Published:Updated:

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !

சல்சா, பாலே, ஃப்யூஷன், ஹிப் ஹாப் என்று கல்லூரி கல்ச்சுரல்களில் குஷியாக 'வெஸ்டர்ன்’ ஆட்டம் போடும் நம் மாணவர்களுக்கு, ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், பறையாட்டம் என நம் பாரம்பரிய நடனங்களின் பெயர்களாவது தெரியுமா என்பது சந்தேகம்தான்... வேதனைதான்!

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆறுதலாக, அந்த நடனங்களில் எல்லாம் கற்றுத் தேர்ந்துள்ளதோடு, 'முற்றம்’ என்ற குழுப்பெயருடன் தமிழகத்தின் பல ஊர்களிலும் நம் பாரம்பரிய கலைகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்த இயங்கி வருகிறார்கள், சென்னைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு இதழியல் மற்றும் தகவல்தொடர்புத் துறை மாணவர்கள்.

குழுவில் உள்ள இருபது மாணவர்களில், நான்கு பேர் பெண்கள். உற்சாகமாக ஆரம்பித்தார் 'முற்றத்’தின் பொறுப்பாளர் ஹரிஷ். ''எங்களோட சப்ஜெக்ட்ல ஒரு எபிஸோட் பாரம்பரியக் கலைகள் பத்தி படிச்சப்போ, அவ்ளோ ஆர்வமானோம் நாங்க. 'நம்மகிட்டயே இத்தனை அருமையான கலைகள், நடனங்கள் இருக்கா?!’னு ஆச்சர்யப்பட்டுப் போனோம். ஆனா, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வருதுங்கற நிதர்சனமும் புரிஞ்சப்போ, ரொம்ப வேதனையாயிடுச்சு. அப்படியே 'உச்' கொட்டிட்டு கடந்து போயிடாம, 'இதுக்கு நாம ஏதாச்சும் பண்ணலாமே..?’னு நாங்க கைகள் கோக்க, உருவானதுதான் 'முற்றம்’...'' என்ற ஹரிஷைத் தொடர்ந்தார் கீதாப்ரியா.

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !

''முதல் கட்டமா, எங்க கல்லூரிக்கே ஒரு நாட்டுப்புறக் கலைஞரை வரவழைச்சு பறையாட்டம், தேவராட்டம்னு தொன்மைக் கலைகளை கத்துக்க ஏற்பாடு செஞ்சு தந்து, எங்களுக்கு சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க எங்க டிபார்ட்மென்ட்ல. அடுத்ததா, எந்தெந்த ஊர்ல எந்தெந்த கலைகள் பாரம்பரியமானதுனு ஒரு பட்டியல் தயாரிச்சு, அங்கெல் லாம் ஆர்வமா போயி இறங்கினப்போ, அந்த ஊர் மக்களுக்கே அவங்க மண்ணோட கலைகள் பத்தின விவரம் தெரியாம இருந்தது... வேடிக்கையாவும் வேதனையாவும் இருந்துச்சு. அதைத் தொடர்ந்துதான், 'முற்றம்’ மூலமா நம்ம கலைகளை மக்கள்கிட்ட மறுபடியும் கொண்டு போகணும்னு முடிவெடுத்தோம்...'' என்று தாங்கள் வீதிகளில் இறங்கியதை விவரித்தார்.

தொடர்ந்து பேசிய கீதாப்ரியா, ''குடும்பத்துல எல்லாரும் ஒண்ணா கூடற இடம்தான், முற்றம். அந்த மாதிரி ஒவ்வொரு ஊர்லயும் மக்கள் கூடற ஒரு பொது இடத்துல எங்களோட 'முற்றம்’ அமைப்பு நம்ம பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தறோம். நடனங்களோட நின்னுடாம, ஒவ்வொரு ஆட்டத்துலயும் பெண்ணடிமை, குழந்தைத் தொழிலாளர்கள், கல்வியின்மைனு சமுதாய பிரச்னைகளை மையமா வெச்சு, மக்கள்கிட்ட விழிப்பு உணர்வு ஏற்படுத்தறோம். எங்க நிகழ்ச்சிகளோட சிறப்பு... வார்த்தைகள் இல்லாம இசை, நடனம், நடிப்பு மூலமே பாமர மக்களுக்கும் புரியற மாதிரி விஷயங்களைப் பரிமாறுவதுதான்!'' என்று பெருமையுடன் சொன்னவர்,

''சேலத்துல பெண்சிசுக் கொலை பத்தி உருக்கமான ஒரு நிகழ்ச்சி பண்ணினோம். வேடிக்கை பார்த்துட்டிருந்த ஒரு பாட்டி, எங்க கையைப் பிடிச்சுக்கிட்டு அழுதுட்டாங்க. 'மனுசப் பயலுங்க பண்ணுற தப்பையெல்லாம் பறையாட்டம் ஆடிக்கிட்டே சொல்லி சாட்டையடி கொடுத்துட்டீங்க புள்ளைகளா!

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !

இந்தக் கூட்டத்துல நிக்கற நெறைய பேரு திருந்தியிருப்பாங்க’னு அவங்க எங்களுக்கு நம்பிக்கை சொன்னப்போ, எங்க முயற்சியோட வெற்றியை நாங்க ருசிச்சோம். அதேபோல, சென்னையிலயும் ஒரு நெகிழ்ச்சி. மயிலாப்பூர்ல ஒரு நிகழ்ச்சிக்காக தெருவுல இறங்கி நாங்க பறையடிச்சப்போ, அந்த இசைக்கும் ஆட்டத்துக்கும் கட்டுப்பட்டு நிகழ்ச்சி முடியற வரைக்கும் கலையாம நின்னு ரசிச்சுப் பாராட்டினாங்க 'பப்’ கல்ச்சருக்கு மாறிட்டு வர்ற சென்னை டீன்ஸ்!

'முற்றம்’ ஆரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல இதுபோல இன்னும் நிறைய நெகிழ்ச்சிகள், நம்பிக்கைகள், பாராட்டுகள் எங்களுக்கு கிடைச்சிருக்கு...'' என்று சந்தோஷப்பட்டார் கீதாப்ரியா..

''இப்போ மத்த மாணவர்களுக்கும் தப்பாட்டம், கோலாட்டம்னு தமிழ் பண்பாட்டு ஆட்ட வகைகளை கத்துக் கொடுக்க சொல்லி சில பல்கலைகழகங்கள்ல இருந்து எங்கள கூப்பிடறாங்க. வட்டம் இன்னும் விரியும், கைகள் இன்னும் இணை யும்! நம்ம பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கற நம்பிக்கை துளிர்த்திருக்கு!'' என்று நிறைவாகச் சொன்னார் மாஸ் கம்யூனிகேஷன் டிபார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி. ரவீந்திரன்!  

'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் !

எஸ்.எம்.எஸ்., சாட்டிங், மால் என்றிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இப்படி மண்ணின் கலைகளில் மின்னும் 'முற்றம்’ மாணவர்களுக்கு வைக்கலாம் ஒரு சல்யூட்!

- வே.கிருஷ்ணவேணி
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்