பத்தாம் வகுப்புப் படிப்போடு இல்லத் தரசியாகப் புகுந்த வீட்டில் காலடி வைத்தவர் சேலத்தைச் சேர்ந்த சுகந்தி சரவணன். மகன் கவுதம் பிறந்து, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின் சுகந்தியின் வாழ்வில் நடந்ததெல்லாம் அதிரடி மாற்றங்கள். தன் கணவர் பணிபுரிந்து வந்த வெளிநாட்டுச் சுற்றுலா நிறுவனத்தில் நுழைந்து, அவருக்கு உதவியாகத் தன்னையும் தொழிலில் இணைத்துக்கொண்டார் சுகந்தி. இன்று அவர் கணவர் உருவாக்கிய `கிராண்ட் ராயல் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். திறன் மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சிகளின் வழியாக தன்னையே செதுக்கிக்கொண்ட சுகந்தி, தான் பயிற்சி பெற்ற ஜே.சி.ஐ (ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்) அமைப்பில் மண்டலச் செயலாளர் பொறுப்பில் பரபரப்பாக வலம் வருகிறார். வீட்டின் வரவேற்பறை இடமளிக்கத் திணறும் அளவுக்குக் கோப்பைகளைக் குவித்திருக்கும் சுகந்தி... இல்லத்தரசி, பிசினஸ் உமன், மண்டலச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளையும் வெற்றிகரமாக நிர்வகிக்கும் தன் ரகசியத்தைப் பகிர்கிறார்...

• திருமணத்துக்குப்பின் வீட்டுக்குள்ளேயே இருந்த பெண் நான். குடும்பப் பொறுப்பை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தேன். கணவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது அலுவலகத்தைக் கவனிக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார். வீட்டையும் பிசினஸையும் நிர்வகிப்பது ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருந்தது. என் திறமையை வளர்த்துக்கொள்ள ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் அமைப்பில் சேர்ந்து என் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்தபோது நேரம் கிடைக்கவில்லை. நேரத்தை மீதப்படுத்த வீட்டு வேலைகளுக்கு ஆள்களை நியமித்தேன். அப்படி மீதப்படுத்திய நேரத்தை எனக்கானதாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
• எனக்கு ஒரே மகன். சிறு வயதிலிருந்தே அவனுடைய வேலைகளை அவனே செய்து கொள்ளப் பழக்கினேன். அதனால்தான் எந்தவொரு விஷயத்திலும் தானாக முடிவெடுக் கும் அளவுக்கு அவனால் வளர முடிந்திருக்கிறது.
• எங்கள் தொழிலுக்கு இன்டர்நெட் வசதியிருந்தால் போதும். எங்கிருந்தாலும் வேலையைத் தொடரலாம். தொடக்கத்தில் எல்லா வேலைகளையும் நானே இழுத்துப் போட்டுச் செய்தேன். படிப்படியாக இருக்கும் வேலைகளை மற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து என் நேரத்தைச் சரியான முறையில் திட்டமிட்டுக்கொண்டேன்.
• பயண நேரங்களில் எப்போதும் இணைய தளத்தில் இருப்பேன். பிசினஸ் தொடர்பாக யார் என்னிடம் தகவல் கேட்டாலும் தெரியாது என்று சொல்லப் பிடிக்காது.
• ஒரு வேலையை முடிக்க முடிவு செய்து விட்டால் இரவானாலும் முடித்துவிட்டுதான் தூங்குவேன். அதிக வேலைப்பளுவின் காரண மாக உருவாகும் மன அழுத்தத்தை பயணங்கள் செய்வதன்மூலம் சரிசெய்துகொள்வேன்.
• பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். புதிய செய்திகளை இணையத்தில் தேடிப் படிப்பேன். காலையில் குறித்த நேரத்தில் எழுந்து அலுவலக வேலைகளில் மூழ்கிவிடுவேன்.
• என் கணவருக்கும் எனக்கும் இடையில் ஈகோ பிரச்னை இருந்ததில்லை. எந்த விஷயத்தையும் அவரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வேன். நான், கணவர், மகன்...
எங்கள் மூவருக்குமான புரிதலே என் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.