Published:Updated:

பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?

பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?

ஓர் உளவியல் அலசல்யாழ் ஸ்ரீதேவி

ட்பு என்பது பெரும்பாலும் ஆண்களுக்கான வார்த்தையாகவே கையாளப்பட்டு வந்திருக்கிறது. நம் அப்பாவின் நண்பர்கள் என்று யோசிக்கும்போது நினைவில் பல முகங்கள் வரும். அம்மாவின் தோழிகள் எனும்போது சிலருடைய பெயர்களுக்கு மேல் சுட்டிக்காட்ட முடியாமல் திணறுகிறோம்தானே? இதற்குச் சூழல் மட்டுமல்ல, பெண்களின் மனநிலையும் காரணமாகிறது. இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொதுவெளி எனப் பெண்களும் தங்களுக்கான நட்புவெளியை விரிவுபடுத்திக்கொள்ளும் சூழல் சிலருக்கு வாய்த்தும்கூட, அதை தொடர்ந்து எடுத்துச் செல்லும் உறுதியில் ஆண்கள்போல இல்லாமல் திணறுகிறார்கள்.    

பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?

``மன இறுக்கத்துக்கு மாமருந்து!’’

``ஆதிகாலத்தில் இருந்தே கட்டமைக்கப்பட்டிருக்கும் மனநிலை இது’’ என்கிறார் சேலத்தைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தேவிப்ரியா. ``வேட்டையாடும் காலத்தில் இருந்து நூறாண்டுகளுக்கு முன்புவரை ஆண்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறும் சூழலில், தாங்கள் சந்திக்கும் மனிதர்களை நட்பாக ஏற்கவும், அந்த நட்பைக் கையாளவும் கற்றுக்கொண்டார்கள். ஆனால், வீட்டுக்குள் வளர்ந்த பெண்களின் மரபணுவோ உறவல்லாத ஒரு நபரைத் தன் வாழ்க்கையில் ஏற்க நிறைய யோசித்தது. அதையும் மீறிக் கிடைக்கும் நட்புகளும் ஒருகட்டத்தில் கைவிட்டுப் போவதோ, கசப்பில் முறிந்து போவதோ  பெண்களை அதிகம் பாதிக்கவில்லை. இருப்பினும், இந்த இயல்பு மாற்றிக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். காரணம், பெண்கள் தங்களின் உணர்வுபூர்வமான பிரச்னைகளில் இருந்து வெளிவர, நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல நட்பு வட்டம் தேவை.

`குடும்பத்தைத் தாண்டியும் ஓர் உலகம் இருக்கிறது’ என்ற உணர்வு பெண்களுக்கு ஏற்படாவண்ணம் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அதனால்தான் திருமணத்துக்குமுன் நட்பு பட்டாளத்துடன் சுற்றித் திரியும் பெண்கள்கூட, திருமணத்துக்குப்பின் நட்புலகில் இருந்து தனித்துப் போகிறார்கள். ஆனால், குடும்பம், அலு வலகம் என அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பகிரவும், அதை நடுநிலைமையோடு கேட்டு ஆற்றுப்படுத்தவும், ஆலோசனை சொல்லவும், பொழுதுபோக்கு விஷயங்களைப் பேசி சிரிக்கவும், சிறப்பாகச் செயல்படும்போது பாராட்டவும், தவறு செய்யும்போது சுட்டிக்காட்டவும் என... மகிழ்வும் நெகிழ்வும் கொண்டாடவும், பிரச்னைகளில் இருந்து வெளிவரவும் அவர்களுக்கு நண்பர்கள், தோழிகள் நிச்சயம் தேவை.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?

நட்பு வட்டம், பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். தனக்கு ஒரு பிரச்னை என்பதைவிட, தன் பிரச்னையைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதே பெண்கள் பலரையும் பெரும் துயரமாக அழுத்துகிறது. அதையே அவர்கள் தன் நம்பிக்கைக்குரிய நட்பிடம் பகிர்ந்துகொள்ளும்போது, பிரச்னை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்களின் மன இறுக்கத்துக்கு ஒரு வடிகால் கிடைத்துவிடுகிறது. அதேபோல, என்னதான் சொந்தங்கள் சேர்ந்து பேசி மகிழ்ந்தாலும், தன் தோழிகள், தோழர்களிடம் மனம்விட்டுப் பேசிச் சிரிக்கும் ஆனந்தத்துக்கு ஈடில்லை. அத்தருணங்களில் வெளிப்படும் வெடிச்சிரிப்புகள் அவர்கள் வாழ்வின் வெற்றுப் பள்ளங்களை மறக்க வைத்து ஆசுவாசப்படுத்தும். தொடர்ந்து செயல்படுவதற்கான ஆற்றலைக் கொடுக்கும். மொத்தத்தில், நட்பைப் போல ஒரு மாமருந்து இல்லை... மனநலனுக்கு. எனவே, பெண்கள்  எந்தச் சூழலிலும் தங்கள் நட்புகளை இழக்காதிருக்க வேண்டும்’’ என்கிறார் தேவிப்ரியா.

``நட்பு பலப்பட எடுக்க வேண்டிய களைகள்!’’


``பொதுவாக இங்கு ஆண்கள் தம் நண்பர்களுடன் நேரம் காலம் பார்க்காமல் வெளியில் சென்று வரலாம். ஆனால், பெண்கள் தங்கள் தோழிக்கு முக்கியப் பிரச்னை என்றால்கூட முழுமையாக உடன் இருக்க முடிவதில்லை. சமூகமும் குடும்ப அமைப்பும் பெண்களின் நட்புக்கு ஒரு கண்ணாடிக் கூரையைத்தான் அனுமதிக்கின்றன. ஆனால், அந்த வட்டத்துக்குள்ளும் அழகான நட்புத்தோட்டம் வளர்ப்பவர்கள் நம் பெண்கள். இருந்தாலும் சில காரணங்களால் அவர்கள் நட்பைத் தொடர முடியாமல் போகிறது’’ என்று சுட்டிக்காட்டும் சென்னை, ‘டேலன்ட் ஃபேக்டரி’யின் இயக்குநர் மற்றும் உளவியல் ஆலோசகரான சுரேகா, நட்பு பலப்பட எடுக்க வேண்டிய களைகள் பற்றிப் பேசினார்.

பெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா?

``நட்பில் பொய், துரோகம், சுயநலம் ஆகியவற்றைத் தள்ளிவையுங்கள். குறிப்பாக, உங்களிடம் தோழி நம்பி பகிர்ந்த ஒரு விஷயத்தை, மற்றவர்களிடம் கசியவிடாதீர்கள். காதல் வந்ததும் நட்பு தேவையில்லை என்ற எண்ணத்தை மாற்றுங்கள். நட்பில் வாக்கு வாதங்கள் இயல்பு என ஏற்கப் பழகுங்கள். அப்படியான சில வாக்குவாதங்களுக்குப் பிறகு அந்த நட்பிடம் இருந்து விலகாமல், ‘அவை நம் எண்ணங்களின் வெளிப்பாடு; நம் அன்பைப் பாதிக்காது’ என்கிற தெளிவைப்பெறுங்கள். நட்புக்கு இடையில் வரும் ஆண்களுக்காக ஒருபோதும் தோழிகளை இழக்காதீர்கள். எந்த இடத்திலும் உங்கள் தோழி, தோழனை விட்டுக்கொடுக்காதீர்கள். நட்பிலும் பொசஸிவ்னெஸ் தவிர்க்க முடியாததுதான். ஆனாலும், அதுவே உங்கள் தோழமையைச் சிதைக்கும் அளவுக்குத் தூக்கிச் சுமக்காதீர்கள்.

நிச்சயமாக நட்பில் கண்ணியம் அவசியம். மனக்குறைகளை உடனுக்குடன் பேசி சரிசெய்து கொள்ளுங்கள். என்னதான் வேலை பரபரப்பு என்றாலும், தோழமைகளின் அலைபேசி அழைப்புகளுக்கோ, குறுஞ்செய்திகளுக்கோ தொடர்ந்து பதிலளிக்காமல் இருக்காதீர்கள். முடிந்தவரை உதவிகள் செய்யுங்கள். ஆனால், பண - வரவு செலவை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. உங்கள் தோழிகளின் குறைகளோடு சேர்த்து அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னைகள் ஆண்களின் நட்பிலும் உண்டு என்றாலும், அதை அவர்கள் எளிதாகக் கடந்துசெல்கிறார்கள். அப்படித் தங்களின் நட்பையும் சூழல்கள் தாண்டி அழகாக எடுத்துச் செல்லும் தோழிகள் இங்கு பலர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராக நீங்களும் இணைய வாழ்த்துகள்’’ என்றார் சுரேகா.

நட்பால் சுழல்வோம், நிற்காமல்!