Published:Updated:

கருவுக்குத் தெரிந்திருந்தால் அதுவே கரைந்திருக்குமே!

கருவுக்குத் தெரிந்திருந்தால் அதுவே கரைந்திருக்குமே!
News
கருவுக்குத் தெரிந்திருந்தால் அதுவே கரைந்திருக்குமே!

வாசகி பார்வைஉமா எம்.டி

`கன்னியாகுமரி மாவட்டத் தில், தாயிடம் பால் குடித்த இரட்டைப் பெண் குழந்தைகள் மர்மச் சாவு!'

- முதல் நாள் இப்படியொரு தலைப்பில் வெளியான செய்தி அதிரவைத்தது.  

கருவுக்குத் தெரிந்திருந்தால் அதுவே கரைந்திருக்குமே!

`ஆண் குழந்தை ஆசையால் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலைசெய்த தாய் கைது!'

- மறுநாள் அந்த மர்மத்தை உடைத்த இந்தச் செய்தி, மொத்தமாக நொறுக்கிப் போட்டது.

குற்றவாளியாகக் கூனிக்குறுகி நிற்கிறார்... பச்சிளம் குழந்தைகள் இரண்டையும் பால் கொடுக்கும் சாக்கில், மார்போடு மார்பாக அணைத்து, மூச்சுத் திணற வைத்து, உயிரிழக்கச் செய்த அந்தத் தாய்!

இந்தச் செய்திகளைக் கடப்பவர்களில் அவரைக் கரித்துக்கொட்டியவர்கள் எத்தனை பேரோ... `பாதகத்தி, ஆம்பளப் புள்ளை வேணும்னு யாராச்சும் இப்படிப் பெத்த புள்ளைங்கள, அதுவும் ரெட்டைப் புள்ளைங்களைக் கொன்னுபோடுவாங்களா..? என்னா நெஞ்சழுத்தம்! இவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது!' என்றெல்லாம் சபித்து, அவருக்கு நாளும் குறித்திருப்பார்கள்.

`உண்மையில், இந்தச் சம்பவத்தில் அவருக்கு மட்டும்தான் பங்கிருக்குமா?' என்றொரு கேள்வியை முன்வைத்தால்... `ஆமாம்ல... அவ சொந்தக்காரங்களும் சேர்ந்துதான் செய்திருப்பாங்களோ...' என்று ஒன்றிரண்டு பேரை மெள்ளக் கூட்டுச் சேர்ப்பார்கள். `அப்படின்னா, புருஷன் வீட்டுல உள்ளவங்களுக்கெல்லாம் இது தெரிஞ்சேயிருக்காதில்ல?' - அடுத்த கேள்வி விழுந்ததுமே... `இருக்கும் இருக்கும்... அநியாயக்காரனுங்களாச்சே!' என அவர்களையும் சேர்த்துக்கொள்வார்கள். சரி, இவர்கள் மட்டும்தான் இந்தக் கொலைகளில் தொடர்புடையவர்களா? அந்த ஊரில் உள்ள வேறு யாருக்குமே இதில் பங்கில்லையா? `என்னடி உம்மருமக வெறும் பொட்டைங்களையா பெத்துப்போட்டுக்கிட்டே இருக்கா... ஆண் வாரிசு வேணாமா?' - இப்படித் தினம் தினம் உசுப்பேற்றிவிட்ட நெருங்கின சொந்தம், தூரத்துச் சொந்தம், அக்கம்பக்கம், நட்பு இவர்களெல்லாம்?'

எந்த வகையிலும் அந்தத் தாய் செய்ததை இங்கே நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால், இத்தகையதொரு கொடூர முடிவை எடுக்கும் அளவுக்கு எத்தனை தூரம் தன் மனதை உண்மையிலேயே அவர் கல்லாக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்?! ரத்தமும் சதையுமாகத் தன் வயிற்றில் 300 நாள்கள் சுமந்து, பார்த்துப்பார்த்துப் பெற்றெடுத்த பச்சிளம் பூக்கள் அல்லவா! இதற்காக அந்த 300 நாள்களும் தன்னை எப்படியெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்திருப்பார்; ஆசைப்பட்டுச் சாப்பிடும் எந்தெந்த உணவுகளையெல்லாம் ஒதுக்கியிருப்பார்; என்னென்ன வலிகளைச் சுமந்திருப்பார்... அடுக்கிக்கொண்டே போகலாம், அம்மாக்களின் தியாகத்தை. தியாகங்கள் மட்டுமே குடிகொண்டிருக்கும் தாயின் மனதில், கொலை பாதகம் கருவாகி யிருக்குமா என்ன?

`என்ன நடந்தாலும் ஆண் குழந்தை பிறந்தே ஆக வேண்டும்' என்று எதிர்பார்க்கிறோம். அதற்காக புதுப்புது கோயில்கள், புகழ்பெற்ற மருத்துவமனைகள், ஏமாற்றுக்கார மந்திரவாதிகள் என்று சுற்றிச்சுற்றி வரச் செய்கிறோம். அப்படி பிறக்காவிட்டால்... பெண்ணைக் கரித்துக்கொட்டி, கடைசியில் `கொலைகாரி' பட்டம் சுமக்கும் அளவுக்குக் கொண்டுசெல்கிறோம். `ஆணென்ன... பெண்ணென்ன?' பாட்டைக் கேட்டால் தாளம் போட்டு ரசிக்கும் அதே நெஞ்சங்களில் பல, நிஜத்தில் தப்புத்தாளம்தானே போடுகின்றன.

அந்தத் தாய்... சந்தர்ப்பச் சாட்சியங்களின் அடிப்படையிலும், வாக்குமூலத்தின் அடிப் படையிலும் குற்றவாளி. ஆனால், இத்தகைய குற்றச்செயல் செய்வதற்குத் தூண்டிய கணவரின் குடும்பத்தினருக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும் இல்லை. இதுபோல எத்தனையோ கணவர்களின் குடும்பத்தினரைத் தொடர்ந்து தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும் சமூகத் துக்கு எதிராகவும் எந்தச் சாட்சிகளும் இல்லை.

இரட்டைக் குழந்தைகளும் செத்து விழுந்ததால் இந்த உண்மை வெளிவந்துவிட்டது. ஒருவேளை, ஒரு குழந்தை மட்டுமே இறந்திருந்தால் உண்மை வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. இதைச் சொன்னதுமே, `இனி பெண் குழந்தை மர்மமாக இறந்தால், உடனடியாகத் தாய்க்குத் தூக்குத்தண்டனை' என்கிற அறிவிப்புகூட வெளியாகலாம். ஆனால், எல்லாவற்றிலும் நுகர்வுக்கலாசாரம் முற்றிப்போய், சமூக அவலங்கள் புரையோடிப் போயிருக்கும் இந்த நாட்டில், ஒருநாளும் பெண் குழந்தைகளுக்கு நீதி சமைக்கவே முடியாது என்று அடித்துச்சொல்லத் தோன்றுகிறது.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கருவுக்குத் தெரிந்திருந்தால் அதுவே கரைந்திருக்குமே!

வேறுவழியே இல்லாமல் அக்குழந்தைகளைக் கருவிலேயே கொல்லும் உரிமையையாவது பெற்றுக்கொடுங்கள் நியாயமார்களே... குறைந்தபட்சம் `கொலைகாரி' என்று ஜெயிலுக்குச் செல்லாமலாவது இருப்பார்கள்.

- மனதைக் கல்லாக்கிக்கொண்டு கேட்கத் தோன்றுகிறது.

உங்கள் அறிவியலால் இந்தக் கொடுமைகளை உணரும் சக்தியைப் பெண் கருவுக்குக் கொடுங்கள்... `அம்மாவுக்குக் கொலைகாரி பட்டம் வேண்டாம்' என்று அந்தக் கரு, கர்ப்பத்திலேயே கரைந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.
- கற்பனையில்கூட நடக்காது என்றாலும் கேட்கத் தோன்றுகிறது.

``கணவருக்கு மொத்தம் நான்கு உடன் பிறப்புகள். ஒருவருக்குத் திருமணமாகவில்லை. மற்ற அனைவருக்கும் திருமணமாகி, அனை வருக்கும் பெண் குழந்தைகளே. எனக்குத் திருமணமாகி நான் கர்ப்பமானதும், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே புகுந்த வீட்டில் பேசிக்கொண்டனர். ஆண் வாரிசே இல்லை என்று வருத்தப்பட்டனர். ஆனால், பெண் குழந்தை பிறந்ததால் வெறுப்படைந்தனர். கணவர் மற்றும் அவர் வீட்டிலிருப்பவர்களுடன் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், இரண்டாவது தடவையாகக் கர்ப்பமானதும்... ஆண் குழந்தை பேச்சு ஓங்கி ஒலித்தது. ஆனால், பிறந்த இரண்டுமே பெண் குழந்தைகளாகிப் போனதால், கணவர் குடும்பத்தார் என்னுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டனர். `கணவர் வீட்டிலிருந்து துரத்திவிடுவார்களோ... கணவர் கைவிட்டுவிடுவாரோ' என்றெல்லாம் பயந்து போனேன்'' - அந்தத் தாயின் இந்த வாக்குமூலம், என்னைச் சாட்டையால் அடிப்பதாகவே நான் உணர்கிறேன்... மனிதராக இருப்பதால்!

`புதைக்கப்பட்ட குழந்தைகளின் சடலங்களைத் தோண்டி எடுக்கும்போது, பதற்றத்தின் உச்சத்தில் இருந்தார் தாய். அதை வைத்து நாங்கள் தீவிரமாக விசாரித்தபோது சிக்கிக் கொண்டுவிட்டார். இதனால், பிரேதப் பரி சோதனை அறிக்கை வரும்முன்பாகவே அவரைக் கைது செய்துவிட்டோம்' என்று பெருமையோடு சொல்லியிருக்கிறார் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர். கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய். ஆம், தீர விசாரியுங்கள். சந்தர்ப்பச் சாட்சியங்கள் மட்டுமல்ல... அசந்தர்ப்பச் சாட்சியங்களும் இந்த வழக்கில் நிறையவே இருக்கின்றன. என்ன புரியவில்லையா? `இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக' என்று சொல்லும் அளவுக்கு அள்ள அள்ளக் குறையாத சாட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்தே இருக்கின்றன.

ஆம், அந்தத் தாய்; தூண்டுகோலாக இருந்த கணவர் மற்றும் கணவரின் உறவுகள்; இத்தகைய குற்றத்தைச் செய்யத் தூண்டும் வகையில் அவர்களின் மனதைக் கலைத்த அக்கம்பக்கம் மற்றும் நட்புகள்; பிறரின் மனதைக் கலைக்கும் அளவுக்கு இவர்களின் மனதில் இதுபோன்ற பிரச்னைகள் வேர்விடக்காரணமாக இருக்கும் சமூகத்தின் நஞ்சுகள்; இப்படிக் கொடூரமாக நடந்துகொள்வோருக்கு எதிராகச் சாட்டையை வீசாத காவல்துறை; இந்தக் கேடுகெட்ட சமூகத்தை மாற்றியமைக்காமல் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள்... என எல்லோரையும் குற்றவாளிகளாக உங்களுடைய முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யுங்கள்; அத்தனை பேரையும் கூண்டிலேற்றுங்கள்.