Published:Updated:

‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’

‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’
பிரீமியம் ஸ்டோரி
News
‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’

வாழ்தல் இனிதுஆர்.வைதேகி

‘`சிலருக்கு வாழ்க்கையில எல்லாமே இருக்கும்; நினைச்சதெல்லாம் கிடைக்கும். ஆனாலும், அவங்களைச் சுத்தி ஒரு வெறுமை சூழ்ந்திருக்கும். எதையோ இழந்ததுபோலவே நடந்துப்பாங்க. அவங்களுக் கெல்லாம் என் கதையைச் சொல்லித்தான் ஊக்கம் கொடுக்கறேன். வாழ்க்கைங்கிறது எல்லாருக்குமே ஏகப்பட்ட சவால்களோடத்தான் காத்திட்டிருக்கு. பிரச்னைகளுக்கு நாம பயப்படக் கூடாது; நம்ம மன உறுதியைப் பார்த்துட்டு பிரச்னைகள்தான் பயந்து ஓடணும். இந்தத் தெளிவில்லாமல்தான் நிறைய பேர் வாழ்க்கையைத் தொலைச்சுடறாங்க. வாழ்தல் என்பது இனிமையானது!''    

‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’

பாசிட்டிவ் மெசேஜுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார் ஷ்ரத்தா. மும்பையைச் சேர்ந்த மோட்டிவேஷனல் ஸ்பீக்கர். பெண்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகிற `பாடி ஷேமிங்' எனப்படுகிற உடல்பரிகாசங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்துக்கொண்டிருப்பவர்; தானும் அப்படியொரு பரிகாசத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டிருப்பவர். பரிகாசப் பொருளாக்கப்படுகிற தன் உடலுக்குப் பின்னால் வலியும் வேதனையும் சுமந்த வாழ்க்கைக் கதை இருக்கிறது என்கிற ஷ்ரத்தா, வாய்ப்பு கிடைக்கிறபோதெல்லாம் அது பற்றிப் பேசவும் தயங்குவதில்லை.

``அப்ப எனக்கு ஆறு வயசிருக்கும். திடீர்னு கடுமையான காய்ச்சல். முகமெல்லாம் சிவந்து, தடிப்புகள். முதல்ல இது சாதாரண காய்ச்சல்தான்னு சொன்ன டாக்டர்ஸ், ஒருகட்டத்துல அது டி.பி-யா இருக்கலாம்னு சந்தேகப்பட்டாங்க. ஆனா, அது டி.பி இல்லைங்கிறதும், அதுக்காக எனக்குக் கொடுத்த சிகிச்சைகள் தவறானவைங்கிறதும் அப்போ யாருக்கும் தெரியலை. அவங்க கொடுத்த மருந்துகளை எடுத்துக்கிட்டதோட விளைவு, எனக்கு உயிர் போகிற அளவுக்குத் தலைவலி வந்தது. எப்படியாவது அந்த வலி நின்னுடாதான்னு சுவர்ல முட்டிக்கிட்டு கதறுவேன்...'' - ஷ்ரத்தா சொல்லும்போதே நமக்கும் வலிக்கிறது. அடுத்தடுத்த விவரிப்பில் அந்த வலி அதிகரிக்கிறது.

``எட்டு வயசிருக்கும்போது என்னோட `பிபி' (BP) எக்குத்தப்பா எகிறியது. மறுபடியும் என் முகமெல்லாம் தடிப்புகள். அப்பவும் டாக்டர்களால அது என்னன்னு கண்டுபிடிக்க முடியலை. கொசுக்கடியா இருக்கலாம்னு அதுக்கு மருந்துகள் கொடுத்தாங்க.

அடுத்த வருஷம் மறுபடி கடுமையான காய்ச்சல் வந்தது. தாங்க முடியாத அளவுக்கு வயிற்றுவலியும் வந்தது. காய்ச்சல் குறைய ஐஸ்கட்டி மேல படுத்திருக்கச் சொன்னாங்க. கடைசியில ஒருவழியா எனக்கு எஸ்.எல்.இ (Systemic lupus erythematosus) என்கிற ஒரு விசித்திர நோய் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. அதுக்காக எனக்கு அவங்க கொடுத்த ஸ்டீராய்டு மருந்துகளால என் உடம்பு தாறுமாறா குண்டானது. என் முகம் எனக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு பலூன் மாதிரி மாறிப்போனது. கொஞ்ச நாள்லயே எனக்கு கிட்னி பயாப்ஸி பண்ணி னாங்க. கிட்டத்தட்ட நான் ஒரு நடைப்பிணம் மாதிரி மாறிட்டேன். எஸ்.எல்.இ பிரச்னை வந்தவங்களுக்கு உடம்போட அத்தனை முக்கியப் பாகங்களும் பாதிக்கப்படும். மூளை, இதயம், ரத்த ஓட்டம்னு எல்லாத்துலயும் பிரச்னை.  என் உடம்புல கொஞ்சம்கூட எதிர்ப்புச்சக்தி இல்லாமப் போச்சு. அதை வரவழைச்சு என்னை மீட்கணும்னா கீமோதெரபி பண்ணணும்னு சொன்னாங்க. கீமோதெரபி கொடுத்தா தலைமுடி மொத்தமும் கொட்டிப் போகும். அது புற்றுநோய் பாதிச்ச வங்களுக்குக் கொடுக்கப்படற சிகிச்சை. என்னைப் பார்க்கிற எல்லாரும் `ஐயோ பாவம் உனக்கு கேன்சரா'னு கேட்க ஆரம்பிச்சாங்க. அதுலேருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கினேன்.

12 வயசுல பராலிசிஸ் அட்டாக் வந்தது. எனக்குள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாத நிலை. உடம்பு முழுக்க ஏகப்பட்ட ஃபிராக்சர். அது சரியாகறதுக்குள்ள உடம்புல நீர் தேங்கியிருக்கிறதா புதுசா ஒரு பிரச்னை. மூணு பிஸ்கட்டும் மூணு டம்ளர் தண்ணீரும்தான் சாப்பாடு. மாசக்கணக்குல இப்படி இருந்திருக்கேன்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’

ஒருமுறை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருந்தேன். என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர்... அம்மா அப்பாவைக் கூப்பிட்டு, `மனசுல தைரியத்தை வரவழைச்சுக்கோங்க... உங்க பொண்ணு அதிகபட்சமா ஆறு மாசம்தான் உயிரோட இருப்பாங்க'னு சொன்னார். அந்தக் கணம் எனக்கு எங்கம்மாவோட முகத்தைப் பார்க்கக்கூடத் தைரியமில்லை. அடுத்த சில நாள்கள்ல என்னோட பிறந்த நாள் வந்தது. அதுதான் நான் அவங்ககூட இருக்கப்போற கடைசி பிறந்த நாள் என்ற துக்கம் தாங்காம அதை அவங்க கொண்டாடினது இப்பவும் எனக்கு மறக்கலை...'' - மரணத்தின் விளிம்பு தொட்டு வந்தவர், அந்த நிலையிலும் வாழ்க்கையை வெறுக்கவில்லை.

``ஸ்கூலுக்குப் போனா, கூடப்படிக்கிற பிள்ளைங்க கிண்டல் பண்ணுவாங்க. அதனாலயே பாதியிலயே படிப்பை விட்டுட்டேன். பிரைவேட்டா படிச்சு எழுத வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டேன். என்னோட மருத்துவச் செலவுக்கு அம்மாவும் அப்பாவும்  வீட்டை வித்து செலவு பண்ணினாங்க. நல்ல பிரைவேட் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து படிக்க முடியலை. ஆனாலும், கஷ்டப்பட்டுப் படிப்பை முடிச்சேன். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சேன். ஒரு கம்பெனியில டெலிகாலர் வேலை கிடைச்சது.  காலையில ரெண்டு, சாயந்திரம் ரெண்டு ஊசிகள் போட்டுக்கிட்டுதான் வேலையைத் தொடர்ந்துகிட்டிருந்தேன்.

என் அம்மா, அப்பா, தங்கச்சி மூணு பேரும்தான் நான் மீண்டெழுந்து வரக் காரணம்.  வெளியில போனா பலரும் என்னைப் பார்த்துக் கேலியா சிரிப்பாங்க. `நானும் மனுஷிதான், உங்கள்ல ஒருத்திதான்'னு சொல்லணும்போல இருக்கும். ஒருபக்கம் உடம்பு படுத்திக்கிட்டிருந்தது; இன்னொரு பக்கம் சமூகத்தோட புறக்கணிப்பு...'' என்பவர் ஒரு நல்ல நாளில் அனைத்திலிருந்தும் மீண்டிருக்கிறார்.

``என்னோட சின்ன வயசுல நான் அழுத நாள்கள்தான் அதிகம். `உங்கம்மா அப்பாவுக்குப் பிறகு உன் நிலைமை என்னாகப் போகுதோ'ன்னு என்னைப் பலரும் பரிதாபத்தோட பார்த்தாங்க. என் ஜீவனெல்லாம் வற்றிப் போகற அளவுக்கு அழுது தீர்த்தேன். `இது என் வாழ்க்கை... அது கொடுத்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவிக்கிறவள் நான். அந்த வலிகளைச் சுமக்கிறவள் நான். அப்படியிருக்கும்போது இன்னொரு நபருக்கு அதைப் பத்திப் பேச என்ன உரிமை இருக்கு'னு யோசிச்சேன்.  அழுகையை நிறுத்தினேன்.

வாழணும்னு ஆசைப்பட்டேன். என் பிறப்புக்கு ஏதோ அர்த்தம் இருக்குன்னு நம்பினேன். அற்புதங்கள் எப்போ வேணாலும் நடக்கலாம்னு சொல்வாங்கல்ல... அது என் வாழ்க்கையிலயும் நடந்தது. எனக்கிருந்த நோய் கொஞ்சம் கொஞ்சமா சரியானது.  ஆனா, மருந்துகளோட விளைவால பெருத்துப் போன உடம்பு குறையலை. இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் என்னை எதிர்கொள்கிற எல்லாரும் நான் ஏதோ வேற்றுக்கிரகத்துலேருந்து வந்தவள் மாதிரியே பார்ப்பாங்க. என்ன ஏதுன்னு தெரியாமலேயே எனக்கு உடம்பைக் குறைக்கிறதுக்கான அட்வைஸ்களை ஆரம்பிச்சுடுவாங்க. இருபது வருஷத்துக்கு முன்னாடி அழுதது போல இப்போது இல்லை... `ப்ளீஸ்... இது என் லைஃப். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். இதைவிட உங்களுக்கு முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும். அதைப் பார்க்கலாமே'னு சொல்லிடுவேன். என்னோட நோய் குணமானாலும் என் உடம்பு இன்னும் பழைய நிலைக்குத் திரும்பலை. எலும்புகள்ல பலமில்லை. என்னால கடுமையான பணிகளைச் செய்ய முடியாது. நினைச்சதை எல்லாம் சாப்பிட முடியாது.

இப்போ ஒரு கம்பெனியில ஹெச்.ஆர் மேனேஜரா இருக்கேன்.  அது என் திறமைக்காக கிடைச்ச வேலை; என் சொந்தக் கதை, சோகக் கதையைச் சொல்லிப் பரிதாபத்துல வாங்கினதில்லை.

`பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும்... இந்த அளவுகள்லதான் உடம்பை மெயின்டெயின் பண்ணணும்னு சொல்ற  உரிமை  யாருக்கு இருக்கு? சமீப காலமா பெண்கள் மேல நிகழ்த்தப்பட `பாடி ஷேமிங்' கிண்டல், கேலிகள் எனக்கு வெறுப்பையும் கோபத்தையும் கொடுக்குது. சின்ன வயசுலேர்ந்தே அதை நான் அனுபவிச்சுட்டிருக்கேன். அதையெல்லாம் தாண்டி என்னை, என் உடலை நான் நேசிக்கிறதாலதான் என் வாழ்க்கையைச் சந்தோஷமா வாழ முடியுது. பரிகாசத்தைச் சந்திக்கிற மத்த பெண்களுக்கும் இதுதான் என் அட்வைஸ்.

ஆறு வருஷங்களுக்கு முன்னாடி அம்மா தவறிட்டாங்க. என்னோட மிகப் பெரிய பலம் என்னைவிட்டுப் போனது. இத்தனை வருஷங்களா எடுத்துக்கிட்ட சிகிச்சைகளோட விளைவா என் உடம்புல நிறைய தழும்புகள் இப்பவும் இருக்கு. மனசுல பதிஞ்ச தழும்புகளைவிடவும் அதெல்லாம் எனக்குப் பெரிசா தெரியலை. குணப்படுத்தவே முடியாதுன்னு சொன்ன நோய், என் விஷயத்துல குணமாகியிருக்கு. எனக்கு ஆறு மாசம் கெடு கொடுத்த டாக்டர்ஸ் என்னைப் பார்த்து ஆச்சர்யப்படறாங்க.  எத்தனை சோகங்கள் என்னை அழுத்தினாலும் எல்லாத்தையும் உதறிட்டு எழுந்து நிற்கக் காரணம் வாழ்க்கையின்மீது எனக்கிருக்கிற காதல்...''

ஷ்ரத்தா என்கிற பெயருக்கு நம்பிக்கை என்றோர் அர்த்தமுண்டு. அதை உறுதிபடுத்து கின்றன இவரின் வாழ்க்கை அனுபவங்கள்!