Published:Updated:

இது அற்புதமான உணர்வு!

இது அற்புதமான உணர்வு!
பிரீமியம் ஸ்டோரி
News
இது அற்புதமான உணர்வு!

குட்டி இளவரசன்சாஹா

‘`முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு என் வாழ்க்கை அழகாகியிருக்கு... அர்த்தம் கூடியிருக்கு. `இந்த அனுபவத்துக்கு முன்னாடி வாழ்க்கையில் எதுவுமே பெருசு இல்லை’ன்னு தோணுது’’ எனச் சிலிர்க்கிறார் துஷார் கபூர்.

பாலிவுட்டின் பிரபல ஹீரோ. ‘கோல்மால்’, ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘மஸ்திஸாதே’ உள்ளிட்ட பல ஹிட் படங்களின் நாயகன்.  

இது அற்புதமான உணர்வு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

துஷாரின் திடீர்ச் சிலிர்ப்புக்குக் காரணம், அவரின் மகன் லக்ஷ்யா.

வாடகைத்தாய் மூலம் குழந்தை கிடைக்கப் பெற்ற பாலிவுட்டின் முதல் சிங்கிள் பேரன்ட் என்கிற பெருமைக்குரியவர் துஷார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், லக்ஷ்யாவுக்கு முதல் பிறந்த நாள். கரீனா கபூர் தன் மகன் தைமூருடன் வந்து வாழ்த்திய காட்சியும், லக்ஷ்யாவை தபு  கட்டியணைத்துக் கொஞ்சிய காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

லக்ஷ்யாவின் பிறந்த நாளன்று, அவனைத் தூக்கிவைத்தபடி ஃபேஸ்புக் லைவ்வில் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் துஷார்.

‘அவள் விகடனில் தந்தையர் தின ஸ்பெஷலுக்காக ஒரு ஸ்பெஷல் பேட்டி...’ கேட்டு மெசேஜ் தட்டினால், ‘இட்ஸ் மை பிளெஷர்’ என மொபைல் உரையாடலுக்கு அப்பாயின்ட்மென்ட் தருகிறார்.

‘`லக்ஷ்யான்னா லட்சியம்னு அர்த்தம். அவனுடனான ஒவ்வொரு நாளுமே எனக்கு ஸ்பெஷலாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கு. அதுல லக்ஷ்யாவோட பிறந்த நாள் இன்னும் அதிக ஸ்பெஷல்’’ என மீண்டும் சிலிர்ப்பவர், தன் வாழ்வின் மற்றுமொரு மறக்க முடியாத தருணத்தையும் நினைவுகூர்கிறார்.   

இது அற்புதமான உணர்வு!

‘`அப்பாவாகணும்கிற ஆசை, எனக்கு எப்போதுமே உண்டு. அந்த அனுபவத்தைத் தவறவிடக் கூடாதுன்னு நினைச்சேன். திருமண உறவு இல்லாமலேயே எனக்கு என் சொந்தக் குழந்தை வேணும்னு நினைச்சப்போதான், வாடகைத்தாய் முறை பற்றித் தெரியவந்தது. லக்ஷ்யா, எனக்கு அப்படித்தான் கிடைச்சான். 2016 ஜூன் 1-ம் தேதியை இப்போ நினைச்சாலும் படபடப்பா ஃபீல் பண்ணுவேன். குழந்தைப் பிறப்பை எதிர்நோக்கியிருக்கிற எல்லா அப்பாக்களுக்கும் இயல்பா இருக்கக்கூடிய படபடப்புதான் அது. அன்னிக்கு ராத்திரி முழுக்க நான் தூங்கலை. லக்ஷ்யாவை டாக்டர் என் கையில கொடுத்த அந்தக் கணம், வாழ்க்கையின் ஆகச்சிறந்த கணமா தோணுச்சு. கைகள் நடுங்க, மனசு நெகிழ அவனைக் கையில வாங்கினேன்.

நான் ஆசைப்பட்டது நடந்திருச்சு. புது உறவுக்கும் புது அனுபவத்துக்கும் தயாரானேன். `அப்பாங்கிறது ஒரு ஸ்தானம் மட்டுமல்ல... அது மிகப்பெரிய பொறுப்பு’னு உணர்ந்தேன். நானே அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து அவனைப் பார்த்துக்கிற அந்த அனுபவமே  அலாதியானது.’’

``தாயாகவும் தந்தையாகவும் இரட்டைப் பொறுப்புகளைச் சுமப்பது உங்களுக்குச் சிரமமாக இல்லையா?''

‘`இதை நான் சிரமமாகவோ, சவாலாகவோ நினைக்கலை. இந்தப் பொறுப்புகளை நொடிக்கு நொடி ரசிச்சு அனுபவிச்சுக்கிட்டிருக்கேன். லக்ஷ்யா பிறக்கிறதுக்கு முன்னாடியே அவனை எப்படியெல்லாம் பார்த்துக்கணும்கிற தகவல்களைத் தேடித் தேடிக் கத்துக்கிட்டேன். ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல அவன்கூடவே இருக்கேன்; விளையாடுறேன். இப்பல்லாம் ஷூட்டிங் போனாகூட அவனையும் என்கூடவே தூக்கிட்டுப் போயிடுறேன். கூடியவரைக்கும் அவனை மிஸ் பண்ணாமப் பார்த்துக்கிறேன்’’ என்றவரின் வார்த்தைகளில் ததும்பி வழிகிறது அன்பு.

‘`நேரம் கிடைச்சா, பார்ட்டிக்குப் போறது, ஊர் சுத்துறதுனு எந்த விஷயங்களைப் பற்றியும் நினைக்க முடியறதில்லை. லக்ஷ்யாதான் ஞாபகத்துக்கு வர்றான். ‘லக்ஷ்யாவைப் பார்க்கிறபோது, உன்னை சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு... உன்னை மாதிரியே வீடு முழுக்க வளைய வர்றான். உன் பையன் உன்னைவிடவும் புத்திசாலி’னு அம்மா சொல்லும்போது, அவ்வளவு பெருமையா இருக்கு. சட்டுனு எங்க எல்லோரோட சந்தோஷத்துக்கும் காரணமாகிட்டான். எங்க எல்லோருக்கும் அவன் கொடுத்திட்டிருக்கிற அவ்வளவு சந்தோஷத்தோடு அவன் நல்லபடியா வளரணும். அவன் எப்போதும் என்கூடவே இருக்கணும். அப்பாவா என் அதிகபட்ச எதிர்பார்ப்புகள் இவைதான்’’ என நெகிழ்பவருக்கு `அப்பா’ என்கிற அந்தஸ்து பிரமிப்புக்குரியதாகவும் இருக்கிறது.

‘`அந்த உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது அனுபவிக்கப்படவேண்டிய உணர்வு; அற்புதமான உணர்வு. என்னுடைய பிறப்புக்கும் ஓர் அர்த்தம் இருக்குங்கிறதை உணர்த்திய அனுபவம். இது எல்லாத்தையும் எனக்குக் கொடுத்த என் குட்டி இளவரசனுக்கு தேங்க்ஸ்!’’ லட்சியங்களை அடையப் பிறந்தவனைக் கொண்டாடுகிறார் அதிசய அப்பா.