Published:Updated:

‘ஒரு போட்டோவில் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை!’

‘ஒரு போட்டோவில் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஒரு போட்டோவில் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை!’

செய்திக்குப் பின்னே சில சிந்தனைகள்நிவேதிதா லூயிஸ்

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்திலும், அதுபோன்ற அநியாயச் செயல்கள் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் கசப்பான நிதர்சனம். பல நேரங்களில் குற்றவாளிகள் தப்பிவிடுவதும், கொடுமைக்கு ஆளானவர்களே சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாவதும் பதைபதைக்க வைக்கின்றன. இந்நிலையில், 2017 மே 24 அன்று ஹரியானாவின் சோன்பெட்  மாவட்டத்தின் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஓர் ஆணித்தரமான தீர்ப்பைச் சத்தமே இல்லாமல் அளித்திருக்கிறது. நீதிபதி சுனிதா குரோவர், கற்பழிப்பு வழக்கு ஒன்றில் வாட்ஸ்அப் செய்திகளை முக்கியச் சாட்சியாக ஏற்றுக்கொண்டு மூன்று குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருக்கிறார்.   

‘ஒரு போட்டோவில் முடிந்துவிடுவதல்ல வாழ்க்கை!’

சோனிபட்டில் உள்ள ஓ.பி.ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் 18 வயது மாணவி ஒருவரை, அதே பல்கலைக்கழக சீனியர் மாணவர்கள் மூவர், இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மிரட்டி வாட்ஸ்அப், ஸ்கைப் என்று டெக்னாலஜியை உபயோகித்துப் பணிய வைத்திருக்கிறார்கள். இருபது வயதேயான அந்த மிருகங்கள் - சட்டம் பயின்ற மாணவர்கள்... அதில் ஒருவன் கோல்டு மெடலிஸ்ட் வேறு. குற்றவாளிகளின் பலம் பொருந்திய பின்னணி, அவர்களிடம் சிக்கிய பெண்ணின் மன, உடல் உளைச்சலை அதிகரித்திருக்கிறது. எஃப்.ஐ.ஆர் முதலில் மறுக்கப்பட்டு, ஒரு நல்ல அதிகாரியின் தலையீட்டால் இறுதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2015-லிருந்து இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்துக்குப் பின், ஒருவழியாக நீதி கிடைத்திருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் மட்டுமே முக்கியச் சாட்சியான தனது செல்போனை ஒப்படைத்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட உதவியிருப்பது அவரிடம் இருந்த வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே.

ஒரு மாத பழக்கத்தையே காதல் என்று நம்பிய அந்தப் பெண், வற்புறுத்தலின்பேரில் தனது அந்தரங்கப் படம் ஒன்றை முக்கியக் குற்றவாளி ஹர்திக் சிக்ரிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருக்கிறார். அதுவே அவருக்கு வினையாக முடிந்துவிட்டது. தன் இரு நண்பர்களுடன் அந்தப் படத்தைப் பகிர்ந்த ஹர்திக், தன் விருப்பத்துக்கு இணங்காவிட்டால் பல்கலைக்கழக வலைதளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்ட, பயந்துபோன பெண், வேறுவழியில்லாமல் அதற்குச் சம்மதித்தார். கூடவே ஹர்திக்கின் இரு நண்பர்களும் சேர்ந்துகொள்ள, இரண்டு ஆண்டுகள் அவர்களிடம் சிக்கித் தவித்திருக்கிறார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்.

இந்த வழக்கில் நம் பெண்களுக்கான  பாடங்கள் சில...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• எலெக்ட்ரானிக் டேட்டா (மின்னணு தகவல்கள்) இதுபோன்ற வழக்குகளில் சாட்சிகளாக ஏற்கப்படாது என்ற பொதுப் புத்தியில் மாற்றம் தேவை. வாட்ஸ்அப் செய்திகளை ஒரு வழக்கில் முக்கியச் சாட்சியாக ஏற்றுத் தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதன் முறை. எனவே, போதிய சாட்சியம் இல்லை என்ற பயம் தேவையற்றது.

• `ஒரு போட்டோவில் முடிந்துவிடுவது அல்ல வாழ்க்கை’ என்பதைப் பெண்கள் உணர வேண்டும். குடும்ப ‘மானமும்’, பெண்ணின் ‘மரியாதையும்’ பெண்ணிடம் மட்டுமே இல்லை. அவள் புகைப்படத்திலும் இல்லை. ‘மார்ஃபிங் செய்வேன்’, ‘மற்ற வெப்சைட்டுகளில் வெளியிடுவேன்’ போன்ற மிரட்டல்களைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். இந்தத் தெளிவு இல்லாமல் போனதால்தான் சேலம் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார்.

• பிரச்னை ஏற்பட்டால் துணிச்சலாகக் காவல்துறையை அணுகுங்கள். நேரடியாக முடியவில்லை என்றால், இணையம் மூலமாகவே புகார் அளிக்க முடியும். https://goo.gl/dyw6V3 என்ற லிங்க்கில் எந்தப் பயமுமின்றி புகார் அளிக்கலாம். இணையதளக் குற்றங்களும் இவற்றில் அடங்கும்.

• மின்னணுத் தகவல்களாக உங்கள் அந்தரங்கப் புகைப்படங்களை எப்போதும் எந்த அம்பிகாபதிக்கும் மஜ்னுவுக்கும் ‘தெய்விக’ காதல் என்று நம்பிப் பகிர வேண்டாம். ஸ்கைப் போன்ற வீடியோ கால்கள் பேசும்போது கூடுதல் கவனம் தேவை.

• இத்தகைய சிக்கல்களில் பெரிய எதிரியாக நிற்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி. பிள்ளைகளிடம் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் பெற்றோரிடம் எந்தத் தகவலும் எளிதாக வந்து சேரும். பிள்ளைகள் மனம்திறந்து பெற்றோரிடம் பேசி, தகவல்களைப் பகிர்ந்து கொண்டால், இதுபோன்ற சிக்கல்களை ஆரம்பத்திலேயே அறிந்து தவிர்த்துவிடலாம். தகவல் தெரியவந்த பின்பும், தம் குழந்தை மீதான நம்பிக்கையே பெற்றோருக்குப் பிரதானமாக இருக்க வேண்டும், `நடந்தது சிறிய தவறுதான்; அதைச் சரிசெய்துவிட முடியும்’ என்கிற தெளிவையும் பிள்ளைகளுக்குத் தர வேண்டும்.

• பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இதர தகவல் பரிமாற்ற சமூகதளங்களில் எப்படிப் பாதுகாப்பாக நடந்துகொள்வது என்பதைக் கற்றுத் தரலாம். மாணவ/மாணவியரின் மீது ஒரு பாதுகாப்பான இடைவெளியில் கவனம் இருத்தல் நலம்.

சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகும் சூழலில், அவற்றைக் கவனமாகக் கையாள்வது மிகமிக அவசியம். கூடவே, நம் பெண்களிடம் தன் உடல்மீதான முழு உரிமையும் அவளுக்கு மட்டுமே உள்ளது என்கிற தெளிவும், அதில் கவனமும் தேவை. மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்மையும் நம் குழந்தைகளையும் துணிவுடன் தயார் செய்வோம்... துயரம் தவிர்ப்போம்!