Published:Updated:

பனிவிழும் ‘புடவை’ வனம்!

பனிவிழும் ‘புடவை’ வனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பனிவிழும் ‘புடவை’ வனம்!

ஜில் க்ளிக்ஸ்இந்துலேகா.சி - படங்கள்: பகத்குமார்

ப்பாவின் தலைதுவட்டும் துண்டை உடலில் சுற்றிக்கொண்டு, கண்ணாடி முன் நின்று கண்சிமிட்டி வெட்கப்படுவதில் ஆரம்பிக்கிறது பெண் குழந்தையின் புடவை காதல். மணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, சீர்செனத்திகளோடு எடுத்துவந்த தன் அம்மாவின் புடவைதான் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

ஆடைகளில் பல வகைகள் இருந்தாலும் பெண்களைத் தேவதைகளாகக் காட்டும் சக்தி புடவைகளுக்குண்டு. என்னதான் நவீன உடைகளுக்கு மெதுமெதுவாக மாறிக்கொண்டு வந்தாலும் வீட்டு விசேஷங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என விழாக்காலங்களில் பெண்களின் முதன்மைத் தேர்வாக இருப்பவை புடவைகள்தான். அதிலும் பட்டுப்புடவைகளைப் பெண்கள் பார்த்துப் பார்த்து பத்திரப்படுத்துவதிலிருந்தே   பாரம்பர்யம் மாறாத அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். உடலின் வடிவமைப்போடு நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவை, அதற்குரிய ஆபரணங்கள் எனப் புடவை விளம்பரத்தில் மிடுக்காகத் தோன்றும் மாடலைப் பார்க்கும்போது பெண்கள் தங்களை அந்தப் புடவையில் பொருத்திப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். புடவைகளின் நிறம், டிசைன், விலை என பல தகவல்களையும் தெரிந்துகொள்ள விரும்புவதிலேயே புடவை விளம்பரங்கள் பெண்களை எளிதில் கவர்வதைப் புரிந்துகொள்ள முடியும்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பனிவிழும் ‘புடவை’ வனம்!

இப்படி பெண்களைக் கவர்கிற விளம்பரங்களை உருவாக்குவது  எளிதல்ல. அதற்கான மெனக்கெடல் அதிகம். அந்த வகையில் பட்டுப் புடவைக்கான விளம்பரத்துக்காக பத்து நாள்கள் இமயமலைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் சென்னையில் உள்ள ‘மக்கா ஸ்டூடியோ’வின் நிறுவனர் மற்றும் ஃபேஷன் புகைப்படக் கலைஞர் பகத்குமார்...    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

“பொதுவா புடவை விளம்பரங்களை, குறிப்பாகப் பட்டுப்புடவை விளம்பரங்களைக் கோயில், வயல்வெளி அல்லது திருமண வீடு மாதிரியான செட் போட்டு எடுப்பதுதான் வழக்கம். இதைத் தாண்டி வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்று சென்னையில் உள்ள, பாலம் சில்க் சாரீஸ் அளித்த ஆஃபர்தான் இமயமலை ஷூட் கான்செப்ட்.  என் நண்பரும் கேமராமேனுமான நரசிம்மன் மற்றும் அனுஷா, அர்ச்சனா, சாஹித்யா  ஆகிய மூன்று மாடல்களோடு, இருபது பட்டுப்புடவைகள், கேமராக்கள் சகிதம் தயாரானோம். மும்பை, அங்கிருந்து சண்டிகர் வரை ஃபிளைட்... சண்டிகர்ல இருந்து காரில் சிம்லா.    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

சிம்லா வரைக்கும் ஊட்டி மாதிரியான ஒரு மிதமான குளிரை ரசிச்சிட்டு இருந்தோம். ஆனா, காஸாவுல காலை வெச்சதும், ‘அய்யய்யோ, ஷூட்டிங் சொதப்பிடுமோ’ன்னு தோணுற அளவுக்கு மைனஸ் டிகிரி குளிர்ல, மொத்த யூனிட்டும் கிட்டத்தட்ட உறையுற நிலைக்குப் போயிட்டோம். நாங்க தங்கின எடத்துல இருந்த கிச்சன்ல, அடுப்பைச் சுத்தி அரை மணி நேரம் உட்கார்ந்து எழுந்ததும்தான் கொஞ்சம் நார்மலா ஆனோம்” எனும் பகத்குமார், 12 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி குளிரில் சந்தித்த சவால்களைச் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறார்...

“நாங்க தங்கியிருந்த இடம் ஹோட்டல் இல்லை... ஒரு கிராமத்து வீடு. அங்க ஒருநாளைக்கு மூணு மணி நேரம்தான் கரன்ட் இருக்கும். ஷூட்டுக்கான இருபது புடவைகளையும் மடிச்சு வெச்சு எடுத்துட்டு வந்தா, அயர்ன் செய்ய முடியா துன்னு, பி.வி.சி பைப்ல புடவையைச் சுத்தி எடுத்துட்டு வந்தோம். அப்புறம், தெர்மல் வேர், பனிப்பிரதேசத்துல போடறதுக்கான பிரத்யேகமான சாக்ஸ், ஷூ, கிளவுஸ், ஃபர் ஜாக்கெட்னு குளிர் தாங்குறதுக்கான விஷயங் களுக்கு மட்டுமே எண்பதாயிரம் ரூபாய் பட்ஜெட் ஆச்சு. இப்படி ஷூட்டுக் கான ப்ரீ பிளான்லயே நிறைய சவால்கள்.   

பனிவிழும் ‘புடவை’ வனம்!

முதல் நாள் ஷூட்டில் நடுங்கவைக்கும் குளிர்ல மூணு மாடல்களோட மூக்கு, காதுமடல் எல்லாம் சிவந்தது... குளிர், மேக்கப்னு ஸ்கின் வறண்டு போகறது எனச் சில பிரச்னைகளை ஒருவழியா சமாளித்து முடித்தோம். முதல் நாள் அனுபவத்துல அடுத்தடுத்த நாளில் மாய்ஸ்ச்சரைஸர், லிப்ஸ்டிக், காஜல் மட்டுமே மேக்கப்பா உபயோகித்து ஷூட்டை முடித்தோம். அதுவும் புடவையில் இருந்த  மாடலுக்குக் குளிர் தாங்க முடியாம போய், ஒரு படம் எடுத்ததுமே, கார்ல ஹீட்டர் ஆன் செஞ்சு, கொஞ்ச நேரம் வெதுவெதுப்பாகிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அடுத்த படத்தை எடுத்தோம்.

பனிவிழும் ‘புடவை’ வனம்!

அடுத்ததா லைட்டிங்... சுத்தி ஒரே பனிமலைங்கறதால சூரிய வெளிச்சம் எல்லா இடத்துலயும் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால லைட்டிங்ல ஒரு பிரச்னையும் இல்ல. ஆனால், சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பிச்சுடும். அதனால ஷூட்டை வேகமா முடிக்க வேண்டிய கட்டாயம். ஒரு நாளுக்கான ஷூட் முடியறதுக்குள்ள நான் துவண்டு போயிடுவேன்; உடம்பெல்லாம் விறைச்சுடுற நிலைமைக்கு வந்துடுவேன். என்னை அப்படியே கைத்தாங்கலா அடுப்படிக்கு கூட்டிட்டுப் போய் படுக்க வெச்சுடுவாங்க. அந்தக் கதகதப்பில்தான் பழைய நிலைமைக்கு திரும்ப முடியும்’’ என்று தன் அனுபவங்களை ரசித்துச் சொல்வதிலேயே, நம்மையும் இருந்த இடத்தில் இருந்தே இமயமலைக்கு அழைத்துச் செல்கிறார் பகத்குமார்.    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

“உயரமான இடத்துல இருந்ததனால ஆக்ஸிஜன் குறைவு ஏற்படும். உமிழ்நீர் குறைவாத்தான் சுரக்கும்... அதனால ஒழுங்கா சாப்பிட முடியாது; நீர்ச்சத்து குறையும். இப்படி எத்தனையோ பிரச்னைகளுக்கும் நடுவில் ஒரே ஆறுதல்... அந்தக் கிராமத்து மக்களோட அன்புதான். ஷூட்டிங்  நேரத்துல யார் வீட்டுக் கதவைத் தட்டித் தாகத்துக்குத் தண்ணி, பசிச்சா ரொட்டின்னு எதைக் கேட்டாலும் உடனே தருவாங்க.     

பனிவிழும் ‘புடவை’ வனம்!

அங்கே எங்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம் ‘யாக்’ மாடு. பார்க்கப் பயங்கரமான தோற்றத்தில் இருக்கும். ஆனா, நாம ரெண்டு அடி வெச்சா அது நாலடி பின்னாடிப் போகும். அந்த அளவுக்கு அப்பாவி. அதனுடனும் படம் எடுத்துட்டு, ஒரு வழியா பத்து நாள் ஷூட்டிங்கை முடித்துத் திரும்பினோம்.

பொதுவாவே புடவைக்கான ஷூட்டிங்கில் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.  இமாலயா ஷூட், அதிலும் ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது. அதோட, இந்தியாவிலேயே பட்டுப்புடவைக்கான முதல் பனிப்பிரதேச ஷூட் இதுதான்னு பெருமையாவும் இருக்கு’’ எனும் பகத்திடம், புடவை ஷூட்டிங்கின் அடிப்படை பற்றிக் கேட்டோம்.    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

``புடவைக்கான விளம்பரப் படங்களை இரண்டு விதமா பிரிக்கலாம். ஒண்ணு கேட் லாக் ஷூட், இன்னொண்ணு கேம்பைன் ஷூட். கேட்லாக் ஷூட்டில் மாடல்களைக் கிட்டத்தட்ட அலங்காரம் செய்த பொம்மை மாதிரி படம் எடுத்து முடிச்சுடலாம். கேம்பைன் ஷூட்டில், அதிக வேலைப்பாடு நிறைந்த ஒரு புடவையை அணியும் மாடலை, கிட்டத்தட்ட ஒரு மகாராணியாகவே மாத்திடுவோம். இதற்காக அரண்மனை மாதிரியான இடங்களில் ஷூட்டிங் எடுப்போம். எப்போதும் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கும் மாடலின் முகத்தில் ஒரு கம்பீரமான முகபாவனையைக் கொண்டுவருவது போன்ற  மெனக்கெடலும் அதிகமாக இருக்கும். கேட்லாக் ஷூட்டில் புடவையின் நிறம், டிசைன் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இதைப் பார்ப்பவர்களுக்கு இந்தக் கடையில், இப்படிப்பட்ட புடவைகள் இருக்கின்றன என்கிற தகவல் கிடைக்கும். அதுவே கேம்பைன் ஷூட்டில் வெறுமனே புடவையின் டிசைன்களை மட்டும் காட்டாமல், மாடல், பேக்ரவுண்ட் முதலியவற்றைச் சேர்த்து உணர்வுபூர்வமான படமாக எடுப்பதால் அந்த உணர்வு படத்தைப் பார்ப்பவரை ‘இந்தப் புடவையை நாம் கட்டினால் எப்படி இருக்கும்?’ என நினைக்கவைத்து, புடவையை வாங்கத் தூண்டும்.    

பனிவிழும் ‘புடவை’ வனம்!

எத்தனை விதமான உடைகளை அணிந்தாலும், ஒரு பெண்ணைக் கம்பீரமாக உணரச்செய்து, நளினமாகவும் காட்டுவது புடவை மட்டுமே. வெஸ்டர்ன் டிரெஸ் ஷூட் நடக்கும் நேரத்தில் படங்களை மாடலிடம் காட்டும்போது ‘நைஸ்’னு ஒரு வார்த்தையில கடந்துடுவாங்க. அதே மாடலுடன் புடவை ஷூட் செய்யும்போது படங்களைப் பார்த்து ‘ஹவ் ஹோம்லி ஐயாம்!’னு ஒரே செல்ஃபியா எடுத்து இன்ஸ்டகிராம்ல அப்டேட் பண்ணிப்பாங்க!’’

- தன் கேமரா காதலுடன் பெண்களின் புடவைக்காதலையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது பகத்குமாரின் பேச்சு.