Published:Updated:

``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’

``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’

தென்னிந்தியாவின் முதல் பெண் விமானி உஷா ரகுநாதன்முன்னோடிகள்மு.பார்த்தசாரதி - படங்கள்: க.பாலாஜி

திகாலை ஆறு மணி. சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் என்.சி.சி பயிற்சியாளர்கள் மார்ச் ஃபாஸ்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்து புழுதிபறக்க வேகமாக ஒரு சைக்கிள் அவர்களை நோக்கித் தாறுமாறாக வருகிறது. சைக்கிளை ஓட்டிவருவது பெண் என்று தெரிந்ததும் ஆச்சர்யப்படுகிறார்கள். “நகருங்க, நகருங்க” எனக் கத்திக்கொண்டே போய் அவர்கள் மேல் சைக்கிளை இடித்துவிட்டுக் கீழே விழுகிறாள் அந்தப் பெண். அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவளைச் சுற்றிலும் முப்பது நாற்பது ஆண்கள். அவர்கள் பல்லைக் கடித்துக்கொண்டும் வாயை மூடிச் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.    

``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’

அவர்கள் முன் `தில்’லாக எழுந்து நிற்கிறாள். மீண்டும் அசால்ட்டாக சைக்கிளை ஓட்டிச் செல்கிறாள். அந்தப் பெண் வேறு யாருமில்லை... தென்னிந்தியாவின் முதல் பெண் விமானி உஷா ரகுநாதன்.

``அறுபது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது அது நடந்து. அன்று நாற்பது ஆண்களுக்கு மத்தியில் தரையில் விழுந்துகிடந்தபோதுதான் முடிவெடுத்தேன், இனி யாரும் நம்மை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாத உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்று. அதுதான் நான் ஒரு விமானி ஆவதற்கான உந்துதலைக் கொடுத்தது” சொல்லிக்கொண்டே புன்முறுவலோடு நம்மைப் பார்க்கிறார் உஷா ரகுநாதன்.

பெண்கள் ஸ்கூட்டர் ஓட்டினாலே வாய் பிளந்து வேடிக்கை பார்க்கும் 1956 கால கட்டத்திலேயே `என்னால் விமானத்தையே ஓட்ட முடியும்’ என்று உலகுக்கு நிரூபித்த உஷா, தன்னுடைய பதினெட்டு வயதில் தன்னந்தனியாக விமானத்தை இயக்க ஆரம்பித்தவர்.

“சிறுவயதிலேயே அம்மாவை இழந்து தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்தவள் நான். தாத்தா வங்கியில் பணிபுரிந்தவர். அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகிக்கொண்டே இருப்பார். அவரோடு சேர்ந்து நாங்களும் மாறிக்கொண்டே இருந்தோம். அது என் எல்லைகளை விசாலப்படுத்திக்கொண்டே இருந்தது. புதுப்புது மனிதர்களின் தொடர்புகள் கிடைத்தன. அப்படித்தான் நான் சென்னை வந்தபோது விமானம் பறக்கிற தளத்தில் எந்த ஒரு செக்யூரிட்டியும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம்; வாக்கிங் போகலாம்; சைக்கிள் ஓட்டிப் பழகலாம்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’

விமானம் தரையிலிருந்து மேலே பறக்க ஆரம்பிக்கும்போது நானும் என் கைகளை விரித்துத் துள்ளிக்குதிப்பேன். அப்போது ப்ளேன் கிளப்பில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி கொடுத்தார்கள். என் அப்பாவிடம் சென்று நானும் பயிற்சியில் சேரப்போகிறேன் என்றேன். அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், அவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். ஆனாலும், விமானம் ஓட்டிப் பயிற்சி எடுப்பது சாதாரணமானதல்ல. ஒரு மணி நேரத்துக்குக் கட்டணமாகப் பெரும் தொகை கொடுக்க வேண்டியிருக்கும். என் ஆசையைப் புரிந்துகொண்ட அப்பா ஆரம்பித்திலேயே தடை போடாமல் அவருக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தார். கல்லூரி மாணவர்களுக்கான அரசு ஸ்காலர்ஷிப் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று யாரோ சொன்னதும் உடனடியாக நான் விண்ணப்பித்தேன். சில நாள்கள் கழித்து வீட்டுக்குக் கடிதம் வந்தது. நான் ஸ்காலர்ஷிப்பில் தேர்வாகிவிட்டேன். சந்தோஷத்தில் அப்போதே எனக்குச் சிறகுகள் முளைத்துவிட்டன. இனி, எனக்கு எந்த எல்லையும் கிடையாது என்று நினைத்தேன்’’ எனும் உஷா ரகுநாதனுக்கு அதன் பிறகான நாள்கள் சவாலாகவே அமைந்திருந்தன.

`இதுவரை ஆண்களுக்கு மட்டுமே பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த நம்மால் இப்போது எப்படி ஒரு பெண்ணுக்குப் பயிற்சி கொடுக்க முடியும்? அதிலும் அந்த விமானம் திறந்தபடியேதான் இருக்கும்? வானில் பறக்கும்போது அடிக்கிற எதிர்க்காற்று முகத்தைக் கிழித்துக்கொண்டு செல்வது ஆண்களுக்கே கஷ்டமாக இருக்கும்போது எப்படி ஒரு பெண்ணால் இந்தப் பயிற்சியைச் செய்ய முடியும்?’ என்று கவலைப்பட்டனர் பயிற்சியாளர்கள். அவர்களின் தயக்கத்தைப் போக்கவே உஷாவுக்குப் பல நாள்கள் ஆகியிருக்கின்றன. அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை பயிற்சி. ஆறு மாத காலப் பயிற்சி முடியும்போதே ஏ லைசென்ஸ், அடுத்தது பி, அதற்கடுத்தது கமர்ஷியல் என மூன்று வகையான லைசென்ஸ்களைப் பெற வேண்டும். அந்த லைசென்ஸ்களைப் பெற பல சாகசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இத்தனையும் சாத்தியம்தானா என்ற கேள்விக்கெல்லாம் உஷா சொன்ன ஒரே பதில் `முயன்று பார்க்கிறேன்’ என்பது மட்டும்தான்.     

``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்!’’

  “பயிற்சி முடிந்து முதன்முதலாக நான் விமானத்தில் ஏறியபோது அத்தனை கண்களும் என்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தன. மனது படபடத்தது. ஆனாலும், ஏதோ ஓர் நம்பிக்கை.  விமானத்தை ஸ்டார்ட் பண்ணினேன். காற்றாடி சுழல ஆரம்பித்தது. மெள்ள தரையிலிருந்து வான் நோக்கி உயர்ந்தேன். இதுவரையிலும் சிறகுகள் முளைப்பதாகக் கனவில் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த எனக்கு நிஜத்திலேயே சிறகு முளைத்தது. சுதந்திரமாகச் சிறகடித்தேன். தொட்டுச் செல்லும் மேகங்களிடம் என் சிந்தனையைத் தொலைத்தேன். அப்போது விமானம் திடீரென  டக டகவென அடித்தது. `கொய்ங்ங்ங்...’ என்ற பலத்த சத்தம் காதுகளை அடைத்தபோது பயிற்சியாளர் சொல்லிய வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. தரையிறங்க வேண்டிய நேரத்தில் கீழே எல்லோரும் பதற்றத்தோடு ஓடுகிறார்கள். விமானம் கீழே விழப்போகிறது என்று நினைத்தார்கள். ஆனால், விழுவதில் எனக்கு உடன்பாடில்லை; அதை நான் விரும்பவும் இல்லை. முயற்சி செய்தேன். தரையில் விழ பதினைந்து அடி மட்டும்தான் இருந்தது. அப்பாவின் கதறல் தெளிவாகக் கேட்கிறது. ஆம்புலன்ஸ் சத்தமும் ஃபயர் என்ஜின் சத்தமும் அருகில் கேட்கின்றன. விழுந்துவிட்டேன் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தபோது விமானத்தின் சக்கரம் மண்ணை உரசிக்கொண்டு அப்படியே மேலெழுந்தது. மீண்டும் வானில் பறந்தேன். ஒரு சுற்று சுற்றி வந்து தரையில் லேண்ட் ஆனேன்.  அப்பா ஓடி வந்து கட்டிப்பிடித்தார். ‘என்ன ஆச்சு உனக்கு... ஏன் இப்படி செய்தாய்?’ என்று அவர் கேட்டபோது, நான் சொல்லிய வார்த்தைகள்... `அப்பா உன் மகள் சாதாரணமாகத் தரையிறங்க விரும்பவில்லை. எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங். கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் நான் நினைத்ததை முடித்துவிட்டேனே!’ என்றேன்.  கைத்தட்டல் பலமாக ஒலித்தது. மறுநாள் அனைத்து நாளிதழ்களிலும் `விமானம் ஓட்டினார் தமிழகத்தின் முதல் வீரப் பெண்மணி, சாதனைப் பெண், தைரிய மங்கை’ என்று செய்திகள் வெளியாகின. விகடனிலிருந்து வீடு தேடி வந்து செய்தி எடுத்துக்கொண்டு போனார்கள்” என்கிறார், அறுபது ஆண்டுகள் ஆனாலும் அந்த நேரத்தின் பூரிப்பு விலகாமல்.

பதினெட்டு வயதிலேயே தன்னை ஒரு சாதனைப் பெண்ணாக அடையாளப் படுத்திக்கொண்ட உஷாவுக்கு அடுத்த வருடமே திருமணமானது. குழந்தைகள் பிறந்ததும் தன்னை வேறு வேறு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். ஆனந்த விகடனில் ‘சிங்காரிக்க நேரமில்லை’, ‘கண்ணீர்க்கதை’ உள்ளிட்ட தொடர்களை எழுதியிருக்கிறார்.  தூர்தர்ஷனில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வேலை பார்த்தவர் தொடர்ந்து, தன் வீட்டிலேயே சொந்தமாக `பொட்டீக்’ வைத்து கடந்த வருடம் வரை அதை இவரே நடத்தியிருக்கிறார். அத்தனை வேலைகளிலும் வெற்றியை ருசித்தவர், 79 வயதிலும்  படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் நாள்களைப் பயனுள்ளதாக நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

சூப்பர் உமன் உஷா!