Published:Updated:

RJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்!

RJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
RJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்!

படங்கள்: தே.அசோக் குமார்

டகத் துறையின் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சக பெண்களைச் சந்தித்து உரையாடுகிறார் ஆர்.ஜே கண்மணி.இந்த இதழில் `க்ரியேட்டிவ்' ஸ்ரீரஞ்சனி...

`ட்ரெண்ட் லவுட்’ என்றழைக்கப்படும், யூடியூப் நிறுவனங்களை நடத்தும் டிஜிட்டல் நிறுவனத்தில், `க்ரியேட்டிவ்' என்கிற  பொறுப்பில் செயல்படும் ஸ்ரீரஞ்சனி, என் நீண்டகால தோழியும்கூட!     

RJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்!

ப்ளஸ் டூ முடித்தவுடன் எதனால் ஊடகத்துறையைத் தேர்ந்தெடுத்தீங்க? அதுதான் கனவா?

``டெலிவிஷன் புரொடக்‌ஷன்தான் என் கனவு. சிறு வயதில் நிறைய சேனல்களில் போட்டிக்காகப் பங்கெடுத்தபோது, புரொடக்‌ஷன் கற்றுக்கொள்ளும் ஆவல் இருந்தது. எலெக்ட்ரானிக் மீடியா படித்து ரேடியோ மூலம் ஊடகத்துறைக்குள் நுழைந்தேன்.''

ஊடகத்தில் ஆண்களும் பெண்களும் வாய்ப்பு ரீதியாகச் சமமாக இருக்கிறார்களா?

``எண்ணிக்கை அடிப்படையில் ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள். பெண்களின் பங்கும் குறைந்து போய்விடவில்லை; அது வளர்ந்துகொண்டேதான் வருகிறது. பெண் வண்ணமயமானவள். அவள் இன்றி ஊடகமே இல்லை. பணிகளைப் பொறுத்தவரை ஆண் - பெண் என்கிற பாரபட்சமின்றி வேலை பளுவையும் அதன் அழுத்தங்களையும் சரி சமமாகத்தான் எதிர்கொண்டு வருகிறார்கள்.’’

ரிட்டயர்மென்ட் காலம் வரை ஆணால் மீடியாவில் இருக்க முடிகிறது. பெண்ணால் முடிவதில்லையே... ஏன்?


``மீடியாவில் `ஆன் ஸ்க்ரீன்’, `ஆஃப் ஸ்க்ரீன்’ என்று இரண்டுவிதமான பணிகள் உள்ளன. அதிக அளவில் பெண்கள் ஆஃப் ஸ்க்ரீனுக்கு வரும்பட்சத்தில் மீடியாவில் நிலைத்து நிற்க முடியும். ரேடியோ, டி.வி போன்ற ஊடகங்களில் மேலதிகாரிகளாகப் பெண்கள் கோலோச்சுகிறார்கள். ஆன் ஸ்க்ரீனில் சற்றுக் குறைந்த காலமும், ஆஃப் ஸ்க்ரீனில் நீடித்த ஆயுளும் கிடைக்கிறது பெண்களுக்கு. ஆன் ஸ்க்ரீனில் நீடித்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்; அவர்களுக்கேற்ற பாத்திரங்கள் படைக்கப்பட வேண்டும்; அவர்கள் கொண்டாடப்பட வேண்டும்.’’

மீடியாவில் இருப்பவர்கள்மீது கிசுகிசுகள் அதிகமாக வருகிறதே... ஏன்?


`` `இவங்க இப்படி இருக்காங்களே, பேசறாங்களே, நடிக்கறாங்களே... நிஜமா இவங்க வாழ்க்கையில எப்படி?’ என்கிற குறுகுறுப்புதான் மீடியாவில் இருக்கிறவங்களைப் பத்தி கிசுகிசு உருவாகவும் பரவவும் காரணம். ஷில்பா ஷெட்டி ஒரு பேட்டியிலே சொல்லியிருந்தாங்க... `என்னைப் பத்தின கிசுகிசுக்களுக்கு நான் யாரையும் குறை சொல்லவும் இல்லை, யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை (Don’t complain; Don’t Explain). எனக்கு அந்த பாலிசி ரொம்ப பிடிச்சிருக்கு. அதையே என் பதிலாகவும் தர விரும்பறேன்.’’

`ஜோடி நம்பர் 1’  போன்ற போட்டிகள்ல பங்கேற்றது, ரேடியோ நிகழ்ச்சிகள், குடும்பம், உறவினர்கள் என்று ஏகப்பட்டது இருக்கு. வெறும் 24 மணி நேரத்தை வெச்சுக்கிட்டு இதையெல்லாம் எப்படி மேனேஜ் பண்றீங்க?

``டைம் மேனேஜ்மென்ட்டைப் பொறுத்த வரை நாம ஆண்களிடமிருந்து கத்துக்க வேண்டியது ஒண்ணு இருக்கு கண்மணி. ஐஸ்க்ரீம் சாப்பிடணும்னு ஒரு பையன் நெனைச்சான்னா, போய்ச் சாப்பிட்டு வந்துடுவான். அதே ஒரு பொண்ணு நெனைச்சா, `இப்போ சாப்பிடலாமா? வீக் எண்ட்ல  சாப்பிடலாமா? சாப்பிட்டா குண்டாயிடுவோமே? அப்பறம் அந்த வெயிட்டை எப்படிக் குறைக்கிறது?’னு யோசிச்சுப் பார்த்துட்டுதான் சாப்பிடுவா. ஆண்கள் மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியா, ஒன்றோடு ஒன்றோடு சம்பந்தப்படுத்திக்காம செய்யறது வாழ்க்கையைச் சுலபமாக்கும்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
RJ கண்மணி அன்போடு... - மீடியாவில் சாதிக்க மூன்று கட்டளைகள்!

உங்க நேரத்தை நீங்க உங்க கட்டுப்பாட்டில் வெச்சுக்கலைன்னா, அப்புறம் உங்களால எதையுமே நிர்ணயிக்க முடியாது. ஒரு பெண் அவளோட அவளுக்கான நேரத்தை மதிச்சு பிளான் பண்ணி வாழ்க்கை நடத்தினா, வெற்றியடைய முடியும். `என் நேரத்தை எவ்ளோ வேணும்னாலும் மற்றவர்கள் உபயோகிச்சுக்கலாம்’னு மட்டும் இருக்கவே கூடாது.’’

பெண்ணியம் என்பதை எப்படிப் பார்க்கறீங்க ஸ்ரீரஞ்சனி?

`` `ஆண் பெருசா... பெண் பெருசா’ என்பது பெண்ணியம் அல்ல. இருவரும் சமமானவர்கள் என்பதே பெண்ணியம். இப்போவெல்லாம் `நான் பெண்ணியவாதி’ என்று சொன்னாலே `அய்யய்யோ’ என்று அலறி ஒதுங்கும் அளவுக்குத் தவறாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பெண்ணியம் என்பது வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும். `இது பெண்களின் வேலை... இது ஆண்களின் வேலை’ என்று பாகுபடுத்தக் கூடாது. வேலைக்காகவும், நண்பர்களோடவும் நள்ளிரவுகளில் இருந்திருக்கிறேன். அந்த நேரத்தில் நான் பாதுகாப்பாகவே உணர்ந்திருக்கிறேன். `என்னை என்னால எந்தச் சந்தர்ப்பத்திலும் பாதுகாத்துக்கொள்ள முடியும்’ என்கிற தன்னம்பிக்கை உணர்வும் பெண்ணியமே!’’

மீடியாவில் உங்க குறிக்கோள் எதை நோக்கியது?

``நிறைய பெண்கள் ஊடகத்துறைக்கு வரணும்னு விரும்பறேன். சென்னை மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தெல்லாம் பலர் இன்டெர்ன்ஸ் ஆக வராங்க. சும்மா வெட்டியா நேரத்தை ஒட்டாம நல்லா வேலை கத்துக்கறதுக்கும், அவங்கவங்க கனவை அடைய உதவறதுக்கும் அவங்களுக்காக என் நேரத்தை முதலீடாக்க விரும்பறேன். இன்னும் 10-15 வருடங்களில் `மீடியா வழிகாட்டிக் கூடம்’ ஒன்றை அமைப்பேன். தேவையான தொழில்நுட்பங்களோடவும், எல்லா வசதிகளோடவும் கூடிய ஒரு பயிற்சிப் பட்டறையா அது விளங்கும். அதோட, பிசினஸ் மாடல் பத்தி எல்லாம் யோசிக்க எனக்கே இன்னும் அனுபவமும் பயிற்சியும் வேணும். ஆனா, அது என் நீண்ட கால கனவு.''

எங்கேயோ இதைப் படிச்சுட்டு இருக்கிற ஒரு ஸ்ரீரஞ்சனி, இந்த ஸ்ரீரஞ்சனி போல மீடியாவில் சாதிச்சுப் புகழடையணும்னா, அவள் என்னென்ன பாலிசி வெச்சுக்கணும்? மூணே மூணு பாய்ன்ட் சொல்லுங்க...

• `` `எந்த வேலையைக் கொடுத்தாலும் சாக்குபோக்குச் சொல்லாம செஞ்சு முடிப்பா'ங்கிற பேரைச் சம்பாதிக்கணும். `இவகிட்ட ஒரு வேலையைக் கொடுத்தா கண்டிப்பா நடக்கும்’ என்கிற நம்பிக்கையை உண்டாக்கணும்.

• இந்த வேலையை இவளால் மட்டுமே முடிக்க முடியும் என்கிற ஒரு தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அது அழகியலா இருக்கலாம்; கற்பனைத்திறனா இருக்கலாம்; திறம்பட நடத்தறதா இருக்கலாம். எடுத்த உடனேயே இந்தத் தனிச்சிறப்பு ஒருவருக்கு இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால், கண்டிப்பா `என்னோட தனிச்சிறப்பு என்ன’னு தன்னையே கேள்வி் கேட்டுக் கண்டுபிடிச்சு அதை வளர்த்துக்கணும்.

• பொறுமை... (சிரிக்கிறார்) ஆமாம்... பொறுமை ரொம்ப முக்கியம். பொறுமையால காரியத்தை அழகாக, நிறைவாக சாதிக்கலாம்.

உங்களோட மூன்று முக்கியக் கொள்கைகள் என்னென்ன?

• USP - தனித்தன்மையான திறமை தனக்குள்ள என்னென்னு கண்டுபிடிக்கணும். அதைத் தொடர்ந்து வளர்த்து வரணும்.

அணுகுமுறை - நேர்மறையான அணுகுமுறை ரொம்ப முக்கியம். கடும் முயற்சி செய்தாவது, ஒவ்வோர் இடத்திலும் `இங்கே இது சாதகமா இருக்கு’ என்று நேர்மறையா பார்க்கும் வழக்கத்தை வளர்த்துக்கணும்.

ஆரோக்கியம் - உடலையும் மனதையும் ஆரோக்கியமா வெச்சுக்கிட்டா மட்டும்தான் எதையும் சாதிக்க முடியும்.

இலவச இணைப்பா இன்னொண்ணு சொல்லிடறேன். எப்போதும் மகிழ்ச்சியா இருங்க. முடியலையா, சின்னதா சிரிங்க... போதும்.''

மறக்க முடியாத `ஃபேன் மொமென்ட்’?


``ஒருமுறை என் அப்பாவோடு வண்டியில் சென்றுகொண்டிருந்தேன். அது தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த காலம். ஏதோ ஒரு பாடல். சுசீலா அம்மா பாடினது. அதை வண்டி பின்னாலிருந்தபடி சற்று உரக்கப் பாடிக்கொண்டே சென்றுகொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில், ஒருவர் தன் வண்டியை எங்களருகில் நிறுத்தி `அப்படியே சுசீலாம்மா பாடற மாதிரியே இருந்தது’ என்று சொல்லிச் சென்றார். ஒரு நிமிடம் வாயடைத்துப் போனேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மை நமது திறமைக்காக ரசிக்கும் ரசிகர்கள் எவ்வளவு சிறந்தவர்கள்!''

காற்றைவிட வேகமா எதிர்வினைகள் வருகிற சோஷியல் மீடியாவுல இருக்கீங்க. உங்க பதிவுகள்,  கருத்துகள், வேலை பற்றி வரும் பின்னூட்டங்களை, எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்றீங்க?

``என்னோட போட்டோவுக்கு, வீடியோவுக்கு சிலரால் இடப்படும் எதிர்வினைகள் என் அம்மாவை ரொம்பப் பாதிச்சிருக்கு. சில நேரம், `நீங்க சரியா பிராக்டீஸ் பண்ணலயா? இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமே' என்று ஊக்கப்படுத்தும்விதமா பின்னூட்டம் விடுவாங்க. ரொம்ப காயப்படுத்தற விதத்துல `இது மூஞ்ச பாரு... வேற ஆளே கிடைக்கலையா’ என்பது போன்று சிலர் வெளியிடும் கருத்துகள், திடமான ஆளைக்கூட சற்று அசைத்துப் பார்க்கும்தான். நல்லா எழுதறவங்ககூட ஒரு வார்த்தைல முடிச்சுடுவாங்க. அசிங்கமா எழுதறவங்க பக்கம் பக்கமா எழுதுவாங்க. உங்க எழுத்துகளை, எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு பிளாட்பாரம் இருக்குன்னா, அதைக் கொஞ்சம் நல்லவிதமா உருப்படியா உபயோகப்படுத்துங்க. எதுக்கு ஒருத்தரை காயப்படுத்தணும்? இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்கறதுக்குக் காரணம் இந்த மீடியா இல்லை. அந்த ஆள்கள்கிட்டதான் பிரச்னை. மீடியாவில் சாதிக்க எல்லோருக்கும் இடமுண்டு!’’

டிஜிட்டல் துறையில் நுழைய... வளர...

• விஸ்காம் மாஸ்காம் துறை பட்டப்படிப்பு உதவும்.

• டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ளோமோ அல்லது பட்டப்படிப்பு (specialisation) இருத்தல் மிகவும் நல்லது.

• youtube சேனல் ஒன்றில் இன்டெர்ன் ஆகப் பணியாற்றுதல் கற்றுக்கொள்ள உதவும்.

• மாறும் ட்ரெண்டுக்கேற்ப கற்றுவளர்வது இளம் நிலையில் (ஜூனியர் லெவல்) எளிது. ஆனால், இந்நிலையில் வருமானம் சற்றுக் குறைவே. மாணவப் பருவத்திலேயே இந்தப் பயிற்சிகளைத் தாண்டிவிடுவது நல்லது.