Published:Updated:

அன்புக்கு வானமே எல்லை!

அன்புக்கு வானமே எல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புக்கு வானமே எல்லை!

சேவை தம்பதிகு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

“சிறப்புக் குழந்தையான எங்க பையன் அர்விந்த்ராஜின் உலகத்தை நாங்க புரிஞ்சுக்க ஆரம்பிச்சப்போதான், அவனைப் போன்ற ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் அர்த்தமுள்ள காரணம் உண்டு என்பதை உணர்ந்தோம். அந்தத் தருணம்தான், சிறப்புக் குழந்தைகளுக்கான எங்களோட ‘அர்விந்த் ஃபவுண்டேஷன்’ உருவாகக் காரணம்.’’    

அன்புக்கு வானமே எல்லை!

நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள் சென்னை, ‘அர்விந்த் ஃபவுண்டேஷனி’ன் நிர்வாகிகளான ஆத்மராஜ் - சுதா தம்பதி. கடந்த 12 வருடங்களாகச் சிறப்புக் குழந்தைகளுக்குச் சிகிச்சை, கல்வி உள்ளிட்ட பல பயிற்சிகளையும் இலவசமாக வழங்கிவருபவர்கள். 

ஒரு பொம்மையைத் தூக்கியெறிந்த குழந்தையிடம், ``இப்படி செஞ்சா பொம் மைக்கு வலிக்கும், யார் மேலயாச்சும் விழுந்திருந்தா அவங்களுக்கும் வலிக்கும்ல’’ என்று பொறுமையுடன் சொல்லிவிட்டு, நம்மிடம் திரும்புகிறார் சுதா. ``குறைப் பிரசவக் குழந்தையா ஏழரை மாசத்துல, எடை குறைவாப் பிறந்தான் எங்க பையன் அர்விந்த்ராஜ். அவனுக்கு ஒரு வயசு ஆனப்போ, மூளை முடக்குவாத பிரச்னை கொண்ட ஸ்பெஷல் சைல்டுன்னு எங்களுக்குத் தெரியவந்துச்சு. `சிறப்புக் குழந்தைகளோட இயல்பு மாற்றங்கள் என்னென்ன, அதையெல்லாம் எப்படி சரி செய்யுறது, இதுக்கு சிகிச்சை இருக்கா, எப்படியான சிகிச்சை அது?’ன்னு பதில் தெரியாத கேள்விகள் மனசில் குவிய ஆரம்பிக்க, ஒவ்வொண்ணா தேடிப்போக ஆரம்பிச்சோம்’’ என்று சுதா சொல்ல, அந்தத் தேடலில் கிடைத்த திசைகளைத் தொடர்ந்து பேசினார் ஆத்மராஜ். தனியார் நிறுவனம் ஒன்றில் வைஸ் பிரெசிடன்ட்டாக இருக்கிறார் இவர்.     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்புக்கு வானமே எல்லை!

“எங்க பையனைக் கூட்டிட்டுச் சிகிச்சைக் காகப் போகும்போது, அங்க வந்திருக்கிற சக பெற்றோர்களில் பெரும்பாலானவங்க ஏழ்மை நிலையில இருப்பாங்க. குழந்தை யோட சேர்த்துப் பொருளாதார நெருக்கடியையும் சுமந்துட்டு இருப்பாங்க. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அவங்களை நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருப்போம். ‘அவங்களுக்கு நம்மளால முடிந்த உதவிகளைச் செய்யலாம்’னு நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம். சின்னச் சின்ன உதவிகள் மூலம் அவங்களோட கஷ்டங்களைக் குறைக்க முயற்சித்தோம். அப்போ அவங்க சொன்ன நன்றிகள் எல்லாம், ‘இந்த நல்ல காரியத்தை நம்மைச் செய்ய வைக்கவே கடவுள் அர்விந்த்தை நமக்குக் கொடுத்திருக்கார்’னு ரொம்ப நிறைவா உணர்ந்தோம். ஒரு கட்டத்துல அதையே ஃபவுண்டேஷனாக்கி, அந்த உதவிகளை இன்னும் அதிகமா செய்ய ஆரம்பிச்சோம். அப்படித்தான் 12 வருஷத்துக்கு முன்னாடி உதிச்சது எங்களோட ‘அர்விந்த் ஃபவுண்டேஷன்’. கையில பெரிய தொகை எல்லாம் இல்லை. சென்னை, ஐயப்பன்தாங்கல்ல ஒருத்தர் மையம் ஆரம்பிக்க இடவசதியை இலவசமாக ஏற்பாடு செய்து தர, 10 சிறப்புக் குழந்தைகளோட எங்கப் பயணத்தை ஆரம்பிச்சோம்’’ என்றார் ஆத்மராஜ்.

“அதுநாள் வரை வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த குழந்தைகள், எங்க சென்டர்ல தினமும் வந்து விளையாடி, அவங்க மொழியில சிரிச்சுப்பேசிப் படிக்கும்போது, அவங்க முகத்துல அதுவரை பார்த்திடாத சந்தோஷத்தை அவங்களோட பெற்றோர்கள் பார்த்தாங்க. ஒருகட்டத்துல சென்டரை நடத்த முடியாத அளவுக்குப் பொருளாதார ரீதியா இறுக்கம் அதிகமாக, பலரையும் சந்திச்சுப் பேசி, ‘எங்க சென்டரை வந்து ஒருமுறை பாருங்க, உதவணும்னு தோணினா உதவுங்க’னு சொல்லிக் கேட்டோம். அப்படி வந்து பார்த்தவங்களால துளிர்த்தது எங்க சென்டர். இன்னொரு பக்கம், ‘எங்க ஏரியாவிலும் இதுபோல சென்டர் அமையுங்க’னு சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கேட்க, இன்னும் தீவிரமா உதவிகள் பெற்றுக் கிளைகள் ஆரம்பிச்சோம். இப்போ கே.கே.நகர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, கொடைக்கானல்னு எங்க ஃபவுண்டேஷனுக்குக் கீழே ஆறு சென்டர்கள் செயல்பட்டுட்டு இருக்கு. ரெண்டரை வயசுக் குழந்தையில இருந்து 40 வயசுக்காரங்க வரைக்கும் 140-க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வர்றாங்க. ஆட்டிஸம், உடல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள்னு எல்லாவிதமான சிறப்புக் குழந்தைகளையும் தெரபிஸ்ட், சைக்காலஜிஸ்ட், டீச்சிங், நான் டீச்சிங்னு நிறைய பணியாளர்களைக்கொண்டு கவனிச்சுக்கிறோம்” எனும் சுதா, குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளைப் பற்றிக் கூறினார்.

“வீட்டுக்கே வண்டி அனுப்பிக் குழந்தைகளை அழைச்சுகிட்டு வர்றதுல தொடங்கி, ஊட்டச்சத்து உணவு, மருத்துவ சிகிச்சை, பேச, நடக்க, படிக்க, விளையாட, உணர்வுகளை வெளிப்படுத்தன்னு... அவங்களுக்குத் தேவையான எல்லாவித பயிற்சிகளையும் கொடுக்கிறோம். அவங்க ஏதாச்சும் ஒருவகையில தங்களைத் திறமையானவங்களா வெளிப்படுத்திக்கத் தூண்டுவோம். அவங்களால புரிஞ்சுக்க முடியுற தொழிற்கல்வி முறைகளைக் கற்றுக்கொடுத்து, ஸ்டேஷனரிப் பொருள்கள், அலங்கார மற்றும் பயன்பாட்டுப் பொருள்களை அவங்களால் முடிஞ்ச அளவுக்குச் செய்ய வெச்சு, அதையெல்லாம் கண்காட்சி ஸ்டாலில் விற்பனை செய்து, அந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்து ஊக்கப்படுத்துவோம். கணினிப் பயிற்சி முதல் வணிக வளாகங்களில் பொருள்கள் வாங்குற பயிற்சி வரை, ‘தன்னாலயும் எல்லோரையும் போல செயல்பட முடியும்’கிற உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவோம். குறிப்பாக, சிறப்புக் குழந்தைகளைக்கொண்ட அம்மாக்களுக்கு ஓய்வுங்கிறதே பெரும்பாலும் இருக்காது. அந்த அம்மாக்கள்ல ஒருத்தியான எனக்கு அந்தச் சிரமம் பத்தி நல்லாவே தெரியும்ங்கிறதுனால ‘நிர்மான்’ என்ற பெயர்ல விடுமுறை நாள்கள்ல அக்குழந்தைகளைக் கவனிச்சுக்க பராமரிப்பாளரை நியமிச்சிருக் கோம். அந்த நாள்கள்ல அக்குழந்தையின் பெற்றோர் மனநிறைவோடு ஓய்வெடுப்பாங்க’’ என்று சுதா விவரிக்க, தொடர்ந்தார் ஆத்மராஜ்.     

அன்புக்கு வானமே எல்லை!

“சிறப்புக் குழந்தைகளோட பெற்றோர்களை, ‘இப்படி ஒரு குழந்தை நமக்குப் பிறந்துடுச்சே’ என்ற ஆற்றாமையில் இருந்து வெளியே கொண்டுவரும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி களைச் சுதா நடத்துறாங்க. இதன்மூலம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. ஒவ்வொரு மாசமும் எல்லா சென்டர்களையும் ரன் பண்றதுங்கிறது திணறவைக்கிற பொறுப்புதான். நான் என்னாலான உதவிகளை என் அலுவல், நட்பு வட்டங்களில் இருந்து பெற்றுக் கொடுப்பேன்’’ என்கிறார் ஆத்மராஜ்.
“இந்தக் குழந்தைகள் தொடர்ந்து கத்துறது, எதையாச்சும் தூக்கி எறியுறது, சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்த முடியாம இருந்த இடத்திலேயே கழிக்கிறது, தொடர்ந்து வாயில் எச்சிலை வழியவிடறதுன்னு ஒவ்வொருத்தரும் தங்களோட அறியாமையை எப்படி வேணுமானாலும் வெளிப்படுத்துவாங்க. அதைப் புரிஞ்சு ஏத்துக்கிட்டு, அன்பும், கனிவும், பாசமும் இருந்தா மட்டும்தான் இந்தச் சேவையைச் செய்ய முடியும்.''

உணர்ச்சிபொங்க சொல்லியவாறு அந்தத் தம்பதி ஒரு வகுப்பறைக்குள் நுழைய, அவர்களைச் சூழ்ந்துகொண்டு கைகளை உயர்த்தி ஏதோ சொல்கிறார்கள் அந்தக் குழந்தைகள். அவர்கள் முகத்தில் பூக்கும் மலர்ச்சி சொல்கிறது, அதன் பெயர் அன்பென்று!