Published:Updated:

அன்று டாக்டர்... இன்று தொழில்முனைவோர்!

அன்று டாக்டர்... இன்று தொழில்முனைவோர்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்று டாக்டர்... இன்று தொழில்முனைவோர்!

மதுரக்காரப் பொண்ணுஸ்ரீலோபாமுத்ரா

‘‘முன்பெல்லாம் குழந்தைகளை வளர்ப்பதில் ஏதாவது சந்தேகம் என்றால், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்போம். இன்றைய நியூக்ளியர் குடும்ப அம்மாக்களுக்கோ, அந்த வேலையையும் இணையமே செய்கிறது. அப்படியான ஒரு பேரன்டிங் வெப்சைட் ஆரம்பித்ததுதான், இன்று என்னை ஒரு தொழில்முனைவோராக கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது’’ - சின்னக் குரலில் சிநேகமாகப் பேசுகிறார் டாக்டர் ஹேமாபிரியா. குழந்தை வளர்ப்பு ஆலோசனைகளுக்குப் பிரபலமான www.mylittlemoppet.com வலைதளத்தை நிர்வகிக்கும் மருத்துவர்... மதுரக்காரப் பொண்ணு!

``நான் குழந்தை வளர்ப்பில் நிபுணர் இல்லை. சொல்லப்போனால், ‘குழந்தை வளர்ப்பு நிபுணர்’ என்ற ஐடியாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் ஒரு பிஸியான, கற்றுக்கொண்டே இருக்கும் அம்மா. ஆர்வமான ஆராய்ச்சியாளர். பல அம்மாக்களைப்போலத்தான் எனக்கும் குழந்தை வளர்ப்பு என்பது தினம் தினம் சாகசமாக இருக்கிறது’’ என்று சிரிக்கும் ஹேமாபிரியா, ஓர் ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகளின் தாய். 36 வயதாகும் இவர், அம்மா பொறுப்புக்காகத் தன் மெடிக்கல் பிராக்டீஸைக் கைவிட்டிருக்கிறார்.   

அன்று டாக்டர்... இன்று தொழில்முனைவோர்!

``மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்தேன். திருமணத்துக்குப் பின் கணவரின் முதுகலைப் படிப்பு மற்றும் பணி காரணமாக இந்தியாவின் பல நகரங்களிலும் வசிக்க நேர்ந்தது. 2014-ல் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் என் இரண்டாவது மகள் பிறந்தாள். அப்போது இன்டர்நெட்டில் ‘மாம் திங்ஸ்’ தேடிப்போனபோதுதான், அங்கு இளம் தாய்மார்கள் பலர் மூட்டை மூட்டையான கேள்விகளுடனும் கவலைகளுடனும் இருப்பது புரிந்தது. தாய்ப்பால் கொடுப்பதை எந்த மாதத்தில், எப்படி நிறுத்துவது, மாற்று உணவாக எதைக் கொடுப்பது, திட உணவை எந்த மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிப்பது, சளி, ஜுரம் போன்றவற்றுக்கு மருந்து எனப் பலமுனைத் தேடலில் இருந்தார்கள்.

நான் ஒரு மருத்துவராகக் குழந்தை வளர்ப்புப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், ஓர் அம்மாவாக அதையெல்லாம் செயல்படுத்த முடியாது என்பதை என் குழந்தைகள் பிறந்த சில நாள்களிலேயே எனக்குப் புரியவைத்துவிட்டார்கள். எனவேதான், குழந்தைகள் உள்ள வீடுகளில் இருக்கும் சந்தேகங்கள், சிக்கல்களுக்கு ஒரு மருத்துவராக அல்லாமல், அம்மாவாகவே தீர்வு அளிக்கும்வகையில் என் ‘மை லிட்டில் மொபெட்’ வலைதளத்தை ஆரம்பித்தேன். ஒரு பிரச்னைக்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் மருத்துவப் பின்னணியுடன் - அதேநேரத்தில் அம்மாவின் பார்வையில் சொல்வதால், என் வலைதளத்துக்கு வரவேற்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்தது. அழுகை முதல் டாய்லெட் ட்ரெயினிங் வரை, இளம் அம்மாக்களுக்கு நான் கைப்பிடித்து வழிகாட்டுகிறேன்’’ என்பவர், நியூ மாம்ஸ் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கான ஆலோசனைகளை இ-மெயிலில் இலவசமாக வழங்கி வருகிறார்.    தொடர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்ததைக் குறித்துப் பேசினார் ஹேமாபிரியா.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்று டாக்டர்... இன்று தொழில்முனைவோர்!

``குழந்தைகளின் ஆரோக் கியத்தை முன்னிறுத்தும் பாரம்பர்ய உணவு வகை கள், அதற்கான ரெசிப்பிகள் பற்றி என் வலைதளத்தில் பதிவிட்டேன். பெரு நகரங்களில் வசிக்கும் பணிக்குச் செல்லும் பெண்கள், அவற் றைத் தயாரித்து விற்பனை செய்தால் உதவியாக இருக்கும் என்று என்னிடம் கேட்டனர். இந்நிலையில் 2015-ல் சொந்த ஊரான மதுரைக்குக் குடிபெயர்ந்த பின், எங்கள் வீட்டிலேயே பாரம்பர்ய உணவுப் பொருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். அம்மா எனக் குக் கைகொடுக்க, இயற்கை விவசாயத் தில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் நவதானியங்களை சுத்தம்செய்து, முளைகட்டி, வறுத்து, அரைத்து, பேக்கிங் செய்து, ‘Little Moppet Foods’ நிறுவனத்தைத் தொடங்கி விற்பனையை செய்ய ஆரம்பித்தோம்.

இப்போது ஏழு பேர் பணிபுரியும் அளவுக்குத் தொழிலில் வளர்ந் திருக்கிறேன். சொந்தமாக மாவு மில் ஆரம்பித்திருக்கிறேன். பத்தாயிரத்துக் கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் எங்கள் தயாரிப்பு களை விரும்பி வாங்குகிறார்கள். First Cry,  Amazon போன்ற இணையதளங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறோம்’’ என்கிறவர், சென்னை போன்ற பெருநகரங்களில் ஸ்டோர்களை ஆரம்பிக்கவும், மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

‘`டாக்டரான என்னை, பிசினஸ் பெண் ஆக்கியிருக்கிறார்கள் என் குழந்தைகள். லவ் யூ செல்லம்ஸ்!” -  குரலிலும் மிதக்கிறது அன்பு ஹேமா பிரியாவுக்கு!