Published:Updated:

பெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்!

பெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப  அணுக வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்!

லட்சியம் தேவைஸ்ரீலோபாமுத்ரா

``நான் ஒரு கலைக் காதலி. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கலை உறைந்திருப்பதாக நம்புபவள். நான் பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறும் அளவுக்கு, நான் ரசித்துச் செய்யும் கலையே எனக்கு வருமானம் தரும் தொழிலாக மாறியிருப்பதில் என் வாழ்க்கை இன்னும் மலர்ந்திருக்கிறது...’’     

பெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப  அணுக வேண்டும்!

- ரசித்துப் பேசுகிறார் அனுபமா டால்மியா. நடனம், இசை, கவிதை, கட்டுரை, சமையல்கலை எனப் பன்முகத் திறமை கொண்டவர். அந்தத் துறைகள் பற்றிய செறிவான கட்டுரைகள் தரும் www.anupamadalmia.com என்ற வலைதளத்தின் நிர்வாகி.

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இணையதளங்களில் தன் ஆணித்தரமான கருத்துகளை எழுதி, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துவரும் அனுபமாவின் கவிதை ஒன்று, 2015-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கவிதைப் போட்டியில் தலைசிறந்த 10 கவிதைகளில் இடம்பெற்றது. ‘விமன்’ஸ் வெப்’ என்கிற வலைதளம், இணையதள கிரியேட்டிவ் சூப்பர் ஸ்டார்களுக்கு வழங்கும் ‘ஆரஞ்சு ஃப்ளவர் அவார்டு’, சென்ற வருடம் அனுபமா கைகளுக்கு வந்தது. ஒரு பெண் குழந்தையின் தாயான இவர் ஹைதராபாத்தில் வசிக்கிறார்.

36 வயதாகும் அனுபமா, ஒரு கல்லூரிப் பெண்ணின் உற்சாகத்துடன் நம்மிடம் பேசுகிறார்.

``எட்டாம் வகுப்பு படித்தபோது அம்மை நோயின் பாதிப்பால் பள்ளி செல்வதிலிருந்து ஓய்வுகிடைக்க, அப்போதுதான் எழுத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டறிந்தேன். ஆரம்பத்தில் கவிதைகள், சிறு கட்டுரைகள் என எழுத ஆரம்பித்து, நாளடைவில் என் கருத்துகளையும் உணர்வுகளையும் நளினமான மொழியில் வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.

பெரும்பாலான இந்திய மாணவர்கள் போலவே நான் தேர்ந்தெடுத்த படிப்பும் ஆர்வமும் எதிரெதிர் திசையில்தான் இருந்தன. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்து, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆறரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். ஆனாலும், இசை, நடனம், எழுத்து ஆகியவைதாம் என்னை இந்த வாழ்க்கைமீது காதல்கொள்ள வைப்பவையாக இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல், `ஊர், உலகுக்காக வேலை... எனக்காக கலை’ என இந்த வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து வாழ முடியவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தோழியுடன் இணைந்து நடனப்பள்ளி ஆரம்பித்தேன். இப்போதும் நடத்தி வருகிறேன்’’ என்கிறவர், தன் எழுத்து பற்றியும் கூறுகிறார்...

``பெண்களுக்கான இணையப்பக்கங்களில் குழந்தை வளர்ப்பு, பாரம்பர்ய உணவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், பதின்பருவப் பெண்கள் சந்திக்கும் உடல்நலப் பிரச்னைகள், புத்தக மதிப்புரை, சுற்றுலா, நடனம், இசை போன்ற தளங்களில் நான் எழுதிய கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதுவே நான் தொடர்ந்து எழுதுவதற்கான உந்துசக்தியாகவும் அமைந்தது. என் மகளை வளர்த்துக்கொண்டும், மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்துகொண்டும் மனநிறைவுடன் ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன்’’ என்கிறவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கணவரையே, `என் எனர்ஜி' என்கிறார்.

``சர்வதேச கவிதைப் போட்டியில் என் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர்தான் என் படைப்புகளைப் பதிவிட பிரத்யேக வலைதளம் ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னார். அப்படித்தான் 2016-ல் என் வலைதளம் உதித்தது. பிரபல இணையதளங்களான Woman’s Era, eFiction India, Women’s web, Readomania, Youth Ki awaaz, Mycity4Kids, Zenparent, INCREDIBLE WOMEN OF INDIA, Bharat Moms ஆகியவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன். பிரபல இணையதளங்களின் கட்டுரைப் போட்டி களில் அவார்டுகளைப் பெற்றுள்ளேன். இணையக் கட்டுரைகளை அடுத்து, புத்தகம் எழுதுவதே அடுத்த இலக்கு. பலவற்றைப் பற்றி எழுதினாலும், காலத்துக்கேற்ப பெண்கள் தங்கள் பிரச்னைகளை அணுக வேண்டிய முறை, சமயோசித மாக செயல்படும்விதம் இவற்றை நடை முறைக்கு ஏற்ப எளிய முறையில் விளக்கும் என் கட்டுரைகளையே என் பலமாகச் சொல்வேன்’’ என்கிற அனுபமா,

``ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். லட்சியமும் தேவையும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. இரண்டையும் அடைய விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாத கடின உழைப்பு தேவை. ஹேவ் எ ஹேப்பி லைஃப்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz