Published:Updated:

“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்!”

“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்!”

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!பொன்.விமலா - படங்கள்: ப.சரவணகுமார்

கீதா இளங்கோவன் - இளங்கோவன் கீதா... பெயரில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த இணையின் சமூகப் புரட்சி. ஒருவருக்கொருவர் தன் இணையின் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்வதில் தொடங்கி, அந்தச் சமத்துவ அன்பையும் மரியாதையையும் வாழ்ந்துகாட்டுதலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கும் ஜோடி. திருமணம் எனும் சடங்கினை  நடத்திக்கொள்ளாமல் 15 ஆண்டுகளாக வெற்றிகரமாகக் குடும்ப அமைப்பில் இணைந்து வாழும் அன்பர்கள்.     

“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்!”

இளங்கோவன் கீதா, சென்னை ரயில்வே கோட்டத்தின் முதுநிலை நிதி மேலாளர். கீதா இளங்கோவன், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடக அலுவலர். சமூகஆர்வலர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், பயணக் காதலர்கள், இயற்கை ஆர்வலர்கள் என இவர்களுக்கான அடையாளங்கள் நீள்கின்றன. சென்னை, அயனாவரத்தில் மரங்கள், பறவைகள் என எழில் கொஞ்சும் அவர்களின் வீட்டில், இதமான வெயில் மெதுவாகத் தொடங்கும் காலைப்பொழுதொன்றில் சந்தித்தோம்.

``ஒரு பெண் தன் தகப்பன் அல்லது கணவனின் நிழலில்தான் வாழ வேண்டும் என்பதை நிர்பந்திக்கும் சமூகம் நம்முடை யது. ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வ தென்றால்கூட, அதில் தந்தை அல்லது கணவனின் பெயர்தான் கேட்கப்படுகிறதே தவிர... தாய், மனைவி பெயரை நிரப்பச் சொல்லும் விண்ணப்பங்கள் நம் கண்களுக்குப் பழக்கமில்லை. ‘மிஸஸ் ராமலிங்கம்’ என்று பெண்ணை ஆணின் பெயரைக் கொண்டு அழைப்பதைப் போல, ‘மிஸ்டர் பவித்ரா’ என்று பெண்ணின் பெயரால் ஓர் ஆணை அழைப்பதைப் பார்த்திருக்கிறோமா? இந்த ஆணாதிக்கச் சமூகம் சூழத்தான் நானும் வளர்ந்தேன். என்றாலும், அதில் விருப்பம் இல்லாமல்தான் வளர்ந்தேன். அதை மாற்ற என்னளவில் செய்யும் சிறு முயற்சியாகத்தான் என் பெயர் மாற்றத்தைக் கருதுகிறேன்’’ -  தன் சொற்களுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியில்லாத நேர்மை இளங்கோவனின் குரலைக் கம்பீரமாக்குகிறது.

``ஆண்கள் தங்கள் பெற்றோர் வைத்த பெயருடனேயே ஆயுள்வரை வாழும் உரிமையைப் பெறுகிறார்கள். பெண்களோ திருமணத்துக்குப்பின் இனிஷியல் மாற்று வதிலிருந்து, கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்ப்பதுவரை திருமண அடையாளங்களைச் சுமக்கத் தொடங்குகிறார்கள். ஆண்களோ இந்த விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள். இந்தச்சூழலில், தாலி, குங்குமம், மெட்டி என மண அடையாளங் களிலிருந்து விலகி வாழ்கிறோம் நாங்கள். அடர்ந்த அன்பும் தெளிந்த புரிதலுமே எங்கள் வாழ்வின் எரிபொருள்’’ என்கிறார் புன்னகை மாறாமல் கீதா.

`` ‘திருமணம், தாலி, கணவன் மனைவி என்கிற பந்தமில்லாமல் எப்படி உங்களால் இந்தச் சமூகத்தில் வாழ முடிகிறது?’ என நிறையப் பேர் எங்களிடம் கேட்பதுண்டு’’ என்கிற இளங்கோவன், ``என் அம்மா பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றியவர். தாலி அணியாமல்தான் அப்பாவுடன் குடும்பம் நடத்தினார். அந்த முற்போக்குச் சிந்தனைகள் என் வளர்ப்பில் ஊறியவை. அதேநேரத்தில் என் கொள்கைகளை யாரிடமும் திணிக்கக் கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக இருக்கிறேன். கீதாவின் எண்ணங்களும் அத்தகையனவே. அந்த ஒரே அலைவரிசைதான் எங்களை வாழ்வில் இணைத்தது’’ என்றவர், அந்த நாள்களை நினைவுகூர்கிறார்...

‘‘1989-ம் வருஷம் நான் முதுகலை ஜர்னலிஸ மும், கீதா இளங்கலை நியூட்ரிஷியனும் படித்துக்கொண்டிருந்தோம். அந்தக் காதல் காலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடிதங்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொண்டோம். சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக நிறைய இடங்களுக்குப் பயணம் செய்தோம். நாங்கள் இருவரும் மனதளவில் ஒருமித்து இருந்தாலும், ஒரே வீட்டில் இணைந்து வாழ்வதுபற்றி யோசிக்கும்போது, எங்களுக்குள் சில வரையறைகளை வகுத்துக்கொண்டோம்’’  என்கிற இளங்கோவனிடம், ``தோழர்... அதை நான் சொல்கிறேன்...’’ என ஆர்வத்துடன் தொடர்கிறார் கீதா.

``குடும்ப அமைப்பு என்றாலே, அது கணவன் மனைவி, குழந்தை எனச் சந்ததிகளை வளர்க்கும் அமைப்பாகத்தான் இருக்கிறதே தவிர, பெரும்பாலும் சமூக வளர்ச்சியின் பங்களிப்புக்கான களமாக இருப்பதில்லை.  இதில் எங்கள் இருவருக்குமே வருத்தம் உண்டு. ‘நாம் தாலி கட்டிக்கொண்டு சராசரி கணவன் மனைவியாக இருக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்த நேரத்தில், ‘குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பதிலும்  எங்களுக்கு உடன்பாடு இருந்தது. இதுபோன்ற பல்வேறு முடிவுகள் எடுத்துக்கொண்ட பிறகே, 2002-ல் நாங்கள் இணையராக இணைந்தோம். ஆரம்பத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும், கால வெள்ளத்தில் அவையெல்லாம் சரியானது கண்டோம்.

திருமணம் எனும் சடங்கு நிகழாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதை, பொதுவாக இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. எங்கள் உறவினர்களும் நண்பர்களும் எங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் என்பதால், எங்களுக்கு அப்படியான சிக்கல் எதுவும் ஏற்படவில்லை.

மனது ஒன்றிப்போன வயதுவந்த  இருவர் சேர்ந்து வாழ முடிவெடுத்தால், அந்த உறவை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்கிறார் கீதா.     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இணைந்து வாழ்கிறோம்... இணையராக வாழ்கிறோம்!”

`` இப்படித்தான் வாழ வேண்டும் என்பதல்ல நாங்கள் கூற வருவது... இப்படியும் வாழ வழி இருக்கிறது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்’’ என்கிற இளங்கோவன், ``எல்லோரும் குழந்தை பெற்றே ஆக வேண்டும் என்ற சமூக நிர்பந்தம் சரியானதோ, அவசியமானதோ அல்ல. குழந்தை வேண்டும் அல்லது வேண்டாம் என முடிவெடுப்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்ததாக அமைந்திருப்பதே சரியாக இருக்கும். நம் அன்பைக் குடும்பம் என்ற வட்டத்தைத் தாண்டி யாரிடம் வேண்டுமானாலும் செலுத்தலாம். அன்பு எல்லையற்றது. அந்தக் கட்டுப்பாடற்ற அன்பை, குடும்ப அமைப்பின்மூலம் குறுக்கிக் கொள்வது கூடாது'' எனத் தெளிவுபடுத்துகிறார்.

``குடும்ப அமைப்பில் ஒரு பெண் தாயாகும் போதுதான் அவள் முழுமையடைந்ததாகச் சொல்கிறார்கள். தாய்மைக்கும் ஒரு பெண் முழுமை அடைவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இங்கே தனித்து வாழும் திருநங்கைகள், கணவன் இல்லாத பெண்கள், தனித்து வாழும் ஆண்கள் என பல குடும்ப அமைப்புகள் இருப்பதைப் போலவே திருமணம் என்ற சடங்கைப் புறந்தள்ளி இணையராக வாழும் எங்களைப் போன்றோரின் வாழ்க்கையும் பன்முகத்தன்மை கொண்ட இச்சமூகத்தின் இயல்பான அங்கமாகவே அமைந்திருக்கிறது'' என்கிற கீதா, சிறப்புக்குழந்தைகள்மீது கவனம் குவியும் வகையில் 2006-ல் ‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய அந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. தொடர்ந்து 2008-ம் ஆண்டில் இளங்கோவன் கீதா இயக்கிய ‘ஆராயாத தீர்ப்பு’ என்ற ஆவணப்படம் குற்ற முத்திரை சுமத்தப்பட்ட சமூகத்தின்மீது  நிகழும் ஒடுக்குமுறையைப் பற்றியது. `அஃறிணைகள்’ என்ற தலைப்பில் இவர் இயக்கிய ஆவணப்படம், திருநங்கைகளின் வாழ்வாதாரச் சிக்கல்களை மையமாகக் கொண்டது.

2012-ல் கீதா இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப்படம், மென்சஸ் குறித்த மூடநம்பிக்கைகளைச் சாடுகிறது.  இவர் இயக்கிய ‘நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி ஆகிய இருவரின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.  இப்போது குழந்தைகளிடம் சாதி, தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி உரையாடும் `ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ என்கிற தொடர் ஆவணப்படத்தை இயக்கி வருகிறார்.

``அன்பு என்பதே அடக்குமுறையாகும் வழக்கம் ஒழிப்போம்; அன்பில் சுதந்திரம் கோப்போம்!”

- கீதா இளங்கோவனும் இளங்கோவன் கீதாவும் கைகோத்துச் சொல்லி, கவிதையாக விடை கொடுக்கிறார்கள்.