Published:Updated:

டிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்!

டிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள்சாஹா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

புதுப்புடவை வாங்குவதில் பெண்களுக்கு உள்ள ஆர்வம் எப்போதுமே குறையாது. வாங்கிய புதிதில் பீரோவில் இருந்து அடிக்கடி  எடுத்து, தோள்மேல் போட்டுப்பார்த்துப் பூரித்துப் போவார்கள். வாங்கிச் சிலமுறை உடுத்திய பிறகோ, காஸ்ட்லியான அந்தச் சேலையைத் துவைப்பதற்கும் பராமரிப்பதற்கும் பலரும் அலுத்துக்கொள்வார்கள். அந்த அலுப்பின் காரணமாகவே, ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கி உடுத்தி மகிழ்ந்த உடை, மூலையில் முடங்கும்.  

டிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்!

டிரை வாஷ், ரோல் பிரெஸ் ஆகிய துணிப் பராமரிப்பு முறைகளைக் கற்றுக்கொண்டால் ஆடைகளை அழகாகப் பராமரிப்பதுடன், பிசினஸாகவும் செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த கனகவல்லியும் அவரின் மருமகள் நாகஜோதியும்.

``பட்டு மாதிரியான காஸ்ட்லியான துணிகளை யாரும் தண்ணீர்ல நனைச்சுத் துவைக்க விரும்ப மாட்டாங்க. டிரை வாஷ் பண்ணித்தான் உடுத்தணும். இன்னும் சிலருக்கு அவங்க உடுத்திக்கிற ஆடைகளை டிரை வாஷ் பண்ணத் தேவையில்லைன்னாலும், அவற்றை  இஸ்திரி செய்து போட்டுக்கிறது இம்சையா இருக்கும். ஆடைகளைக் கடையில கொடுத்து டிரை வாஷ் பண்ணி, இஸ்திரி செய்து வாங்கி உடுத்த அலுத்துக்கிறவங்க, அவங்களே ரெண்டையும் கத்துக்கிட்டா, பெர்சனலாகவும் உபயோகமா இருக்கும். அடுத்தவங்களுக்குச் செய்துகொடுத்து அதையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்.'' - உற்சாகம் பொங்கப் பேசுகிறார்கள் கனகவல்லி - நாகஜோதி.

``பட்டுப்புடவைகளுக்குப் பாலிஷ் பண்ணி, புதுமெருகு ஏத்திக் கொடுக்கிறதுதான் எங்க பிரதான வேலை. அப்படிச் செய்து கொடுக்கிறபோது நிறைய பேர் `புடவையில உள்ள கறைகளை நீக்கித் தர முடியுமா, கஞ்சி போட்டுக் கொடுக்க முடியுமா'னு கேட்க ஆரம்பிச்சாங்க. பாலிஷுக்குக் கேட்கறவங்களைவிடவும் இவங்க எண்ணிக்கை அதிகமா இருந்ததால கறைகள் எடுத்து டிரை வாஷ் பண்ணவும், ரோல் பிரெஸ் முறையில கஞ்சி போட்டு இஸ்திரி பண்ணிக் கொடுக்கவும் கத்துக்கிட்டு செய்திட்டிருக்கோம்.

டிரை வாஷ்னா தண்ணியில துணியை முக்கியெடுக்காம சுத்தம் செய்யற முறை. தண்ணீரே படாம அதுல உள்ள அழுக்கையும் கறைகளையும் நீக்கிக் கொடுக்கிற முறை இது. சில துணிகளை முதன்முறை தண்ணீரில் நனைச்சா சுருங்கிப்போயிடும். சாயம் போகும். டபுள் கலர் புடவைகளா இருந்தா ஒண்ணோடு ஒண்ணு கலந்துடும். டிரை வாஷ் முறையில இந்தப் பிரச்னைகள் இல்லாம புது மெருகு ஏத்தலாம். சுடிதார், கோட், சூட்டுனு எல்லாத்துக்குமே டிரை வாஷ் பண்ணலாம். பட்டு, மைசூர் சில்க், காட்டன், கம்பளி, ஜூட், ஷிஃபான்... இப்படி எல்லா மெட்டீரியல்களுக்கும் டிரை வாஷும் ரோலிங்கும் செய்து கொடுக்கலாம். மஞ்சள் கறையைத் தவிர, மத்த எந்தக் கறையையும் டிரை வாஷ் முறையில எடுத்துட முடியும்.

ரோல் பிரெஸ் என்பது கிட்டத்தட்ட இஸ்திரி செய்யறது மாதிரிதான். சாதாரணமா இஸ்திரி செய்யும்போது சில வகைத் துணிகள் சூடுபட்டுச் சுருங்கிடும்; சிலது பொசுங்கிடும். ரோல் பிரெஸ்ல அப்படி எதுவும் இல்லாம ஒரே சீரா இருக்கும். இஸ்திரி செய்தா ஒருமுறைதான் அணிய முடியும்; ரோல் பிரெஸ் பண்ணினா மூணு முறை அணியலாம். புடவைப் பிரியர்கள் இந்த ரெண்டையும் கத்துக்கிட்டா ரொம்ப உபயோகமா இருக்கும்...'' என்கிறார்கள் மாமியாரும் மருமகளும்.

``பத்துக்குப் பத்து இட வசதி, ரோல் பிரெஸ் செய்யத் தேவையான கட்டைகள் மற்றும் கம்பிகள், கறை நீக்கும் பொருள்களுக்கெல்லாம் சேர்த்து மொத்தமாக 35 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவைப்படும். நிழலிலேயே உலர வைக்கலாம். சுடிதார் செட் ஒன்றுக்கு டிரை வாஷ் மற்றும் ரோல் பிரெஸ் செய்து கொடுக்க 150 ரூபாய் கட்டணம் வாங்கலாம். ஸ்டோன்வொர்க் செய்த கனமான சேலை மற்றும் உடைகளுக்கு 900 ரூபாய் வரைகூட வாங்க முடியும். 50 சத விகிதம் லாபம் தரும் தொழில் இது'' என்கிறார் கனகவல்லி. டிரை வாஷ் மற்றும் ரோல் பிரெஸ் செய்யக் கற்றுக்கொள்ள இரண்டு நாள்கள் பயிற்சியும் அளிக்கிறார்கள் இவர்கள் இருவரும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz