Published:Updated:

துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்

துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்

விழுவதெல்லாம் எழுவதற்கே!ஆர்.ஜெயலெட்சுமி - படங்கள்: தே.அசோக்குமார்

புடம் போட்டால்தான் தங்கம்... உளி தாங்கினால்தான் சிலை. துயரங்களையே துடுப்புகளாக்கி, வாழ்க்கைக் கடல் பயணத்தில் இலக்கை நோக்கி முன்னேறுபவர்களே தன்னம்பிக்கை தாரகைகளாக மின்னுகிறார்கள்; சமூகத்தில் உதாரண மனுஷிகளாகக் கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்கள் கடந்துவந்த வாழ்க்கையே, என்ன செய்வது என்று தெரியாமல் துயரத்தில் தவிப்பவர்களுக்குத் துருவ நட்சத்திரமாக  வழிகாட்டுகிறது.   

துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்

சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் சார்பாக மாற்றுத்திறனாளிகள் ப்ரீத்தி சீனிவாசன், மாதவி லதா மற்றும் பாரத மாதா ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி உதயமலர் ஆகியோர் தன்னம்பிக்கை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்களிடம் பேசினோம்...

‘‘சோகம் ஏற்படும்போது என்னை நினையுங்கள்!’’


வீட்டின் செல்லப் பெண்;  பார்ப் பவர்கள் பொறாமைப்படும் அழகு; பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி; நீச்சல் வீராங்கனை; நுனிநாக்கு ஆங்கிலம்; எதில் அடியெடுத்து வைத்தாலும் வெற்றி...   இப்படி மலையளவு மகிழ்ச்சியாகச்  சென்றுகொண்டிருந்த வாழ்வில் நடந்த விபத்து பற்றியும், அதன்பின் நடந்தவற்றையும் விவரிக்கிறார் ‘சோல் ஃப்ரீ’ அமைப்பின் நிறுவனர் ப்ரீத்தி சீனிவாசன்...

‘‘கல்லூரியில் படிக்கும்போது பாண்டிச்சேரிக்குச் சுற்றுலா சென்றபோது அந்த விபத்து நடந்தது. முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால், என் கழுத்துக்குக் கீழே உடல் முழுவதும் செயலிழந்தது. வீட்டில் என்னைக் கண்ணும்கருத்துமாகப் பார்த்துக்கொண்டார்கள். ‘உன்னைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். கவனிக்க ஆள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?’ என அம்மா என்னிடம் கேட்ட வார்த்தைகள் என்னைச் சிந்திக்க வைத்தன.

வெளியுலகில் என்னைப் போன்றவர்கள் பலரை, வீட்டில் உள்ளவர்கள் பாரமாக நினைத்து வார்த்தைகளால் வதைக்கின்றனர். தண்டுவடப் பாதிப்பு என்பது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு விபத்து நடந்ததும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்; எப்படித் தூக்க வேண்டும் போன்ற விழிப்பு உணர்வுக் கல்வி நம்மிடம் இல்லை’’ என்கிறவர், தன் பணிகள் பற்றியும்  விவரிக்கிறார்...

``பள்ளி, கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் `மோட்டிவேஷனல் ஸ்பீச்’ கொடுத்து வருகிறேன். அப்போது பலர் ஒருவித மன இறுக்கத்துடனேயே இருப்பார்கள். ‘உங்களிடம் சோகம் குடிகொள்ளும்போது ஒருநிமிடம் கண்களை மூடி என்னை நினையுங்கள்’ என அவர்களிடம் நான் வலியுறுத்துகிறேன்'' என்று கண்கள் அகலப் பேசுகிறவர், தொடர்ந்து சொன்ன விஷயங்கள் அனைத்தும் நெகிழ்ச்சியைத்  தூண்டுகின்றன...

``என் பெற்றோர் திடீரென இறந்துவிட, என் 88 வயது பாட்டியும் நானும் தனிமைப் படுத்தப்பட்டோம். ‘வாய்ஸ் சாஃப்ட்வேர்’ மூலம் பணிசெய்து சம்பாதிக்கிறேன்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்

என்னால் ஒரு பணியைச் செய்ய முடியும் என்றால், நிச்சயம் முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்பட்டவர்களாலும் செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களாகவே செய்ய உடல் குறைபாட்டுக் கேற்ப வீல் சேர் வசதிகள், மருத்துவ வசதிகளை ‘சோல் ஃப்ரீ’ அமைப்பு மூலமாகச் செய்துவருகிறோம். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். என்னால் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நான் உணர்ந்தபோது, எனக்கு ஏற்பட்ட விபத்துகூட காரண
முள்ளதாகவே தோன்றியது. சேவையின் மூலம் என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதுதான் லட்சியம்!’’ - கம்பீரம் தெறிக்கிறது ப்ரீத்தியின் வார்த்தைகளில்!

``நான் படைக்கப்பட்டதே ஆசிரமம் நடத்தத்தான்!’’


பெற்ற குழந்தைகளையே வளர்க்க இயலாமல் நிராதரவாக விட்டுச்செல்லும் இவ்வுலகில், சென்னை நந்தியம்பாக்கம் ‘பாரத மாதா ஆதரவற்றோர் இல்ல’ நிர்வாகி உதயமலர் தான் பெறாத குழந்தைகளுக்குக் கடந்த 45 ஆண்டுகளாகத் தாயாக அடைக்கலம் அளித்துக் காத்துவருகிறார். அவர் கடந்து வந்து பாதை பற்றி நம்மிடம் பேசினார் உதயமலர்...

``எனது சொந்த ஊர் நாகர்கோவில். சின்ன வயசிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். விடுதியில் தங்கிப் படித்தேன். கல்லூரிப் படிப்பு முடிந்து பணிக்குச் சென்றேன். உறவினர் பலர் இருந்தும் யாரும் தொடர்பில் இல்லாததால் வெறுமையை உணர்ந்தேன்.  அப்போது நான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதியில் தங்கி, பணிக்குச் சென்று வந்தேன். செல்லும் வழியில் ஆதரவின்றி இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். விடுதிக்கு வந்தும் அந்தக் குழந்தைகளின் ஞாபகமாகவே இருந்தது. மறுநாளே அந்தக் குழந்தைகளை அழைத்து வந்து என்னுடன் தங்கவைத்துக்கொண்டேன்.  இதன்மூலம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியதாக உணர்ந்தேன். இந்த ஆசிரமம் மூலம் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

நான் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருந்தால்கூட, ஓரிரு குழந்தைகளுக்கு மட்டுமே தாயாக இருந்திருப்பேன். இன்றோ நான் பெறாத ஆயிரக்கணக்கான குழந்தைகளின் தாயாக இருப்பது பெருமையாக இருக்கிறது. என் சாவின் விளிம்பு வரை இக்குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கனவும்’’- உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் உதயமலர்.

‘‘சாபமே வரமான கதை!’’ 


‘‘பிறந்து ஏழு மாதங்களில் போலியோவால் என் இரண்டு கால்களும் செயலிழந்தன. என் பெற்றோர் தந்த தன்னம்பிக்கை, தைரியத்தால் படித்து வங்கி வேலையில் சேர்ந்தேன். வேலை, வீடு என்று வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது, 2007-ல்
திடீரென தாங்கமுடியாத முதுகுவலி. `உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும்; செய்தாலும் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது. ஆபரேஷன் செய்யாமல் இருந்தால் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பீர்கள்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார் மருத்துவர்...’’ என்று சொல்லி நிறுத்திய மாதவி லதா, சாபம் வரமாகிய விந்தையை விவரித்தார்...      

துன்பத்தைத் துரத்தியடித்த தன்னம்பிக்கை தாரகைகள்

``எதற்கும் ஒரு பிசியோதெரபிஸ்ட்டைப் பார்க்கலாமே எனச் சென்றோம். `நீச்சல் பயிற்சி பலன் தரும். முயற்சிசெய்து பாருங்கள்’ என்றார். `ஒரு வருடம்தான் வாழப்போகிறோம்... குளத்தில் இறங்கித்தான் பார்ப்போமே...’ என நீச்சல் பயிற்சி பெற்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... வலி இருந்த இடம் தெரியாமல் போனது. பிறகு, மருத்துவத்துக்காக என்று இல்லாமல் மனமகிழ்ச்சிக்காக நீந்தி, படிப்படியாக முன்னேறி சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு, இதுவரை
22 தங்கம், 3 வெள்ளி, 5 வெங்கலப் பதக்கங்கள் பெற்றுள்ளேன்’’ என வியக்கவைக்கிறார் மாதவி லதா.

மாதவி லதாவின் சொந்த ஊர் தெலங்கானாவின் ஒரு சிறிய கிராமம். வங்கி வேலையில் மாற்றலாகி வந்தவர் சென்னையில் வசித்து வருகிறார். இப்போது தனது ‘எஸ் வீ டூ கேன் மூவ்மென்ட்’ என்கிற அமைப்பு மூலம் பயிற்சி அளித்து வரும் மாதவி லதா, அந்த அமைப்பின் செயல்பாடு பற்றித் தொடர்ந்தார்...

‘`இதுவரை இந்த அமைப்பின்மூலம் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள வைக்கும் அளவுக்கு விழிப்பு உணர்வைக் கொடுத்துள்ளேன். சக்கர நாற்காலியில் கூடைப் பந்தாடுபவர்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறேன்’’ எனப் பெருமையுடன் கூறுகிறார் மாதவி லதா.

‘‘விளையாட்டு என்பது மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை நிச்சயம் புரட்டிப்போடும்; வேலைவாய்ப்பும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவை ஆறுதலோ, அனுதாபமோ அல்ல... அவர்கள் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் வழி காட்டுதலும்தான்’’ என்று சொல்லும்போது அவர் குரலிலிருந்து  கம்பீரமாக வந்து விழுகின்றன தன்னம்பிக்கை வார்த்தைகள்!