Published:Updated:

இந்திய மாணவர்கள் கொண்டாடும் இணையதள ஆசிரியை!

இந்திய மாணவர்கள் கொண்டாடும் இணையதள ஆசிரியை!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய மாணவர்கள் கொண்டாடும் இணையதள ஆசிரியை!

கற்பது கற்கண்டே!ஸ்ரீலோபாமுத்ரா

``ஆசிரியராக வேண்டும் என்பது என் கனவு. ஐ.டி வேலைக்குச் சென்றுவிட்டேன். ஆனால், இப்போது நாடு முழுக்கவும் இந்தியா தாண்டியும் எனக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். ஐ.டி வேலையையே விடும் அளவுக்கு இப்போது நான் பிஸி டீச்சர்’’ என்று சிரிக்கிறார் ரோஷிணி முகர்ஜி. இணையத்தில் இலவசப் பாடம் எடுக்கும் ஆன்லைன் ஆசிரியர். தன் www.examfear.com இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலமாக, ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ வகுப்புகளாக எடுக்கிறார்.       

இந்திய மாணவர்கள் கொண்டாடும் இணையதள ஆசிரியை!

ரோஷிணியின் வீடியோக்களை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக் கிறார்கள். பெங்களூரில் வசிக்கும் ரோஷிணியிடம் பேசினோம்.

``பள்ளியில் எங்கள் இயற்பியல் ஆசிரியர் மோகனின் கற்பித்தல் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப்போலவே எதிர்காலத்தில் ஆசிரியப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. எதிர்பாராதவிதமாக என் அப்பா மாரடைப்பால் மரணமடைய, குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். திருமணத்துக்குப்பின் ஒருநாள் யூடியூப்பில் ஒரு ரெசிப்பியைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சமையல், கிராஃப்ட், பாடல், நடனம் என பல துறைகளைச் சேர்ந்தவர் களும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக வீடியோக்களைப் பதிவேற்றி யிருப்பதைக் கவனித்தேன். என்னுடைய கற்பித்தல் கனவையும் அப்படி நிறைவேற்றிக்கொள்ளலாமே என்று தோன்றியது. என் யோசனை யைக் கணவரிடம் சொன்னபோது, ‘இன்று ஸ்கூல் ஃபீஸுக்குச் சமமாக ட்யூஷன் ஃபீஸும் கட்ட வேண்டி யிருக்கிறது. அதைச் சமாளிக்க முடியாமல் இருப்பவர்கள் பலர். அந்த எளிய குடும்பங்களின் மாணவர்களுக்கு உன் வீடியோக்கள் உதவியாக இருக்கட்டும்’ என்று ஊக்கப்படுத்தினார். 2011-ல் முதல் முயற்சியாக இயற்பியலின் அடிப்படைத் தத்துவங்களை வரைபட உதாரணங்களோடு எளியமுறையில் விளக்கி, ஒரு வீடியோ எடுத்து, யூடியூபில் பதிவேற்றினேன். அப்லோட் செய்த சில மணி நேரங்களிலேயே பலர் அதைப் பார்த்திருந்ததுடன் கமென்ட்களையும் பதிவிட்டிருந்தனர். அவர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு நானும் ரிப்ளை செய்ய, ‘வீ வான்ட் மோர் வீடியோஸ் மேம்’ என்றார்கள் உற்சாகத்துடன். அந்த உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டது’’ என்று பூரிக்கும் ரோஷிணியின் ஸ்பெஷல், மிக மிக எளிமையாகப் பாடங்களை விளக்குவது. அதனால் தான் அவரை மாணவர்கள் ‘இந்தியாவின் ஆன்லைன் ஆசிரியர் (India’s online Tutor)’ எனக் கொண்டாடுகிறார்கள்.

``ஆசிரியராகி வகுப்பறையில் பாடம் நடத்தியிருந்தால் கூட ஐம்பது மாணவர்களுக்குத்தான் எடுத்திருக்க முடியும். ஆனால், ஆயிரமாயிரம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் வாய்ப்பை இந்த வீடியோக்கள்  (இதுவரை 5,300) எனக்கு உருவாக்கித் தந்தன. காலையில் ஐ.டி நிறுவன வேலை, மாலை வீடு திரும்பிய பின் வீடியோ வேலை என வாழ்க்கை ஓடியது. தினமும் 3-4 மணி நேரமும், விடுமுறை தினங்களில் 14 மணி நேரம் வீடியோ எடுப்போம். சில வீடியோக்களுக்கு இரண்டு நாள்கள் செலவிட்டதும் உண்டு. ஆனாலும், ‘ஈஸியா புரிய வெச்சிட்டீங்க மேம்’ என்று சொல்லும் மாணவர் களின் கமென்ட்கள் போதும், எங்களின் களைப்பை எல்லாம் கரைப்பதற்கு.

இப்போது ஐ.டி பணியிலிருந்து விடுபட்டு, முழுநேரமாகவே ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் கவனம் செலுத்துகிறேன். அடுத்ததாக ஆங்கிலப் பாடங்களையும் வீடியோக்கள் மூலம் எடுப்பது, கணிதம், அறிவியல் பாடங்களைத் தமிழ், கன்னடம், பெங்காலி மொழிகளில் மொழிபெயர்த்துப் பதிவிடுவது உள்ளிட்ட ஐடியாக்கள் இருக்கின்றன’’ என்கிற ரோஷிணி, இந்திய அரசு நூறு பெண்களுக்கு வழங்கிய ‘சாதனைப் பெண்மணிகள்’ விருதை, சென்ற ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து பெற்றிருக்கிறார்.

ஆன்லைன் டீச்சரின் கைகளில் ஜொலிப்பது விருது மட்டுமல்ல... பல மாணவர்களின் எதிர்காலமும்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz