Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...

வாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...

சாஹா - படம்: பா.காளிமுத்து

``எனக்கு அப்போது 14 வயது... ஈஸ்வரி வாடகை நூலகத்தில் வழக்கமாகப் புத்தகங்கள் எடுத்து வருவேன். அன்று கொண்டு வந்த புத்தகம் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’. 14 வயதில் படிக்கிற புத்தகமில்லை அது.      

வாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...

‘அம்புலிமாமா’ படித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென ஒரு டிரான்ஸ்ஃபர் மேஷனை ஏற்படுத்தியது. புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் அந்தப் புத்தகம் என்னை என்னவோ செய்ய ஆரம்பித்தது. அந்தப் புத்தகம் சொல்ல வரும் விஷயத்தையும் யாரிடமும் கேட்க முடியாது.

16 வயதில் மீண்டும் படித்தபோதும் புரியவில்லை.

புத்தகத்தைக் கையில் எடுத்ததுமே எனக்குப் பிடித்துப் போகக் காரணம் நான் வாசித்த அந்த வரிகள்... ‘சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அன்றுதான் ஒருநாளும் இல்லாத திருநாளாக நமக்குப் படிக்க வேண்டும் என்றே தோன்றும்’ என்ற அந்த வரிகள், அப்படியே என் குணத்தைப் பிரதிபலித்தன.

இந்தக் கதையின் பிரதான கேரக்டர்கள் அலங்காரத்தம்மாளும் அவரின் மகன் அப்புவும். அலங்காரத்தம்மாள் கேரக்டர் கோயிலில் அம்பாளைப் பார்ப்பது போன்ற ஒரு பிரமையை நமக்கு உருவாக்கும். கம்பீரமான ஓர் ஆளுமையாக நமக்குச் சித்திரிக்கப்படுகிற கேரக்டர்.  அலங்காரத்தம்மாளின் முதல் மகன் அப்பு என்கிற கேரக்டரில்தான் கதையே ஆரம்பிக்கும். அவனை மட்டும் வேதம் படிக்க அனுப்புவாள். மற்ற பிள்ளைகளை வேறு படிப்பு படிக்க வைப்பாள். 16 வருடங்கள் கழித்து அப்பு ஊருக்கு வருவான்.

அப்புவின் அப்பா ஜாதகம் பார்ப்பவர். அந்த வீட்டுக்கு சிவசு என்பவன் ஜாதகம் பார்க்க வருவான். அவன் எப்படி உள்ளே நுழைந்தான் எனக் காட்சிப்படுத்தியிருப்பார். ‘ஜாதகத்தை எடுத்துக்கொண்டு முதல் நாள் வந்தான்... மறுநாள் வந்தான்... வருகை தொடர்ந்துகொண்டே இருக்கிறது...’ என்பார். அதாவது அவன் வந்த காரியம் முடிந்த பிறகும் வந்துகொண்டிருந்தான். அலங்காரத்தம்மாளை ‘மன்னி’ என்று அழைப்பான். ஆனாலும், அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் உறவு. ஆனால், அந்த உறவைப் பற்றி எழுத்தாளர் பூடகமாகச் சொல்கிற தகவல்கள் பதைபதைக்க வைக்கும். அவளை யாரும் தவறாக நினைத்து விடக்கூடாதே என மனது தவிக்கும். அந்த உறவின் மூலம் அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கும்.

அலங்காரத்தம்மாள் தன் மகனை வேதம் படிக்க வைத்ததன் மூலம் தன் பாவங்களை எல்லாம் போக்கிக்கொள்ள நினைத்ததாகச் சொல்லப்படும். வேத வித்தகனாக அவன் திரும்பிவரும்போது தன் பாவங்களை எல்லாம் அவன் பஸ்பமாக்கிவிடுவான் என நம்பினாள். தவறு செய்து விட்டாள். அதை இல்லையென மறுக்க முடியாது. அதேநேரம் தன் கம்பீரத்தையும் அவள் கடைசி வரை இழக்கவில்லை. அப்பு படித்த வேதபாட சாலையில் இந்து என்றொரு பெண் இருப்பாள். அவளுக்குப் பால்ய விவாகம் நடந்து, கணவரையும் இழந்திருப்பாள். அவளுக்குத் திருமணத்துக்கு முன்பிலிருந்தே அப்புவைப் பிடிக்கும். மனதுக்குள் அப்புவையே நினைத்துக் கொண்டிருப்பாள். ‘எனக்கு நடந்ததன் பெயர் திருமணமா? என் விருப்பமில்லாமலேயே நடந்தது. என் கணவரில் நான் உன்னைத்தான் ஆவாஹனம் செய்துகொண்டேன்’ என்பாள். கணவன் இறப்பதற்கு முன் ஆவாஹனம் செய்துகொள்ள ஓர் உருவம் இருந்தது. இப்போது அது இல்லை. நான் உன்னை எதில் ஆவாஹனம் செய்துகொள்வேன் என்கிற அளவுக்கு அவனைக் காதலிப்பாள். அவனுக்கோ பதைபதைக்கும். அவள் மூலம்தான் அப்புவுக்குத் தன் அம்மாவின் இன்னொரு உலகம் தெரியவரும். உடனே தன் அப்பாவிடம் அதைப் பற்றிக் கேட்பான். வேதாந்தி அப்பாவுக்கும் தன் மனைவியைப் பற்றித் தெரியும்.  ‘உடம்பு வேறு... மனசு வேறு... எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் வேண்டும்' என்று சொல்லி அனுப்புவார்.

இந்தக் கதையைப் படிக்கிறபோது அலங்காரத்தம்மாளின் மேல் யாருக்கும் அருவருப்பு வராது. அதுதான் தி.ஜானகிராமன் எழுத்தின் வெற்றி. அந்தக் காலத்திலேயே பெரிய சர்ச்சைகளைக் கிளப்பிய புத்தகம் இது.

நான் சிறுவர் கதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம் அது. ‘அம்மா வந்தாள்’ படித்த பிறகு எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எனக்குள் வெறி உண்டானது.

நான் நன்றாக எழுத ஆரம்பித்த பிறகு ஒரே ஒரு நாவல் எழுத வேண்டும்... அதை யாராவது படித்துவிட்டு, ‘ஜானகிராமனைப் படிப்பதுபோல இருக்கிறது’ எனச் சொல்ல வேண்டும் என எனக்குள் ஒரு வைராக்கியம் வைத்துக்கொண்டேன். ‘தென்னங்காற்று’ என்றொரு நாவல் எழுதினேன். நேரடிப் பதிப்பாக வெளிவந்த அதற்கு அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது கிடைத்தது. நிறைய பாராட்டுகள் கிடைத்தன... ஜானகி ராமன் எழுத்துபோல இருந்தது என்கிற பாராட்டைத் தவிர. சில நாள்களுக்குப் பிறகு நான் எதிர்பார்த்து ஏங்கிய அந்தப் பாராட்டும் கிடைத்தது.

தி.ஜா-வைக் காப்பியடித்திருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் சொன்னதை நான் பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். இதுவரை எத்தனை முறை ‘அம்மா வந்தாள்’ படித்திருப்பேனோ... தெரியாது. முதன்முறை படித்தபோது உண்டான அவஸ்தை இன்னும்கூட மறையவில்லை. என் எழுத்தை மெருகேற்றி, வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட படைப்பு இது.’’  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz