங்களில் இந்தக் கூட்டணியைப் பார்க்கலாம்.

``என் மகள் மதுமிதாவுக்குச் சின்ன வயசுல இருந்தே மியூசிக் ஆர்வம் அதிகம். முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கறா. என்னுடைய விளம்பரங்கள்ல அவளைப் பாட வைக்கிறது பத்தி ஆரம்பத்துல எனக்கு ஐடியா இல்லை.

விளம்பரங்களுக்கான மியூசிக் ரெடியானதும், கிளையன்ட்டுக்குப் போட்டுக்காட்டும்போது அதுல முதல்லயே பிரபலமான பாடகர்களைப் பாட வைக்க முடியாது. சினிமாவுல டிராக் பாட வைக்கிறதுனு சொல்ற மாதிரி, விளம்பரங்கள்ல டிராஷ்னு சொல்வோம். பிரபலமாகாத யாரையாவது பாட வைப்போம். அவங் களுக்குப் பிடிச்சிருந்தா, பிறகு பிரபலப் பாடகர்களைப் பாட வைப்போம். அப்படித்தான் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் விளம்பரத்துக்கு மதுமிதாவைப் பாட வெச்சேன். கிளையன்ட்டுக்கு அவளோட குரல் பிடிச்சுப்போனதால அவளையே ஃபைனலும் பாட வெச்சோம்.

பின்னணிப் பாடகர் ஹரிஹரனுடன் ஒரு ஜிங்கிள்ஸ்ல வொர்க் பண்ணும்போது நான் பண்ணின மியூசிக்கை எல்லாம் போட்டுக் காட்டினேன். அதுல என் மகள் பாடினதும் இருந்தது. அவளோட குரல்ல உள்ள தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி, ‘இது கடவுள் உனக்குக் கொடுத்த வரம்...அதை நல்லபடியா யூஸ் பண்ணிக்கோ’னு சொன்னார். அதுவரைக்கும் அவ என்னோட மகள்னு அவருக்குத் தெரியாது. அந்தப் பாராட்டு எங்க ரெண்டு பேருக்குமே பெருமையைக் கொடுத்த விஷயம்...  இப்பல்லாம் மதுமிதாதான் பாடணும்னு முன்னாடியே சொல்லிக் கேட்கற அளவுக்கு அவளுடைய குரல் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு’’ - அருகிலுள்ள மகளை அணைத்தபடி, அறிமுகம் கொடுக்கிறார் அப்பா.

``அப்பா-மகள் அட்வான்ட்டேஜ் எல்லாம் வீட்டுக்குள்தான். வேலை என வந்துவிட்டால் அப்பா ரொம்பவும் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்'' என்கிறார் மதுமிதா.

``அப்பா மியூசிக் பண்றதால அவரோட எல்லா விளம்பரங்கள்லயும் என்னையே பாட வைக்கணும்னு நினைக்க மாட்டார். எந்த விளம்பரத்துக்கு யாரைப் பாட வைக்கணும்னு அப்பாவுக்குத் தெரியும். அப்படி அவர் வேற யாரையாவது பாட வைக்கிறார்னா, அவங்க பாடினது எப்படியிருக்கு, குறிப்பிட்ட அந்த விளம்பரத்துக்கு அந்தக் குரல் ஏன் பொருத்தமா இருக்குன்னு தெரிஞ்சுப்பேன். அப்பாவோட மியூசிக்ல பாம்பே ஜெயஸ்ரீ, சின்மயினு அத்தனை பிரபலப் பாடகிகளும் பாடியிருக்காங்க. அவங்க பாடறாங்கன்னு தெரிஞ்சாலே நான் போய் உட்கார்ந்துடுவேன்’’ என்கிற மதுமிதா, பி.டெக் முடித்துவிட்டு, மேல்படிப்புக்காக அமெரிக்கா கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

``மதுமிதாவுக்கு என்ன விருப்பமோ, அதைச் செய்ய முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கேன். ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வெச்சிருக்கேன். ‘வாழ்க்கையில நீ எந்தத் துறையை வேணாலும் செலக்ட் பண்ணு, எவ்வளவு உயரத்துக்கு வேணும்னாலும் போ.  ஆனா, இசையை  எப்போதும் உன்கூடவே வெச்சுக்கோ’னு சொல்லியிருக்கேன். அதுக்கொரு காரணமிருக்கு.

`நாம பார்க்கிற எந்த வேலையில, எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருந்தாலும் பத்து நிமிஷம் இளையராஜா பாட்டுக் கேட்டா மனசு லேசாகிடுதில்லையா... அப்படியொரு மேஜிக்தான் மியூசிக். அந்த மியூசிக் உன்கிட்ட இருக்கு... அதை விட்டுக்கொடுத்துடாதே’னு மட்டும் சொல்லியிருக்கேன்’’ - அக்கறையாகச் சொல்கிறார் அப்பா.

அப்பாவின் கைகளை அழுத்தமாகப் பற்றி  உறுதியளிக்கிறார் மகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz