Published:Updated:

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

கே.ஆர் விஜயா மகள் ஹேமலதா - வனமகள்எம்.ஆர்.ஷோபனா

‘`நாமதான்  விலங்குகளைத் தள்ளிவெச்சே பழகிட்டோம். ஆனா, அவை நமக்கு அன்பைத் தரும், அன்பைச் சொல்லிக்கொடுக்கும் செல்லங்கள்’’ என்று பேச்சின் ஆரம்பத்திலேயே ஐந்தறிவு ஜீவன்களைப் பற்றிதான் வாஞ்சையுடன் குறிப்பிடுகிறார் ஹேமலதா மடதில் (Hemalatha Madathil). நடிகை கே.ஆர்.விஜயாவின் ஒரே மகள். இப்போது பெங்களூரில், பெரிய நிறுவனங்களுக்கு டிஜிட்டல் புரமோஷன் செய்து தரும் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வனவிலங்குப் புகைப்படக்காரர் என்பது இவரின் இன்னொரு முகம். ``அது எனக்குப் பிடித்த முகம்’’ என்று சிரித்தபடியே பேசத் தொடங்குகிறார்...     

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

``நான் பிறந்தது சென்னை. கொஞ்ச நாள்லயே பெங்களூரு வந்துட்டோம். இங்கதான் பள்ளிப்படிப்பை முடிச்சேன். ஸ்கூல் படிக்கும்போதே புகைப்படங்கள் மேல ரொம்ப ஆர்வம். அப்போ எல்லாம் ஃபிலிம் ரோல்தான். ஒரு போட்டோ எடுத்துட்டு, அது எப்படி வந்திருக்குன்னு பார்க்கக் காத்திருக்கிற அந்த  த்ரில் என் இளம் வயது நாள்களை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது. நாலு வருஷங்களுக்கு முன்னாடிதான் நான் டிஜிட்டல் கேமராவுக்கு மாறினேன்’’ என்றவர், வனவிலங்குப் புகைப்படங்களில் ஆர்வம் திரும்பியதைப் பகிர்ந்தார்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”
“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

``புகைப்படக்கலை மீதான என் விருப்பத்தை வைல்டு லைஃப் போட்டோகிராபி பக்கம் திருப்பிய ரெண்டு முக்கியமான நபர்களைப் பற்றி நான் சொல்லணும். நிகான் நிறுவனத்தோட இந்தியத் தூதர் மோகன் தாமஸ் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பிரபல வைல்டு லைஃப் போட்டோகிராபர் ப்ரவீன் சித்தாநாதர். ஒவ்வொருமுறையும் நான் புகைப்படங்கள் எடுக்க  காடுகளுக்குச் செல்லும்போதும் இவங்க சொல்லித் தந்த மந்திரங்கள்தான் எனக்கு காடுகள்ல வழிகாட்டும். நேஷனல் ஜியாகிரபிக், டிஸ்கவரி போன்ற பத்திரிகைகளில் என் புகைப்படங்கள் வெளிவரணும் என்பதுதான் என் லட்சியம்’’ என்கிற ஹேமலதாவுக்கு, இப்போது 49 வயது.     

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

``என்னோட குடும்பப் பொறுப்புகளை ஒரளவு நிறைவேத்திட்டேன். என் மகன்கள் ரெண்டு பேரும் இப்போ அமெரிக்காவில் இருக்காங்க. நான் என்னோட ‘Ganancia 360’ கம்பெனி நிர்வாகத்தைப் பார்த்துட்டு இருக்கேன். வார இறுதி நாள்களில் என் கணவர் பிரதீப் ஸச்சாரியாவோட காடுகளுக்குச் சென்று புகைப்படங்கள் எடுப்பேன். அரிய வகை உயிரினங்களைப் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் எனக்கு.    

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”
“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

பொழுதுபோக்குக்காக வனவிலங்குகளைப் புகைப்படங்கள் எடுக்கிறதுனு இல்லாம, அவற்றின் வாழ்வாதாரத்தின் மீதும் அக்கறையுண்டு. ஒருமுறை கடலூர் அருகே  இருக்கும் காட்டுல மக்கள் ஊர்க்குப்பைகளைக் கொண்டுபோய் கொட்டினாங்க. அங்கே இருக்கிற விலங்குகள் எல்லாம், அந்தக் குப்பைகளை உணவுனு நினைச்சு சாப்பிட்டதால, நோய்கள் பரவ ஆரம்பிச்சது. இதை வனத்துறையினர் கவனத்துக்கு கொண்டுசென்றது என் புகைப்படங்கள்தான். நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சு ஒரு கேடு நடக்கும்போது, அதைத் தடுக்க நம்மால முடிஞ்ச அளவில் ஒரு ஸ்டெப் எடுத்தா போதும்... நம்மைப்போலவே அக்கறையுள்ள பலரின் பாதங்களும் அதை நோக்கி நகர ஆரம்பித்து, நல்ல தீர்வு கிடைக்கும். இந்தச் சமூகப் பொறுப்புதான் இந்தத் தலைமுறைக்கு நாம முக்கியமா சொல்லிக்கொடுக்க வேண்டியதுனு நினைக்கிறேன்’’ என்பவரின் முகநூல் பக்கத்தில், அம்மா கே.ஆர்.விஜயாவுடன் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களை அடிக்கடி பார்க்க முடியும்.    

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

``எனக்குத் திரைப்படங்கள்மீது ஆர்வ மில்லை. அம்மா நடிச்ச படங்களில் கூட நிறைய படங்களைப் பார்க்கத் தவறியிருக்கேன். புத்தகங்கள், எழுத்து, பயணங்கள்... இதுபோன்ற விஷயங்களில்தான் என் மனசு செல்லும். நான் அப்பா செல்லம். அவர்தான் என் ஹீரோ. அவரைப் பார்த்துதான் எனக்கும் பிசினஸில் ஆர்வம் வந்தது. போட்டோகிராபியில் அம்மாவுக்குப் பெரிய ஆர்வமில்லைன்னாலும் அவங்ககூட வெளியில போகும்போது, ‘அந்த மலை அழகா இருக்கு பாரு’, ‘இந்தப் பறவையை போட்டோ எடுக்கிறியா?’ன்னு எங்கிட்ட கேட்டுட்டே வருவாங்க. ஸ்வீட் அம்மா’’ என்றவருக்கு மிகவும் பிடித்த இடம், கோயம்புத்தூர்.      

“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்!”

``சிறுவாணியில எனக்கு ஒரு வீடு இருக்கு. சிட்டி லைஃப்  இன்னும் அஞ்சு வருஷமோ, பத்து வருஷமோதான். அதுக்கு அப்புறம், அங்கே போய் நான் முழுநேர வனவிலங்குப் புகைப்படக்காரரா வாழ்க்கையைக் கொண்டாடப் போறேன். இன்னும் நிறையக் கத்துக்கணும்; நிறைய சாதிக்கணும்!”

- உற்சாகத்துடன் சொல்கிறார் ஹேமலதா.