Published:Updated:

சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
News
சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

எம்டன் மகள்வி.எஸ்.சரவணன் - படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

ரே பாடலில் ஓஹோ பேபியாக உயர்ந்திருக்கிறார் பிரியங்கா. விஜய் டி.வி-யின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பிரியங்காவின்  குரலில் ஒலித்த ‘சின்னச் சின்ன வண்ணக் குயில்...’ பாடலின் வீடியோ, யூடியூபில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் டி.வி-யின் சிறந்த பாடகிக்கான விருதினைப் பெற்றபோதும், பிரியங்கா அதே பாடலை மீண்டும் பாட, கைதட்டலில் மைதானமே அதிர்ந்தது.               

சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

டி.வி நிகழ்ச்சிகளின்போது பிரியங்கா வின் அம்மா காஞ்சனாவைப் பலரும் பார்த்திருப்பார்கள். பிரியங்காவின் அப்பா நல்லதம்பியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர்தான் பிரியங்காவின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்துவருகிறார். நல்லதம்பி, கீபோர்டு பயிற்சி வகுப்புகள் நடத்துவதோடு, சில திரைப்படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். ‘வண்ணக்குயில்’ பிரியங்காவைச் சந்தித்தோம்.

“ஸாரி, காலேஜ் முடிஞ்சுவர்றதுக்குக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு” என்றபடி வரவேற்ற பிரியங்கா, பல் மருத்துவம் படிக்கிறார்.
 
“எப்படி ஆரம்பித்தது இசைப் பயணம்?”

“மூணு வயசுல ஏதோ ஒரு பாட்டை நல்லா பாடினதா அப்பா சொல்வாங்க. பாஷ்யம் மாஸ்டர்கிட்ட கர்னாடக சங்கீதமும், அகஸ்ட்டின் சாரிடம் வெஸ்டர்னும் கத்துக்கிட்டேன். அம்மாவும் நல்லாப் பாடுவாங்க. அவங்க குரல்தான் எனக்குன்னு நிறைய பேர் சொல்வாங்க. ‘சூப்பர் சிங்கர்’ நான் கலந்துகிட்ட ஃபர்ஸ்ட் ரியாலிட்டி ஷோ. ஃபைனலுக்கு செலக்ட் ஆகலைன்னாலும், பாடறதுக்கான சான்ஸ் கிடைச்சதை சந்தோஷமா நினைக்கிறேன்.”     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

“நிகழ்ச்சியில் பாட வேண்டிய பாடல்களை யார் செலக்ட் செய்வாங்க?’’
 
“அப்பா, அம்மா, நான் மூணு பேரும் பேசி செலக்ட் பண்ணுவோம். பெரும்பாலும், என் குரலுக்கு ஏற்ற பாடலை அப்பாதான் சொல்வார். அவர் செலக்ட் செய்ததுதான் ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடல்.’’

“இளையராஜா இசையில் பாடினீர்களாமே?”

“ஆமா, என்னால மறக்கவே முடியாத நாள் அது. அது ஒரு தெலுங்குப் படம். இன்னும் வெளியாகலை. இந்த வருஷம் இளையராஜா சாரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில், ‘சின்னத் தாயவள்...’ பாடலைப் பாடினேன். அவர் புன்னகையோடு கைதட்டினார். எனக்குக் கிடைச்ச பாராட்டுகளிலேயே விலைமதிக்க முடியாததா அதை நினைக்கிறேன்.”

“இயக்குநர் பாலாவுக்கு உங்கள் குரல் ஃபேவரைட்டாமே...”

“ஆமாம்! ‘மாதா உன் கோயிலில்...’ பாட்டைக் கேட்டு அழுதுட்டதா அவர் சொன்னபோது, அந்த வயசுல அதைப் புரிஞ்சுக்க முடியலை. இப்ப நினைச்சுப்பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. ‘அவன் இவன்’ படத்தில் பாடறதுக்கு சான்ஸ் கொடுத்தார். அப்புறம் இமான் சார் மியூஸிக்ல ‘உச்சிதனை முகர்ந்தால்’ படத்தில் பாடினேன். லேட்டஸ்ட்டா ‘பலூன்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா சார் மியூஸிக்ல பாடியிருக்கேன். ‘சின்னச் சின்ன வண்ணக்குயில்’ பாடலில் சில வரிகளைப் பாடினதைப் பார்த்துத் தான், ‘பலூன்’ படத்தின் டைரக்டர் சினிஸ் இந்த சான்ஸ் கொடுத்தார்.’’      

சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

“அப்பா, அம்மா... இருவரில் யார் உங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்?”

“இரண்டு பேரும் ஈக்வெல் தான். அம்மா என்கூடவே இருந்து கவனிச்சுப்பாங்க. அப்பா பாடறதுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துட்டு ஸ்கிரீனுக்கு வெளியே காத்திருப்பார். அப்பாவுக்குத் திடீர்னு வேலை வந்து, நான் பாடுற இடத்தில் இல்லைன்னாலும் அவர் நினைப்பெல்லாம் என்னைப் பத்தியே இருக்கும். பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி விசாரிப்பார்.’’

“கண்டிப்பான அப்பான்னு கேள்விப்பட்டோமே...”

“இல்லையில்ல... ரொம்ப ரொம்பக் கண்டிப்பான அப்பா (அப்பாவைப் பார்த்து சிரிக்கிறார்)... அதேஅளவு பாசமான அப்பா. ஐஸ்க்ரீம்னா எனக்கு உசுரு. அம்மாகிட்ட கேட்டா, `குரல் கெட்டுப்போயிடும்'னு வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. அப்பாகிட்ட கேட்டா, நைசா வெளியில் கூட்டிட்டிப்போய் வாங்கித்தருவார்’’ என்கிறார்.

பிரியங்காவின் அம்மா குறுக்கிட்டு, ``ஆனா, அதை மறைக்கிற சாமர்த்தியம் ரெண்டு பேருக்குமே இல்லை. வீட்டுக்கு வந்ததும், ‘பிரியங்காவுக்கு வெந்நீர் கொடு’னு சொல்வார். அப்பவே நான் கண்டுபிடிச்சுடுவேன்’’ என்று சிரிக்கிறார் அம்மா காஞ்சனா.

“மறக்க முடியாத சம்பவம் எது?”


“ஒருமுறை நானும் அம்மாவும் வெளிநாட்டில் நிகழ்ச்சியை முடிச்சுட்டு, ஏர்போர்ட் வந்து அப்பாகிட்டே போனில் பேசிட்டு ஃப்ளைட் ஏறிட்டோம். அப்போ, இந்தியாவில் நைட் பத்து மணி. சென்னை ஏர்போர்ட்ல இறங்கினதும் அப்பாகிட்டேயிருந்து போன். அப்போ நைட் ரெண்டு மணிக்கும் மேல இருக்கும். நாங்க இறங்குறவரைக்கும் தூங்காம தவிப்போட காத்திட்டு இருந்திருக்கிறார். இப்படியான அக்கறைதான் அப்பா. நெகிழ்ச்சி யான இந்தச் சம்பவத்தை  எப்பவுமே மறக்கவே முடியாது.”     

சின்னச் சின்ன வண்ணக்குயில்! - சூப்பர் சிங்கர் பிரியங்கா

“இதுவரை கேட்டும் கிடைக்காதது எது?’’

 ``கேட்டும் கிடைக்காததுன்னா.... ஒண்ணு இருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் நாய்க்குட்டி வளர்க்கிறாங்க. எனக்கும் நாய்க்குட்டி பிடிக்கும். ஆனா, பலமுறை கேட்டும் வாங்கித் தரலை” என்று அப்பாவை முறைக்கிறார்.

அவர், “அதுக்கு என்ன காரணம்னா...’’ என்று ஆரம்பிக்க, ‘`வேணாம்... வேணாம்... நானே சொல்றேன்’’ எனச் சிரிப்புடன் தொடர்கிறார் பிரியங்கா.

“அப்பா ஒரு நாயை ரொம்பப் பாசமா வளர்த்தாராம். அது காரில் அடிபட்டு செத்துப்போச்சாம். அதை நினைச்சு நினைச்சு அப்பா கண்ணீர் மழை விட்டாராம். அந்த மாதிரி ஃபீலிங் எனக்கு வரக்கூடாதுன்னு, நான் எப்போ நாய்க்குட்டி கேட்டாலும் இதே கதையைச் சொல்வார்.”

``அப்பாவைப் பற்றியே அதிகமா பேசறீங்க. உங்க தோழிகளிடம் யாரைப் பற்றி அதிகமா பேசுவீங்க?’’


“அது வந்து....” என இழுத்துக்கொண்டே அப்பாவைப் பார்க்கிறார் பிரியங்கா. அவர் ‘சொல்லு சொல்லு’ என கைகாட்டியதும்,  ``அங்கேயும் அப்பா டாபிக்தான் அதிகமா ஓட்டிட்டு இருக்கும். எப்பவும் என்னைக் கண்காணிச்சிட்டே இருக்குற அப்பாவுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் ‘எம்டன்’னு பட்டம் கொடுத்திருக்காங்க. இது இப்பதான் அப்பாவுக்கே தெரியும்.”

“எம்டனா என்ன?’’ என்று புரியாமல் பார்க்கிறார் அப்பா நல்லதம்பி.

‘எம்டன் மகன்’ படத்தின் நாசர் கேரக்டர் பற்றிச் சொல்கிறார் பிரியங்கா. ``அப்போ ‘எம்டன் மகள்' நீ’’ என்றதும், அங்கே எழுந்த சிரிப்பொலி, கீபோர்டில்பட்டு எதிரொலிக்கிறது.