Published:Updated:

பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!
பிரீமியம் ஸ்டோரி
News
பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

வாய்ப்பு வரவேற்கிறதுகு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத் - அ.அருண சுபா

செலிப்ரிட்டி பெண்கள் போலவே இன்று நம் வீட்டுப் பெண்களும் ஃபேஷனில் அப்டேட்டாக இருக்க முக்கியக் காரணம், பெருகிவரும் பொட்டீக்குகள். ஹாட் ட்ரெண்ட்டை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவது, பிரத்யேக டிசைன்கள், கஸ்டமைஸ்டு ஆர்டர்கள் என வேகமெடுத்து வரும் இந்தத் தொழில், பெரும்பாலும் பெண்களின் கைகளில்தான் மிளிர்கிறது. அப்படி ‘இது எங்க ஏரியா’ என்று கலக்கிக்கொண்டிருக்கும் சென்னைப் பெண்கள் சிலர், இந்தத் தொழிலின் ஹிட் ஃபார்முலா சொல்கிறார்கள்...      

பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

சத்யா, மெட்ராஸ் பொட்டீக் - “500 ரெகுலர்  கஸ்டமர்கள் கிடைச்ச மேஜிக்!”

“எம்.சி.ஏ முடிச்சிட்டு ரெண்டு வருஷம் ஐ.டி நிறுவனத்துல வேலை பார்த்தேன். பையன் பிறந்ததுக்கு அப்புறம் வேலையை விட்டுட்டேன். `மறுபடியும் வேலைக்்குச் செல்வதைவிட பிசினஸ் செய்யலாமே’னு முடிவெடுத்து, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வீட்டில் இருந்தே ஆன்லைனில் டிரெஸ் சேல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். கார்மென்ட் பிசினஸ் பற்றி எந்த கோர்ஸும் படிச்சதில்லை என்றாலும், இணையத்தில் இது தொடர்பான விஷயங்களைக் கத்துக்கிட்டேன். கண்கவர் கலெக்‌ஷன், கட்டுப்படியாகும் விலை... இவற்றுக்குப் பலனா 500 ரெகுலர் கஸ்டமர்கள் கிடைக்க, ஒரு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்குப் பக்கத்துலயே ‘மெட்ராஸ் பொட்டீக்’ ஷோரூம் ஆரம்பிச்சுட்டேன்.

இந்தத் தொழில்ல கஸ்டமர்கள் எந்த மெட்டீரியல், டிசைன்ல  உடைகள் கேட்டாலும், இல்லைன்னு சொல்லாத அளவுக்கு கலெக்‌ஷன் ஸ்டாக் இருக்கணும். அப்போதான் ‘இதுதான் வேணும்’னு வர்ற கஸ்டமர்களைத் தக்கவெச்சுக்க முடியும். அதேபோல, சிலர் எந்த டிரெஸ் எடுக்கிறதுனு ஒரு ஐடியா இல்லாம வந்திருக்கும்போது, `ஸ்லேஷ் கட் சுடி, பாகிஸ்தானி குர்தா, கஃப்தான் டாப்'னு ட்ரெண்டி கலெக்‌ஷனை அவங்களுக்கு கன்வின்ஸிங்கா அறிமுகப் படுத்தணும். இந்தத் தொழிலைப் பொறுத்த வரை, டிஸ்ப்ளேயில் காட்டும் உடைகளே கஸ்டமர்ஸைக் கவரணும். அதனால இன்டீரி யர் வேலைகளைச் சிறப்பா செய்து, அட்ராக்டிவ்வான உடைகளை கஸ்டமர்ஸ் பார்வையில் படும்படி வைக்கிறது ப்ளஸ்ஸாக அமையும். பொட்டீக்   தொழிலில் இப்போ போட்டி பெருகி வந்தாலும், ரெகுலர் கஸ்டமர்களைத் திருப்திப்படுத்தினாலே நமக்கான கஸ்டமர்கள் எண்ணிக்கை உயர்ந்துட்டே இருக்கும் என்பது என் அனுபவப் பாடம்!”     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

மஹாலட்சுமி, ‘செட்டிநாடு தறி’ - “சரியான திட்டமிடுதலோடு தொடங்க வேண்டும்!”

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் இல்லத்தரசி. படிப்பும் `ப்ளஸ் டூ’தான். ஆனால், ஃபேஷன்ல எனக்கு இருந்த ஆர்வத்தால ‘செட்டிநாடு தறி’ங்கிற பெயர்ல பொட்டீக் தொடங்கினேன். இதுக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கத் தேவையில்லை... யுனிக்கா பர்ச்சேஸ் செய்து விற்பனை செய்யத் தேவையான ரசனையிருந்தா போதும். ஆனாலும், ‘சென்னையின் பிரமாண்டமான மற்றும் பிராண்ட் கடைகளோட நீ எப்படிப் போட்டி போடுவே’ன்னு நிறைய பேர் கேட்டாங்க. அவங்களுக்கான பதில்... `இப்போ நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற ரெகுலர் கஸ்டமர்ஸ்தாம்'. செட்டிநாட்டுப் புடவைகளைப் பிரதானமா வெச்சு தொழிலை ஆரம்பிச்சாலும், கோயம்புத்தூர் புடவைகள், காஞ்சிபுரம் புடவைகள்னு வெளியூர் புடவைகள் முதல் ராஜஸ்தான் புடவைகள், பெங்கால் புடவைகள்னு வெளிமாநிலப் புடவைகள் வரை, அந்தந்த நேரத்தில் ட்ரெண்டிங்கா இருக்கும் புடவைகளை நேரடியா போய் கொள்முதல் செஞ்சுட்டு வந்து, எனக்குக் கட்டுப்படியாகும் விலையில் விற்க ஆரம்பிச்சேன். இப்படி பிராந்திய, பிரத்யேக கலெக்‌ஷன் ஒரே இடத்துல கிடைச்சதால, என் கடைக்கு குட் மார்க்ஸ் போட்டாங்க பெண்கள். கவர்ச்சித் தள்ளுபடி, விளம்பரம் எல்லாம் பெரும்பாலும் நடுத்தர பொட்டீக் கடைகளில் சாத்தியமில்லை. அதனால, பண்டிகைக் காலத்தை மட்டும் நம்பி இருக்காம, எல்லா காலங்களிலும் என்னோட பிசினஸ் தடையில்லாம நடப்பதற்கான யுக்திகளைச் சரியா செய்துடுவேன். அதில் தரம் மற்றும் விலைதான் முக்கியம். பண்டிகைக் காலங்களில் மக்கள் பெரிய கடைகளுக்குப் படையெடுப்பதால், என் வியாபாரம் குறையும். அந்த நேரத்தை வெளியூர்கள், வெளிமாநிலங்கள்னு பர்ச்சேஸ் வேட்டைக்குப் பயன்படுத்திக்குவேன்.

குறைந்தபட்சம் லட்சம் ரூபாய் இருந்தாலே இந்தத் தொழிலைத் தொடங்கி, அப்புறமா தொழிலைத் தேவைக்கேற்ப விரிவுபடுத்தலாம். சரியான திட்டமிடுதலோடு தொடங்கினால், ஆரம்பத்திலேயே பல ஆயிரம் வரை வருமானம் பார்க்க முடியும். இப்படி முதல் நாலு வருஷங்கள் கிடைச்ச அனுபவத்தாலதான், கடந்த மூணு வருஷங்களா கூடுதல் லாபம் கிடைக்குது. குறிப்பா, கஸ்டமர்களுக்குப் பிடிக்கிறது கிடைக்கிறதுவரை பொறுமையோட அட்டெண்ட் பண்ண வேண்டியது மிக முக்கியம்!”     

பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

பாரதி, ‘ஆரிக்கா’ பொட்டீக் - “கடைக்கு இணையான  வருமானம் ஆன்லைனிலும்!”

‘`நான் பார்த்துட்டு இருந்த ஐ.டி வேலையைக் குழந்தை பிறந்ததும் விட்டுட்டேன். செகண்ட் இன்னிங்ஸ் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவு பண்ணி, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி ‘ஆரிக்கா’ பொட்டீக்   தொடங்கினேன். பர்ச்சேஸ் முதல் சர்வீஸ் வரையிலான விஷயங்களைத் தேடித்தேடிக் கத்துக்கிட்டுத்தான் தொழிலுக்கு வந்தேன். ஆரம்பத்துல, மற்ற கடைகளைவிட கொஞ்சம் விலை குறைவா விற்பனை செய்தேன்.  அதோடு ஆன்லைன் விற்பனை, டெரகோட்டா ஜுவல்லரினு முயற்சிகள் எடுத்தேன். டிரெஸ்ஸிங் தொடர்பான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குரூப்களில் உறுப்பினரா சேர்ந்து, பெண்களின் ரசனையைத் தெரிஞ்சுக்கிட்டு, பின்னர் என் பொட்டீக்கின் முகநூல், வாட்ஸ்அப் பக்கங்களுக்குப் பெண்களை வர வெச்சேன். சொல்லப்போனா, பொட்டீக்ல கிடைக்கிற வருமானத்துக்கு இணையா, வாடிக்கையாளர்களின் முகம் பார்க்காமலேயே செய்யும் ஆன்லைன் விற்பனையிலும் கிடைக்குது.

இந்தத் தொழிலில் பெண்கள் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முகம் சுளிக்காம பதில் சொல்லணும். நம்ம தகவல் கள் அவங்களுக்குத் திருப்தியா இருந்தா, நம்ம கஸ்டமர் ஆகிடுவாங்க. ஒருவேளை, ‘இல்லை, வேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்கன்னா, `ஒரு கஸ்டமரின் ரசனையைத் தெரிஞ்சுக்கிட்டோம்’னு அதை பாசிட்டிவ்வா எடுத்துக்கணும்!”   

பொட்டீக்... பெண்களுக்கான ஏரியா!

அகிலா, மஹதீ’ஸ் பொட்டீக் “புது ட்ரெண்டை சீக்கிரமா கஸ்டமர்ஸ்கிட்ட அறிமுகப்படுத்தணும்!”

“நான் முழு நேரமா ஐ.டி நிறுவனத்தில் வேலை செஞ்சுட்டேதான் என் பொட்டீக்கை நடத்திட்டு வர்றேன். எல்லாம் டைம் மேனேஜ்மென்ட் மேஜிக். இப்போவெல்லாம் பெண்கள் டிரெஸ் வாங்கிறதுக்காக சம்பாதிக்கிறதுல பெருமளவு செல வழிக்கிறாங்க. அவங்கதான் எனக்கு இந்த ஐடியா தோன்ற காரணம். என் அண்ணி காயத்ரியுடன் சேர்ந்து எங்க வீட்டிலேயே ‘மஹதீ’ஸ் பொட்டீக்’  ஆரம்பிச்சுட்டேன். ‘இந்தியா மார்ட்’ ஆப் மூலமா சப்ளையர்ஸ் பிடிச்சு, அவங்ககிட்ட இருந்து டிரெஸ்ஸை வாங்கி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சேல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  உடைகள் சம்பந்தமான கண்காட்சிகள்ல தொடர்ந்து கலந்துக்கிட்டு கஸ்டமர் சர்க்கிளை விரிவுபடுத்திக்குவேன்.

ஒரு புது ட்ரெண்ட் உடைகள் அறிமுகமானால், அதை எவ்வளவு சீக்கிரம் நம்ம கடையில் கஸ்டமர்ஸுக்கு விற்பனைக்குக் கொடுக்கிறோம் என்பதுதான் இந்தத் தொழிலுக்கு அவசியமான வேகம். அப்போ தான் போட்டியைச் சமாளிக்க முடியும். அதுக்காக இந்தியா முழுக்க பல ஹோல் சேல் டீலர் களின் கான்டாக்ட் பிடிச்சு, புது ட்ரெண்டிங் டிரெஸ் வகைகளை உடனுக்குடன் வாங்கி என் பொட்டீக் டிஸ்பிளேவில் வெச்சுடுவேன். பொட்டீக்கைப் பொறுத்தவரை கஸ்டமர் வேறு கடை நோக்கி நகர்ந்துடாம இருக்க முக்கிய ஃபார்முலா இதுதான்!”