Published:Updated:

அப்புவுக்காக ஒரு திருவிழா!

அப்புவுக்காக ஒரு திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
அப்புவுக்காக ஒரு திருவிழா!

ஆச்சர்யம் பிரேமா நாராயணன் - படங்கள்: சாய் தர்மராஜ்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே இருக்கும் தானிப்பட்டி... இந்தச் சிற்றூரைச் சேர்ந்த பெரிய குடும்பம் ஒன்று, தந்தை-தாய் நினைவைப் போற்றுவதில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் தந்தையின் நினைவுநாளில் ஊரையே அழைத்து விருந்து வைத்து, உதவிகள் செய்து பேரஞ்சலி செலுத்துகிறது.  

அப்புவுக்காக ஒரு திருவிழா!

அந்தக் காலத்தில் அரளிக்கோட்டை ஜமீன்தாராக இருந்தவர் கருப்பையா அம்பலம். சிங்கப்பூரில் வளர்ந்து, வேலை செய்தாலும் தன் வாழ்நாளின் நடுப்பகுதியில் சொந்த ஊருக்கு வந்து, ஊருக்கு ஓர் உதாரணப்புருஷனாக வாழ்ந்து மறைந்தவர். தொடர்ந்து 19 ஆண்டுகளாக அவரின் வாரிசுகள் ஒன்பது பேரும் சேர்ந்து, தம் தந்தை கருப்பையா அம்பலம் - தாய் சிவகாமி ஆகியோருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூரிலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். அப்பழுக்கில்லாத மண் மனசுகள், நன்செய், புன்செய், ஒரு பள்ளி, ஒரு கோயில், ஒரு சமுதாயக்கூடம் எனக் குட்டி சொர்க்கம்!

``வாங்க வாங்க'' என்று முகம் முழுக்க சூடிய புன்னகையுடன் வரவேற்றார், கருப்பையாவின் ஐந்தாவது மகள் சந்திரா. ஓய்வுபெற்ற ஆசிரியை. ``எங்கய்யா  (தாத்தா)சிங்கப்பூரில் வாழ்ந்ததால, எங்கப்பு (அப்பா) சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். சிங்கப்பூரில் எங்க தாத்தாவுக்கு லேவாதேவி தொழில்தான். ஆனா, அப்பு அங்கேயே படிச்சு, சிங்கப்பூர் பிரதமர் மறைந்த லீ க்வான்யூ கிட்டே காரியதரிசியாக வேலை பார்த்தார். நாங்க ஏழு பிள்ளைங்க சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தோம். என் தங்கை சிங்கராணியும் (சிங்கப்பூர் நினைவாக வைக்கப்பட்ட பெயராம்), தம்பி சிதம்பரமும்தான் இங்கே பிறந்தவங்க. வேலை நிமித்தமா வெளிநாட்டில் பல வருஷங்களாக இருந்தாலும் அப்புவுக்குத் தேசபக்தி அதிகம். பிள்ளைகளுக்கு ஜவஹர்லால், இந்திரா, காந்தி, விஜயலட்சுமி, சுப்பிரமணியன், சிதம்பரம்னு தேசத் தலைவர்கள் பெயரைத்தான் வெச்சிருக்கார்'' என்கிறார் சந்திரா பூரிப்புடன்.

கருப்பையாவின் கடைசிப் புதல்வரும், திருப்பத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினருமான கரு.சிதம்பரம், தங்கள் பெற்றோரின் நினைவு மண்டபத்தைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பித்தார். ``நாங்க ஒன்பது பிள்ளைங்க. அஞ்சு பையன், நாலு பொண்ணு. பிள்ளைங்களை நல்லா வளர்த்து, படிக்க வெச்சு ஆளாக்குறதெல்லாம் எல்லா அப்பா, அம்மாக்களும் பண்றதுதான். ஆனா, நாங்க எல்லோருமே ஒழுக்கமும், பிறத்தியார்மேல் அன்பும் உள்ளவங்களா இன்றுவரைக்கும் இருக்கோம்னா, அதுக்கு எங்க அப்புதாங்க காரணம்'' என்கிறவர், தன் மனைவி வள்ளியை அறிமுகப்படுத்துகிறார். திருப்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவியாக ஐந்து வருடங்களும் மன்ற உறுப்பினராக ஐந்து வருடங்களும் பணியாற்றிய வள்ளி, கருப்பையா அம்பலத்தின் பேத்தி. தாய்மாமாவையே திருமணம் செய்திருக்கிறார்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அப்புவுக்காக ஒரு திருவிழா!

``சமுதாயப் பணிகளில் தாத்தாவுக்கு ரொம்ப ஈடுபாடு'' என்று ஆரம்பித்த வள்ளி, ``ஊருக்கு நல்லது செய்யணும்கிறது அவருடைய கொள்கையாகவே இருந்தது. ஒத்தையடிப் பாதை மட்டுமே இருந்த எங்க ஊருக்கு, 1957-ல் தன் செலவிலேயே தார் ரோடு போட்டார். 40-45 வருஷத்துக்கு முன்னால இந்தப் பக்கத்துக் கிராமங்கள் எதிலயுமே கரன்ட் இல்ல. தாத்தாதான் முதல்ல தானிப்பட்டிக்கு கரன்ட் கொண்டுவந்தார். சுத்துப்பட்டு ஏரியாவிலேயே கரன்ட் வந்தது, முதல்ல எங்க ஊருக்குதான்'' - பெருமையுடன் வள்ளி சொல்லி முடிக்க...

`` ‘எல்லார்கிட்டேயும் அன்பா இரு! ஒழுக்கமா இரு!’ - இதுதான் அப்பு எங்களுக்கு எப்போதும் உபதேசிக்கிற மந்திரங்கள். உபதேசத்தோடு நிக்காம, தானும் அதே மாதிரி வாழ்ந்து காண்பிச்சதால, எங்க வழியும் அதுவே ஆகிடுச்சு. வசதியில்லாத பிள்ளைங்கன்னா, அப்பா முன்னாடி நின்னு கல்யாணம் பண்ணி வைப்பார். வேலைவாய்ப்பில்லாத பையன்களை, தானே சிங்கப்பூருக்குக் கூட்டிட்டுப் போய், அங்கே வேலைக்கு ஏற்பாடு செய்வார்'' என்ற சந்திரா, ``தன்னோட தைரியசாலி மனைவிக்குச் சம உரிமையும் மரியாதையும் கொடுத்து நடத்தினார் அப்பு.  எவ்வளவு நல்ல விஷயங்கள் செஞ்சாலும் அமைதிதான் அப்புவோட அடையாளமா இருக்கும்.  வீட்டில் அம்மாவோட குரல்தான் ஓங்கியிருக்கும். எங்கே போனாலும் ரெண்டு பேரும் ஜோடியாகத்தான் போவாங்க. பார்க்கிறதுக்கே அம்புட்டு அழகா இருக்கும்'' என்கிறார், அக்காட்சியை மனக்கண்களில் ரசித்து.

அழகிய கோபுரங்கள், சந்நிதிகளுடன் திருப்பணி முடித்து, கருப்பையா கும்பாபிஷேகம் செய்த கருப்பர் கோயிலைக் காட்டிய வள்ளி, அதற்குப் பக்கத்தில் இருக்கும் பெரிய காலி இடம், ஊர்ப் பொதுமக்களின் தேவைகளுக்காகக் கருப்பையாவால் இனாமாகக் கொடுக்கப்பட்ட செய்தியையும், அது குறித்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

``வீட்டுக்கு யாரு வந்தாலும் வயிறாரச் சாப்பிட வெச்சு அனுப்புறது எங்க மாமியாரோட பழக்கம். அந்தக் காலத்தில், வெயில் காலத்தில் கண்மாய் எல்லாம் வத்திருச்சுன்னா, அந்தத் தண்ணியைத் திறந்துவிட்ருவாங்க. அதுக்கு ‘கம்மாய் அழிக்கிறது’னு பேரு. அப்படி கண்மாய் அழியும்போது, சுத்துப்பட்டுல இருக்கிற கிராமங்களுக்கு எல்லாம் சொல்லிவிட, அந்தச் சனங்க எல்லாம் வந்து மீன் பிடிச்சுக்கிட்டுப் போவாங்க. ஒரு தடவை, இந்த வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற கண்மாயை அழிக்கிறதுன்னு முடிவு பண்ணி, சாயந்திரம் மூணு மணிக்கு மேல நேரம் குறிச்சு வெச்சிருந்திருக்காங்க. ஆனா, மத்தியானத்துக்கு மேலதான் கம்மாய் அழிப்புன்னு தெரியாம பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் சனங்க காலையிலேயே வந்துட்டாங்களாம். அத்தனை ஊர் சனங்களையும் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிற எங்க இடத்தில இருக்க வெச்சு, எல்லாருக்கும் சமைச்சு, ஆயிரம் பேருக்கு மத்தியானச் சாப்பாடு போட்டிருக்காங்க பாட்டி. பின்னால அந்த இடத்தைப் பொது விசேஷங்களுக்குத் தானமாகக் கொடுக்கிறதாகவே உயில் எழுதி வெச்சுட்டார் தாத்தா. இன்னிக்கும் அந்த இடம், எங்க மாமியார், மாமனாரின் பரந்த மனசுக்கு சாட்சியாக இருந்துகிட்டு இருக்கு'' என்கிறார் வள்ளி. கருப்பையாவின் வீட்டு மனிதர்களைப் பார்க்கும்போது கிராமத்து மக்கள் கையெடுத்து வணங்குவதன் காரணம் புரிகிறது இப்போது.

``அம்மா இறந்ததும், தன்னில் ஒரு பாகம் போனதுபோல அப்பு சுணங்கிப் போய்ட்டாங்க. ஊருக்கே சோறு போட்ட மகராசிக்கு அவங்க நினைவு நாளில் அதே மாதிரி வருஷா வருஷம் அன்னதானம் செய்யணும்கிறது அப்புவோட விருப்பம். அப்படியே செஞ்சோம். அம்மா இறந்த ரெண்டு வருஷத்திலேயே அப்பாவும் காலமாகிட, அவரோட முதல் நினைவு நாளில் இருந்து இப்போ வரை, ஒவ்வொரு வருஷமும் ஜூலை மாசம் 28-ம் நாள், அவர் சொன்ன மாதிரியே செய்திட்டிருக்கோம்'' என்று சந்திரா கண்கள் கலங்க, அந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கிறார் கருப்பையாவின் மகன் சிதம்பரம்.  

அப்புவுக்காக ஒரு திருவிழா!

``இரண்டாயிரம் பத்திரிகை அடிச்சு, சுத்துப்பட்டு ஊருக்கு எல்லாம் கொடுத்துருவோம். எங்க அண்ணன்கள் குடும்பம், அக்காள்கள் குடும்பம், அவங்க புள்ளை, குட்டிங்க எல்லாரும் வந்துருவாங்க. தகுதியுள்ள 25 பெண்களுக்குத் தையல் மெஷின், 25 பேருக்கு சைக்கிள், 500 வேஷ்டிகள், 500 சேலைகள், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் வாங்கினவங்களுக்கு ரொக்கப் பரிசுகள், படிச்சு வேலையில்லாம இருக்கிற இளைஞர்களுக்கு உதவி... இப்படி அப்பு வழியில் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்றோம். நல்ல பேச்சாளர்களை அழைத்து சிறப்புரை, பட்டி மண்டபம் எல்லாம் வைப்போம். சாலமன் பாப்பையா, சுகி சிவம், லியோனி, நெல்லை கண்ணன், புஷ்பவனம் குப்புசாமி... இப்படி எல்லாருமே வந்து பேசியிருக்காங்க. 2000-3000 பேருக்கு மதிய விருந்து நடக்கும். விழாவுக்கு ஆகும் செலவைப் பிள்ளைகள் நாங்க எல்லோரும் பகிர்ந்துக்கிறோம். எங்க குடும்பத்தில் எல்லோரும் வந்து ஐக்கியமாகும் விழாவாகவும் இது இருப்பதால், இரட்டிப்பு சந்தோஷம். `வருஷா வருஷம் இதுவும் எங்களுக்கு ஒரு திருவிழா மாதிரி ஆகிப்போச்சு கண்ணுகளா'னு இந்தச் சுத்துப்பட்டு சனங்க வாழ்த்தும்போது, எங்க பெற்றோரே வாழ்த்துற மாதிரிதான் இருக்கும்'' என்கிறார் சிதம்பரம் மனம் கனிந்து.

‘அன்பே கடவுள்’ - வீட்டு முகப்பில் பொறித்திருக்கும் வாசகம் கண்களில் படுகிறது. வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் கருப்பையா. வாழையடி வாழையாகப் பயணிக்கிறது அன்பு.