Published:Updated:

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

வரவனை செந்தில் - படம்: ஆ.முத்துக்குமார்

ந்த மூன்று பெண்களும் இந்தியாவின் நிலப்பரப்பில் சுற்றாத இடங்களே இல்லை எனச் சொல்லலாம். மூவரும் தனியாகவே சென்று வருகின்றனர் என்பதுதான் அதைவிட சிறப்பு. பாட்டி, அம்மா, மகள் என இந்த மூவர் அணி எந்தப் பயமும் இல்லாமல் மாநிலம் மாநிலமாகச் சுற்றி வருகின்றனர்.     

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

சென்னை புறநகரில் வசிக்கும் சந்தன முல்லை, ஐடி நிறுவன ஊழியர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வலைதளத்தில் எழுதிவரும் பிரபலம். இவரின் தாய் மங்கையர்க்கரசி, ஓய்வுபெற்ற ஆசிரியை. மகள் குறிஞ்சி மலர். குறிஞ்சியின் செல்லப்பெயர் ‘பப்பு’. அதை வைத்தே `பப்பு அப்டேட்ஸ்’ எனத் தொடர்ந்து குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சி பற்றி எழுதிய அப்டேட் பதிவுகள் மிகப்பிரபலம். இனி சந்தன முல்லை தொடர்கிறார்...     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

“என் மகள் மாண்டிசோரி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அங்கு நிறைய செய்முறைப் பயிற்சிகள் இருக்கும். அப்போது இந்திய மாநிலங்கள், அதன் தலைநகரங்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பேன். அப்படி ஒருநாள் டெல்லி பற்றியும் ஆக்ரா பற்றியும் அதன் அருகில் ஓடும் யமுனா நதி பற்றியும் சொல்லும்போது `அங்கே நேரே போய் பார்க்க வேண்டும்’ என்றாள். அப்போதுதான் எனக்கே அது தோன்றியது, `நாம் ஏன் இவளின் கல்விமுறைக்கு ஏற்றாற்போல, முடிந்தவரை ஒவ்வோர் இடத்தையும் நேரில் அழைத்துச் சென்று காட்டக் கூடாது?’ என்று. `ஒருநாள் ரயில் பயண தூரத்தில் அடையக்கூடிய டெல்லியைக்கூட நாம் பார்த்ததில்லையே’ என உறைத்தது.

பப்புவுக்கு அப்போது எட்டாவது பிறந்த நாள் வரவிருந்தது. `இவளின் பிறந்த நாளின்போது அங்கு இருந்தால் எப்படி இருக்கும்?’ எனத் தோன்றியது. பப்புவும் ‘ஐ வான்ட் டு டேர்ன் எய்ட் இன் டெல்லி’ என்றாள். அதன் பிறகுதான் டெல்லிக்கு எப்படிப் போவது என யோசிக்கத் தொடங்கினேன். இதற்கான இணையத்தைத் தேடு தேடென்று தேட பல்வேறு ஆப்ஷன்கள் கிடைத்தன. நானும் அம்மாவும் பப்புவும்  மட்டுமே போகவேண்டிய சூழ்நிலை.  அதனால், பெண்கள் தனியாகப் பயணம் செய்வது குறித்து படிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தியாவில் நிறைய பெண்கள் தனியாகப் பயணம் செய்துவருவது. ரயிலில் பயணம் செய்வது, ஹோட்டல்களைத் தவிர்த்து, வீடுகளிலேயே இருக்கும் விருந்தினர் அறைகளில் தங்கிக்கொள்வது போன்ற அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களைப் பல்வேறு பெண் பயணிகளின் பயணக் குறிப்புகள் மூலம் அறிந்துகொண்டேன். அதேபோல குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டை ஒதுக்கி பயணத்தை அதற்குள் முடிக்கும் அளவுக்குத் திட்டமிட வேண்டும். எவ்வளவு பெரிய பயணம் என்றாலும் 20 ஆயிரம்  ரூபாய்க்குள் இருக்கும்படிதான் வைத்துக்கொள்வேன். தவிர்க்கவே முடியாத சில பயணங்கள் விமானத்தில் அமைந்தாலும், ரயிலுக்குத்தான் முன்னுரிமை. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் இந்திய ரயில்வே இணைக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். நேரம் வேண்டுமானால் முன்பின் ஆகுமே தவிர, முன்னரே திட்டமிடும் பயணம் என்றால் ரயில்தான் மிகச்சிறந்த பாதுகாப்பான வாய்ப்பு” என்கிறவரிடம் ``குறிப்பிட்ட தொகையை மட்டும் பயணச் செலவுக்கு ஒதுக்கியது ஏன்?” என்று கேட்டோம்.     

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

“எப்போதாவது பயணம் செய்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். தொடர்ந்து பயணம் செய்யும் எண்ணத்துடன் இருப்பவர்கள் நிச்சயமாக ‘பட்ஜெட் டிராவலர்’ என்கிற நிலைக்குத் தங்களை  மாற்றிக்கொள்வது நல்லது. பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டபோதே, இணையத்தில் பயணக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். அதில் அவர்கள் அனைவருமே குறிப்பிட்டது, ‘பயணத்துக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை சீலிங் செய்துகொள்ளுங்கள். அதற்குள் உங்கள் செலவுகளைக் கொண்டுவாருங்கள்’ என்பதுதான். பட்ஜெட் டிராவலராக மாறினால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அதிகம் பயணிக்க முடியும்” என்று பட்ஜெட் டிராவலராக இருப்பதன் அவசியத்தைச் சொல்கிறார் சந்தன முல்லை.     

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

“பெரும்பாலும் சுற்றுலா மையங்களைத் தேர்வுசெய்ய மாட்டோம். நினைவு இல்லங்கள், வரலாற்று இடங்கள், அருங்காட்சியகம், உள்ளூர் சந்தைகள் போன்றவைதான் எங்கள் இலக்காக இருக்கும். முடிந்தவரை நடந்தே போகும்படிதான் பார்த்துக்கொள்வோம். இப்போது நிறைய ஊர்களில் ‘சிட்டி வாக்’ என்கிற சிறிய குழுக்கள் தோன்றிவிட்டன. அவர்கள் ஒவ்வொரு வாரமும் நடந்தே நகரத்தைச் சுற்றிவருவார்கள். வழியில் இருக்கும் சிறந்த உணவகங்கள் தொடங்கி டீக்கடை வரை குறிப்பிட்டு எழுதியிருப்பார்கள். அதைப் படித்து அவர்களின் ட்ராக்குகளில் நடந்து பார்ப்போம். டெல்லியில் ‘ஹிட்டன் லேக்ஸ்’ என நடந்தே சுற்றிப் பார்க்கக்கூடிய ஏரிகளை அப்படித்தான் கண்டுபிடித்துப் பார்த்தோம்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

“எங்கள் மூவரையும் நாங்கள் தங்கும் வீடுகளில் வியப்பாகத்தான் பார்ப்பார்கள். காரணம், பெண்கள் தனியாக வந்திருப்பது மட்டுமல்ல... முக்கியமான சுற்றுலா இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என மெனக்கெடாமல் இருப்பது. கோயில், குளம் எனச் சுற்றாமல் அந்தந்த ஊருக்கே உரிய விஷயங்களைப் பார்க்க விரும்புவது போன்றவை. தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதும் அவர்களுக்குப் பெரிய ஆச்சர்யமாக இருக்கும். என் பெண்ணின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் வெளியூரில்தான் இருப்போம் என்பதால், அவர்களும் உடனே நெருக்கமாகிவிடுவார் கள். நாங்கள் ஊர்சுற்றிவிட்டு வரும்போது பிறந்த நாளுக்காகவே ஏதேனும் சிறப்பாகச் செய்து வைத்திருப்பார்கள். அவ்வப்போது போன் செய்து ‘அடுத்து எப்போ வருவீங்க?’ன்னு கேட்பார்கள்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அனைவருக்கும் ரோஸ் மில்க் எடுத்து வந்தார் பப்பு என்கிற குறிஞ்சி மலர்.

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

“எங்கள் பயணங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது உணவு வகைகளைத் தான். கொல்கத்தாவில் உணவைக் கொண் டாடுவார்கள். ஏதேனும் ஒரு வகையில் மீன் இடம்பிடித்துவிடும். அதேபோல இனிப்பும் தவறாமல் இடம்பெறும். அங்கு தெருக்களில் விற்கும் ரசகுல்லாக்கள் சுவையாக இருக்கும். `ஆதவன்’ படத்தில் வடிவேலு ஜிகர்தண்டா தூத் வாங்கிக் குடிப்பாரே மண்சட்டியில்... அதில்தான் டீ கொடுப்பார்கள், கெட்டியான தயிர் கொடுப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். அங்கு ஒவ்வொரு சீஸனுக்கு ஓர் இனிப்பு புகழ்பெற்றது. மழைக்காலத்து இனிப்பு வகை பனிக்காலத்தில் கிடைக்காது.    

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!


குஜராத்தில் மாமிசம் பெரும்பாலும் இருக்காது. ஆனால், அது தேவைப்படாத அளவுக்கு முந்திரி, பாதாம் எனப் பருப்பு வகைகள் நிரம்பியிருக்கும். உணவும் அவ்வளவு வண்ணமயமாக இருக்கும்.

வடகிழக்கு இந்திய உணவுகளின் அடிப் படையே இறைச்சிதான். மேகாலயாவில் பன்றிக்கறி இல்லாமல் அவர்களுக்கு எதுவுமே ஓடாது. எங்களுக்கு அது பழக்கமில்லாதால் கோழிக்கறி சாப்பிட்டுச் சமாளித்தோம். ஆனால், அங்குதான் ஃபிரைட் ரைஸ் என்பது எப்படி இருக்கும் என டேஸ்ட் பார்த்தோம்.  மூன்று வேளையும் அதையே சாப்பிடலாம்போல அப்படி ஒரு சுவை.கேரளா உணவில் 90 சதவிகிதம் நம்முடைய உணவுபோலத்தான் இருக்கும்” என்கிறவரிடம் “இப்படிப் பெண்களாகவே இந்தியா முழுவதும் சுற்றுகிறீர்களே... பாதுகாப்பு குறித்த அச்சம் ஏதுமில்லையா?’’ என்று கேட்டோம்.

பெண் பயணம் - தனியே தன்னந்தனியே!

“அப்படி எங்கேயுமே உணரவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை. நாங்கள் பெண்களாக இருக்கிறோம் என அட்வான்ட்டேஜ் எடுத்துக்கொள்வது தொடங்கி, மொழி தெரியாதவர்கள் என ஏமாற்றுவது வரை எதுவுமே நடக்கவில்லை. சில சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் உள்ள கடைகளில் எப்போதும்போல அதிக விலை சொல்வார்கள்.  அதில் நான்கில் ஒரு பங்கு விலையாகக் குறைத்துக் கேட்போம். கடைசியில் மூன்றில் ஒரு பங்கு விலையில் பேரம்படியும். பல ஊர்களில் டாக்ஸி எல்லாம் எடுத்துச் சுற்றியிருக்கிறோம். எங்குமே அச்சமாக உணர்ந்ததில்லை. மொழி தெரியாத காரணத்தால் ஏமாற்றப்பட்டதே இல்லை’’ என்று சந்தன முல்லை சொல்லும் போது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

இவர்களுக்குத் துணிவுதான் துணை!