Published:Updated:

ஃபேஷன் ஜுவல்லரி... பேஷ் பேஷ் வருமானம்!

ஃபேஷன் ஜுவல்லரி...  பேஷ் பேஷ் வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஷன் ஜுவல்லரி... பேஷ் பேஷ் வருமானம்!

சிறப்பான வெற்றிகு.ஆனந்தராஜ் - படம்: ரா.வருண் பிரசாத்

“எந்தப் பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை என்றாலும், என்மீது நம்பிக்கை வெச்சு நான் ஆரம்பிச்ச இந்த ஃபேஷன் ஜுவல்லரி தொழில், இன்னிக்கு வடமாநிலங்கள், வெளிநாடுகள் வரை விற்பனையில் கலக்கிட்டு இருக்கு!’’ - மகிழ்ச்சியுடன் சொல்கிறார் விமலா. சில்க் த்ரெட் மற்றும் டெரகோட்டா நகைகள் ஹோல்சேல் விற்பனையில் லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் சென்னை பெண். 

ஃபேஷன் ஜுவல்லரி...  பேஷ் பேஷ் வருமானம்!

“பி.காம், எம்.எஃப்.எம், எம்.பி.ஏ படிச்சுட்டு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துட்டு இருந்தேன். திருமணமாகி மகன் ஹேம்ஹாசனும், மகள் ஓவியப்பிரியாவும் பிறந்தாங்க. ஓவியா சிறப்புக் குழந்தை என்பதால் அவளைக் கவனிச்சுக்கிறதுக்காக வேலையை விட்டுட்டேன். யூடியூப்ல பொழுதுபோக்கா டெரகோட்டா ஜுவல்ஸ் செய்யக் கத்துக்கிட்டேன். அப்படி நான் செஞ்சு அணிந்துகொண்ட நகைகளைப் பார்த்தவங்க, ‘எங்களுக்கும் செஞ்சு கொடுங்க’னு கேட்க, வீட்டில் இருந்தே சில்க் த்ரெட் மற்றும் டெரகோட்டா ஜுவல்ஸ் செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கண்காட்சிகளில் ஸ்டால் போட்டேன். வீட்டில் ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங் வொர்க்‌ ஷாப்புகளும் நடத்தினேன். இப்படியே நாலு வருஷம் ஓடின நிலையில, ‘ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு பிசினஸை அடுத்த கட்டத்துக்கு நகர்த்து’னு கணவர் ஆலோசனை சொன்னார். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘ஓவியா ஃபேஷன் ஜுவல்ஸ்’ வெப்சைட் ஆரம்பிச்சு, நகைகளின் படங்கள், மெட்டீரியல் விவரங்களோடு அப்லோடு செய்தேன். இன்னொருபக்கம் வெளிமாநில, வெளிநாட்டு ஹோல்சேல் டீலர்களின் அறிமுகங்களைப் பிடிச்சேன். பிசினஸ் டாப் கியர்ல போக ஆரம்பிச்சுடுச்சு’’ என்கிறவர், தன்னிடம் பயிற்சி பெற்றவர்களின் மூலமாகவே பிசினஸை விரிவுபடுத்தியிருக்கிறார்.

“அடுத்தடுத்து ஆர்டர்கள் அதிகமா வர, எங்கிட்ட பயிற்சி பெற்றவங்களையே தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தினேன்.  அதனால, மேன் பவர் பற்றின கவலை இல்லாம தொழில் நகர்ந்தது.

வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கிட்டே தொழிலையும் செய்றதால பல மடங்கு உழைப்பை என்னால கொடுக்க முடியுது. எந்த மெட்டல், மெட்டீரியலில் புது ட்ரெண்ட் நகைகள் அறிமுகமானாலும், அந்த வடிவமைப்பை சில்க் த்ரெட், டெரகோட்டா ஜுவல்ஸிலும் செய்து, சாம்பிள் பீஸ்களை அனுப்பி வெச்சிடுவேன். டீலர்ஸ் வட்டாரம் பலமானதும் விரிவடைந்ததும் இப்படித்தான்’’ என்கிறவர், தன் ஆர்டர்கள் பற்றியும் கூறுகிறார்.

‘`இப்போ வீட்டின் கீழ் போர்ஷன்ல ரெண்டு அறைகளை ஒதுக்கி, மூணு பெண்களை நியமித்து வேலை பார்த்துட்டிருக்கோம். எங்கிட்ட பயிற்சி எடுத்த 30 பெண்களுக்கு என்னோட ஆர்டர்களைப் பிரிச்சுக் கொடுக்கிறேன். ரீடெயில் வருமானம் உண்டு என்றாலும், வடமாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளுடான ஹோல்சேல் விற்பனைதான் பிரதானம். ஒவ்வொரு ஆர்டரையும் செய்துமுடிக்க ஒரு சில மாதங்கள் ஆகும். குறிப்பா, இப்போ சில்க் த்ரெட் ஆர்டர்கள்தான் வந்துட்டே இருக்கு. ஆரம்பத்துல சில ஆயிரங்கள் வருமானம் தந்த இந்தத் தொழிலை, ‘இதுக்காகவா இவ்வளவு உழைக்கணும்’னு நினைக்காம நம்பிக்கையோடு இருந்ததோட  பலன், இன்னிக்கு மாசம் ரெண்டு லட்சத்துக்கும் மேல வருமானம் பார்த்துட்டு இருக்கேன்’’ எனும்போது விமலாவின் முகத்தில் அந்த உழைப்பின் ஊதியம் புன்னகையாக மலர்கிறது.

‘`தொழில் வெற்றி என்பதைவிட, ஒரு சிறப்புக் குழந்தையின் அம்மாவோட வெற்றியா இதை நான் ரொம்ப மதிக்கிறேன். காரணம், பொதுவா ஸ்பெஷல் சில்ட்ரனின் பெற்றோர் ஒருவித அழுத்தத்தில் இருப்பாங்க. சந்தோஷம், சாதனைகளில் இருந்தெல்லாம் தாங்கள் ரொம்ப தூரமா இருக்கிறதா நினைப்பாங்க. அந்த எண்ணத்தைத் தகர்த்து, அவங்களுக்கு ஒரு முன்னுதாரணமா நான் இருந்தா, அதைவிட பெரிய சந்தோஷம் இல்லை எனக்கு” என்ற விமலா, பள்ளி முடித்து வந்த ஓவியாவைக் கவனிக்க ஆயத்தமானபடி நமக்குக் கையசைக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz