Published:Updated:

கனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை!

கனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை!

நினைவுகள் அழிவதில்லைஆர்.வைதேகி

‘`காதல் என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒரு விளக்கம் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை என் இருப்புக்கு உயிர் கொடுக்கிறதே காதல்தான்’’      

கனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை!

ஆழமான தத்துவம் சொல்லி ஆரம்பிக்கிறார் ஆரத்தி லுசியானா. பெங்களூரைச் சேர்ந்த இவர், `சேவியர்ஸ் ஆஃப் சோல்ஸ்' என்கிற என்.ஜி.ஓ-வின் நிறுவன அறங்காவலர். ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கான வழிகளை அமைத்துக் கொடுக்கிறது இந்த என்.ஜி.ஓ.

ஆரத்தியின் சமூக சேவைகளுக்கும் ஆரம்பத்தில் அவர் சொன்ன தத்துவத்துக்கும் தொடர்புண்டு. நெஞ்சை உருக்கும் அன்புக் கதை அது. நண்பனாக வந்தவன் நினைவாக நிலைபெற்ற கதை.

``பெங்களூர்ல தமிழ்க் கிறிஸ்தவக் குடும்பத்துல பிறந்தவள் நான். அப்பா `இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரி'யில வேலைபார்த்து ரிட்டயர் ஆனவர். ஹாக்கி பிளேயர். இப்போ நேஷனல் ஹாக்கி அம்பயரா இருக்கார். அம்மா ரிசர்வ் பேங்க்ல வேலை பார்க்கறாங்க. செல்போன், இன்டர்நெட் தொல்லைகள் இல்லாத, சொந்த பந்தங்கள் சூழ்ந்த அழகான நாள்கள் என் குழந்தைப் பருவம்.

எனக்கு எப்போதுமே மக்களோட மக்களா களமிறங்கி வேலை பார்க்கணும்னு ஆசை. அதுக்காகவே பி.ஏ சோஷியாலஜி படிச்சேன். 1998-ம் வருஷம் காலேஜ் ஃபங்ஷன்ல அருண் ஆச்சார்யாவைச் சந்திச்சேன். அது என் வாழ்க்கையின் பொன்னான தருணம்...'' - வார்த்தைகளை முந்திக்கொண்டு வெளிப்படுகிறது அழுகை. அடக்கியபடி தொடர்கிறார் ஆரத்தி...

``முதல் பார்வையில பத்திக்கிட்ட காதல் இல்லை அது. ஆனாலும், அடுத்த 14 வருஷங்களை நாங்க சேர்ந்து பயணிக்கப் போறதுக்கான அச்சாரமா அமைஞ்ச சந்திப்பு. ரெண்டாவது சந்திப்பிலேயே நாங்க ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டோம். ரெண்டு பேரும் வேறு வேறு மதம், வேறு வேறு சாதி. ஆனா, அது எதுவும் எங்களுக்குத் தெரியலை. சகமனிதர்கள்கிட்ட அருண் காட்டின அன்பும் அக்கறையும் ஆளுமையும் எனக்குப் பிடிச்சது. வாழ்க்கையைப் பத்தின எங்க ரெண்டு பேரோட பார்வைகளும் ஒரே மாதிரி இருந்தது. எல்லாத்தையும்விட என்னை நானா இருக்கிறதை விரும்பவும் அப்படியே ஏத்துக்கவும் தயாரா இருந்த மனிதர் அருண்.

ரெண்டாவது சந்திப்பிலேயே அது நட்பில்லை... அதையும் தாண்டிய உறவுனு புரிஞ்சது. எல்லா காதலர்களையும்போலவே நாங்களும் வாழ்க்கை முழுக்க ஒண்ணாவே இருக்கணும்னு ஆசைப்பட்டோம். வீட்டைப் பொறுத்தவரை எங்களை நண்பர்களாகத்தான் பார்த்தாங்க. பழக ஆரம்பிச்சபோது எங்களுக்குள்ள திருமணம் பத்தின எண்ணம் இல்லை. ஆனா, எங்களோட நண்பர்கள் எல்லாம் திருமணமாகி, குழந்தை, குடும்பம்னு செட்டிலாயிட்டிருந்தாங்க. எங்களுக் கும் வயசாயிட்டே போனது. ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் மதம் மாறாம எங்கக் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காதுனு தெரிஞ்சது. இப்படிச் சமூகத்தின் எந்தப் பிரெஷரும் இல்லாம வேற எங்கேயாவது போய் புது வாழ்க்கையைத் தொடங்கலாம்னு யோசிச்சிருந்தோம்.

ஒருநாள் கர்நாடகாவுல உள்ள அகும்பே வனப்பகுதியில டிராவல் பண்ணிட்டிருந்தோம். வழியில ஒரு கன்னியாஸ்திரி சைக்கிள் ஓட்டிக் கிட்டுப் போனதைப் பார்த்தோம். `காட்டுப்பகுதியில அவங்களுக்கென்ன வேலை'னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல அவங்ககிட்ட பேசினோம். என்டோசல்ஃபான் பாதிப்புக்குள்ளானவங்களுக்கு அவங்க சேவை செய்யறது தெரிஞ்சு அவங்ககூட போனோம்.  பாதிக்கப் பட்ட மக்களோட நிலைமையை நேர்ல பார்த்ததும் எங்களுக்கும் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணினது. ஊருக்குத் திரும்பி, நண்பர்கள்கிட்ட பேசி, நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்திட்டிருந்தோம். ஒரு டிரஸ்ட்டா ஆரம்பிச்சா, அந்த உதவிகளை இன்னும் முறைப்படி செய்ய முடியுமேனு யோசிச்சு `சேவியர்ஸ் ஆஃப் சோல்ஸ்' அமைப்பை ஆரம்பிச்சோம்.

மனசுக்குப் பிடிச்ச காதல், மக்கள் சேவைனு `அடடா... இதுவல்லவா வாழ்க்கை'னு நிமிஷத்துக்கு நிமிஷம் பூரிச்சிட்டிருந்தபோதுதான் அந்த துரதிர்ஷ்டம் நடந்தது...'' - அந்த நாள்களின் கசப்பையும் கண்ணீரையும் மறக்கவும் மறைக்கவும் முடியாமல் பேசுகிறார் ஆரத்தி.

``ஆறு மாசத்துக்கொரு முறை ரத்ததானம் கொடுக்கிறது அருணுக்கு வழக்கம்.

2007 ஏப்ரல் மாசமும் அப்படிக் கொடுத்தார். ரத்ததானத்துக்கு முன்னாடி செய்யற அடிப்படையான டெஸ்ட் எல்லாமே எப்போதும் நார்மலாகவே இருந்திருக்கு. ஜூன் மாசம் அருணுக்குப் பல்லுல இன்ஃபெக்‌ஷன் வந்தது. 20 நாள்களுக்கு மேலாக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் கொஞ்சமும் சரியாகலை. அதனால பிரபலமான ஆஸ்பத்திரியில செக்கப்புக்குப் போனோம். ஏகப்பட்ட டெஸ்ட்டுகளை எடுக்கச் சொன் னாங்க. கழுத்துப்பகுதியில நிணநீர் முடிச்சையும் பயாப்சி செய்யச் சொன்னபோது எனக்கு லேசா வலிச்சது. பயாப்சி ரிசல்ட், அருணுக்கு வந்திருக்கிறது `Non-Hodgkin’s Lymphoma'  கேன்சர், மூணாவது ஸ்டேஜ்னு சொன்னது.     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை!

அருணுக்கு சிகரெட், குடின்னு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனாலும் அந்தக் கேன்சருக்குக் கெட்டப்பழக்கங்களோ, வாழ்க்கைமுறையோ காரணமில்லைன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. கேன்சர் உறுதிபடுத்தப் பட்ட முதல் நாள்லேருந்து எனக்குத் தூக்கமும் நிம்மதியும் தொலைஞ்சது.  நடக்கிறதெல்லாம் நிஜம்னு ஏத்துக்கிற மனப்பக்குவம் வரலை. வேற வேற டாக்டர்ஸ்கிட்ட ஒப்பீனியன் கேட்டோம். எதையும் மாத்த முடியாது... மனசைத் தேத்திக்கிறது மட்டும்தான் ஒரே வழின்னு புரிஞ்சது. மனசளவுல நாங்க ரெண்டு பேரும் தவிச்ச தவிப்பை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. நாங்க எதிர்பார்க்காத நேரத்துல எங்க ரெண்டு பேரோட பெற்றோரும் எங்களுக்கு ஆதரவா நின்னு நெகிழ வெச்சாங்க.

பயத்துலயும் பதற்றத்துலயுமே நாலு வருஷங்கள் கடந்தன. 2011 ஜூன் 23-ம் தேதி காலையில எழுந்திருக்கும்போதே அருணுக்கு ரெண்டு கால்களும் பயங்கரமா வீங்கியிருந்தது. மூச்சே விடமுடியாமச் சிரமப்பட்டார். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினோம். அருணுக்கு ரெண்டு கிட்னியும் செயலிழந்து போயிருந்ததும் புற்றுநோய் உடலின் பல பாகங்களுக்கும் பரவியிருந்ததும் தெரிஞ்சது. அடுத்த 45 நாள்களுக்கு என்னென்னவோ சிகிச்சைகள்... எப்படியாவது காப்பாத்திட மாட்டோமாங்கிற தவிப்பு...

46-வது நாள், `இனி எங்களால எதுவும் முடியாது'னு கையை விரிச்சிட்டாங்க. மரணம் நிச்சயிக்கப்பட்டவங்களுக்கான கடைசி ஆறுதலான பாலியேட்டிவ்கேர் சிகிச்சையையும் அருணுக்குக் கொடுத்தோம். ஒரு வாரத்துல அருண் எங்களை விட்டுப் போயிட்டார்...'' - விம்மிக் கிளம்புகிற கண்ணீரை அடக்கிச் சில நிமிடங்கள் அமைதியாகிறார் ஆரத்தி. அவரே தொடரும் வரை அந்த அமைதி உடையக் காத்திருந்தோம்.

``அருண் போனபிறகு எல்லாமே என்னை விட்டுப் போன மாதிரி ஒரு வெறுமை. நிறைய நேரமிருந்தது. ஆனா, என்ன செய்யறதுனு தெரியாத நிலை. அருணை இழந்து ஆறு வருஷங்கள் ஆன நிலையிலயும் அவரைப் பத்தி நினைக்கிறபோது என் கண்களும் இதயமும் கலங்காம இருக்கிறதில்லை. அருண் இல்லைங்கிற நிஜத்தை ஏத்துக்க இன்னமும் என் மனசு தயாரா இல்லை. உடலளவுல அவர் என்கூட இல்லாம இருக்கலாம். மனசளவுல என்னை இயக்கற சக்தியே அவர்தான்னு நம்பறேன். நாங்க சேர்ந்திருந்த நாள்கள் அவ்வளவு அழகானவை. சேர்ந்து படிச்சோம்; ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சேர்ந்து டிராவல் பண்ணியிருக்கோம்; ஒரு ரெஸ்டாரன்ட் விடாம எல்லாத்துலயும் சேர்ந்து சாப்பிட்டிருக் கோம்; ஏகப்பட்ட படங்கள் பார்த்திருக்கோம். எல்லா விஷயங்களையும் சேர்ந்தே செய்து சந்தோஷப்பட்டோம். அப்படியிருந்த எனக்கு அருண் இல்லாம வாழ்க்கையைக் கடத்த முடியுமாங்கிற நம்பிக்கையே இல்லை.

நாங்க சேர்ந்து தொடங்கின என்.ஜி.ஓ-தான் இன்னிக்கு எனக்கான ஒரே ஆறுதல். கனவு காணும் உரிமை எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானதுதானே? ஏழையாகவோ, ஆதரவில்லாமலோ இருக்கிறதாலயே ஒரு குழந்தைக்குக் கனவு காணும் உரிமை மறுக்கப்படணுமா?அப்படிப்பட்ட குழந்தை களைக் கண்டுபிடிச்சு அவங்களுடைய கனவுகள் நனவாக வழிகாட்டறதுதான் எங்க அமைப்பின் முக்கியமான பணி. குடிசைப்பகுதிகள்ல வாழற ஏராளமான பிள்ளைங்க, தம் பெற்றோருடன் சேர்ந்து குப்பைகளைச் சேகரிக்கிற தொழில்ல ஈடுபட்டுக்கிட்டிருக்காங்க. அவங்களைக் கண்டுபிடிச்சு அந்தத் தொழில்லேருந்து மீட்டுப் படிக்க வைக்கிறோம். தவிர, அவங்களுக்கான ஆரோக்கியத்துலயும் அக்கறை எடுத்துக்கறோம். அவங்களுக்கும் சராசரி வாழ்க்கை சாத்தியம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கறோம்.

25-க்கும் மேலான பெண்களை ஆபத்தான சூழல்கள்லேருந்து மீட்டு ஆதரவு கொடுத்திருக்கோம். அவங்கள்ல ரெண்டு பேருக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சு, குடும்பமா வாழ வழிகாட்டியிருக்கோம்.

இப்ப நான் பண்ணிட்டிருக்கிற எல்லாமே அருணோட கனவுகள், விருப்பங்கள்.  நான் அவர்பக்கம் ஈர்க்கப்பட்டதுக்கான முக்கியக் காரணமே மக்கள் சேவையில அவருக்கு இருந்த அக்கறைதான். அவருடைய கனவைத்தான் நான் இப்போ தொடர்ந்துகிட்டிருக்கேன்.

ஆயுள் முழுக்க வெளியில வரமுடியாத வேதனை இது. சில நேரங்கள்ல துயரம் உச்சத்துக்குப் போகும். கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்ப்பேன்; புலம்புவேன். என் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க பெற்றோர் அனுமதிப்பாங்க. ஆனாலும், நான் சாதாரணமா இருக்கிற நேரத்துல `இதுலேருந்து வெளியில வா... உனக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோ'னு கல்யாணம் பத்திப் பேசுவாங்க. இத்தனை துயரங்களைத் தாண்டின பிறகு வாழ்க்கை எனக்கு ஒரு விஷயத்தை அழுத்தமா மனசுல பதிச்சிருக்கு... இந்த நிமிஷத்துக்காக வாழறது.  மறுபடி என் வாழ்க்கையில காதல் வருமா? தெரியலை. ஆனா, ஏதோ ஒரு சக்தி என்னைக் கவனிச்சுக்கிட்டே இருக்கிறதா நம்பறேன். `காதலிக்கப்படறதும், அந்தக் காதல் கைகூடாமல் போகறதும் காதலிக்கப்படாமலேயே இருக்கிறதைவிட சிறந்தது'னு அந்தச் சக்தி எனக்கு உணர்த்தியிருக்கு.'' 

- நிஜமும் நிழலுமாகத் தன்னை ஆக்கிரமித்திருக்கிற அருணின் படத்தைப் பார்க்கிறார் ஆரத்தி.